தெருவோடு வந்தது…

கடந்த சில வாரங்களாக பெண்கள் ஜெகனின் பார்வை வட்டத்துள் தங்களை நுழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்- இப்போது இந்த பேருந்து நிலைய நிழற்பந்தலில் நின்றுகொண்டிருக்கிற செவ்வண்ணம் குழைத்த வெண்மலர்களை புடவையாய் போர்த்திருக்கும் பெண் ஜெகனை ஓரக்கண்ணால் பார்க்கிறாள்- ஜெகனால் அவளை லட்சியம் செய்யாமல் இருக்க முடியவில்லை.

அவனது அலுவலகத்தில்கூட இத்தனை நாட்கள் அலுவல் விஷயமாக மட்டும் பேசிக் கொண்டிருந்த பெண்கள் தற்போது தங்கள் சொந்தக் கதை சோகக் கதைகளை அவனுடன் பரிமாறிக் கொள்ள முற்படுகிறார்கள்- உதாரணத்துக்கு சென்ற வெள்ளியன்று ஒரு அரை மணி நேர அவகாசத்தில் அவனுடன் பணியாற்றும் அம்மணியொருவர் பிரதி ஞாயிறன்று வீட்டுக்கு வந்து விடுகிற தன் அப்பா, அம்மா, தம்பி மற்றும் அவனது மனைவி குறித்து சொல்லிய விஷயங்களை-அவர்கள் மாலை ஏழு மணி அளவில் வீடு திரும்பும்போது சப்பாத்தி செய்யச் சொல்லி அதை பார்சல் கட்டி எடுத்துச் செல்கின்றனர்-, இந்த விஷயங்களை வைத்து ஒரு மாதம் நிமிஷக் கதைகள் எழுதலாம்- அல்லது பத்து முழு நீள சிறுகதைகளோ அல்லது மூன்று குறுநாவல்களோ எழுதலாம்: துரதிருஷ்டவசமாக அந்த அம்மணியின் கதையில் நாவலுக்குரிய கதைக்களமோ உச்சத்தைத் தொடும் சாத்தியங்களோ இருக்கவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

எதையோ சொல்லத் துவங்கி எங்கோ செல்கிறேன்- ஜெகன் தன் பேருந்து வந்ததும் அதில் ஏறி அமர்ந்தான். அது ஒரு குளிரூட்டப்பட்ட பேருந்து. வேறு வழியில்லை. சோழிங்கநல்லூர் என்பது அமேரிக்கா போல. எல்லாம் உயர் தொழில் நுட்பம்தான். காசு கணக்கு பார்த்து பிரயோசனமில்லை. ஆனால் ஜெகனின் அதிர்ஷ்டம் என்னவென்றால் அந்த பேருந்தில் கமலஹாசனின் சோகப் பாடல்களை ஒன்று மாற்றி ஒன்றாகப் பாட விட்டார்கள். அதை அதிர்ஷ்டம் என்றுகூட சொல்ல முடியாது. ஜெகனுக்கு “துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா” என்ற சிப்பிக்குள் முத்து பாடல் துவங்கி அந்த பேருந்தின் ஓட்டுனர் ஒலிபரப்பிய ஒவ்வொரு பாடலும் பிடித்தவையாக இருந்தாலும், அவனது மனம் விரைவிலேயே சோக கீதம் இசைக்கத் துவங்கியது.

அவன் கடந்த சில வாரங்களாக வலிய வந்து சிரிக்கச் சிரிக்க தன்னிடம் பேச்சுக் கொடுக்கும் ______ என்ற பெண்ணை நினைத்துப் பார்த்தான். சில சமயங்களில் அவள் வரும்போதே அச்சமாக இருக்கிறது, சில சமயங்களில் அவள் வர மாட்டாளா என்றிருக்கிறது, சில சமயங்களில் அவள் பேச்சை நிறுத்த மாட்டாளா என்றிருக்கிறது, சில சமயங்களில் அவள் அவனுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டு எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டு இருந்தால் போதுமே என்றிருக்கிறது: ஆமாம், என்று நினைத்துக் கொண்டான் ஜெகன், பெண்கள் சிரிக்கப் பிறந்தவர்கள், சிரிக்க மட்டுமே. அவர்களுடைய ஒவ்வொரு சிரிப்பும் கோடி சொற்கள் பெறும். தங்கள் ஓயாத பேச்சில் சிரிப்பின் ஆற்றலை அவர்கள் வீணடிக்கிறார்கள்.

ஜெகனின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் தன் நோக்கியா கைபேசியில் – அதன் ஸ்க்ரீன் பரந்ததாக இருந்தது, அதை அவரது மகனோ மகளோ அவருக்குப் பரிசாகத் தந்திருக்க வேண்டும்- அந்தப் பெரியவர் தன் நோக்கியா கைபேசியின் அகன்ற திரையில் தன்னிரு கரங்களின் பெருவிரல்களால் இணைந்து பிரியும் சதுரங்களைத் திரும்பத் திரும்ப வரைந்து கொண்டிருந்தார்.

பேருந்தில் இப்போது வாழ்வே மாயம் திரைப்பாடல் ஒலித்தது- “கருவோடு வந்தது, தெருவோடு போவது, மெய்யென்று மேனியை யார் சொன்னது!” என்ற கேள்வியை கே ஜே யேசுதாஸ் எழுப்பக் கேட்ட ஜெகனின் கண்கள் நீர்க்குளமாயின.

இந்த வயதில் எனக்கேன் இதெல்லாம், என்று நினைத்துக் கொண்டே ஊமையாயிருந்த சாலையைப் பார்த்தான்- வாகனங்கள் உறைந்து நின்றுக் கொண்டிருந்தன. இந்த குளிரூட்டப்பட்ட பேருந்தின் சன்னல் கண்ணாடிகளை உடைத்தால், இதுபோல் தெருவுக்கு தெரு நிற்கும் வாகனங்களின் ராட்சத உறுமலை நான் கேட்கக் கூடும்.

யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவன் தன் கண்களிலிருந்து சில கண்ணீர்த்துளிகள் இறங்கியோட அனுமதித்தான்: அதன் பின் கைபேசியை எடுத்து குறுஞ்செய்திகளைத் திரும்பவும் படிக்கத் துவங்கினான்.

Advertisements

8 thoughts on “தெருவோடு வந்தது…

    1. நறுக்கியிருக்கலாம். கதையா இருக்கணும், ஆனா கதை மாதிரி இருக்கப்படாது (அப்பதான் நெஜம் மாதிரி இருக்குமாம்) என்று நினைத்துக் கொண்டு எழுதுவதால் இஞ்ச் டேப்பையும் கத்தரியையும் கச்சிதமாகக் கையாளவில்லே. கொஞ்சம் தொளதொளன்னுதான் இருக்கும், ப்ளீச் கைன்ட்லி அட்சச்ட்டு.

 1. நல்ல கதை சார். வாழ்த்துக்கள்.

  நிமிஷக்கதைக்கு பொருந்தாதுதான். அதற்காக …சப்பாத்துக்காக காலை நறுக்கமுடியுமா?

  ஒலக இலக்கியம் படிக்கிறவர்களுக்கு.. தீவிர வாசகர்களுக்கு …புனைவெழுதுகிறேனே என்ற தன்னுணர்வும் ,எடுத்த எடுப்பிலேயே ஓலகத்தரம் வந்துவிடவேண்டுமென்ற தவிப்பும், இதைவைத்துஎன்னை என் இலக்கியத்தரத்தை மதிப்பிடுவார்களோ என்ற அச்சமும் ஆரம்பத்தில் இருக்கும். இந்தத் தன்னுணர்வால் கதைகள் விறைப்பாக வெளிவரும். எழுத எழுத இயல்பு வந்துவிடும்.தன்னுணர்வு போய் உள்ளுணர்வு வரும்?

  புனைவுக்கூச்சம் போய்விட்டது இல்லையா.உங்கள் திறமை பளிச்சிடுகிறது.

  கேள்விகள்?

  நிமிஷக்கதையின் இலக்கணம் என்ன?

  சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வாங்க என்று சொன்னால் அது வெறும் தகவலாக போய்விடுமோ? நடுத்தர வயசு மனிதனின் மன அலைக்கழிவை அதன்போக்கில்சுற்றிசுற்றிவந்துதானே சொல்லமுடியும் வேறு எப்படி சொல்லலாம்?

  கண்கள்’’ நீர்’’க்குளமாயின என்பதில் எம் முன்னோர் வெட்டிய பல குளங்கள் நீரற்றிருக்கின்றன என்பதை சொல்லாமல்சொன்னீர்களா?

  மேலும்…
  ஏன் எப்போதும்……..

  ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகனை கதாநாயகனாக வைத்து கதைகள் எழுதுகிறீர்கள்?

  நன்றி

 2. நிறைய கேள்விகள் 😉

  விக்கிப்பீடியாவில் ஃப்ளாஷ் ஃபிக்ஷன் என்பது முன்னூறு முதல் ஆயிரம் சொற்களுக்குள் இருக்கலாம் என்று ஒரு தரப்பு கருதுவதாகப் படித்தேன். இன்னொரு தரப்பு ஐம்பத்து ஐந்து சொற்கள் என்று வரையறை செய்துள்ளதாகக் கேள்வி. எனவே, 55-1000 சொற்களுக்கு இடைப்பட்ட கதைகளை நிமிஷக் கதைகள் என்று நாம் நம் வசதிக்காக வைத்துக் கொள்ளலாம்.

  //நடுத்தர வயசு மனிதனின் மன அலைக்கழிவை அதன் போக்கில் சுற்றி சுற்றி வந்துதானே சொல்லமுடியும் வேறு எப்படி சொல்லலாம்?//- இப்படிப்பட்ட விமரிசனங்களை முன்னிட்டு மாவீரன் நெப்போலியன், எவரஸ்ட் நாயகன் ஹில்லாரி போன்றவர்களும் இனிவரும் நிமிஷக்கதைகளில் வருவார்கள்.

  இதில் இன்னொரு விஷயம்- பெண்கள் பெண்களாகவே இருக்க வேண்டும் என்றில்லை: காலம் தவறிய கவனிப்பு / செல்வம் என்று எவ்வகைப்பட்ட பெறாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வாழ்வே மாயம் பாடல் வலிய புகுத்தப்பட்டது போல் இருக்கிறது- ஒவ்வொரு பாடலாக சொல்லிக் கொண்டு வந்திருக்க வேண்டும், தவறுதான்.

  ஞானம் – அகத்திணை தலைவன்; ஜெகன் – புறத்திணை தலைவன்.

  உலக இலக்கியம் பற்றி நீங்கள் சொன்னது முழுக்க முழுக்க சரி. நாம் எழுதுவது சாதாரண சம்பாஷனை என்ற அளவுக்கு வந்தால் போதும், அதிலும் அது கொஞ்சம் சுவாரசியமாக இருந்தால் நல்லது, என்ற நிலைக்கு வந்து விட்டேன்.

  நன்றி.

 3. நல்லாயிருக்கு..வரசித்தன் சொல்வது போல புனைவு அற்புதமாக கைவந்தாலும், நீர்குளங்கள் போன்ற சொற்கள் கொஞ்சம் நெருடல். வாழ்த்துகள் தல.

  🙂

  1. சரியா வரல, இல்ல? இப்படி நீங்கள்லாம் எடுத்துச் சொன்னாதான் தெரியுது 😦 பொதுவா நாம கதை படிக்கும்போது கதை சொல்லி அல்லது பாட்டுடைத் தலைவனோட ஐடெண்டிஃபை பண்ணிக்கிட்டு அவனுக்கு அனுசரனையா படிப்போம். அப்படி இங்க செஞ்சா கொஞ்சம் செண்டிமென்டல் கதையாப் போயிடும். அதனால அவனைக் கிண்டல் பண்ணி வாசகனை alienate செய்யத்தான் நீர்க்குளம். சில துளிகள் இறங்கியோட அனுமதிக்க கண்ணீர் என்ன பூனைக்குட்டியா! நினைச்சது சரியா சொல்ல வரல போல. இனி திருத்திக்கறேன். நன்றி தல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s