திகிரி வருமொரு செலவினில்…

நமது நெடுநாள் நண்பர் திரு பாலாஜி அவர்களின் ‘கன்னி’ முயற்சி. என்ஜாய்.

நானும் அவளும் அந்த குறுகிய சந்தின் வழியே, ஒரு மாலை நேரத்தில் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். நேற்று மாலை மழை பெய்ததற்கு அறிகுறியாக நீர் குட்டைகள் ஆங்காங்கே தென்பட்டன. ஒரு குட்டையைத் தவிர்க்க அவள் தன் வலது புறம் ஒதுங்க நான் சற்றே நிதானித்தபின் முன் செல்ல, அவளது வலது சுண்டு விரல் என் இடது கை கட்டை விரலை உரசியது. கனவு வரவில்லை, ஆனால் நான் காணாமல் போயிருந்தேன்.

அவளிடம் யாதொரு சலனமும் இல்லை. என் மனம் அலை பாய ஆரம்பித்தது. என்ன ஒரு நளினமாக நடக்கிறாள். சிறு விரல் உரசலிலே இவ்வளவு இன்பம் என்றால், அவளை அணைத்தால் எப்படி இருக்கும்… இவள் என்னிடம் சற்று நெருங்கித்தான் பழகுகிறாள். என்னை விரும்புகிறாளோ, அதனால்தான் இந்த நெருக்கமோ? என் மனதை மெதுவாக அவளிடம் இழந்து கொண்டிருந்தேன்.

முட்டாளே மயங்காதே, உரசல் ஒரு விபத்து, என்றது மனசாட்சி. நல்ல வேளை, அவளது விரல் வேறு எங்கும் படவில்லை, பட்டிருந்தால் பைத்தியமே பிடித்திருக்கும் என்று கிண்டல் வேறு செய்தது.

யார் கேட்டார்கள் இதன் அறிவுரையையும் கருத்தையும்… அதிக பிரசங்கி. அவள் கண்டிப்பாக என்னை விரும்புகிறாள்.நான் போன வாரம் நன்றாக உள்ளது என்ற சல்வாரைத்தான் இன்று போட்டு வந்திருக்கிறாள்.

“போன வாரம் முடிந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டன. அவள் அப்பா ஒன்றும் டாடாவின் வாரிசு அல்ல”. அதிக பிரசங்கி மனசாட்சியே வாயை மூடு என கட்டளையிட்டேன். “போ, போய் பட்டால்தான் தெரியும்,” என ஒதுங்கி கொண்டது. இன்னொரு குட்டை வராதா என ஏங்கத் துவங்கினேன்.

நீர்த்தேக்கம் வந்தது ஆனால் எனது துர்பாக்கியம் அந்த இடத்தில் சாலை நன்றாகவே விரிந்து கிடந்தது, அவள் தனது இடது புறமாக ஒதுங்கி சென்றாள். சாலையை விரிவு படுத்திய மாநகராட்சி ஆணையர் ஒழிக என வைது கொண்டே அவளை தொடர்ந்தேன்.

ஒருப் பூக்கடையில் நின்றாள். மல்லிகை சூடினாள். முன் நெற்றியில் விழுந்த கேசத்தை பின்னே ஒதுக்கியபடியே, ஒய்யாரமாக திரும்பி “கோக் குடிக்கலாமா” எனக் கேட்டாள். வேகமாய் தலையாட்டினேன். இருவரும் கோக் குடிக்க, வானம் தூறல் போட்டது.

நாங்கள் கிளம்ப, தூறல் வலுக்க, அவள் குடை விரிந்தது. நடக்க ஆரம்பித்தோம். அவள் எனக்கும் குடை பிடித்தாள். ஒரமாய் சற்று நனைந்தபடியே நடந்தேன். அவள் கடிந்து கொள்ள அவளது குடை இப்பொழுது என்னை முழுவதும் உள்ளடக்கியிருந்தது.

எங்கள் விரல்களும், கைகளும், தோள்களும் அவ்வப்பொழுது நலம் விசாரித்து கொண்டன. நான் மிகவும் நலமாக உணர்ந்தேன். இதுதான் வாழ்க்கையின் அபரிதமான சந்தோஷமோ? என்ன ஒரு சொர்க்கம்?
சட்டென்று நரகத்தில் உள்ளது போல் உணர்ந்தேன்.

மழை நின்றிருந்தது. குடை மடக்கப்பட்டிருந்தது. அவள் என்னை விட்டு விலகி நடந்து கொண்டிருந்தாள். நானோ மழை நீரும் சாக்கடை நீரும் கலப்பு திருமணம் செய்து கொண்டிருந்த ஒரு நீர்க்குட்டையினூடே நடந்து கொண்டிருந்தேன்.

“கனவு கண்டுட்டிருக்கியா, சொல்ல, சொல்ல நேரா போற” கேலி செய்தாள்.

சாரல் பட்ட அவள் மேனி எழில் எனக்கு போதையுட்டியது. என்ன ஒரு பாக்கியம் என்றது முன் வைத என் மனம். மனம் ஒரு பச்சோந்தி. அதன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. உரசலை எஞ்சிய சந்தோஷம் இதோ என் அருகே உள்ளது. இதுவல்லவோ சொர்க்கம். என் மனக்கண்ணில் அவள் பாஞ்சாலியாக, நான் துச்சாதனனானேன்.

அவள் தனது கைப்பையில் இருந்து எடுத்த ஸ்கார்ஃப்பில் தன்னை மறைத்து கொண்டாள். அவளது குடையும் துணை போனது. சில வினாடிகளிள் சொர்க்கம் மறுபடியும் காணாமல் போயிருந்தது. மீண்டும் மழை வராதா? குடை விரியாதா? உடல்கள் உரசாதா?

பேருந்து நிலையம் வந்திருந்தது. மேடவாக்கம் செல்லும் பேருந்தும் வந்தது. ஒரு புன்னகை சிந்தி விடைப் பெற்றாள். பேருந்து கிளம்ப, தூரல் ஆரம்பித்து பின் மழை வலுத்தது. குடையும் அவளும் அங்கில்லை.

image credit : Favim.com

Advertisements

14 thoughts on “திகிரி வருமொரு செலவினில்…

 1. நட்பாஸ் சார்,
  என்னா சார்…. இப்டி கதை எழுதறவரை பக்கத்துல வெச்சுக்கிட்டு…. நிமிஷக் கதைக்கு ஆள்தேடிக் கூவறீங்க.

  பாலாஜி சார்….
  கதை அற்புதம்! உங்க நடை…. அவங்க ரெண்டு பேர் நடையை எங்களுக்குப் படம் பிடிச்சிக் காட்டிச்சி.

  நன்றி!

  1. இந்த அறிமுக எழுத்தாளர்க்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இனிமேலிக்கா அடுத்து நாம தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகம் பண்ற எழுத்தாளர்கள் எல்லாருக்கும் ர வரிசையில பேர் வெக்கலாம்னு பாக்கறேன். ஏன்னா நாமளே இப்ப ஒரு அப்பாடக்கர் ஆயாச்சுல்ல, என்ன சொல்றீங்க? 🙂

 2. கன்னி முயற்சியில் …கன்னி மயக்கத்தில் ஒரு காளை 🙂

  பாலாஜி அவர்களின் முதல் கதையே நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  சில கேள்விகள்.

  மாலையில் வீடு திரும்பும் போது ,மல்லிகை வாங்கிச்சூடுவது வழமையா?(எங்கள் பகுதிகளில் பெண்கள் ஒரு கல்யாணம் காட்சி கோயில் குளம் என்றால் கனகாம்பரம் சூடுவார்கள்)

  பாஞ்சாலி துச்சாதனன்( வன் துகிலுரிப்பு) வருவது கதாநாயன் காதல் காமம் வக்கிரம் என்ற உணர்வுகளுக்கிடையில் ஊசலாடுவதனாலா?

  இந்தக்கதை மேடவாக்க பஸ்ஸில் முடிவடைகிறது கிரியின் கதை மேடவாக்க பஸ்ஸில் தொடங்குகிறது. இயக்குனர் பேரரசு ‘’மேடவாக்கம்” என்ற படம் எடுக்க சான்ஸ் இருக்கிறதா?

  நட்பாஸ்
  நிமிஷக்கதைக்கு ஆள் தேடிக்கூவுறீங்களாமே? அப்படியா?

  நன்றி

  1. நியாயமாகப் பார்த்தால் இதற்கான பதில்கள் என்னிடம் இல்லை, இருந்தாலும் சொல்கிறேன்-

   இங்கே நகரங்களில் கனகாம்பரம் சூடுபவர்கள் மிகக் குறைவு. எப்போதும் மல்லிகைதான். தெரு முனைகளில் ஒரு கூடையில் வைத்துக் கொண்டு விற்கிறார்கள்- இப்போது விலை மிக அதிகம், இருந்தாலும் மல்லிகைதான் வாங்குகிறார்கள் பெண்கள்.

   ஆமாம், இது மன வக்கிரத்தை, வக்கிரம் என்று சொல்லாமல், அதன் இயல்பில் பேசும் கதை என்று நினைக்கிறேன். இதன் உரலி voyeur என்றிருக்கிறது- அது இக்கதாசிரியர் பரிந்துரைத்த ஒன்று.

   கிரிக்கும் பேரரசுக்கும் என்ன டீலிங்கோ, எனக்குத் தெரியவில்லை. காலம் தரும் பதிலுக்கு நானும் உங்களைப் போல் காத்திருக்கிறேன்.

   என் கூக்குரல் உங்களுக்கும் கேட்டு விட்டதா?! :))

  2. திருப்புகழ் பாடல் இப்படிச் செல்கிறது:

   ..குலாலன்

   திகிரி வருமொரு செலவினி லெழுபது
   செலவு வருமன பவுரிகொ டலமரு
   திருகன்

   இதன் பொருள்- . ‘குயவனுடைய சக்கரம் சுழலும் ஒரு சுழற்சி வேகத்திற்குள் எழுபது சுற்று வரும் மனச் சுழற்சி கொண்டு அலை பாய்ந்து வேதனைப்படும் கோணல் புத்தி உடையவன் யான்,’

   என்று குறிப்பிடப்பட்டுள்ளது – http://www.kaumaram.com/thiru_uni/tpun1006.html

   என்ன ஒரு தமிழ்! என்ன ஒரு பொருள்!

   இந்த வரிகளைப் படிக்கும்போதே இதயத்தை அறுக்கிற மாதிரி இருக்கிறது….

   இதைத் தொடர்ந்து,

   உருகுத லழுகுதல் தொழுகுதல் …… நினையாத

   திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி
   திருடன் மதியிலி கதியிலி விதியிலி
   செயலி லுணர்விலி

   என்று பாடிக் கொண்டே போகிறார்.

   என்ன ஒரு ஆற்றல்- தமிழே கவிஞனின் குரலில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ, என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட உணர்வு நிலையை மொழியால் வெளிப்படுத்துவதை விடுவோம், அதைத் தொடுவதே நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறதே…

   இது போன்ற பாடல்களைப் படிக்கும்போது, நாம் நம் வாழ்வின் மேற்பூச்சுக்களை சுரண்டிப் பார்க்கக்கூட இன்னும் யத்தனிக்கவில்லையோ என்று தோன்றுகிறது…

   நன்றி.

 3. நன்றி சார் நயமான விளக்கம். கதையின் உணர்வு மேலும் ஆழமாகிறது.
  அருண’கிரி”நாதர் பூச்சுக்களை உதிர்த்தபின் பாடினார்.

  சந்தம் வந்து இயல்பாய்க்குந்தும் பாடல்கள் :).

  பலர் வாழ்கிறார்கள்.
  சிலருக்கு வாழ்வை வியப்பதே வாழ்வு

  1. பூச்சுகளை உதிர்க்கத்தானே எல்லாமும், பூச்சுகளால் கெட்டித்துக் கொள்வதற்கா வாழ்க்கையும், அதைப் பற்றிய வியப்பும் பேச்சும்? நன்றி சார் 🙂

 4. முதல்ல இவ்வளவு லேட்டா பதில் போடறதுக்கு எல்லாரும் மன்னிக்கணும். இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா கணினி முன்னாடி உக்கார முடிஞ்சிருக்கு.

  நட்பாஸ்கிட்ட கதை அனுப்பட்டுமான்னு கேட்டப்ப இருந்த தைரியம் அனுப்பினதுக்கப்புறம் இல்லை. இலக்கிய தரம் உள்ள வலை பதிவாச்சே கள்ளி பெட்டி, இப்படி விளையாட்டுத்தனமா அனுப்பிடோமேன்னு யோசிச்சேன். அதவும் 2003ல எழுதின கதை.நட்பாஸ்ம் உடனடியா போடல. சரி எல்லாம் தப்பிச்சிங்கன்னு நினைச்சேன். ஆனா விதி உங்கள எல்லாம் வுடல.

  On a serious note, கிரிதரன் , கிரி, வரசித்தன் மற்றும் நட்பாஸ் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. கொஞ்சம் ஊக்கமாதான் இருக்கு. நட்பாஸ்கிட்ட ஒரு கரு கூட சொல்லி ஒப்புதல் வாங்கி வச்சிருக்கேன். இப்படி ஊக்குவிச்சதுக்கு பழியா இன்னும் ஒரு கதையாவது என்கிட்டே இருந்து உங்கள எல்லாம் வந்து சேரும், நட்பாஸ் அனுமதிச்சாருன்னா.

  வரசித்தன் சார், உங்க கேள்விகளுக்கு நட்பாஸ் குடுத்த பதில்கள்தான் என்னோட பதில்களும். நூத்துக்கு 99 காதல், காமத்தில்தான் ஆரம்பிகுதுங்கறது என்னோட எண்ணம். இந்த கதையோட நாயகன் அப்படிப்பட்ட ஒரு காம சூழல்ல, இந்த நாயகியுடன் முதல் முறையா சிக்கும்போது ஏற்படற கதைதான் இது. Originally, இந்த கதை இன்னும் கொஞ்சம் நீண்டு போகும். அதுல இவங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் நடந்து அவங்க முதல் இரவில் ஏற்படும் ஆரம்பக்கட்ட உரையாடளோட கதை முடியற மாதிரி எழுதிருந்தேன். அதுல நாடகத்தனம் ரொம்ப இருந்தது. அதுவுமில்லாமா கதை இப்ப கொஞ்சம் சிக்குன்னும் இருக்கு. எல்லாம் நட்பாஸ் அறிவுரையின்படி.

  நட்பாஸ்க்கு, இப்படி ஒரு அருமையான தலைப்பு வச்சதுக்கு ஒரு பெரிய நன்றி சொல்லணும். எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாரோ?

  நன்றி.

  பாலாஜி

 5. எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்கிற நடுநிசி.

  டிக்..டிக்..டிக்.. விநாடிகள் விநாடிக்கொன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

  அவர் இன்னும் விழித்திருக்கிறார்.தன் பட்டறையில் மடக்கிச்சுருட்டிய டியூப் லைற் வெளிச்சத்தில் வியர்வை வழிய மணிக்கதைகளை அறுபது அறுபது நிமிஷக்கதைகளாக
  செதுக்கிச்செதுக்கிஅரிந்துகொண்டிருக்கிறார்.

  தேசத்தின் இன்னொருகோடியிலும் அதே நடுநிசி இரவு.அதே டிக்..டிக்க்கும் விநாடிகளின் ஓட்டமும்.

  அங்கே விழித்திருப்பவர் லைட் வெளிச்சத்தில் நிமிஷக்கதைகளை குழைத்துத்திரட்டியுருட்டி உருக்கி அடித்து ,நெருக்கிப்பின்னி ,செதுக்கி மெழுகி ,ஆயிரம் பக்கநாவலாக நீட்டிக்கொண்டிருக்கிறார்

  1. லில்லிப்புட்டும் ஹெர்குலிஸுக்கும் கிடைப்பதென்னவோ அதே உணவுதான், அவரவர் செரிமானத்துக்குத் தக்கபடி உண்டு கொழுக்கிறோம், இல்லையா? 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s