சிவலிங்கம் ஸ்டோர்ஸ்

(நண்பர் ஸஸரிரி கிரி அவர்கள் எழுதிய அட்டகாசமான கதை)

கடையுள் நுழையும்போது வலதுபக்கம் அமர்ந்திருப்பவர் கணக்கு. அப்படித்தான் அவரை எனக்குக் காலம் காலமாகத் தெரியும். அவர் நிஜப்பெயரை அந்த மேஜைக்கு முன் வந்து அமரும்போது அவரே கழற்றிவிட்டு வந்து அமர்ந்து கொள்கிறார். தன் உண்மைப் பெயரை அவர் யாருக்கும் சொல்லியதில்லை என கல்லாப்பெட்டி சொல்வார்.

நானும் “பாக்கெட்” எனவே இந்தக் கடையில் அறியப்படுகிறேன். என் பெயரையும் கூட பல நேரங்களில் நான் மறந்து விடுகிறேன். நான் சாதாரண பாக்கெட் இல்லை, மீடியம் பாக்கெட். என்னுடன் சேர்த்து பெரிய பாக்கெட், சின்ன பாக்கெட், குட்டி பாக்கெட் என இன்னும் மூன்று பாக்கெட்டுகள் உண்டு. கணக்கின் வழி நடந்து என் பெயரை நானும் யாருக்கும் சொல்லிக் கொள்வதில்லை. மற்ற பாக்கெட்டுகள் பெயரையும் கேட்டுக் கொள்வதில்லை. இப்போதெல்லாம் அம்மாவுக்கு போன் போட்டால் கூட “மீடியம் பேசறேம்மா”, என்றே வருகிறது. எப்போதேனும் பஸ்சுக்கோ ரயிலுக்கோ டிக்கெட் பதியப் போனால் மட்டும் மறந்து போன என் பெயரை எழுத நேர்கிறது. அப்போதெல்லாம் அந்தப் பெயரே நன்றாக இருப்பது போலத் தோன்றும். சினிமாவில் காதலன் பெயரெழுதி அதைத் தடவிப் பார்க்கும் காதலி போல என் பெயரை நானே இரண்டொரு முறைகள் தடவிப் பார்த்துக் கொள்வேன். அதுவெல்லாம் மீண்டும் கடை வந்து சேரும்வரைதான். கடை வந்தால் மீண்டும் மீடியம் பாக்கெட் ஆகிவிடுவேன்.

கல்லாப்பெட்டி மட்டும் கடை முதலாளிக்கு நெருங்கிய உறவுமுறை. அவர் பெயர் சேர்மன் எனக் கேள்வி. என்னோடு சேர்த்து பாக்கெட்டுகள் நால்வரும் கோவில்பட்டி பக்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். கணக்கு பக்கத்தில் இருக்கும் கொடுங்கையூர் வாசி, முதலாளியின் பால்ய நண்பர். வாடிக்கையாளர்கள் கணக்கிடம் வந்து லிஸ்டு போட்டுக் கொண்டு கல்லாப்பெட்டி அண்ணனிடம் காசு கட்டினால் யாரேனும் ஒரு பாக்கெட்டோ அல்லது இரண்டு பாக்கெட்டுகள் சேர்ந்தோ லிஸ்டில் உள்ள சாமான்களை கட்டித் தருவோம்.

எங்களில் ரொம்பவும் விசேஷமான திறமை கொண்டவர் கணக்கு. விசேஷ சக்தி எனக் கூட சொல்லலாம். லிஸ்ட் எழுதும்போது மேலிருந்து கீழாக ஒன்று, இரண்டு என கூட்டல் போடும் வழக்கம் அவருக்குக் கிடையாது. ஒவ்வொரு பொருளாக லிஸ்டில் எழுதுவார். எண்ணம், விலை அவற்றையும் எதிரே குறிப்பார். ஐம்பது நூறு பொருட்கள் கொண்ட லிஸ்டைக் கூட எழுதி முடித்துவிட்டு உடனே ஒரு அடிக்கோடிட்டு அப்படியே கீழே மொத்தத் தொகையையும் எழுதுவார். ஒவ்வொரு பொருளாக எழுத எழுத மனதில் கூட்டி முடித்துக் கொள்வார். அவர் லிஸ்ட் எழுதி அடிக்கோடிட்டு மொத்தத் தொகையை எழுதுவதை ஆச்சர்யமாகப் பார்க்க என்றே அவரைச் சுற்றி எப்போதும் நான்கு பேர் நிற்பார்கள்.

கடந்த சில நாட்களாக கணக்கு மன வருத்தத்தில் இருக்கிறார். கையில் எழுதும் லிஸ்டு முறையில் நேரவிரயம் ஏற்படுவதால் கம்ப்யூட்டர் ஒன்றைத் தருவித்திருக்கிறார் சின்ன முதலாளி. இன்னும் இரண்டொரு நாட்களில் யாரோ எஞ்சினியர் வருகிறாராம் அதற்கு உயிர் தர. கணக்கு, கல்லாப்பெட்டி அண்ணன் இருவருக்கும் பயிற்சி தரவும் ஒரு மசை வரவிருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.

“என்ன கணக்கு, உமக்கு கம்ப்யூட்டர்’ன்னு பேரு மாத்தி ஞானஸ்நானம் பண்ணிருவமா?”, சின்னவர் கேட்க, “பேர் வெக்கயிலதான் ஞானஸ்நானமெல்லாம். பேர் மாத்தத்துக்கெல்லாம் இல்ல பாத்துக்க. வேலைய மாத்திராத வரையில சந்தோசமப்பா. கழுத பேர்ல என்ன கெடக்கு”, பதில் விழுந்தது.

“என்னலே மீடியம்! இந்த பேப்பர்ல பொட்டலம் கட்டற வேலைய விட்டுட்டு நம்ம கடைய மாடனா டிபார்ட்மண்டல் ஸ்டோர் கணக்கா மாத்தப் பாக்கறேன். பண்ணிருவமா?”

“நீங்க யோசிச்சா சரியாத்தான் இருக்கும்ணே”

மனதில் சின்னதாய் ஒரு ஆசை. நமக்கும் பெயர் மாற்றம் உண்டா? நம் உண்மைப் பெயரை சின்னவரிடம் சொல்லிவிடலாம என நினைத்த நொடியில், “என்ன உனக்கு அந்த ஞானஸ்நானமெல்லாம் கெடையாது. ஆடர் வந்த பெறகு போடற பொட்டலத்த, வர்றதுக்கு முன்னமே போடணும். நீங்க நாலு பெரும் அப்பவும் பாக்கெட்தான் லேய்!”

எனக்குப் பொசுக்கென்று போனது.

Advertisements

One thought on “சிவலிங்கம் ஸ்டோர்ஸ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s