நம்மைக் கடந்து சென்ற எதிர்காலம்

இப்போது சிலபல சூளுரைகளை மீறியே இதைப் பதிவு செய்கிறேன்.

அண்மைக்காலமாக திரு ஜெயமோகன் அவர்கள் அறிவியல் குறித்து அடிக்கடி எழுதத் துவங்கியிருக்கிறார்- குறிப்பாக இந்தக் கட்டுரை. இன்றைய இணைய வெளியில் அவரது தாக்கம் சிந்தனையாளர்கள் (intelligentsia) மத்தியில் பெரிய அளவிலான எதிர்வினையை (response- பேசாமல் ஆங்கிலத்திலேயே எழுதித் தொலைக்கலாம்), எதிர்வினையை ஏற்படுத்துவதாக இருப்பதால் ஜெயமோகன் அவர்கள் அறிவியல் குறித்து எழுதும் கட்டுரைகள் மற்றும் கதைகள் ஒரு குவிமையமாக செயல்பட்டு அறிவியல் எழுத்தை நவீனப்படுத்துவதோடல்லாமல் அதை எழுத நினைப்பவர்களுக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கும்- அதிலும் குறிப்பாக, இன்றைய தமிழ் அறிவியல் கட்டுரைகள் பெரும்பாலும் உலர்ந்த மொழியில்தான் எழுதப்படுகின்றன. அறிவியலின் உணர்வுச் செறிவு அதன் தத்துவ ஆழத்தை காண விழைவோரால் மட்டுமே வெளிப்படுத்தபடக்கூடிய ஒன்று. இயற்கையாகவே ஜெயமோகனின் எழுத்து உணர்வு வளம் மிக்கதாகவும் தத்துவத் தளத்தை விசாரிப்பதாகவும் இருப்பதால், அவர் அறிவியல் குறித்து இன்னும் நிறைய எழுதினால் லாபம் தமிழுக்கும் தமிழர்களாகிய நமக்கும்தான். ஆகவே அவருக்கு கள்ளிப் பெட்டி ‘வாசகர்கள்’ சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் பாருங்கள், அவர் நான் மேற்குறிப்பிட்ட கட்டுரையில், “வழக்கமாக இவ்வகை விஷயங்களை எழுதுபவர்கள் தாங்கள் ஏதோ அதிநுண்நிலையில் இருந்து பாமரர்களுக்காக இறங்கி வந்து எழுதுவதான பாவனையில் அசட்டுநகைச்சுவை கலந்து அரைகுறையாக ஏதாவது எழுதுவதே வாடிக்கை,” என்று ஒரு உள்குத்து வைத்து எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்து இன்றைய இணைய அறிவியல் எழுத்தாளர்கள் அனைவரும் ரொம்ப சீரியஸாக கர்ம சிரத்தையாக சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் இவர்களுடைய கட்டுரைகள் சேர்க்கப்படும் என்பது போன்ற பாவனையில் எழுதுகிறார்கள்- அசட்டு நகைச்சுவை கலந்த அரைகுறை அறிவியல் எழுத்தை இந்த ப்ளாகைத் தவிர வேறெங்கும் பார்த்ததில்லை என்ற என் கனத்த துயரை இங்கு நான் பதிவு செய்கிறேன்.

போட்டோன்களைவிட ந்யூட்ரான்கள் வேகமாக பயணிக்கின்றன என்பது சாதாரண செய்தியல்ல. ஜெனீவாவில் ஒரு ஆய்வுக் கூடத்தில் இந்த ந்யூட்ரினோக்கள் ஏறத்தாழ எழுநூற்று முப்பது கிலோமீட்டரை ஒளியை விட பத்து நானோநொடிகள் விரைவாகக் கடந்திருக்கின்றன. ஒரு நானோநொடி என்பது ஒரு நொடியில் பில்லியனில் ஒரு பங்கு, அதாவது, 1/1000000000, அதாவது ஓராயிரம் மில்லியன்களில் ஒரு பங்கு- ஒரு மில்லியன் என்பது ஆயிரமாயிரம் என்று வைத்துப் பார்க்கும்போது, இது ஒரு நொடியின் கால அளவின் ஆயிரம் ஆயிரமாயிரம் பகுப்புகளில் ஒன்றே ஒன்று மட்டுமே ஒரு நானோநொடியின் கால அளவு- இதனோடு ஒப்பிட்டால் கண் சிமிட்டும் நேரம் என்பது ஒரு யுகம் போல் நீண்ட நேரமாக இருக்கும். ந்யூட்ரினோக்கள் ஒளியை விட இந்த பத்து நானோநொடிகள் வேகமாகப் பயணிப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது என்ன சாதாரண விஷயமா?

ஜெயமோகன் அவர்கள் அவதானித்தது போல், இந்த நிகழ்வு ஒரு புதிய அறிவியலை நம்மிடம் கோரி நிற்கிறது. வழக்கம் போல் டிவிட்டர், பஸ், ஃபேஸ்புக், குழுமம் போன்ற நட்பு வட்டங்களில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறேன். இதுபோன்ற மேலும் பல அறிவியல் துறை சார்ந்த கட்டுரைகளை ஜெயமோகன் எழுதினால், தமிழில் அறிவியல் கட்டுரைகள் உயிர்ப்போடு வாசிக்கக் கிடைக்கும்.

பார்ப்போம், காலம்தான் பதில் சொல்ல வேண்டும்- ஆனால் காலம் பின்தங்கிவிட்டது என்ற செய்தியைப் பார்க்கும்போது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது: இதைப் போன்ற வேறு நுண்துகள்களைக் கண்டு பிடித்து நாளை வெடிக்கப்பட்ட நுண்துகள்குண்டு இன்று நம் தலையில் வந்து விழும் அச்சுறுத்தலை நினைத்தால், இப்போதே, “ட்ரைவர், வண்டியைத் திருப்பு!” என்று காலதேவனிடம் ஆணையிடத் தோன்றுகிறது.

Advertisements

14 thoughts on “நம்மைக் கடந்து சென்ற எதிர்காலம்

  1. இல்லைன்னு நினைக்கறேன். பின்னூட்டத்துக்கு நன்றிங்க, இது பத்தி பேசறதானா எவ்வளவோ பேசலாம். தமிழில் அறிவியலுக்கான உணர்வுகளைத் தொடும் மொழி இல்லை, அது ஒரு குறை. கதைன்னு பாத்தா தொழில்நுட்பத்தில் ஆர்வம் ஏற்படுத்தும் கதைகள் இல்லை. ரோபோ நாய்க்குட்டி, லேசர் கத்தி, வாக்குவம் ஃபீல்டு இந்த மாதிரி விஷயம்லாம்தான் சிறுவர்களை அறிவியல் படிக்கத் தூண்டும். ஃபீன்மன் முதற்கொண்டு ஏராளமான விஞ்ஞானிகளே இதைதான் சொல்லியிருக்காங்க. அறிவியல் அல்லது பொறியியல் படிச்சிருந்தா நீங்ககூட எழுதலாமே?

  1. 🙂

   கண்மூடி கருத்து சொல்லிகள் சங்கம் சார்பாக எங்களை இவ்வளவு கேவலமாக நீங்கள் பேசியிருப்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன், வன்மையான கண்டனக் குரல் எழுப்புகிறேன்.

   கருத்து சொல்பவன் கர்த்தாவைவிட மோசமானவன் என்பதைக் கூட போனால் போகிறது என்று ஏற்றுக் கொள்கிறேன், ஆனால், கருத்து சொல்வதற்குப் பெயர்தானே சிந்தனை செய்வது?

   இல்லை சிவகாமி மகன் சண்முகனை சிந்தனை செய்வது போல் சிந்திப்பதுதான் சிந்தனையா?

   வரசித்தனாகிய நீங்கள்தான் சிந்தனையாளனுக்கும் கருத்துச்சொல்லிக்கும் இடையுள்ள வேறுபாடுகளை விளக்க சரியான ஆள் (நேரமிருந்தா சொல்லுங்க, அதை ஒரு பதிவா போட்டிடறேன்!)

 1. படைப்பாளி / இலக்கியவாதிக்கும் கதை சொல்லிக்கும் இடையே உள்ள வேறுபாடுபோல

  சிந்தனாவாதிக்கும் கருத்துச்சொல்லிக்கும் இடையில் உள்ளது வேறுபாடு.

  கருத்துச்சொல்பவர்கள் சிந்தித்துச்சொல்லவேண்டியதில்லை. அவர்களுடைய உணர்வுகளின் தாக்கமும் கருத்துக்களில் வெளிப்படலாம்

  கருத்துச்சொல்லிகள் குறைந்தவர்கள் என்ற சாரமும் தவறானது. கருத்துச்சுதந்திரம் மறுக்கப்படுகிறபோது கருத்துச்சொல்லுதல் ஒரு புரட்சி.

  பேசமுடியாமல் ஒடுக்கப்பட்டிருக்கிற ஒரு கூட்டம் மக்களுக்காக அவர்களுடைய கருத்தைச்சொல்ல முன்வருகிறவர்
  மேலான மதிப்புக்குரியவ

  சிந்தனாவாதி அல்லது ஒரு துறையில் அறிஞர் சொல்லுகிற கருத்துக்கள் விரிந்த தளம்.தன்பக்கத்தைச்சொல்வதில்லை

  கருத்துச்சொல்லுதல் அனேகமாக ஒரு பக்கத்தை எடுத்துச்சொல்லுதல்

  இது கருத்துச்சொல்லிகளின் காலம்.

  எல்லாவற்றையும் போல கருத்துச்சொல்லுதலுக்கும் ஒரு வணிக அல்லது இலாப அல்லது புகழ் நோக்கமுள்ள பக்கமும் இருக்கிறது.

  கருத்துச்சொல்லிகள் புகழடைகிறார்கள். ஆணித்தரமான எதிர்க்கருத்து கைதட்டல் பெறுகிறது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் அணிகள் உருவாகின்றன. திரள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பலமடையும் ஒரு கட்டத்தில் அவர்கள் கருத்துருவாக்கிகள் ஆகிறார்கள்.

  கருத்துச்சொல்லிகள் இப்படிபலமடைந்ததற்குக்காரணம் இன்றைய மீடியா உலகம்.

  அதனால்தான் படைப்பாளிகள் கருத்துச்சொல்லிகளாக மாறிய பின்னர்தான் புகழடைந்திருக்கிறார்கள்.

  இன்றைய வணிக உலகத்தில் கருத்துச்சொல்லிகளுக்கு நல்ல கிராக்கி

  கருத்துச்சொல்வதற்கு சில முறைகள் இருக்கின்றன.அவற்றைச்சரியாக கையாண்டால் புகழடையலாம்.

  வெளிப்படுத்துகிற கருத்து உடனடித்தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.

  வாசிப்பவர் ஆதரிக்கலாம் சந்தோசப்படலாம். எதிர்க்கலாம் கோபப்படலாம். இந்த இரண்டின் மூலம் வாசகர்களின் மனதில் அவர் இடம் பிடித்துவிடுவார்.
  சிலருக்கு அவர் சொல்வது உண்மையாகத்தோன்றும்.
  சிலருக்கு அவர் சொல்வது பொய்யாகத்தோன்றும்.
  சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

  எப்படியோ அவர் மனதில் இடம்பிடித்துவிடுவார். சிலருக்கு கலங்கரை விளக்கம். சிலருக்கு மனதில் குத்திய முள்.

  கருத்துச்சொல்லிகள் அவரைப்பின்தொடர்பவர்களுக்கு சிந்தனாவாதிகளாகத்தெரியக்கூடும்.

  இலக்கியவாதிகள் கருத்துக்களின் சுழல்களுக்குள் சிக்கி முனைப்பட்டுபோகக்கூடாது.
  வாழ்வை இயல்பாக ஆழ்ந்து பார்க்கும் நிலையற்றுப்போய் தான் முன்வைக்கும் கருத்துக்களுக்கு ஆதரவான உலகம் மாத்திரம் கண்ணுக்கு புலப்படத்தொடங்கிவிடும் அபாயம் இருக்கிறது.

  அதனால் காலங்கடந்து நிற்கிற படைப்பைத்தரமுடியாது போய்விடக்கூடும்.
  அதனால்தான் நல்ல இலக்கியவாதிகளை கருத்துச்சொல்லிகளாக மாற்றக்கூடாது என்கிறேன்.

  இப்படி இதை நிறையவே பல்வேறு திசைகளில் இதை ஆராயலாம்.அப்படி விறுப்பு வெறுப்பின்றி ஆராய்ந்தால் அது எதிர் ஆதரவுக்கருத்துக்களையும் உள்ளடக்கி விரியும்.

  ‘’இது கருத்துச்சொல்லிகளின் காலம்” என்று தலைப்புப்போட்டுக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள்.

  இணையக்கட்டுரைகள் எத்தனை கருத்தைச்சொல்லுகின்றன.எத்தனை ஆராய்கின்றன.?

  நன்றி

  1. உண்மைதான். அவசர அவசரமாக பதில் தருவது உங்களுக்கு நான் செய்யும் அவமானம், கொஞ்சம் யோசித்து எழுதுகிறேன். நீங்கள் எழுதுவது சரி என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அறிவியல பற்றி சுவாரசியமான கட்டுரைகளைப் படிப்பது எவ்வளவு அபூர்வமாக இருக்கிறது!

   கொஞ்சம் நகைச்சுவையாக அதைக் கொடுக்க முயற்சித்தார் சுஜாதா, அதில் பெருமளவில் வெற்றியும் பெற்றார் என்று நினைக்கிறேன். இப்போது சீரியஸாக எழுதப்படும் கட்டுரைகளைப் படிக்க அசாத்திய பொறுமை தேவைப்படுகிறது.

   நகைச்சுவை கலந்து அறிவியலைப் பேசுவது சிறுபிள்ளைத்தனம் என்றாகிவிட்ட இந்நாளில், அறிவியல் எழுத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பெரிய சவாலாக இருக்கிறது.

   இதை என்னைப் போன்ற வாசகர்கள் சாதிக்க முடியாது- நாம் படித்து கருத்து சொல்லலாம், அவ்வளவுதான். ஆனால் சிறந்த எழுத்தாளர்கள் முயன்றால், அப்படிப்பட்ட எழுத்தைப் படைக்க முடியும்.

   அதைச் செய்ய யார் இருக்கிறார்கள், சொல்லுங்கள். இனியொரு சுஜாதா பிறந்து வரப போகிறாரா? ஒரு வேளை ஜெயமோகன் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வளிக்கலாம், இல்லையா?

   ஒன்று நிச்சயம். இன்றுள்ள அறிவியல் கட்டுரைகள் இலக்கியக் கட்டுரைகளைவிட படிக்கக் கடினமாக இருக்கின்றன. படிக்கும் ரசனையை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிப் பயனில்லை.

   மாணவனுக்கும் பாமரனுக்கும் அறிவியலில் ஆர்வம் ஏற்படுத்தும் எழுத்து இருக்க வேண்டும், அதன் பின்தான் உயர்ந்த ரசனையை சிந்திக்க முடியும் என்று நினைக்கிறேன். கணக்கு மற்றும் அறிவியல் துறைகளில் எளிய விஷயங்களைத்தானே முதலில் சொல்லித் தருகிறார்கள்?

 2. மொழி நன்றாயிருப்பதால் தமிழாசிரியர் அறிவியல் கற்பிக்கலாமென்கிறீர்களோ?

  ”நகைச்சுவை கலந்து அறிவியலைப் பேசுவது சிறுபிள்ளைத்தனம் என்றாகிவிட்ட இந்நாளில்”

  இப்படிப்பேசுவதுதான் சிறுபிள்ளைத்தனம் .

  மேலைநாடுகளில் அறிவியல் சம்பந்தமான புத்தகங்களைப்பார்க்கிறபோது பொறமையாக இருக்கிறது.
  விதம் விதமான கற்பனைகளுடன் பல்வேறு தரங்களில் அசட்டுத்தனமான நகைச்சுவை ,அசட்டுத்தனமில்லாத நகைச்சுவை, படங்கள் ,விளக்கப்படங்கள் அசட்டுத்தனமான விளக்கப்படங்கள் புத்திசாலித்தனமான விளக்கப்படங்கள் புத்திசாலித்தனமானவர்களுக்கு, பாமரர்களுக்கு தடத்த லக்கணத்தில் சொரூப லக்கணத்தில் என பல்வேறுவிதமான புத்தகங்கள் கிடைக்கின்றன.

  சுஜாதா அறிவியல் கற்றவர். அறிவியல் எளிமையாகத்தரவேண்டுமானால் அறிவியலின் தளத்தில் தொடர்ந்து இயங்கவேண்டும்.உதாரணமாக மருத்துவத்துறையில் முதல் மூன்று வருடமும் அடிப்படை விஞ்ஞான அறிவியல் கற்றுத்தந்தார்கள். உடலின் அமைப்பு, உடலின் சாதாரண தொழிற்பாடு ,உடலின் இரசாயன அமைப்பு.பிறகு நோயில் உடலில் ஏற்படும் மாற்றம். நோயை ஏற்படுத்தும் உயிரினம் நோயை ஏற்படுத்தும் இரசாயனம். நோய்க்கு மருந்தாகும் இரசாயனம்.
  இதற்கு அடிப்படையாக எமது உயர்தரக்கல்வியில் விலங்கியல் தாவரவியல் பௌதிக இரசாயனவியல் அடிப்படையாக அமைந்தது

  அறிவியல் கல்வி என்பது இடையறாத தொடர்ச்சி படியேறுவது போல.ஒரே விடயம் ஆனால் அழமுக் அகலமும் அதிகரித்துக்கொண்டே மேலும் சிக்கலாகிக்கொண்டே மேலே மேலே போனது. அது மாத்திரமல்ல அடிப்படை அறிவியல் என்பது தொடர்ந்து விஞ்ஞான வளர்ச்சியோடு மாறிக்கொண்டேயிருக்கிறது.
  நாங்கள் தொடர்ச்சியாக படித்துக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.

  அறிவியல் எழுத்து என்பது ஒரு சிறு வாசிப்பு அல்ல.தொடர்ச்சியான கற்றல்.அதுதான் இங்கு சிக்கல்.

  சுஜாதாவின் எளிமைப்படுத்தலை வியந்து கொள்ள அறிவியல் கற்றவரால் இயலும். ஒரு ஆழமான விஷயத்தை இரண்டொரு வசனங்களில் மெல்லியதாக தொட்டுவிட்டுச்செல்லும்போது தான் படித்தவைகளை சுருக்கித்தருகிறபோது அது சந்தோஷத்தைத்தருகிறது.

  ஒரு துறையில் அறிவு அதிகரிக்க அதிகரிக்க கற்பித்தலில் ஒரு எளிமை வரும். அதை பேராசிரியர்களில் கண்டிருக்கிறேன்.அவர்கள் ஒரு பெருங்கடலின் சாரத்தை சுவையாக்கி துளியாகத்தருவார்கள்.
  அதை எங்கள் தேவைக்கேற்ப விரித்துக்கொள்ளலாம்.

  அறிவியலில் ஊறி அதன் சாரத்தைக்கண்டுகொண்டவர்கள் எழுத முன்வரவேண்டும்.
  அறிவியலைக்கற்பதற்கும் தனக்கேயான கற்பனை தேவைப்படுகிறது. அது விளங்கிக்கொள்வதற்கான கற்பனை. அறிவியல் கல்வியில் உயர உயர விளங்கிக்கொள்வதற்கான கற்பனைக்கு முன்பு கற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது

  அறிவியல் ஆங்கிலத்தில் இருக்கிறது அது ஒரு பெரிய இடர்.

  சுஜாதாவை நான் போற்றுகிறேன்.ஒரு அறிவியலாளர் எழுத்தாளராகவும் அமைந்தது என் தலைமுறைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
  ஆனால்சுஜாதாவால் எழுதப்படாத மிக சுவையான தமிழ் அறிவியல் புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன்.

  அறிவியல் துறைக்கு அப்பாற்பட்ட எழுத்தாளர் அறிவியல் கட்டுரை எழுதவேண்டுமானால் அறிவியலாளர் உள்ளடங்கிய ஒரு குழு அமைக்க வேண்டும். குழு கலந்துரையாடி ஒரு அறிவியல் நூலை உருவாக்கலாம்.
  பதிப்பகங்கள் அதச்செய்யலாம்.திரைப்படங்களைப்போல அப்படியான குழுவில்ஜெமோ போன்ற திறமையாளர்கள் மொழியினை திறம்படக்கையாண்டு அறிவியலை முன்னெடுக்கலாம்.மொழிபெயர்க்கலாம்.நிறையவே இருக்கிறது.ஆனால் அதிலும் சிக்கல் இருக்கிறது.இலக்கியம் போல பல்வேறு அர்த்தங்களை மொழிபெயர்ப்புகளை அறிவியல் உருவாக்குவதில்லை.

  ஆனந்தவிகடனில் மருத்துவத்தொடர்கள் அப்படித்தான் எழுதப்படுகின்றன என்றுநினைக்கிறேன்.

  இங்கு எழுத்து தொழில் நுட்பத்தை பயிற்றுவிக்கிறார்கள். எழுத்துத்தொழல்நுட்பம் பயின்றவர்கள் துறை வல்லுனர்களின் உதவியோடு அதை பல்வேறு துறைகளுக்கு பிரயோகிக்கிறார்கள்.
  ,

  “வழக்கமாக இவ்வகை விஷயங்களை எழுதுபவர்கள் தாங்கள் ஏதோ அதிநுண்நிலையில் இருந்து பாமரர்களுக்காக இறங்கி வந்து எழுதுவதான பாவனையில் அசட்டுநகைச்சுவை கலந்து அரைகுறையாக ஏதாவது எழுதுவதே வாடிக்கை,”

  மருத்துவ விடயங்களில் எதை பாமரர்களுக்குச்சொல்வது எதைச்சொல்வதில்லை என்று கூடிப்பேசி தீர்மானிக்கிறார்கள். தீர்மானிக்கப்பட்டதை சுவையாக எளிய முறையில் எடுத்துச்சொல்கிறார்கள்.சுகாதார அறிவூட்டலிக்கென்று தனியான கல்வி இருக்கிறது.

  அங்கு பாமரர்களுக்காக இறங்கிவரவேண்டுமென்பது விதி.

  இங்கு நாங்கள் பக்டீரியா ஒன்று உங்கள் சுவாசப்பைக்குள் புகுந்துவிட்டது என்று சொல்வதில்லை. கெட்ட பூச்சி( bad bug) புகுந்துவிட்டது என்றுதான் ஆஸ்திரேலியர்களுக்கு சொல்கிறோம்.

  மேற்படி கருத்துச்சொல்லப்பட்டதன் தாற்பரியமாக நான் உணர்ந்ததென்ன வென்றால் கருத்துச்சொல்வதற்கான ஒரு விடயமாக ஒரு தருணத்தில் அது இருந்திருக்கிறது என்பது மட்டுந்தான்.

  கருத்து மாத்திரமே சொல்லும் கருமாந்திரமாகவே பலவிடயங்களைக்கருதுகிறோம்

  அதனால்தான் கருத்துச்சொல்லுதல் பற்றிய என்பின்னூட்டம் வந்தது.

  அசட்டுத்தனமான நகைச்சுவையோடாகினும் அறிவியல் கட்டுரை எழுதுங்கள் நண்பர்களே.
  ஆனால் அறிவியல் கட்டுரையிலும் ’’நான்’’ ஐ துருத்தாதிருங்கள் தோழர்களே… 🙂

  1. நீங்கள் இவ்வளவு காட்டமாக எழுதுவீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் சும்மாவே இருந்திருப்பேன்! இருந்தாலும் நன்றி. நீங்கள் எழுதியுள்ள விஷயம் பிரச்சினையின் சிக்கலைத் தெளிவாக வெளிப்படுத்துவதாக உள்ளது. இதை எப்படி எதிர்கொள்வது, எப்படி சரி செய்வது என்பதை அவரவர் தத்தம் உள்ளத்தைத் தொட்டு தீர்மானம் செய்ய வேண்டும், நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.

   நாம் இங்கு பேசுவது பெரும்பாலும் இணைய உலகு தொடர்பாக மட்டுமே- அச்சு இதழ்களாக, நூல்களாக, ஏராளமான அறிவியல் படைப்புகள் வந்து கொண்டிருக்கலாம். ஆனால் அது குறித்து இணையத்தில் பேசப்படாவிட்டால், இணையம் வழியாக நாம் அதை அறிவதற்கில்லை. எனவே, நாம் இணையத்தில் பேசுவது இணைய விவகாரங்கள் மட்டுமே.

   இதை நினைவில் வைத்துக் கொண்டு அறிவியல் தமிழ் இணையத்தில் எப்படி இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம் நண்பர் அபராஜிதன் அவர்கள் வழியாக நான் பெரும்பாலான அறிவியல் பதிவுகளைப் படித்து வருகிறேன். ஆழமாக எழுதுகிறார்கள் என்றாலும் சுவாரசியமாக எழுதுபவர்கள் மிகக் குறைவே.

   அறிவியல், மருத்துவம் போன்ற விஷயங்களை எல்லாம் அந்தந்த துறை சார்ந்தவர்கள் எழுதுவதுதான் சிறந்தது. ஆனால் துறை சார்ந்த எவரும், அது எத்துறையாக இருந்தாலும், இணையத்தில் எழுதுவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.

   நான் எந்த மலை முகட்டிலும் நின்று கொண்டு பெருங்குரலெடுத்து கத்தத் தயார், தமிழில் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் ஆகச் சிறந்த இணையக் கட்டுரையாக எவர எழுதி யார் முன்னிறுத்தும் கட்டுரைக்கும் இணையாக ஆங்கிலத்தில் நாம் ஒவ்வொரு நாளும் அதையொத்த தரத்தில் குறைந்தது இருபது கட்டுரைகளை தினமும் சுட்ட முடியும் (இலக்கியத்தை இதில் சேர்க்கவில்லை- எதற்கு வம்பு!)

   நான் அவர் தளத்தை வாசித்தவரை ஜெயமோகன் அவர்களைச் சுற்றி ஒரு துடிப்பான, வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் இருக்கிறது. அவர் ஒரு குவிமையமாக செயல்பட்டால் எதிர்காலத்தில் நல்ல எழுத்து உருவாகும் வாய்ப்பிருக்கிறது, இல்லையா?

  1. என்ன சார் இது கொலை மிரட்டல் மாதிரி இருக்கு?! 🙂

   ஒன்பதாம் தேதி நான் சென்னையிலயே இருக்கப் போறதில்லை.

   இதைச் சொல்லும்போது எனக்கு ஏன் இந்தக் கதை நினைவுக்கு வந்து தொலைக்குது!_ http://elizadashwood.wordpress.com/2008/09/15/the-appointment-in-samarra-w-somerset-maugham/

   எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.

   பின்னூட்டத்துக்கு நன்றி சார்.

 3. நன்றி சார்

  ’’நான் அவர் தளத்தை வாசித்தவரை ஜெயமோகன் அவர்களைச் சுற்றி ஒரு துடிப்பான, வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் இருக்கிறது. அவர் ஒரு குவிமையமாக செயல்பட்டால் எதிர்காலத்தில் நல்ல எழுத்து உருவாகும் வாய்ப்பிருக்கிறது, இல்லையா?’’

  நீங்கள் சொல்வது மெத்தச்சரி

  1. இந்தக் கதையை பொருத்தமாகப் பயன்படுதியிருக்கிறீர்கள். என்ன செய்வது, சில சமயம் இப்படி நடந்து விடுகின்றது~ 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s