வாழ்க நீ எம்மான்!

இன்று காந்தி ஜயந்தி. எனவே ஒரு மீள்பதிவு (சில திருத்தங்களுடன்)- நண்பர் வீராவின் தளத்திலிருந்து புத்தொளி தரும் தீபாவளி: மண்டேலா ஆற்றிய உரை.

காந்தியின் மீது மார்டின் லூதர் கிங் வைத்திருந்த பேரபிமானம் குறித்து ஏற்கனவே எழுதியுள்ளோம்: “+”நாம சாதிக்க வேண்டியவற்றை இயேசு சொல்லியிருக்கிறார்; அதை அடைவதற்கான வழிமுறைகளை காந்தி சொல்லியிருக்கிறார்,” என்கிறார் கிங். – அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அமெரிக்க சர்ச்களில் மார்டின் லூதர் கிங்கின் இயக்கத்தினர் கீழ்க்கண்ட பத்து உறுதிமொழிகளையும் மதபோதகர்களின் வழிகாட்டுதலில் பிரகடனப்படுத்தினார்களாம்-

 • இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளைக் குறித்து நான் அன்றாடம் தியானம் செய்வேன்.
 • அஹிம்சா இயக்கம் நீதியையும் நேயத்தையும் நாடுகிறது என்பதை நான் நினைவில் வைத்திருப்பேன்- வெற்றியை யாம் வேண்டுவதில்லை.
 • அன்பு வழியில் நடப்பேன், அன்புச் சொற்களைப் பேசுவேன்- அன்பே எமது இறைவன் என்பதனால்.
 • மனிதர்கள் அனைவரும் விடுதலை அடைய ஒரு கருவியாக என்னை கடவுள் கையாள வேண்டுமென தினமும் பிரார்த்தனை செய்வேன்
 • மனிதர்கள் அனைவரும் விடுதலை அடைய எனது ஆசைகளை தியாகம் செய்வேன்
 • நண்பன் எதிரி இருவரிடமும் மரியாதையோடு நடந்து கொள்வேன்
 • உடனிருப்போருக்கும் உலகிலுள்ளோற்கும் எல்லார்க்கும் தொடர்ந்து சேவை செய்யத் துணிவாயுள்ளேன்
 • கையாலும் நாவாலும் என் இதயத்தாலும் வன்செயல்களில் ஈடுபடாதிருப்பேன்.
 • உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கப் பாடுபடுவேன்
 • ஆர்ப்பாட்டங்களில் என் இயக்கத்துக்கும் அதன் தலைவர்களின் வேண்டுகோள்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்.

காந்திய கொள்கைகளை இந்தியாவில்கூட இந்த நாள் வரை யாரும் இப்படிப்பட்ட உறுதிமொழிகளாய் ஏற்றுக் கொண்டதில்லை என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் படித்தவர்கள் மத்தியில் காந்தியம் குறித்து ஏளனமும் அவநம்பிக்கையுமே காணப்படுகிறது. அன்றைய நாட்களில் காந்தியம் அமெரிக்காவில் உள்ள சர்ச்களில் ஏற்கப்பட்டது, அதன் வாசகங்கள் அங்கு ஒலித்தன என்பது நமக்கு புதிய செய்தியாக இருக்கிறதல்லவா?

நிற்க. இன்று வாழும் காந்தியவாதிகளில் முதன்மையானவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா தன் ராபன் தீவு சிறைக்கால அனுபவங்களை நினைவு கூர்ந்து ஆற்றிய உரை இதோ, காந்தி ஜயந்தியை முன்னிட்டு நண்பர்களின் கவனத்துக்கு-

OoOoO

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

ஒரு சிறுகுறிப்பு: இராபன் தீவு தென்னாப்பிரிக்காவின் அந்தமான். அங்கு மண்டேலா மற்றும் அவரது இயக்கத்தினரைப் பூட்டி வைத்திருந்தார்கள். இவருக்கு மட்டும் தனிச் சிறை. மற்ற கைதிகள் கால்பந்து ஆடுவதை இவர் சன்னல் வழியாகப் பார்த்து ரசிப்பாராம். அது தெரிந்ததும் சிறை அதிகாரிகள் அந்த சன்னலுக்கு வெளியே ஒரு சுவர் எழுப்பி விட்டார்கள்! மண்டேலா அவர்கள் 1991, நவம்பர் 3 ஞாயிறு அன்று ஆற்றிய உரை இது- 

ஞாயிறு, நவம்பர் 3, 1991

இராபன் தீவிலிருந்த நாட்களை தீபாவளி என் நினைவுக்குக் கொண்டு வருகிறது. தவறாமல் ஒவ்வொரு ஆண்டும், உலகெங்குமிருக்கும் நம் இந்து நண்பர்கள் தீபத் திருவிழாவைக் கொண்டாடத் துவங்குகையில்,  நம்மை சிறையில் காண இந்து பூசாரிகள் வருவார்கள். எனக்கு கேப் டவுனைச் சேர்ந்த திரு கவுண்டர் அவர்களையும் ப்ரிடோரியாவைச் சேர்ந்த திரு படையாச்சி அவர்களையும் நினைவிருக்கிறது. அவர்கள் எங்களோடு வழிபாடு நடத்துவார்கள், பெட்டிகளில் இனிப்புப் பதார்த்தங்களைக் கொண்டு வருவார்கள். இந்து சமய நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் இந்த இனிப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகள் வலியுறுத்துவது வழக்கம். நாம் இந்தக் குறுகிய மனப்பான்மைக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றோம். தனது தத்துவ கோட்பாட்டுகு அனுசரணையாக இருக்கும் அனைத்தையும் அரவணைத்துப் போகும் இந்து நெறி மனித நேயத்தை நோக்கியே தன் அன்புக் கரத்தை நீட்டுகிறது என்பதை உணர்த்தி அதிகாரிகளை பணிய வைத்தோம். இவ்வகையில் நானும் என் சக தோழர்களான வில்டன் மக்வாய், அகமது கத்ராடா, இஸ்மாயில் இப்ராஹீம் ஆகியோரும் இன்னும் பலரும் பில்லி நாயர், மாக் மகராஜ், இஸ்சூ சீபா, ஜார்ஜ் நாயக்கர் போன்றவர்களுடன் இணைந்து இந்து ஆண்டின் இந்த முக்கியமானத் திருவிழாவை சிறையில் கொண்டாடினோம். இதையொட்டி தயாரிக்கப்பட்ட பிரசாதங்களையும் உண்டு மகிழ்ந்தோம்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்தத் திருவிழாவில் பங்கேற்பது எனக்கு பெருமிதம் தருவதாக உள்ளது. நமது தேசம் பல்வேறு கலாச்சாரங்களாலும் பல்வேறு பண்பாடுகளாலும் வளமாகிய வரம் பெற்றுள்ளது என்பதை நமது பாக்கியமாகக் கருதுகின்றேன்.

இந்தத் தீபாவளித் திருவிழாவும் அது தொடர்பான வரலாறும் அதன் முக்கியத்துவமும் நமக்கு எண்ணற்ற பாடங்களைக் கற்பிக்கிறது. அதில் ஒரு சிலவற்றை பற்றி மட்டுமே என்னால் பேச இயலும்.

இந்து நூல்களில் விவரிக்கப்படுவதை போல இருளின் சக்திகளுக்கெதிரான போரில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். நிறவெறி கொள்கைகளும். அதை உருவாக்கிய தேசிய கட்சியும் நமது தேசத்திலும் அதன் மக்களிடமும் கடுமையான பாதிப்பை உண்டாக்கி இருக்கின்றன. மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக ஒரு சில மன்னிப்பு வார்த்தைகள் சொல்லி இந்தக் கட்சி இப்போது அமைதியின் பாதுகாவலர்களாகவும் மக்களாட்சியின் காவலர்களாகவும் தன்னை முன்னிருத்திக கொள்ள முயற்சி செய்கிறது. இன்று இந்தக் கட்சி இந்திய மக்களை தன் அணியில் சேர்த்துக் கொள்ள விழைகிறது.

அடக்குமுறை, ஏற்றத்தாழ்வுகள், நிறவெறி- இவை எவ்வகையாய் இருப்பினும் அதற்கெதிரான அறப்போர் வரலாற்றில் இந்திய சமூகம் எத்தகைய பங்காற்றியிருக்கிறது என்பதை நாம் நினைவு கூர்வோம். 1894ல் நேட்டால் இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பை நிறுவியதன் மூலம் ஆப்பிரிக்காவின் முதல் சனநாயக அரசியல் இயக்கத்தைத் தோற்றுவித்த காந்தியின் காலம் தொட்டு, இந்த சமூகம் தொடர்ந்து அரசியல் அறிவும் வீரமும் கொண்டதாய் செயல்பட்டு வந்திருக்கிறது.  1913ல் நிகழ்த்திய அஹிம்சை போராட்டங்கள் துவங்கி 1946ல் ஆசிய நில உரிமை மற்றும் இந்திய பிரதிநிதித்துவ சட்டம் வரை, 1952ன் தீரமான எதிர்நிற்றல் போராட்டம் மற்றும் 1950களில் தேசியவாதக் கட்சியினரின் இந்தியர் குடிமறுத்தல் திட்டத்தைத் தோற்கடித்தது வரை இந்தியர்கள் ஏனைய ஒடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்கர்களுடன் தாம் ஒன்றுபட்டிருப்பதை வெளிபடுத்தி வந்திருக்கின்றனர்.

காங்கிரசுகளின் தலைமை சிறைப்படுத்தப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, ஊமையாக்கப்பட்டு அடக்குமுறைகளை சந்தித்த துயர்மிகு காலங்களிலும் இந்தப் பாரம்பரியம் தொடர்ந்திருக்கிறது; 1962ல் தேசிய கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்க இந்திய கவுன்சிலை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். மீண்டும் மீண்டும் அவர்கள் இத்தகைய நிராகரிப்பை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர்.

1981ல் நடந்த SIAC தேர்தல்கள், 1984ல் நடந்த முச்சபை தேர்தல்கள், எண்பதுகளில் நடந்த நிர்வாகக் குழுத் தேர்தல்கள் உள்ளாட்சி விவகாரக் குழுத் தேர்தல்கள் அனைத்திலும் . பரம்பரை பரம்பரையாக இவர்கள் இந்நாட்டின் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்ட காந்தியத்துக்கும் சத்தியாகிரக கலாச்சாரத்துக்கும் பெருமைக்குரிய உரிமையாள்ர்களாய் உள்ளனர்.

இதை நான் எனது ஆளுமையிலிருந்தே உறுதியாக கூற முடியும். காந்தீய சத்தியாகிரக பாரம்பரியத்துக்கு நானும் என் தலைமுறையைச் சேர்ந்த அரசியல் களப்பணியாளர்களும் பெருமளவில் கடன் பட்டவர்களாக இருக்கிறோம். 1949ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் அணி கட்டமைத்த செயல் திட்டத்தை வரைமுறைப்படுத்த அதன் ஜீவனே எங்களுக்கு உந்துதல் தந்தது. அதே ஜீவன்தான் 1952ல் நாங்கள் துவங்கிய ஒத்துழையாமை இயக்கத்துக்கும் உத்வேகம் தந்தது.

இந்த செயலாக்க ஒற்றுமை எம் வரலாற்றில் 1947ல் நடந்த டாடூ-க்சூமா-நாயக்கர் உடன்படிக்கையால் ஒரு அரசியல் உறவையும் பாரம்பரியத்தையும் உருவாக்கி அதன் பின் வந்த பல பத்தாண்டு கால சோதனைகளை நாம் கடந்து வர துணை நின்றிருக்கிறது. இதுதான் காங்கிரஸ் பாரம்பரியத்தின் சாரம்: இனவாத மறுப்பும் ஒன்றுபட்ட செயலாக்கமும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பின் உரிமைகளையும் பாதுகாப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு அதில் தீவிரமாய் அசையாது நிலை நின்று வந்திருக்கின்றனர். இந்தக் காலங்கள்தான் யூசூப் டாடூ, மாண்டி நாயக்கர், பிராம் பிஷர், ஆலிவர் டாம்போ, ஜிம்மி லா கோமா மற்றும் பலரிடையே தோழமை உணர்வை உருவாக்கியது.

நமது நீண்ட போராட்டத்தின் முடிவில் சத்தியம், புத்தறிவு மற்றும் மக்களாட்சியின் சக்திகள் வெற்றி பெறுவதைக் காணும் கட்டத்தை நெருங்கி நிற்கிறோம். ஆனால் இது எளிதில் கிட்டப்போவதில்லை. இன்னும் போராட்டம் ஓயவில்லை. சென்ற வார இறுதியில் கூட நாம் இத்தனை காலமாய் எதிர்த்து நின்று போராடி வரும் இருள் சக்திகளுக்கு எதிராய் நம் எல்லோரையும் பெரிய அளவில் தாக்கம் தரக் கூடிய வகையில் ஒருங்கிணைத்து ஒரு தேசாபிமான முன்னணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருந்தோம்.

இந்து சமய நூல்களும் மற்ற சமயங்களில் பெரும்பாலானவற்றைப் போலவே நீதி, சத்யம், நேர்மை, விநயம், சுதந்திரம் போன்ற விழுமியங்களையே போதிக்கின்றன. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் நாம் இந்த விழுமியங்களின் அடிப்படையில் கட்டமைத்திருக்கிறோம், 1955ல் மக்களின் துணையோடு விடுதலை வரைவோலை ஒன்று ஆக்கியுள்ளோம், அது நமக்கு தென்னாப்பிரிக்காவில் இன பகுப்பில்லாத மக்களாட்சிக்கான நம் போராட்டத்தில் கலங்கரை விளக்கமாக இருந்திருக்கிறது. இந்நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்காக, நாமெல்லாம் ஒன்றாகி அமைதியான, சகிப்புத்தன்மையுள்ள வளமையான தேசம் காண நாம் அயராது உழைத்திருக்கிறோம். சுதந்திரத்தை விரும்பும் மக்கள் அனைவருக்கும் உரியதாக, அதிலும் நமது இந்திய சகோதர சகோதரிகளுக்கு உரிய தாயகமாக ஏ.என்.சி இருந்திருக்கிறது, இனியும் இருக்கும். உறவுப்பாலங்கள் அமைக்கவும் மனித இனம் முழுமையையும் ஒரு குடைக்கீழ் கொணர உதவவும் நாம் உறுதி பூண்டிருக்கிறோம், இதனினும் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நாம் செயல் திறனோடும் தன்னம்பிக்கையோடும் நடை போடுவதும் உறுதி. இந்து நூல்களின் போதனையிலிருந்து நமது நோக்கங்கள் மாறுபட்டதில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இந்த தீபத் திருநாளன்று இந்தப் புனித விளக்கை ஏற்றுகையில் எனக்கு இந்த விளக்கு வெற்றியின் குறியீடாக இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்- இந்த வெற்றி,

மூட நம்பிக்கையைத் தோற்கடித்த புத்தறிவின் வெற்றி; ஏழ்மையை வென்ற செல்வத்தின் வெற்றி; அறியாமையைப் போக்கிய அறிவின் வெற்றி; நோய் மற்றும் சுகவீனத்தை அழித்த ஆரோக்கியத்தின் வெற்றி; அடிமைத்தளைகளை அறுத்தெறிந்த விடுதலையின் வெற்றி.

நம் போராட்டத்தில் நாம் இந்த வெற்றியை இணைத்தே கொண்டாடுவோம். இந்த தேசத்தில் உள்ள நம் எல்லோருக்காகவும் இந்த வெற்றியை நாம் கொண்டாடுமுன் நாம் நீண்ட ஒரு பாதையைக் கடக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தை இந்திய சமுதாயம் எப்போதும் ஆதரித்தே வந்திருக்கிறது.

முன்னெப்போதும் இருந்ததை விட இனி இது இன்னமும் தெளிவாக வெளித் தெரிய வர வேண்டும், இதன் மூலம் இந்த சுதந்திர போராட்டத்திற்கு சிறந்த அடையாளமாகவும் சிறந்த அங்கீகாரமாகவும் விளங்கும்.

கற்றறிந்த இந்து பண்டிதர்கள் எனக்கு இதை சொன்னார்கள்- இந்த விளக்கை ஏற்றும் வேளையில், நாம் லக்ஷ்மி தேவியைப் பிரார்த்திக்கும் வேளையில், நமது வளமான, சுகமான நிலை பெற்றிருக்கும்போது,  நம்மளவு நல்வாழ்வு கிட்டியிராதவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்; உரிமை மறுக்கப்பட்டவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்; சக்கையாய்ப் பிழியும் ஏழ்மையிலிருந்தும் நம் நாடெங்கும் நிலவும் துயரிலிருந்தும் அவர்கள் மீள நாம் எப்படி உதவ முடியும்  என்பதை நாமனைவரும் ஒன்று கூடித்  திட்டமிட வேண்டும்.

சுதந்திரத்துக்காக உயிர் நீத்த தியாகிகள் மற்றும் தலைவர்களையும் நாம் இந்த கணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். சுதந்திரமான விடுதலை பெற்ற இந்தியாவைக் காண நினைத்த காரணத்துக்காக விஷம் வைக்கப்பட்டு தீபாவளித் திருநாளன்று உயிர் நீத்த சுவாமி தயானந்தரை நாம் இப்போது எண்ணிப் பார்க்கிறோம். நமது போராட்டத்தில் விடுதலைக்காக உயிர் நீத்த வீரர்கள் பலரையும் நாம் நினைத்துப் பார்க்கிறோம். கிருஷ் ரபிலால், அகமது திமோல், சாலமன் மாலாங்கு மற்றும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களை நாம் நினைத்துப் பார்க்கிறோம். அந்த தீபங்கள் அணைந்து விட்டன. அவை இருந்த இடத்தில் நம் தேசத்தில் சுதந்திரமும் அமைதியும் நிலவ வேண்டி ஆயிரம் தீபங்கள் ஏற்றப் பட்டன,.

நண்பர்களே, இந்த தீபாவளித் திருநாளன்று உங்களிடையே இருப்பது எனக்கு நீங்கள் அளித்துள்ள மாபெரும் கௌரவம் என்று நான் ஆழ உணர்கிறேன். ராபன் தீவில் பல்லாண்டுகள் நாங்கள் பக்தியுடன் கொண்டாடிய இந்தப் பண்டிகையை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன். இந்தத் திருவிழாவிலிருந்தும் இதனோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இராமாயணக்   காவியத்திலிருந்தும் நமது தேசத்தின் போராட்டத்துக்கு உதவக்கூடிய பல பாடங்களை நாம் கற்க இயலும். நமது தேசத்தில் ஒரு புதிய சகாப்தத்தின் நுழைவு வாயிலில் நிற்கிறோம். அமைதியும் நம்பிக்கையும் வளமும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கிய பாதையில் நாம் முன்னேறிச் செல்கையில் நன்றி கூறும் முகமாக நாம் விளக்கேற்ற வேண்டும், அவை நமக்கு புத்தொளி காட்டட்டும்.

AMANDLA!

சக்தி கொடு! (அமண்ட்லா)

டர்பன் நகர அரங்கில் நிகழ்ந்த தீபாவளிக் கொண்டாட்டங்களையொட்டி தோழர் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை

2 thoughts on “வாழ்க நீ எம்மான்!

 1. வாழ்க.
  இந்த மாதம் உண்மையிலேயே 24 மணி நேரமும் பல்வேறு திணிக்கப்பட்ட பணிகளில் மூழ்கியதால் பதிவும் போட இயலவில்லை. கட்டுரைகளுக்கான குறிப்புகளையும் எழுத இயலவில்லை. (கண்டுக்காதே – உண்மையில் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் நேரடியாகவே இதுவரை பதிவிட்டுள்ளேன்)
  காந்தீயத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல இந்த கள்ளிப் பெட்டி சரியானதே.
  அகிம்சை சகித்துக் கொள்ள மட்டுமல்ல. ஆயுதமாக எடுத்தாளவும் உதவுகிறது.

  விஜய தசமியிலிருந்து மீண்டும் தொடங்குவேன்.
  பி.கு. நன்றிப்பா. என்னுடைய வலையிலும் 2ந்தேதி சிலர் வந்து ஏதோ தேடியிருக்கிறார்கள். அவர்களுக்கும் உனக்கும்
  கொஞ்சம் பொறுங்க.

  1. நன்றி வீரா.

   அவசரமில்லை- வாழ்க்கைப் போராட்டத்தில் ஓய்வு கிடைக்கும்போது மட்டும் நாம் சிந்தனைத் தளத்துக்கு வந்தால் போதும்,

   வாழ்க்கை வாழப்படுவது, சிந்திக்கப்படுவது அன்று-, சரிதானே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s