கலி

நமது ப்ளாக் முப்பதாயிரமாவது ஹிட்டைப் பெற்றதும் நண்பர் ஸஸரிரி கிரிக்கு கிராண்ட் டேஸில் முடியாது, அதற்காக பெட்டிக் கடையாக இல்லாமல் ஒரு நடுத்தர, நம் சக்திக்குட்பட்ட ஹோட்டலில் ட்ரீட் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், அவர் இல்லாவிட்டால் இந்த ப்ளாக் எப்போதோ செத்துப் போயிருக்கும். இப்போதுகூட பாருங்கள், ஆனந்த விகடனுக்கு அனுப்ப வேண்டிய கதையை நமக்கு அனுப்பியிருக்கிறார். அவரது பெருந்தன்மையை நினைத்தால் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கிறது. நன்றி கிரி, நல்ல கதை.

ப்ரேக் அடித்து நின்றது பேருந்து. “க்ளோபல், தமிழ்நாடு எல்லாம் எறங்கு”, கண்டக்டர் கூவ…. அருகில் அமர்ந்திருந்த பெரியவர் இறங்குவதற்கு படிக்கட்டு வரை துணைசென்றவன் திரும்பி வந்து பார்த்தால் அமர்ந்திருந்த இருக்கை ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்தது.

அடுத்த நிறுத்தத்தில் ஒரு திருவிழாக் கூட்டம் பேருந்தை நிறைத்து இருக்கையைத் தவறவிட்டதன் பலனை உணரவைக்கத் துவங்கியது. அதற்கும் அடுத்த நிறுத்தத்தில் இன்னொரு புளி மூட்டைக் கும்பல் பேருந்துக்கு மேலும் பலம் சேர்க்க, சுற்றி நின்ற நாலுபேர் என்னை நெறித்துக் கொண்டிருந்தார்கள்.

“சார், கொஞ்சம் வழிவிடுங்க, ப்ளீஸ்! ஓரமா போய் நின்னுக்கறேன்”

“உன் பையை எடுத்து யார்ட்டனா குடு நைனா. அத்த குட்த்தாலே நாலு ஆளுக்கு எடங்கெடைக்கும்”

“ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”, அழகிய இளமஞ்சள் கரம் என் பக்கம் நீண்டது.

“ஓரமாய்ப் போய் நின்னுக்கறேன்” திட்டத்தை அவசர அவசரமாகத் தள்ளிப் போட்டுவிட்டு நீட்டப்பட்ட நோட்டை வாங்க்கிக் கொண்டேன். நான் சரியாகப் பேருந்தின் மத்தியில் பிதுங்கிக் கொண்டிருந்தேன். இன்னொரு “பாஸ்” செய்தால்தான் சோழிங்கநல்லூரை வாங்குவது சாத்தியம்.

“கொஞ்சம் ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”

“சார், கொஞ்சம் ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”

“எக்ஸ்க்யூஸ்மி”

“??”

“ஒரு சோழிங்கநல்லூர்”

“கையே வெள்ள எட்க்க முட்லபா”

மகளிர் இருக்கைகள் இருந்த பக்கத்தில் கண்டக்டருக்கு மூன்று இருக்கை இடைவெளியில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. அவள் என்னையே நிலைக்குத்திய பார்வை பார்க்க, “மேடம், ஒரு சோழிங்கநல்லூர் பாஸ் பண்ணுங்க”.

பதிலில்லை. ஆனால், அதே நிலைகுத்திய பார்வை. “கொஞ்சம், பாஸ் பண்ணுங்க ப்ளீஸ். ஒரு சோழிங்கநல்லூர்”. மீண்டும் அதே பதிலில்லாப் பதில். மீண்டும் வேண்டுதல், மீண்டும் கேளாமை. நான் சொல்வதை அப்பெண்மணியை கேட்க வைத்துவிட வேண்டும் என திடீர் உத்வேகப் பிடிவாதம் எனக்கு வந்தது. அவள் முகத்திற்கு நேரே பணத்தை நீட்டி, மேடம், மேடம் எனக் கத்தி, மேலும் ஒரு அரை டஜன் வித்தியாசமான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டு, “என்னப் பொம்பளடா இவ”, என பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டேன்.

திடீரென ஒரு கை என் கையிலிருந்து பணத்தைப் பிடுங்கி ஓரிரு நிமிடங்களில் சோழிங்கநல்லூரை என் கையில் திணித்தது. இப்போதும் அப்பெண் என்பக்கம் அதே முறைத்தல் பார்வையை வீசிக்கொண்டிருந்தாள். இருபதுகளின் மத்தியில் மாநிறத்தில் மெல்லிசான களைகூடின வசீகர முகம். என்ன பிரச்னை உனக்கு என ஒரு அசட்டையாக வெறுப்புப் பார்வையை நான் பதிலுக்குத் தந்துவிட்டுத் திரும்பிக் கொண்டேன்.

சோழிங்கநல்லூர் ஜங்ஷனில் கொஞ்சம் கூட்டம் கரைந்து மூச்சு விட அனுமதித்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டியதுதான். இப்போது அந்த முறைப்புப் பெண்மணியைத் திரும்பிப் பார்த்தேன். இது சினிமாவாக இருந்திருந்தால், என் அதிர்ச்சியை வெளிப்படுத்த அப்பேருந்து ‘சடன்’ ப்ரேக் அடித்து ”ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ர்ரீஈஈஈஈ”, என ஓலமிட்டு ஓசையுடன் நின்றிருக்கவேண்டும். அவள் நின்ற திருக்கோலம் இப்போதுதான் முழுசாய்த் தெரிந்தது. பச்சிளம் கைக்குழந்தை ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு நின்றிருந்தாள். தன் முகத்தால் அவள் மார்பை முட்டிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. சேலையை விலக்கிவிட்டு குழந்தையை உள்நுழைத்து விட்டாள் அவள்.

பிள்ளையைப் பெற்றவர்கள், பெறப்போகிறவர்கள், பெற்றுக் கொண்டிருக்கக்கூடாதவர்கள், பெற்றுக் கொள்ளக்கூடாதவர்கள் என அத்தனை வகைப் பெண்களும் அமர்ந்த திருக்கோலத்தில் அதைத் தரிசித்துக் கொண்டேயிருந்தார்கள்.

image credit : usefilm.com

Advertisements

15 thoughts on “கலி

 1. நல்ல கதை! ஆனா எனக்கொன்னு தெரிஞ்சாகணும். இந்த பஸ்ஸ பத்தி எழுதும் போது மட்டும் (யார் எழுதினாலும்) அதுல ஒரு பொண்ணு வந்திடுது, அவ வயசு முகவெட்டு எல்லத்தையும் பத்தியும் எழுதிடராங்க ஏன்? சார் ஏன்?

      1. அது படிச்சேன்! நட்பாஸ் சார் ஒரு முறை கோவை பேருந்து போய் வந்த போது ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருந்தார்… பிறகு ஐகாரஸ்பிரகாஷ் என்பவர் அவருடைய பதிவில் அப்படி எழுதியிருந்தார் இப்போ நீங்க… அஷ்டே!

 2. கிரி

  முதலில் இறுதிக்கதைத்திருப்பமாக…பெண்ணை பார்வையற்றவள் அல்லது வாய்பேசாத காதுகேளாத பெண்ணாக காட்டி முடிக்க நினைத்திருந்தீர்களா? 🙂

  1. இல்லை! இது கதையே இல்லை. 100% அப்படியே நடந்தது. அப்படியே!

   கதையின் முதல் பாரா மாத்திரமே என் சொந்தச் சேர்ப்பு, மீதம் மொத்தமும் நிஜம்.

 3. நிஜம் என்பது இன்னும் அங்கலாய்ப்பைக்கூட்டுகிறது.

  ஏன் அவள் எதுவுமே பேசவில்லை.ஏன் உங்களை வெறித்த பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்.
  ஏதாவது அதிர்ச்சியான சம்பவம் அவள் வாழ்வில் நடந்திருக்குமோ?.

  ஏன் யாரும் இருக்கை தரவில்லை.?

  ஒருவேளை குழந்தையை இருக்கையில் இருந்தவரிடம் (தாயோ மாமியாரோ)கொடுத்து வைத்திருந்து விட்டு பால் கொடுக்க வாங்கும்போது நீங்கள் பார்த்திருப்பீர்களோ?

  நிஜம் கதைகளை விட சிக்கலானது.
  கதையென்றால் புனைந்தவரைக்கேட்கலாம். 🙂

  நன்றி கிரி.

  1. நீங்கள் சென்னைக்கு வந்ததில்லை என்று தெரிகிறது. இங்கே கூட்டமான பஸ்ஸில் இடம் பிடிக்க அம்மா தன் சிறு குழந்தையை கை நீட்டி சீட்டில் வைப்பாள். சீட்டுக்கு அருகில் இருப்பவள் குழந்தையை எடுக்கச் சொல்லி சண்டை போடுவாள். இல்லாதவர்கள் இருக்கக் கூடாத இடம்.

  2. டொக்டர்,
   அவள் என்னை வெறித்த பார்வை பார்த்ததை ஏன் என்று நான் அறியேன். அதற்கு ஆயிரம் காரணம் இருந்திருக்கலாம். நீங்கள் சொன்னது போல //நிஜம் கதைகளை விட சிக்கலானது. கதையென்றால் புனைந்தவரைக்கேட்கலாம்.//

   ஆனால், பெண்களை நான் சாடியது சில பெண்களுக்கே ஆகவில்லை. ”அவள் ஏன் வாய் திறந்து ஸீட் வேண்டும் என யாரிடமும் கேட்கவில்லை”, என்பது என் அலுவலகப் பெண்கள் என்னிடம் கேட்ட கேள்வி. அதற்கும் என்னிடம் பதிலில்லை.

   ஆனால், ஒருவருடம் முன் குழந்தை பெற்ற ஒரு சக ஊழியை (அதே ரூட்டில் பயணித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு), என் கருத்தை முற்றிலும் ஒப்புக் கொண்டார்.

   அவர் “carrying” பீரியடில் அலுவலகத்திற்கு பஸ்சில் வரத் தலைப்பட்டால் (குறிப்பாக நெரிசல் நேரத்தில்), அவர் பஸ் ஏறினவுடன் ஆண்கள் உட்காரும் பக்கமாக வந்துவிடுவாராம். அங்கேதான் அவர் அமர சீட் தருவதற்கு மனம் படைத்தவர்கள் இருப்பார்களாம். – முற்றிலும் அவர் சொன்னது, முற்றிலும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s