குறி

தன் நண்பர் ஒருவரை வங்கியில் இறக்கிவிட்டுவிட்டு அவர் திரும்பக் காத்திருந்தான் அவன். ஆக்டிவா ஆனில் இருந்தது.

இத்தனை நேரம் அவனைப் போன்ற யாருக்காவது காத்திருந்திருக்க வேண்டும் அவர்-இருபதுகளின் துவக்கம்- குழந்தைக் கண்கள், காவி அங்கி. இளைத்த முகம். தெலுங்கோ, என்று நினைத்துக் கொண்டான்.

தெருவைக் கடந்து அவனிடம் வந்தார். “உங்க முகத்துல ஒரு தெய்வீகக் களை தெரியுது,” என்றார்.

“இல்லீங்க, நான் என் பிரெண்ட் ஒருத்தர் பாங்க் சலான் எடுக்கப் போயிருக்கார், அவருக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்”

“கையைக் காட்டுங்க, உங்க கிட்ட ரெண்டே ரெண்டு முக்கியமான விஷயம் சொல்லணும்”

“இல்லீங்க, இப்போ வந்திடுவார், ஆபிசுக்கு நேரமாச்சு”

“ரெண்டு விஷயம்தான். ரெண்டே ரெண்டு, சொல்லிடறேன்”

அவரது முகத்தைப் பார்த்தான்.

“முதலில் இதை வாங்கிக்குங்க,” அவன் கொடுத்த பத்து ரூபாயை அவர் வாங்கிக் கொண்டார்,

“உங்க பேர் சொல்லுங்க”

தன் பெயரைச் சொன்னான்.

“மூணு முக்கியமான விஷயம் சொல்றேன். எப்பவும் நினைவுல வெச்சுக்குங்க. ஒண்ணு, இந்த மாதிரி அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. எதை செஞ்சாலும் நிதானமா யோசிச்சு செய்யுங்க. ரெண்டு, எல்லார் கிட்டயும் வெளிப்படையா உண்மைய பேசாதீங்க. சில விஷயங்களை மனசுக்குள்ள மட்டும் வெச்சுக்குங்க. மூணு, யாருக்கும் ஷூரிட்டி கையெழுத்து போடாதீங்க.”

அவன் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டைக் கழட்டினான், ஹெல்மெட் போட்டுக் கொண்டு பேசுவது மரியாதை இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும். “அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காம இருக்க ட்ரை பண்றேன். ரெண்டாவது விஷயம், மனசுல இருக்கறது என்னையும் மீறி வெளிய வந்திடுது. எவ்வளவு ட்ரை பண்ணினாலும் முடியல. அப்புறம், ஏற்கனவே ஒருத்தருக்கு ஷூரிட்டி போட்டுட்டு பயந்துக்கிட்டுதான் இருக்கேன்”

அவர் அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தார், “ஐயோ பாவம்!” என்று நினைத்தாரோ என்னவோ, “இன்னும் பதினைந்து நாள்ல எல்லாருக்கும் ஸ்வீட் தந்து கொண்டாடற மாதிரி ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு நடக்கப் போவுது” என்றார்.

அதன் சாத்தியங்களை யோசித்தான். சான்ஸே இல்லை,- “நடந்தா சந்தோஷம்தான்”

வங்கியிலிருந்து திரும்பி வந்த நண்பரைப் பார்த்து குறிசொல்லி சிரித்தார், “உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?”

“என்ன, ராயபேட்டை போணுமா?” என்று கேட்டுக் கொண்டே நண்பர் ஆக்டிவாவில் அமர்ந்தார், “வண்டியை எடுங்க சார்”

“தாங்க்ஸ்ங்க, அப்புறம் பாக்கலாம்” என்று குறிசொல்லியிடம் சொல்லிக்கொண்டு அவன் கிளம்பினான்.

“என்ன, ஜோசியமா? பத்து ரூபாய் தந்திருப்பீங்களே? என்ன சொன்னான் அவன்?”

அவர் சொன்னது அனைத்தையும் சொன்னான்- அடுத்த பதினைந்து நாட்களில் வரக்கூடிய, அவனுக்கு அதன் சாத்தியங்களே தெரியாத, அந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தவிர.

8 thoughts on “குறி

  1. உங்கள் பாராட்டுக்கு நன்றி, ஊக்கமளிப்பதாக இருக்கிறது. புனைவில் அழகுக்காக சில பொய்கள் சேர்த்தாலும், அதில் உறைந்திருக்கும் உணர்வுகள் சார்புகளற்ற உண்மையை உணர்த்தக்கூடியனவாக இருந்தால் நன்றாக இருக்கும். நீங்கள் சொன்ன மாதிரி, முரண்பாடுகளை நிகழ்த்திக் காட்ட வேண்டும், இல்லையா?

 1. முரண்பாடுகளை நிகழ்த்தியிருக்கிறீர்கள்.துலாம்பரமான முரண்பாடுகள் எல்லோருக்கும் தெரியும் எழுத்தாளன் அதற்குத்தேவையா என்ன?
  உங்கள் கதையில் நுண்மையான முரண்களைக்காட்டியிருக்கிறீர்கள்.

  எளிமையான கதை வடிவம்.

  குறி சொல்வதற்கு முன்னரேயே பணத்தைக்கொடுத்து தன்னை பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது (ஏமாற்ற) 15 நாட்களில் வரப்போகிற மகிழ்ச்சிச்செய்தியைப்பற்றிக்கொள்வது

  எப்பவும் எதுவும் நடக்கலாம் என்ற இயற்கையின் சட்ட
  ஷரத்தினூடாக மனம் அதைநம்ப விரும்புகிறது.

  நண்பனிடம் அதைச்சொன்னால் அது பாதிப்படையும்.

  குறி சொல்பவரின் நம்பிக்கை அதாவது யாராவது ஒருவர் கிடைப்பாரென்று அந்த நம்பிக்கையை பாத்திரம் தெரிந்தே காக்கிற அதில்
  இழையோடுகிற மனிதாபிமானம் அல்லது அப்பாவித்தனம்.

  கூசாமல் எதிர்காலத்தில் இப்படிச்செய்வேன் என்று பொய் சொல்லுகிற அரசியல்வாதியை தலைவனென்கிறோம்.

  இரண்டிலும் நடந்துவிடக்கூடாதா என்ற நப்பாசை எம்மை இயங்கவைக்கிறது இல்லையா

  இப்படிச்சொல்ல இன்னும் இருக்கிறது எனக்குத்தான் நேரம் இல்லை.அதுதான் இந்தக்கதையின் சிறப்பு.

  1. ஏறத்தாழ இது எல்லாமே நடந்தது, நண்பர் சரியாக குறி சொல்வது உட்பட. இதற்கு அடுத்த நாள் ஒன்று நடந்தது, இது அடுத்த கதையாக உருவாகிறது. என்னமோ வாழ்க்கை.

 2. வாழ்வின் சில மணித்துளிகளில் உங்கள் இயல்பும் நம் இயல்பான வாழ்வின் நுண் முரண்களும் வெளிப்படுகிறது.

  கதை வாசிப்பு எனக்கு நிகழ்காலம் கதை மூலம் என்னை உங்கள் கடந்த காலத்தில் விட்டுவிட்டு நீங்கள் கடந்து வந்துவிட்டீர்கள்.

  நன்றி

  1. நினைவுகளைப் போல் எழுத்தும் வாசிக்கும்போது நிகழ்காலமாகிறது, இல்லையா? நீங்களும் சின்னஞ்சிறு கதைகளை, நேரம் கிடைக்கும்போது, வாசிக்கத் தரலாமே? நன்றி, டாக்டர்.

  1. நன்றிங்க.

   இன்று காலைதான் ஸஸரிரி கிரியின் பேசுகிறேன் ப்ளாக்ல நீங்க இட்ட பின்னூட்டத்தைத் தொடர்ந்து உங்கள் பிளாக்கைப் பார்த்தேன். இண்டிபிளாக்கர் சந்திப்பை அருமையான புகைப்படங்களில் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி, மற்றும் வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s