ஜெயமோகன் மைய இணைய இலக்கிய மாற்று எதிர்வெளிக்கான இன்றைய தேவை – ஒரு சிறு முன்னெடுப்பு

நம் வாசகர்கள் நம்மைக் காட்டிலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகாகவி விவாதத்தை ஆர்வத்தோடு கவனித்து வருகிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை 🙂

நானே இந்த இடைபட்ட காலத்தில் பல்வேறு நண்பர்களுக்கு திரு ஜெயமோகன் அவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் (சில நாட்களில் ஒரே நாளில், அடுத்தடுத்த) அஞ்சல்கள் எழுதி இருக்கிறேன்- நம்மோடு பேசுபவர் ஜெயமோகன் சொல்வதில் எதைப் பேசுகிறார் என்பதைப் பொருத்து இந்த மாதிரி உளற வேண்டியதாகி விட்டது.

மகாகவி என்றில்லை, சாதாரண பத்தி எழுத்தாளன் விஷயத்திலும் இப்படிதான் – என்னைச் சுற்றி நடக்கும் இலக்கிய விவாதங்கள் எல்லாமே ஜெயமோகன் மைய இலக்கியம் இணைய இலக்கியமாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. ஜெயமோகனுக்கு நானோ என்னைப் போன்றவர்களோ பொருட்டில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் நாங்களே பொருட்டில்லை என்ற கசப்பான உண்மையையும் இந்த ஜெயமோகன் மைய இலக்கிய இணையச் சூழல் உணர்த்துகிறது. பாருங்கள், இதே எம்டிஎம் அவர்கள் பாரதி ஒரு மகாகவி அல்ல என்று சொல்லியிருந்தால் அதற்கு இப்படிப்பட்ட ஒரு எதிர்வினை நிகழ்ந்திருக்குமா? யாரும் அதைக் கண்டு கொள்ளாமல், ஜெயமோகன் சரிதாவைப் பற்றி இவ்வளவு எழுதுகிறாரே, பாலச்சந்தர் படங்களில் நடித்த ஒரு ஸ்ரீதேவி அல்லது ஸ்ரீவித்யா வெளிப்படுத்தாத நடிப்பையா அவர் வெளிப்படுத்தி விட்டார், அனேகமாக சரிதாவின் அடுத்த படத்துக்கு இவர் கதை எழுத முயற்சி செய்கிறார், என்கிற மாதிரி எம்டிஎம்மைப் புறக்கணித்து இணைய இலக்கியம் தழைத்துக் கொண்டிருந்திருக்கும்.

இதைவிட இன்னொரு மட்டமான, முகத்தில் அறையும் உண்மை – ஜெயமோகனை எதிர்த்துப் பேசினால் நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள் என்பதுதான். மற்றவர்களை விடுங்கள், நானே ஜெயமோகனைக் கேள்வி கேட்டு பதிவு போடும்போதேல்லாம் எனக்கு இரண்டு அல்லது மூன்று வாசகர்கள் கூடுவதை ஃபீட் கணக்கைக் கொண்டு என்னால் அனுமானிக்க முடிகிறது (புதிதாய் இணையும் சப்ஸ்க்ரைபர்களுக்கு என் வணக்கங்கள்- இந்த மாதிரி அவ்வப்போது தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்).

ஜெயமோகன் எழுதுவது எனக்கு உறுத்தலாக இருக்கும்போதெல்லாம் நானும் முன்னெல்லாம் பதிவு போட்டுக் கொண்டிருந்தேன்- அப்புறம்தான் கவனித்தேன், நானே அவரைத் தவிர வேறு யாரையும் பொருட்படுத்தி எதிர்வினை செய்யும் வகையில் எழுதுவதில்லை என்ற விஷயத்தை. இப்போது தெரிகிறது, நான் மட்டுமல்ல, இங்கு எல்லாரும் அப்படிதான் என்று- அரசியல் அடிப்படையில் செய்யப்படும் விமரிசனங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இதைச் சொல்கிறேன்.

oOo

கவனித்துப் பார்த்தால் ஒன்று புரிகிறது – ஜெயமோகனுடைய விமரிசன முறை தன் கருத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்ல- அதற்கான எதிர் கருத்தையும் கோருகிறது. இது சண்டைக்கு அழைப்பது போல் தொனிக்கலாம். ஆனால் அவர், “இதை மறுக்கக் கூடியவர்கள் யாராவது உண்டா?” என்று ஹேமநாத பாகவதர் மாதிரி தான் எதைச் சொன்னாலும் கூடவே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஒன்று, உண்மையாகவே அவர் ஒரு சண்டைக்காரராக இருக்கலாம், அல்லது, எதையும் கண்டு கொள்ளாமல் மரத்துப் போன தமிழ் இலக்கிய விமரிசன வெளியில் (இது ஒரு ஊகம்தான், உண்மையா பொய்யா தெரியாது)- இப்படியெல்லாம் குத்திக் குடைந்தால்தான் எதிர்பேச்சு பேசுவார்கள் என்று கண்டுகொண்டு இதைச் செய்பவராக இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும், அவரது விமரிசன முறை இப்படி வேலை செய்கிறது- ஒரு பெரிய கட்டிடக் குடியிருப்பின்மீது பயங்கரமான குண்டை வீசுகிறார்: புகை அடங்கியதும் எது மிச்சம் இருக்கிறதோ, எதை காபந்து பண்ண முடிகிறதோ, அதுதான் நிலையானது, அதற்குதான் மதிப்பு தர வேண்டும், அதுதான் மிச்சம் மீதியின் அடிப்படையில் தர வரிசையில் எட்டாம் நம்பர் இடத்தில் இருக்கிறது என்று மதிப்பெண் அளித்துவிட்டு அடுத்த குடியிருப்பை நோக்கிப் போய்க் கொண்டே இருக்கிறார்.

நாம் அவரது இடிபாடுகளைத் தொடர்பவர்களாக இருக்கிறோம்.

oOo

இணைய இலக்கியவாதிகள் ஜெயமோகனைத் தவிர வேறு யாரையும் பொருட்படுத்தி விமரிசிப்பதில்லை என்று சொல்வது உண்மையாக இருந்தால், அது ஏன் என்ற கேள்வி வரும். அதற்கு பதில், ஜெயமோகன் மாதிரி வேறு யாரும் குண்டு போட்டுத் தாக்குவதில்லை என்று சொல்லக்கூடும். அப்படியானால் உருப்படியாக கட்டுமானம் செய்கிற மேஸ்திரிகளைப் பற்றி எத்தனை பேசியிருக்கிறீர்கள் ஐயா என்று கேட்டால் என்ன பதில் கிடைக்குமென்று தெரியவில்லை.

ஒரு வேளை, நான் ஜெயமோகனின் தோலை உரிப்பதை என் கடமையாக வைத்திருக்கிறேன், என்னை திசை திருப்பப் பார்க்கிறாயா, நீ விவாவவைச் சேர்ந்த கூலிப்படைதானே, என்று விசாரிக்கப்படலாம். எது எப்படியோ, ஜெயமோகன் அலெக்ஸா ரேட்டிங்குக்காகவே இப்படி செய்கிறார் என்று வைத்துக் கொண்டாலும், இப்படிப்பட்ட ஒரு விமரிசன முறையை மட்டும் கண்டு கொள்வது, மற்றதை புறக்கணிப்பது என்றிருந்து, ஜெயமோகன் மைய இணைய இலக்கிய விமரிசன முறைமையைக் கட்டமைப்பதில் நம் அனைவருக்கும் பங்கிருக்கிறது.

oOo

இதற்கெல்லாம் மாற்றாக என்ன செய்யலாம்? பாரதியும் கம்பனும் என்று துவங்கிய விவாதம் இன்று பாரதியும் எலியட்டும் என்று வந்து நிற்கிறது. எம்டிஎம்முக்கு நான்தான் சுட்டி கொடுத்து அறிமுகப்படுத்த வேண்டுமென்பதில்லை, இப்போது புதிதாக பெருந்தேவி அவர்களும் களத்தில் குதித்திருக்கிறார்: அவரது பதிவுகள் ஒன்று மற்றும் இரண்டு இங்கிருக்கின்றன. பார்ப்பனப் பாம்பு தலையெடுத்து விடாமல் ஜாக்கிரதையாக அவர் அதன் தலைமேல் கால் வைத்தபடியே அத்வைதத்தை இந்த விவாதத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். வாழ்த்துகள்.

உண்மையான இலக்கிய ஆர்வலர்கள் இந்த மாற்று குரல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜெயமோகன் குண்டு போட்டுதான் நம் தூக்கத்தைக் கலைக்க வேண்டும் என்ற நிலை இருக்கக்கூடாது. எம்டிஎம் மற்றும் பெருந்தேவி போன்றவர்களின் எழுத்து அவர்கள் ஜெயமோகனுக்கு எதிராகச் செய்யும் எதிர்வினையால் மட்டும் கவனித்து விவாதிக்கப்படும் அவலமான சூழல் இனியும் இருக்கக் கூடாது.

அப்போதுதான் யார் பொருட்படுத்தத்தக்கவர்கள் என்று ஜெயமோகன் தீர்ப்பளிக்கும் நிலை மாறி, நாம் தீர்மானிக்கும் நிலை வரும். ஆனால் அந்த நிலை இன்றில்லை. நாம் யாரைப் பொருட்படுத்தி விவாதிக்கிறோம் என்று பாருங்கள்- இணையமெங்கும் சிதறிக் கிடக்கும் தகவல்கள் ஒருவரையே சுட்டும் : விஜய் அஜித் சூர்யா போல் அவர் போட்டுக் கொண்டிருக்கும் ஜீன்ஸ்கூட யாரால் வாங்கித் தரப்பட்டது என்று உன்னிப்பாக அவதானித்து நாம் விவாதிக்கிறோம். இனி எலியட்டையும் கம்பனையும் எம்டிஎம்மையும் ஜெயமோகனையும் பாரதியையும் (கவனியுங்கள், இந்த வரிசைப்படுத்தல் ராண்டமானது- இதில் எந்த தர நிர்ணயமுமில்லை) மகாகவியையும் சாதா கவியையும் டையாக்ரானிக்கையும் சின்கிரானிக்கையும் ரசனை விமரிசனத்தையும் கோட்பாட்டு விமரிசனத்தையும் இன்னும் இதுபோன்ற இன்ன பிற அருமையான சங்கதிகளையும் பேசும்போது அருமை நண்பர் அரங்கசாமியின் ஜீன்ஸும் பேசப்படும்: ஒரு வாசகனுக்கு இதைவிட என்ன பெரிய இடம் இலக்கியத்தில் கிடைத்துவிடப் போகிறது?

வாழ்த்துகள் அரங்கசாமி. இந்த மாதிரி ஒரு ஜீன்ஸை நீங்கள் வேறு யாருக்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும் அது முக்கியமானதாக இருந்திருக்காது. :))

oOo

இவ்வளவு பேசிவிட்டு நீ என்ன எழவு விமரிசனம் செய்கிறாய் என்று கேட்கும் நண்பர்கள் ஒரு உண்மையை மறந்து விடுகிறார்கள்- நம் சரக்கு அவ்வளவுதான்.

இருந்தாலும், பெருந்தேவி அவர்களையும் ஒரு விமரிசகராகப் பொருட்படுத்தி அவர் சொல்வதையும் விவாதிக்க வேண்டும் என்று கோரிய காரணத்தால் அம்மையார் பார்வைக்கு (பெருந்தேவி என்பவரை அம்மையார் என்று விளிப்பதுதானே முறை?) இரு கேள்விகளை முன் வைக்கிறேன்:

1. டி.எஸ். எலியட்டின் கல்லூரி காலங்களில் அவருக்கு அத்வைத அனுபவத்தை ஒத்த (கண்முன் காணப்படும் உலகம் சிதறி வேறொரு மெய்யுலகம் உணர்த்தப்பட்ட) ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் தங்களுக்குத் தெரியுமா?

2. டி.எஸ். எலியட்டின் எழுத்து எப்.ஹெச். பிராட்லி என்ற தத்துவக்காரரின் தாக்கத்துக்குட்பட்டிருக்கிறது என்ற உண்மை தங்களுக்குத் தெரியுமா? அன்னாரின் தத்துவம் குறித்து எலியட் முனைவர் பட்ட ஆய்வேடு எழுதிய தகவலை தாங்கள் அறிந்துள்ளீர்களா?

3. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எலியட் “இந்திய தத்துவம்” குறித்து ஒரு முழு ஆண்டு பட்டமேற்படிப்பு பாடம் படித்தார் என்ற உண்மையை தாங்கள் அறிவீர்களா? தன் உபநிடத உரையில் எஸ் ராதாகிருஷ்ணன் சங்கரரை மேற்கோள் காட்டியிருந்ததை எலியட் படிக்காதிருந்திருக்கலாம்- உண்மை, ஆனால் அவர் சங்கரரையே படித்திருக்கலாமல்லவா? இந்த இடத்தில் எனக்கும் சங்கரரின் வழிவந்ததாகச் சொல்லிக் கொள்ளும் “மடங்களின் சுயநலம்பேணும், குரூரமான சாதி ஆதிக்கக் கருத்தியல்” மனதில் நிழலாடுகிறது என்று சொல்லி நானும் அறிவாளிதான் என்று கையொப்பமிடுகிறேன்.

ஜெயமோகன் மைய இணைய இலக்கியத்துக்கு மாற்றான ஒரு எதிர்வெளி உருவாக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்தக் கேள்விகளை எழுப்புகிறேன்- மற்றபடி எனக்கு பெருந்தேவி அவர்கள் எழுதியுள்ளவை குறித்து பெரிய அளவில் விசாரங்கள் இல்லை. இனி வரும் பதிவுகளில் இதுபோல் நண்பர்கள் ரா கிரிதரன், ஸஸரிரி கிரி மற்றும் வரசித்தன் போன்ற இலக்கியவாதிகளை நோக்கியும் கேள்விக்கணைகள் நீளும் என்று அடுத்து எச்சரிக்கிறேன் (மூன்று பேரும் சீக்கிரமா மகாகவி மேட்டர்ல இலக்கிய பதிவுகள் போடுங்க சார், அப்பதான நான் உங்களையும் விமரிசிக்க முடியும்?- மறக்காமல் உங்கள் புகைப்படங்களையும் அனுப்பி வைங்க. அப்புறம், ரெஸ்யூமை அனுப்ப மறந்துடாதீங்க: வெளிநாட்டில் இருப்பவர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேலை செய்பவர்கள் எல்லாம் ஆரம்பத்திலேயே காலி, இப்பவே சொல்லிட்டேன், அப்பறம் வருத்தப்படக் கூடாது.)

Advertisements

One thought on “ஜெயமோகன் மைய இணைய இலக்கிய மாற்று எதிர்வெளிக்கான இன்றைய தேவை – ஒரு சிறு முன்னெடுப்பு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.