முகமற்ற கடிகாரம் – அகக்குரலின் ஒலிப் பேழையை மறைந்தியக்கும் பற்சக்கரங்கள்

இந்தப் பதிவோடு இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பழையபடி நிமிஷக் கதைகளைத் தொடர விரும்புகிறேன் (அப்படி சொன்னால், நண்பர் ஸஸரிரி கிரிக்கு மூன்று நாளைக்கு ஒரு முறை, “ஐயா, எனக்கு கற்பனை வறட்சியாக இருக்கிறது; ஏதாவது நிமிஷக் கதை எழுதி அனுப்புங்கள்” என்று அஞ்சல் செய்யப் போகிறேன் என்று அர்த்தம்- இப்படித்தான் அண்மையில், இன்று மாலை மூன்று XXX நாவலுக்கு இணையான ஒரு நிமிஷக்கதையை அனுப்பப் போகிறேன், அதைப் படித்ததும் அப்படியே உறைந்து போய் விடுவீர்கள் என்று சொன்ன நண்பர் ஸஸரிரி கிரி, என்ன நினைத்தாரோ, அதைத் தன் ப்ளாகிலேயே பதிப்பித்துக் கொண்டு விட்டார். வாயடைத்துப் போய் விட்டேன், நாவெழவில்லை. என்ன செய்வது, பின்னூட்டப்பெட்டியில் “சூப்பர்!” என்று வயிற்றெரிச்சலோடு அட்சதை போட்டு விட்டு வந்தேன்).

பதிவின் மேற்கண்ட தலைப்பு என்னவோ படு பயங்கர பில்ட் அப் தருகிறது- ஆனால் அவ்வளவு பெரிய விஷயத்தை எழுதக்கூடிய ஆற்றல் எனக்கு இல்லை. அதற்கான தேவையும் இல்லை: எப்போதோ செத்துப் போன வெள்ளைக்காரர்களைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது? அதனால் ஆர்கனைஸ் செய்து கொண்டு எழுதாமல், தட்டச்சிக் கொண்டே செல்கிறேன்,-

அதை விடுங்கள். என்னை சில நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த சில கேள்விகள் இந்தக் கட்டுரையைப் படித்ததும், பிணம் மிதப்பதுபோல் மேலெழுந்து வந்தன.

விஷயம் ஒன்றுமில்லை- மினிமலிசம் என்ற இயத்தின் முகமாக அறியப்பட்ட ரேமண்ட் கார்வரின் ஆகப்பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்திய சிறுகதைத் தொகுப்பு ஒன்று அவரது எடிட்டரால் கன்னாபின்னாவென்று வெட்டப்பட்ட கதைகளின் தொகுப்பாம். சில கதைகளில் முக்கால் வாசி பகுதி இப்படி தூக்கி வீசப்பட்டிருக்கின்றன; சில கதைகளில் முடிவு மாற்றப்பட்டுள்ளது- எந்த அளவுக்கு இந்த எடிட்டர் கத்தரியைப் பயன்படுத்தி இருக்கிறார் என்றால், ஹோட்டல் அறை எண் 22 என்று இருந்ததை பாதிக்கு பாதி மாற்றி அறை எண் 11 என்று மாற்றினாராம்.

கார்வர் இதை எல்லாம் செய்யக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.

– “தொகுப்பு இந்த வடிவில் வெளிவந்தால் அதன் பின்விளைவுகள் எனக்கு எப்படி இருக்குமோ என்ற குழப்பத்தில், அலுப்பில், அச்சத்தில், பாரனாய்டில் இருக்கிறேன்,” “உண்மையைச் சொல்கிறேன், என் சித்த சுவாதீனமே இங்கு பணயம் வைக்கப்பாட்டிருக்கிறது,” என்றும் “இந்தப் பதிப்பை நிறுத்தத் தேவையான என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் செய்ய வேண்டும்,” என்றெல்லாம் அவருக்கு எழுதியிருக்கிறார் கார்வர்.

ஆனாலும் எடிட்டர் அதை எல்லாம் மீறி தொகுப்பை வெளியிட்டதும், அதுவரை பரவலான விமரிசன அங்கீகாரம் பெற்றிராத கார்வர் பெரிய அளவில் பாராட்டப்படுகிறார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு வருகிற சிறுகதைகளில் பாதிக்கு பாதி கார்வரிய பாதிப்பு கொண்டவையாக இருக்கின்றன.

“எழுத்து என்பது தனித்துவமுள்ள ஒரு துல்லிய பார்வை, அந்தப் பார்வையை வெளிப்படுத்தப் பொருத்தமான சூழலை அடையாளம் கண்டு கொள்தல்- அது நடையைப் போன்ற ஒன்று, ஆனால் நான் நடையைப் பேசவில்லை, அது நடை மட்டுமல்ல. ஒரு எழுத்தாளன் எழுதுவன அனைத்திலும் அவன் சந்தேகத்துக்கிடமில்லாமல் தனதெனப் பதிக்கும் முத்திரைதான் எழுத்து. அது அவனது உலகம் மட்டுமே, வேறு எவருக்கும் உரியதல்ல,” என்று சொல்லும் கார்வர், இந்தத் தொகுப்பு அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, நான் இவ்வளவு சிக்கனமாக எழுதினேனாக்கும், வேண்டாத எல்லாவற்றையும் ஈவு இரக்கமில்லாமல் கத்தரித்து வீசினேன், என்று பெருமையடித்துக் கொள்கிறார்.

அது மட்டுமில்லை, தான் ஒரிஜினலாக எழுதிய கதைகளை, மீள்வடிவங்கள் என்ற பெயரில் புதிதாக எழுதின மாதிரி வெளியிடுகிறார்.

இதன் நியாய அநியாயங்களை விடுவோம், எடிட்டிங்கை முதலில் ஏற்றுக் கொண்டாலென்ன பின்னால் ஏற்றுக் கொண்டாலென்ன, இது என் பார்வை என்று ஒரு எழுத்தாளர் சொன்னால், “ஆமாம், சரி,” என்று நாமும் ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?

-ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்? ஆனால் அப்படியாகப்பட்ட ஒரு எழுத்தாளரின் குரலை அவனுக்கு மட்டுமே உரிய அகக்குரல் என்று சொல்ல முடியுமா? கார்வரின் சொற்களில், “அது அவனது உலகம் மட்டுமே, வேறு எவருக்கும் உரியதல்ல,” என்று கொண்டாட முடியுமா?

அதில் ஒரு குறிப்பட்ட பத்தியில் கார்வருக்கு அவரது எடிட்டர் லிஷ் செய்தது எஸ்ரா பவுண்ட் எலியட்டின் வேஸ்ட் லாண்ட் கவிதைக்கு செய்த மாதிரி ஒரு எடிட்டிங்தான் என்று சொல்கிறார் கட்டுரையாளர்-

ஆங்கிலத்திலேயே அந்த மேற்கோளைத் தருகிறேன்,

Indeed, Max takes a familiar literary example for comparison, noting that Ezra Pound,

did for T.S. Eliot something of what Lish did for Carver. He made liberal cuts to the poem …(and) found a voice ‑ not necessarily the voice Eliot intended ‑ and honed it brilliantly. He helped make him a modernist cause célèbre. Eliot acknowledged the debt obliquely, praising Pound as “il miglior fabbro” (‘‘the greater craftsman’’) in his dedication.

“எலியட்டின் ஆத்மார்த்தமாக அந்தரங்க சுத்தியுடன் பேசும் கவிக்குரல்” என்று எழுதுகிறார் எம்டிஎம் . அது, “தனி நபர் விடுதலையும், சக மனித விடுதலையும், சமூக விடுதலையும் நிரந்தரப் பிணைப்பிலிருத்தும் கவிக்குரல்…” “ஐரோப்பிய சமூக ஆன்மாவின் குரல், ” “ஆங்கில இலக்கிய பாரம்பரியமும் நவீனத்துவமும் ஒரே சமயத்தில் எலியட்டின் வாசகனுக்கு…” கொடுக்கும் குரல், “…transcendental ethical inner voice.” என்றெல்லாம் பொருள்பட எழுதுகிறார் அவர்.

அப்படியா? எஸ்ரா பவுண்ட் வேஸ்ட் லாண்ட் கவிதையைப் பாதிக்கு பாதி எடிட் செய்திருக்கிறார் – அவரது அனுமதியுடன்தான். இதில் நமக்கு வாசிக்கக் கிடைக்கும் குரல் எலியட்டுக்கு மட்டுமே உரியதா? சந்தேகமாக இருக்கிறது.

இங்கிருக்கும் இந்த மேற்கோளைப் பாருங்கள்– 1948ல் எலியட் சொல்வது-

Neither a classless society, nor a society of strict and impenetrable social barriers is good; each class should have constant additions and defections; the classes, while remaining distinct, should be able to mix freely; and they should have a community of culture with each other which will give them something in common, more fundamental than the community which each class has with its counterpart in another society.

அதுமட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் என்றும் எலியட் நம்பியதாகத் தெரிகிறது. இதையும் இனி குறிப்பிடவிருக்கும் இன்னுமொரு விஷயமும் இந்த புத்தகத்தில் பேசப்படுகின்றன.

இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்து இங்கிலாந்து மகாராணியின் இந்திய புத்தகம் என்ற தொகுப்புக்கு எலியட் ஒரு கவிதை எழுதித் தருகிறார். அதைப் படித்துப் பாருங்கள்.

சிறு பிள்ளைகளிடம், “நல்லா படிச்சா நீ ஒரு டாக்டர் ஆகலாம், சைடின்ஸ்ட் ஆகலாம்,” என்றெல்லாம் குழந்தைகளின் ஆசைக்கேற்ப சொல்வது போல், கடமையைச் செய், அதன் பலன் கிடக்கிறது கழுதை என்கிறார் எலியட்! இங்கிலாந்துக்காக தென் ஆப்பிரிக்காவில் சாவதா இந்தியனின் தலை எழுத்து? அவன் விதி அது என்றே எடுத்துக் கொள்வோம், காலனியாதிக்கம் பற்றி ஒரு வார்த்தை?

“ஐரோப்பாவின் பண்பாட்டை நாம் முழுமையாகப் பெறுவதானால், நாம் அனைவரும் இன்றும் ரோமானியப் பேரரசின் குடிமக்களே” என்று சொல்வதுதான் எலியட்டின் “ஐரோப்பிய சமூக ஆன்மாவின் குரல்.”

எலியட்டின் காலனிய ஆதரவு பற்றி இங்கே இருக்கிறது (கூகுள் இல்லாவிட்டால் என்னைப் போன்ற மூன்று நிமிட இலக்கியவாதிகள் ரெடிமிக்ஸ் விமரிசனத்துக்கு என்ன செய்வோம்? 🙂 )

எலியட்டின் அகக்குரல் எப்படி பாரதியின் குரலோடு பேசத்தக்க அந்தரங்க சுத்தி பெற்ற குரலாகிறது?

அப்படி பாரதியின் அகக்குரலை யாரோடும் இணைத்துப் பேசுவதானால், அது எலியட்டோடல்ல- அவரது சமகாலத்தவரான, அவரால் “இன்றுள்ள அரசியல் சூழ்நிலையை இப்படிப்பட்ட பார்வையில் விமரிசிக்கத் தகுந்த காலம் இதுவல்ல,” என்ற (வேறு பல காரணங்களில் இதுவும் ஒன்று) காரணத்தால் நிராகரிக்கப்பட்ட அனிமல் ஃபார்ம் என்ற நாவலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல்லுடன்தான் பேச வேண்டும். ஆர்வெல் சமயம், இனம், மொழி, அரசியல், என்று அனைத்து இசங்களின் அடக்குமுறையையும் தொடர்ந்து எதிர்த்து வந்தார்- ஸ்பானிஷ் சிவில் போரில் பங்கேற்றவர், ஐரோப்பிய நாகரிகத்தை நன்கறிந்தவர்.

தன் காலத்தின் முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் பேசியவர். காலனியத்தை எதிர்த்தவர். இவரையும் பாரதியையும் இணைத்துப் பேசலாமே?

கவி என்று சொன்னால், கூவுபவன், உரக்க மொழிபவன் என்று ஒரு பொருள் வரும் போலிருக்கிறது (கம்பன்கூட, “ஆசை பற்றி அறையலுற்றேன்,”  என்றுதானே சொல்கிறான்?). கவி என்பவன் கவிஞனாக மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன? அவன் நமக்குத் தேவையான் தரிசனங்களைத் தான் வாழும் காலத்தில் கண்டெடுத்துத் தந்தவனாக இருக்கலாம் அல்லவா?

பாரதியும் சரி ஆர்வெல்லும் சரி, தொடாத களம் இல்லை- அவர்களுடைய பண்பாட்டின் ஒவ்வொரு துறை நிகழ்வையும் தொடர்ந்து பேசியவர்கள்- அந்தரங்க சுத்தியோடு.

ஆர்வெல்லைப் பேசலாமே? ஏன் எலியட்?

அழகும் மொழியும் வடிவமும் மட்டுமே இலக்கியமா? அவை தருவன மட்டும்தான் தரிசனமா?

(தர்சனம் கெட்ட வார்த்தை என்று சொல்பவர்கள் அழகும் மொழியும் வடிவமும் மட்டும்தான் மேட்டரா என்று படிக்கவும்.)

Advertisements