என்னுடன் நடக்கிறதொரு கரும் பூதம்…

இப்போது லா.ச. ராமாமிருதம் அவர்கள் எழுதிய “ஜனனி” என்ற சிறுகதை தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன் – அதற்காக அடுத்த சில நிமிஷக்கதைகளை லாசரா மாதிரி தந்து விட முடியுமா என்ன!- அப்படி எழுத முடிந்தால் என் கால்கள் தரையில் இருக்காது 🙂

கால்கள் தரையில் நிற்காது என்று எழுதக் காரணம்- இப்போதுதான் ஒரு நண்பரிடம் லாசரா பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவர் எழுதுகிறார், ” அவரது கதைகள் தரையிலிருந்து அரையடி மிதப்பது போல எனக்குத் தோன்றும்,” என்று. உண்மைதான்.  இயல்பு வாழ்க்கை, இயல்பு உணர்வுகள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட பார்வைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிதான் தோன்றுகின்றன. வார்த்தைகளுக்குள் உலகை சுருட்டிக் கொடுக்க முயற்சிக்கிறாரோ என்ற எண்ணம் வருவது இயல்புதான்.

இங்கே அவர் முன்னுரையில் – முன்னுரைக்கே ‘தபஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார் லாசரா: அவரது படைப்புகள் அனைத்தையும் உரையற்ற பொருளை உணர்த்த முயன்று மௌனத்தில் அடங்கும் முன்னுரையாக அவர் நினைத்தாரோ என்னவோ: அவருக்கு எழுத்து ஒரு தபஸ் என்றால்,  அவர் தன் வாழ்நாளில் எவ்வளவு எழுதியிருந்தாலும், அவை அனைத்தும் மௌனத்தைச் சுட்டுவதால், அவை மொத்தமும் முன்னுரையாகின்றனவோ என்னவோ: அப்படியாயின், இந்தப் புத்தகத்தின் முன்னுரைக்கு அவர் வழங்கியிருக்கும் தலைப்பு – தபஸ்- அவரது மொத்த படைப்புகளுக்கும் பொருந்தும்- அவை அனைத்தும் ஒரு முன்னுரை என்ற பொருளிலேயே. நிற்க.

நண்பர் சொன்ன, “” அவரது கதைகள் தரையிலிருந்து அரையடி மிதப்பது போல எனக்குத் தோன்றும்,”” விஷயத்துக்கு வருவோம். இந்த முன்னுரையில் லாசரா எழுதுகிறார், “கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின் மேல் நம் கண் முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும், அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிக்கும் சோகச் சாயையையும் நாம் அதனுள்ளிருந்து கொண்டே பார்க்க முடியும்”” என்று.

உலகம் இந்த பீங்கான் சக்கரங்களின்மேல் நிற்கிறது என்ற உணர்வு இருந்தால், அவரது மிதக்கும் கதைகள் உண்மையின் இயல்பில் தோய்ந்து நிற்பவை என்பதை உணர முடியும். புறவயப்பட்ட உலக உண்மையையே நாம் அறிந்து வாழ்கிறோம்: ஆனால் அகவயப்பட்ட உலகு ஒன்று இருக்கிறது: அங்கு மெய்யும் பொய்யும் ஒரு மயிரிழையில்தான் பிரிந்து நிற்கின்றன. எது பேசப்படுகிறதோ, அது பொருளை உணர்த்துவதில்லை: எது உணர்த்தப்படுகிறதோ அதுதான் பேசப்படும் பொருளாகிறது.  இந்த உணர்வின் இடைவெளிதான் பீங்கான் சக்கரங்களாய் உலகை உருட்டிச் செல்கிறது.

லாசராவின் கதைகளில் நாம் இதைக் உணரலாம்- உணர்வின் வண்ணம் தரித்த உலகம் எப்போதும் நாமறிந்த உலகைவிட ஒரு அடி உயர்ந்தே மிதக்கும்: நீரின் buoyancy அதில் ஆழ்பவனை புறம் நோக்கி அழுத்துவதைப் போல்: இதை நான் நம் வாசகர்களுக்காகவே எழுதுவதால், ரா கிரிதரன் இந்தக் கதையைப் படித்துப் பார்க்கலாம், வரசித்தன் இந்தக் கதையைப் படிக்கலாம்: நான் சொல்வது தவறென்று சொல்லுங்கள் பார்ப்போம்.

இயல்பாக எழுதப்பட்ட எந்த கதைக்கும் குறையாமல் இந்தக் கதைகள் உண்மையாக இருக்கின்றன என்று நினைக்கிறேன். உணர்வுகளின் ஆதிக்கம் இவற்றைத் “தரையிலிருந்து அரையடி ” மேலே மிதக்க வைக்கின்றன என்றும் நினைக்கிறேன்.

———-

ஆனால் நான் இந்தப் பதிவை எழுத வந்த நோக்கமே வேறு; “நாம் ஏன் இலக்கியம் படிக்கிறோம்?”

லாசரா எழுதுகிறார், “இக்கதைகளில் ஏதோ ஒன்றில், ஏதோ ஒரு பக்கத்திலோ, அல்லது ஒரு வாக்கியத்திலோ, சொற்றொடரிலோ, பதங்களிலோ, அல்லது இரு பதங்களுக்கிடையில் தொக்கி, உன்னுள்ளேயே நின்று கொண்டு உன்னைத் தடுக்கும் அணு நேர மௌனத்திலோ உன் உண்மையான தன்மையை நீ அடையாளம் கண்டு கொள்வாய்,” என்று.  தன் முதல் சிறுகதை தொகுப்பில் இப்படி எழுத என்ன ஒரு தன்னம்பிக்கை வேண்டும்! நிற்க.

—-

அண்மையில் நடந்த ஒரு ஆய்வில்  நாம் ஏன் இலக்கியம் படிக்கிறோம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் 🙂 – நம் கையில் இருக்கும் படைப்பு வழியாக நாம் ஏற்கனவே அறிந்திருந்தும் இதுவரை முழுமையாக உணராதிருந்த உணர்வுகளை முதன் முறையாக அறியவர இலக்கியம் உதவுகிறது: இதை expressive reading என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட வாசிப்பு,  “காலப்போக்கில் உணர்வின் வெளிப்பாடு எப்படி விரிகிறது என்பதன் வெளிப்படுத்தலை, அது தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இயல்பை பேசக் கோருகிறது; உணர்வுகளையும் அது சுட்டும் பொருட்களையும் ஏககாலத்தில் இருப்புக்குக் கொணருகிறது”.

எனக்கே இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று புரியவில்லை- போகட்டும் விடுங்க. ஒரு இலக்கியப் படைப்பைப் படிக்கும்போது நாம் நம்மைப் படிக்கிறோம்: அதையன்றி வேறு வழியில் நமக்கு இத்தகைய வாசிப்பு சாத்தியமில்லை. அது நம்மை நமக்கு அறிமுகப்படுத்துகிறது: நம்மை, நம் உணர்வுகளை, நாமறிந்த உண்மைகளை ஒரு இலக்கியப் படைப்பின் முகத்தைப் பார்த்து அறிந்து கொள்கிறோம்: அதன் சிரிப்பில் நம் சிரிப்பை, அதன் அழுகையில் நம் சோகத்தை.  இந்த உணர்வுகள், உணர்வுகளின் உண்மைகள், ஒரு உன்னதமான படைப்பின் மொழியாலன்றி நம்மால் வெளிப்படுத்தப்பட வாய்ப்பில்லை: நம்மால் அடையாளம் கண்டு கொள்ளப்பட வாய்ப்பில்லை. அதனால்தான் லாசராவால் எழுத்தில் வாசகன் தன் உண்மையைக் கண்டு கொள்வான் என்று நம்ப முடிகிறது.

அதனால்தான் உண்மைகளைப் பேசும் படைப்புகளைவிட உண்மைகளை உணர்த்தும் படைப்புகள் நல்ல இலக்கியமாகின்றன: உணர்வுகளின் ஆழத்தில் அவற்றின் உண்மை கரைகையில் நிலவும் மௌனத்தில் வாசகன் தன் குரலைத் தேடியடைய நிர்பந்திக்கப்பட்டு, தானறிந்த உண்மையை, தன் மொழியில், எழுத்தின் மேலேற்றிப் பேசுகிறான்.

இல்லையென்றால் கோலரிட்ஜின் இக்கவிதை வரிகள் நமக்குப் பொருளற்றிருக்கும், இவை தம்முடன் இணைந்து நம்மைப் பேசச் செய்யாது.

Like one, that on a lonesome road
Doth walk in fear and dread,
And having once turned round walks on,
And turns no more his head;
Because he knows, a frightful fiend
Doth close behind him tread …

Advertisements

10 thoughts on “என்னுடன் நடக்கிறதொரு கரும் பூதம்…

 1. நான் லா.ச.ராவின் எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை. ஒன்றிரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன். ஒரு பத்தி படித்தால் எனக்குள் எழும் சிந்தனை எனக்கே ஆச்சரியமளிக்கும். கதை சோகமாக இருந்தாலும். வருத்தம் தராது. இதுதான் வாழ்க்கை. இப்படித்தான் மற்றவர்களும் வாழ்கிறார்கள், என்ற ஒரு நம்பிக்கை வரும்.

  1. நன்றி சார்.

   தங்களைப் போன்ற இளைய தலைமுறையினரை லாசராவின் எழுத்து கவர்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, 🙂

  1. நன்றி சார்.

   அப்புறம்? நிமிஷக் கதை இதோ வருது அதோ வருதுன்னு நானும் பாத்துக்கிட்டிருக்கேன், எதையும் காணோமே!

 2. நட்பாஸ் – அருமையான பதிவு. எனக்கென்னவோ லா.சா.ராவின் ‘பச்சை கனவு’ ரொம்பப் பிடிக்கும். அதைப் பற்றியும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். அவரது ஒவ்வொரு வரியும் புதுமையானது. படிப்பவரின் சிந்தனையை தூண்டிவிடக்கூடிய பண்பு தெரிகிறது. அவரது எழுத்து முறையைப் யாரேனும் பின்பற்றி இருக்கிறார்களா?

 3. உங்களுக்குத் தெரியாததா எனக்குத் தெரிஞ்சிருக்கப் போவுது?!

  புஷ்பா தங்கதுரை முயற்சி செய்திருப்பார் என்று நினைக்கிறேன்….

   1. 🙂

    “நாற்பது வருட காலம் அவருடன் பழகியவன்,” அப்படின்னு புஷ்பா தங்கதுரை சொல்றார்- “நான் புது யுக்திகளோடு, புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து கதைகளை எழுதத் தொடங்கியதும் அவருக்கு என் மீது மீண்டும் மதிப்பு வந்தது. வேறு ஓர் எழுத்தாளர் அவரைப் பேட்டி கண்டபோது என் எழுத்துகளை சுட்டிக்காட்டி குறிப்பாக அவர் புகழ்ந்திருக்கிறார்<" என்று அவர் எழுதறார்.

    நீங்களும் புது புது வார்த்தைகள் எல்லாம் கண்டுபிடிச்சு நமக்கு ஒரு நிமிஷக் கதை எழுதி குடுங்களேன்?

    சீரியஸா சொல்றேன், புஷ்பா தங்கதுரை, ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அப்போது அவர் லாசரா பாணியை முயற்சித்திருக்கலாம் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s