கிணறு

கதை எழுதலாம் என்று உட்கார்ந்தால் அவ்வளவு சுலபமாக கதை வந்துவிடுவதில்லை. ஒரு மாதிரி, கோழியின் கழுத்தைப் பிடித்து இழுக்கிற மாதிரிதான் சில சமயம் கதையை தருவிக்க வேண்டியிருக்கிறது, என்ன செய்யலாம் சொல்லுங்கள்: இந்த கதையை இதற்கு மேல் எப்படி கொண்டு செல்ல?-

ஞானத்துக்கு திருமணம் ஆன புதிது- அவர்கள் வீட்டின் கழிப்பறை புழக்கடைக்கு வெளியே இருந்தது.  ஒரு நாள் அப்படிதான் ஒரு தடவை இரவு வேளை, மணி அதிகாலை மூன்றுக்கு அருகில் இருக்கும், இரண்டாகவும் இருந்திருக்கலாம்- ஏன், நான்காகக்கூட இருந்திருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது- அந்த மாதிரியான ஒரு நேரம்.

ஞானத்தை அவனது மனைவி எழுப்பி புழக்கடைக்கு அழைத்துச் சென்றாள். ஞானம் புழக்கடை கதவை மூடிவிட்டு காவல் நின்றபோது, கிணற்றடியில் ஏதோ நிழலாடிய மாதிரி இருந்தது. அருகில் இருந்த வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது, ஞானம் மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தான்- மேலே நிலா காய்ந்து கொண்டிருக்கிறது: ஓங்கி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள், கிணற்றடிச் செடிகள்- இவற்றின் சலசலப்பு. ஞானம் என்ன ஏது என்று பார்க்க கிணற்றை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான்- அப்புறம் ஏதோ உதைப்பு எடுத்ததால், அங்கேயே நின்று கொண்டு கிணற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அருகிலிருந்த வீட்டின் ஜன்னல் வழியாக மஞ்சள் நிறத்தில் வெளியே வந்து விழுந்த விளக்கு வெளிச்சத்தில் இரண்டு பூனைகள் எங்கிருந்தோ வந்து “கங்ஙா… முங்ஙா…,?””கியாங்… கியாங்..!” என்று சீன மொழியில் உரையாடிக் கொண்டு கிணற்றுச் சுவர் மீது ஏறி நடந்து சென்றன.

நிழலாடியது போலிருந்தது தென்னை மர ஓலைகளின் நிழலாட்டமாக இருக்கும் என்று தன்னை திருப்திப்படுத்திக் கொண்டான் ஞானம். மேலே பார்த்தான், நிலா வட்டமாக, பிரகாசமாகத்தான் இருந்தது: அவன் நினைத்தது சரிதான்.

கிணற்றடியை ஒட்டி இருந்த வீட்டில் திருட்டு போய் விட்டது என்பது அடுத்த நாள் காலை ஞானத்துக்குத் தெரிய வந்தது- அங்கிருந்தவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள்: திருடன், நம்பினால் நம்புங்கள், விளக்கைப் போட்டுக் கொண்டு திருடியிருக்கிறான்- அந்த வீட்டின் அனைத்து விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன, வீட்டின் பெட்டி பீரோ பாட்டில் பாத்திரம் என்று எல்லாவற்றிலிருந்தும் துணிமணிகள் அரிசி பருப்புகள் எல்லாமே வெளியே எடுத்து வாரியிறைக்கப்பட்டிருந்தன.  அது அத்தனையையும் பார்த்து உச்சு கொட்டிக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஞானத்தின் கண்கள் திருட்டுத்தனமாய் கிணற்றடியைப் பார்த்தன- அங்கே ஒரு துருப்பிடித்த கடப்பாரை கிடந்தது.

OoOoO

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்- அசோகமித்திரனின் இருவேறு குறுநாவல்களில் கிணறு பக்கவாட்டில் கிடத்திப் போடப்பட்ட குகையாக வர்ணிக்கப்பட்டிருக்கும்.  கனவோ நனவோ இருண்ட நினைவுகளின் ஆழத்தில் அமிழும் அசோகமித்திரனின் அந்த இரு பாத்திரங்களும் கிணற்றில் இறங்குகிற மாதிரி உணர்வார்கள்- ஆனால் அவர்களுக்கு பக்கவாட்டில் கிடத்திப் போடப்பட்ட குகைக்குள் நுழைகிற உணர்வும் இருக்கும்.

கிணற்றைப் பற்றி கதை எழுதுவதால் குகையாயிருக்கிற அசோகமித்திரனின் கிணறுகள் நினைவுக்கு வந்தன. ஏன் இப்படி என்று யோசித்துப் பார்த்தால், கிணற்றில் நீர் சுரந்து கொண்டே இருக்கும், இல்லையா? குகையில் அப்படி இல்லை. குகையின் முடிவில் எது இருந்தாலும், பூதமாகத்தான் இருக்கட்டுமே, அது ஏற்கனவே அங்கு இருந்ததுதான். புதிதாகக் கிளம்பி வரப்போவதில்லை. ஆனால் கிணற்றில் அப்படி இல்லை: ஏதோ ஒரு ஊற்றில் இருந்து நீர் சுரப்பதுபோல் மனதில் ஏதோ ஒரு கற்பனையில் காட்சிகள் தோன்றிக் கொண்டிருக்குமாக இருக்கும்- அச்சமாக இருக்கலாம், ஆசையாக இருக்கலாம்.

ஆனால் நம்பிக்கையின் ஊற்றுக்கண்ணின் வறட்சியைத் தொட்டுவிட்ட மனம் தன் எல்லைகளை அறிந்த ஒன்று: அது தன் பயணத்தில் வரலாற்றின் எவ்வளவு புராதானமான காலத்தை அறிந்தாலும் அதில் புதிதாய் எதுவும் இருக்காது- பல பத்தாயிரம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய யாரோ ஒரு கற்கால மனிதன் வரைந்த ஓவியங்கள் நம்மை வியக்கச் செய்தாலும்,  அது முடிந்து போன நினைவுகளின் மிச்சமாக எஞ்சி நின்று காலம் காலம் தன்னை மறக்கக் காத்திருக்கிறது, அவ்வளவுதான். அதைக் காண்பவன் தனக்கென எதையும் கொண்டாட முடியாது, இல்லையா?

இந்தக் கிணற்றையே எடுத்துக் கொள்ளுங்களேன், என்னால் அது கிணறு என்பதைத் தாண்டி கதையைக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆனால், நீங்கள் என்னைவிட நுட்பமான வாசகராக இருந்தால் ஞானத்தின் கிணறு என்னைவிட உங்களுக்கு பல உண்மைகளைப் பொதித்து வைத்து வெளிக்காட்டுவதாக இருக்கும், இல்லையா?

 

 

Advertisements

12 thoughts on “கிணறு

 1. என்ன சார் வாசகர் கிட்ட சாய்ஸ்ல விட்டீங்க? ரொம்ப மோசம் சார் நீங்க.

  ‘ஞானமா’ இருந்திட்டு அவரு கிணறுக்குள்ள பார்க்காம விட்டுட்டாரு. உள்ள, வேம்பர்கள் போல ஒளிந்து கொண்டிருந்தவனையும் பார்க்கலை, கிணறிளிருந்து எழுந்து சென்ற கண்ணு தெரியாத திருடனையும் பார்க்கலை, காலையில் தூக்க கலக்கத்தில் கிணறில் எழுந்திருக்கும் அவரையே பார்க்கலை. சரி கடப்பாரையாவது அவரோட மனைவி கிட்ட திருப்பிக் கொடுத்தாரா? இல்ல, அதையும் எடுத்து காது குடைய போயிட்டாரா?

 2. //அவ்வளவு மோசமாவா இருக்கு?

  //

  யார் சொன்னது? கதை முடியலைன்னு நீங்களா நினைச்சுகிட்டீங்க.கடப்பாரை பார்த்ததும் கதை முடிஞ்சுது.ஞானம் முன்னாடியே போயிருந்தா தடுத்திருக்கலாம்லே? இல்ல அவருக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு விட்டுட்டாரா?

  1. 🙂

   என்ன முயற்சி செஞ்சேன்னு சொல்றேன், சரியா வந்திருக்கா பாருங்க.

   எல்லாமே எல்லாருக்கும் பொருள் பொதிந்த விஷயங்களா இருக்க முடியாது- அது ஒரு மனப்பாங்கு. இங்க பாயிண்ட், மனசு வரண்டு போச்சு என்பது. கிணற்றை பக்கவாட்டில் சாய்ச்சு குகையாக கிடத்தி வெச்சாச்சு- அதைச் சுட்டிக் காட்டும் விதமாகத்தான் கிணத்தடியில இருக்கற கடப்பாரை துருப்பிடிச்சு கிடக்கு (ஹிஹி… என்ன ஒரு அறிவு!- என்னைச் சொன்னேன் 🙂 )

   கிணறு அவ்வளவுதான். இதைப் படிச்ச அப்புறமும் இதுல இன்னும் ஏதாவது இருக்குன்னு தோணினா கதை சரியா வரலைன்னு அர்த்தம். எல்லாம் முடிஞ்சு போச்சு. இன்னும் எதுவும் சொல்றதுக்கு இல்லை.

   – அப்படின்னு கதை எழுதிட்டு, கதைக்குள்ள இது இருக்கு அது இருக்குன்னு ப்ராமிஸ் பண்ணக் கூடாது, இல்லியா? ப்ராமிஸ் பண்ணினாலும், ஒண்ணும் இல்லைன்னு வாசகனுக்குத் தெரியணும்.

   எப்படி இந்தக் கிணத்துக்குள்ள புதுசா எதுவும் இல்லியோ, அப்படியே கதைலயும் கிடையாது. அப்படி தேடினா ஏமாத்தம்தான் மிஞ்சும்.

   – சரியா வந்திருக்கா?

 3. //எப்படி இந்தக் கிணத்துக்குள்ள புதுசா எதுவும் இல்லியோ, அப்படியே கதைலயும் கிடையாது. அப்படி தேடினா ஏமாத்தம்தான் மிஞ்சும்.

  //

  ஒத்துக்கமாட்டேன் 🙂 நீங்க ஏதோ ஒரு விஷயம் வெச்சிகிட்டு சொல்ல மாட்டேங்கறீங்க.

  சரி இப்படி கேக்கிறேன் – ஞானம் இரவே கிணறு பக்கம் போனா என்னவாகியிருக்கும்? திருடனைப் பிடிச்சிருக்கலாம் அல்லது கடப்பாரையால் ஞானம் ‘பனால்’ ஆகியிருக்கலாம். திருடனைப் பிடிச்சிருந்தா, பக்கத்து வீட்டுக்காரன் கஷ்டம் இருக்காது. திருட்டு நடந்ததால இப்ப அவனோட இழப்பு ஞானத்துக்குக் குறுகுறுக்கலியா? அப்ப கடப்பாரை ரொம்ப முக்கியமில்லையா? ஒரு வேளை ஞானம் ‘பனால்’ ஆகியிருந்தால் அந்த கடப்பாரை ஒரு முக்கியமான ஆதாரம் இல்லியா?
  எப்படி பார்த்தாலும் கடப்பாரை ரொம்ப முக்கியமாச்சே! கொலை நடந்திருந்தா அதிலிருக்கும் ரத்த கரை ரொம்ப முக்கியம். ஆனா இப்ப திருட்டு மட்டும் நடந்ததால, அதிலிருக்கிற துரு ஞானத்தின் காண்டாமணி ஓசையாச்சே! குற்றமுள்ள நெஞ்சில்லையா? அப்ப, நீங்க சொல்ற

  //எல்லாமே எல்லாருக்கும் பொருள் பொதிந்த விஷயங்களா இருக்க முடியாது//

  இது தப்பாகுது. அப்போ கதை சொல்லும் விஷயம் என்னமோ மிச்சமிருக்கு..சொல்லுங்க நட்பாஸ் என்னத்தை மறைக்கிறீங்க? 🙂

  1. ஐயோ ஐயோ!

   உண்மையிலேயே ஞானம் பாத்தது வெறும் நிழலாட்டமா இருந்திருந்தா? அவன் பாடத்துக்கும் திருட்டுக்கும் சம்பந்தமே இல்லாம இருந்திருந்தா? நாம ஒவ்வொரு நைட்டும் வெளியே போனா அரைகுறை வெளிச்சத்துல எத்தனையோ நிழலாட்டம் பாக்கறோம்- அத்தனையும் திருடனா, இருக்கா என்ன!

   அறைந்தாலும் அறையாட்டியும் மனம்தான் கரும்பூதம்: அது உயர வளரும் இடம் அறிந்தும் அறியாமலும் இருக்கும் சந்தேக மனம். ரைட்டா!

   விடிஞ்சதும் என்ன வேணா சொல்லிக்கலாம், ஆனா விடியும் வரை?

 4. சார் கதை நல்லா இருக்கு.

  எனக்கு புழக்கடைக்கு வெளியில் இருக்கும் டாய்லெட் என்றவுடன் எங்களூர் டாய்லெட்டுக்கள் ஞாபகம் வந்துவிட்டது.வீட்டு வளவின் ஒரு மூலையில் கட்டி இருப்பார்கள்.இப்படித்தான் நடுஇரவுகளென்றால் கொடி குடை ஆலவட்டத்தோடு போகவேண்டியிருக்கும்.
  காவலுக்கு நிற்பவர் “ என்ன நித்திரையா?” என்று கேடு உற்சாகப்படுத்துவார்..

  இந்தக்கதையில் சம்பவங்கள் நிகழுகின்றன. எழுந்தமான சம்பவங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கிறபொழுது அதிசயம் நிகழ்ந்தால் அது கடவுள் செயலாகப்பார்க்கப்படும். இங்கு எதுவும் நிகழவில்லை
  நடு இரவு திருடனுக்குக்காலம் கதைமாந்தருக்கு அகாலம்.மனைவிக்கு வயிற்றைக்கலக்கியது அன்றைக்கு அந்த நேரத்தில் வழக்கமான செயலில் இருந்தான ஒரு இடறல். ஆனால் அதிசயம் எதுவும் நிகழவில்லை.இரண்டு நிகழ்வுகளும் ஒன்றில் ஒன்று குறுக்கிடவில்லை.திருடன் திருடிக்கொண்டு போனான். பாத்திரம் கழுவிவிட்டுத்தூங்கப்போனது.

  வாழ்க்கையில் இதுதான் பெரும்பாலும் நிகழ்கிறது.ஆனால் அதிசயங்களும் நிகழுகின்றன.

  திருடனக்கண்டு துரத்தியிருந்தாலோ
  அல்லது கிணற்றடியில் ஆடிய நிழல் பக்கத்துவீட்டுப்பெண்ணாயிருந்து மாரிக்கிணற்றில் குதிக்க இருந்தவளை பாத்திரம் காப்பாற்றி இருந்தாலோ அல்லது பக்கத்துவீட்டில் தனியே இருக்கின்ற பெரியவர் ஜன்னல் கம்பிகளைப்பிடித்துகொண்டு மூச்சுத்திணறுவதைக்கண்டு ஞானம் அம்புலன்சைக்கூப்பிட்டிருந்தாலோ இந்தச்சம்பவங்கள் வாழ்வில் அடிக்கோடிடப்பட்டு வயிற்றைக்கலக்கியது எழுந்தது எல்லாமே அதிசயம் கலந்து ஒளிவீசியிருக்கும்.
  சம்பங்களோடு எழுத்தாளர் போயிருக்கிறார்.குறுக்கிடவேயில்லை.

  நடந்த சம்பவத்தை பின்னோக்கிப்பார்க்கிறபோது ஞானத்தின் இயல்புக்கு ஏற்ப உணர்வு தோன்றும்

  -சாகசத்துக்கு ஏங்குபவராயிருந்தால் அட சந்தர்ப்பந்தத்தை தவறவிட்டுவிட்டேனே என்று அங்கலாய்த்திருப்பார்.கிணற்றடியில் தடயம் எல்லாம் பார்த்திருப்பார்.

  ஆனால் ஏன் பாத்திரம் திருட்டுத்தனமாக கிணற்றடியைப்பார்க்கிறது ( இந்த இடத்தில் எழுத்தாள்ர் வருகிறார்).
  ஞானம் பயந்தசுபாவம்?.தப்பிவிட்டேன். திருடனை எதிர்கொண்டிருந்தால்,தலையில் போட்டிருப்பான் எனக்கேதோ நல்லகாலம் .இரவு நடந்ததை சொன்னால் திருடன் என்றுதெரிந்தும் பயத்தில் பேசாமல் விட்டுவிட்டாயோ என்று அயல் நாலுகேள்விகேட்கும் என்று விஷயத்தை பாத்திரம் அமுக்கப்போவது போல தெரிகிறது.

  பயந்தசுபாவம் வாய்ச்சவடால் என்றால்” நான் நீங்கள் தான் நடுச்சாமத்தில் முழிச்சிருந்து பதிவெழுதுகிறீர்கள் என்று நினைத்துவிட்டேன். கள்ளனுக்கு நல்லகாலம் என்னட்ட மாட்டியிருந்தால் செத்திருப்பான்.” இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டிருந்திருப்பார்.

  கதையில் கதையுமிருக்கக்கூடாது ஆனால் கதையாயுமிருக்கவேண்டும் என்கிற கதையாய் இருக்கிறது எங்க கதை(கல்கி) 🙂

  1. விரிவான மறுமொழிக்கு நன்றி.

   //கதையில் கதையுமிருக்கக்கூடாது ஆனால் கதையாயுமிருக்கவேண்டும் என்கிற கதையாய் இருக்கிறது எங்க கதை(கல்கி) :)//

   கல்கி இப்படி சொல்லியிருக்கிறாரா? நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தை.

   பல சாத்தியங்களுடன் இந்த சாத்தியத்தையும் கற்பனை செய்து பார்ப்போம்- கற்பனைதானே!

   அந்த வீட்டில் ஒரு இளம் விதவை தன் மன வளர்ச்சி குன்றிய தங்கையுடன் குடியிருக்கிறாள். திருட்டு போய்விட்டது தெரிந்து அடுத்த நாள் வீட்டுக்கு ஓடோடி வருகிறாள்: அனைத்தும் இறைந்து கிடப்பதைப் பார்த்ததும், “ஐயோ! காசு பணம் நகை எல்லாம் போச்சே, நல்லா இருப்பானா அவன்..” என்றெல்லாம் அழுகிறாள்.

   அந்த நினைவுகள் இப்போது எப்படிப்பட்ட உணர்வுகளைத் தரும்?

   அசோகமித்திரனின் பாத்திரங்கள் ஆழமான துயரில் இருக்கும்போது நினைவுகள் மேலெழும்: அப்போது அவர் இந்த, கிணற்றில் இறங்குவது போல் இருந்தது, ஆனால் கிணறு என்று ஏன் சொல்ல வேண்டும், கிணற்றை நெடுகப் பார்த்தால் குகைதானே, என்று எழுதுவார்.

   குகைக்கும் கிணறுக்கும் ஒரு வேறுபாடுதான், இல்லையா? கிணற்றில் நீர் சுரக்கும். ஈரமற்ற வரண்ட நினைவுகளில் எவ்வளவு ஆழ்ந்தாலும் அதை கிணற்றில் இறங்குகிற மாதிரி என்று சொல்ல முடியாது, சரிதானே?- குகைக்குள் போகிற மாதிரிதான் அது.

   இந்த மாதிரி கற்பனை உணர்வால் மட்டுமே புரிந்து கொள்ளப்படக் கூடியது. ஆனால் ஒரு முறை உணர்ந்தால் அது நம் உணர்வுலகை விரிப்பதாக இருக்கும், இல்லையா?- சில பேரின் துக்கங்கள் நமக்கு விளங்க வாய்ப்பிருக்கிறது.

   நன்றி.

 5. //கதையில் கதையுமிருக்கக்கூடாது ஆனால் கதையாயுமிருக்கவேண்டும் என்கிற கதையாய் இருக்கிறது எங்க கதை(கல்கி) //

  கல்கி இப்படி சொல்லியிருக்கிறாரா? நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தை.

  மன்னிக்க….கல்கி அப்படியே சொல்லவில்லை கல்கி விரிவாகச்சொன்னதை அப்படிச்சொன்னேன் பார்க்க:

  http://patthotontru.blogspot.com/2011/05/blog-post_22.html 😀

  கு. அழகிரிசாமியின் “அன்பளிப்பு” – கல்கியின் விமர்சனம்-

  http://siliconshelf.wordpress.com/2011/05/22/
  நன்றி சிலிக்கன்ஷெல்ப்-

  1. 🙂

   நினைவைவிட மறதி வலுவானது.

   கல்கியின் விமரிசனம் அருமையான ஒன்று- நீங்கள் அளித்த சுட்டி அவரது உயர்ந்த ரசனையை வெளிக்காட்டுகிறது. நினைவூட்டலுக்கு நன்றி சார்.:)

 6. எனக்கு கிணற்றைக்குகையாக பார்க்க முடியவில்லை.அது என் அனுபவங்களூடான உணர்வு.
  மனத்தை குகையாக்கியிருக்கிறார்கள் எழுத்தாளர்கள்

  நீங்கள் குறிப்பிட்ட சாத்தியப்பாட்டில் நிகழும்போது சலனமற்றதாயிருந்த ஓர் இரவு குற்ற உணர்வு சேர நினைவில் மேலும் இருண்டு கொடியதாய்விடுகிறது.

  அருமை.

  “நீ அன்று எய்த அம்பு
  இன்றுதான் என்னில் தைத்தது ”

  1. அது ஈரம் காய்ந்த நெஞ்சின் அனுபவம் என்று நினைக்கிறேன். இந்தக் கதை எழுதப்பட்ட நோக்கம் நிறைவடைந்தது- மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s