அறம் கதைகள் – ஒரு சிறு வாழ்த்துரை

இந்த ஆண்டின் துவக்கத்தில் (இந்த ஆண்டுதானே? எத்தனையோ நாட்கள் ஆனதுபோல் போல் இருக்கிறது) அறம் கதைகள் ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் வெளிவந்தன. இன்று அவை புத்தகமாக வெளிவருகின்றன. அப்போது சூட்டோடு சூடாக இரு பதிவுகள் செய்துவிட்டு மற்ற கதைகளுக்குக் காத்திருந்தேன். அந்தப் பதிவுகள் இவை: புனைவும் மெய்ம்மையும், அறம் கதைகள் – சமகால காப்பிய நாயகர்கள். அதற்கப்புறம் அவை குறித்து பதிவு எதுவும் எழுத வாய்க்கவில்லை.

 

இன்று புத்தகம் வெளியிடப்படும் தருணத்தில், முந்தைய பதிவு ஒன்றில் மேற்கோள் காட்டிய ஒரு விஷயத்தை மறுபடி மீள்பதிவு செய்கிறேன்:

“உத்வேகமான வாசிப்பென்பது இலக்கிய வளவினுள் தினவெடுத்த ஒரு அத்துமீறல். வாசகர்கள் தேசாந்தரிகளைப் போல- தங்களுக்கு சொந்தமில்லாத வயல்களில் களவு செய்கிறார்கள். பண்பாட்டு வர்த்தகர்கள் தங்கள் படைப்புகளின் மீள்பயன்களைக் கட்டுப்படுத்த இயலாமல் தவிப்பது போலவே கலைஞர்களும் பார்வையாளர்களின் கற்பனையைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள். Velveteen Rabbi என்ற குழந்தைகளுக்கான க்ளாசிக்கில் ஸ்கின் ஹார்ஸ் என்ற மூப்பன், முயலுக்கு பிரதியைக் களவாடும் கலையை உபதேசிக்கிறது. ஒரு புதிய பொம்மையின் மதிப்பு அதன் பருண்ம குணங்களில் இல்லை (“உனக்குள் சத்தமிடும் வஸ்துக்களும் வெளியே நீண்ட பிடியும்” கொண்டிருப்பதிலல்ல நீ) என்று சொல்கிறது ஸ்கின் ஹார்ஸ், “உன் படைக்கப்பட்ட தன்மையில் இல்லை உன் உண்மை… அது உனக்கு நேரும் ஒரு விஷயம். ஒரு குழந்தை உன்னை வெகு காலம் நேசித்ததெனில், உன்னை ஒரு விளையாட்டுப் பொருளாக மட்டுமல்ல, உன்னை உண்மையாகவே நேசிக்கையில், அப்போது நீ மெய்யாகிறாய்”. முயல் அஞ்சுகிறது, நுகர்பொருட்கள் திருத்தி அமைக்கப்படாமல் “உண்மை” நிலை அடைவதில்லை என்பதை அது உணர்ந்திருக்கிறது: “வலிக்குமா?” என்று கேட்கிறது. அதைத் தேற்றும் விதமாக ஸ்கின் ஹார்ஸ் சொல்கிறது, “எல்லாமே திடீரென்று மாறி விடாது… நீயாவாய். அதற்கு வெகு காலமாகும்… பொதுவாக சொல்வதானால், நீ நிஜமாகும் போது உன் மயிரில் பெரும்பகுதி நேசத்தில் கழிந்திருக்கும், கண்கள் கழண்டு விழுந்திருக்கும், உன் முட்டிகள் தொய்வடைந்திருக்கும், நீ நைந்து போயிருப்பாய்” பொம்மைக்காரனின் பார்வையில் வெல்வெட்டீன் ராப்பிட்டின் துவண்ட முட்டிகளும் தொலைந்த கண்களும் சேதாரத்தைக் குறிக்கும், தவறான பயன்பாட்டுக்கும் முரட்டு கையாள்கைக்கும் சாட்சியமாகும்; மற்றவர்களுக்கு அவை அதன் நேயமிகு புழக்கத்தின் அடையாளங்களாக இருக்கும்”

இந்த ஓராண்டில் மிக அதிக அளவில் இந்தக் கதைகள் விவாதிக்கப்பட்டிருப்பது, இதன் உயிர்ப்புக்கு, இதன் வாசகர்களின் ‘நேசத்துக்கு’ சாட்சி. அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. இருநூற்று ஐம்பது ரூபாய் எனக்கெல்லாம் சற்று அதிகம்தான், இருந்தாலும் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படிக்க இருக்கிறேன். அதன் பின், எழுத புதுசாக ஏதாவது இருக்கிறதா பார்ப்போம்: அறம் கதைகள் எழுதப்படுவதற்கு முன் ஜெயமோகன் பகவத் கீதை பாஷ்யம் எழுதிக் கொண்டிருந்தார் என்பதையும், அது இரண்டாம் அத்தியாயத்துடன் நின்று விட்டது என்பதையும் எண்ணிப் பார்க்கும்போது அதைத் தொடரும் மூன்றாம் மற்றும் நான்காம் அத்தியாயங்கள் சாதி அமைப்பு மற்றும் ஸ்வதர்மம் குறித்து எழுப்பும் வினாக்களுக்கு சமகால தீர்வுகளைத் தேடியறிய வேண்டிய தேவைக்கு இந்தக் கதைகள் படைப்பூக்கம் கொண்ட ஒருவனின் பதில்களாக அமைந்தன என்று நினைக்க இடமிருக்கிறது.

டால்ஸ்டாய் குறித்து ஓரிடத்தில் படித்தேன்: அவரது அமைப்புகள் என்ன ஆயின? நூலகங்களில் குவிந்து கிடக்கும் அவரது பிரச்சார எழுத்துகளுக்கு, தத்துவங்களுக்கு, தரிசனங்களுக்கு, ஆன்மீக அறைகூவல்களுக்கு இன்றைய இடம் என்ன? அவரது பங்களிப்புக்கு இன்றைய ரஷ்யாவில் மதிப்பே இல்லை. ஆனால் அவரது புதினங்கள்?

உலகை நிறைக்கின்றன- ஒவ்வொரு வாசகனின் மனதிலும் அவர் வாழ்கிறார், தினமும் பேசிக் கொண்டிருக்கிறார். ஜெயமோகனின் அபுனைவுகளுடன் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் என்னைப் பொருத்தவரை அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

கதைகள். அவையே அவரது குரல்கள். அவற்றை நாம் கடந்து செல்வதற்கில்லை. அவற்றின் உண்மை ஜெயமோகன் என்ற தனி மனிதனைவிடப் பெரியது- நம் அனைவருக்கும் உரியது, ஏனெனில் அவர் வழியாக வெளிப்படும் குரல்கள் நம் குரல்கள். உறைந்து கிடக்கும் உணர்வுகளுக்கு மொழி அளித்து, அவை பேசப்பட களம் அமைத்துத் தருவதே புனைவின் பணி என்று நினைக்கிறேன். அறம் கதைகள் குறித்து பேச இன்னும் நிறைய இருக்கிறது. அவை வெளிப்படுத்தும் தமிழக சமூகச் சூழல், அதற்கேற்ற அற விழுமியங்களுக்கான ஆன்மீக அடிப்படைகள், மானுட நேயத்தையும் சமூக சமதர்மத்தையும் ஆன்மிக விழிப்புடன் ஒருங்கிணைத்துப் பேச முயலும் இந்தக் கதைகளின் பெரும்பரப்பு இன்றைய உணர்ச்சிவசப்பட்ட நாட்களில் மிக மேலோட்டமாகவே அறியப்படுகிறது.

அறம் கதைகள் புத்தகமாக வெளிவரும் இந்நாளில் ஜெயமோகனுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🙂

image credit : Rick’s Green Grass

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s