விஷ்ணுபுரம் விருதுகள் – ஒரு சிறு வாழ்த்துரை

ஒருவனால் மூலப்பொருளையும் அதன் நகலையும் ஒருங்கே படைக்க முடியுமென்றால், அவன் நகலெடுக்கும் கிளைத் தொழிலில் தன் வாழ்வைச் செலவிடத் தீர்மானிப்பானா? தன்னில் அதனினும் உயர்ந்த எதுவுமில்லை என்பது போல் போலி செய்வதைத் தன் வாழ்வியல் கொள்கையாக வைத்திருப்பானா?

மாட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

தான் போலி செய்வதை உணர்ந்த உண்மையான கலைஞன் மெய்ம்மைகளில் ஆர்வம் கொண்டவனாக இருப்பான், சாயல்களில் அல்ல; பலதரப்பட்ட அழகிய ஆக்கங்கலைத் தன் நினைவுச் சின்னங்களாக விட்டுச் செல்ல விரும்புவான்; புகழுரைகளை எழுதுபவனாக இருப்பதை விடுத்து, புகழுரைகளின் கருத்துப் பொருளாக இருக்க விரும்புவான்.

ஆமாம், என்றான் அவன், அது அவனுக்கு இன்னும் கூடுதல் மரியாதையையும் செல்வத்தையும் பெற்றுத் தரக் கூடும்.

இது உண்மையாயின் நாம் ஹோமரை விசாரிக்க வேண்டும்; அவன் தன் கவிதைகளால் பேசும் மருத்துவம் பற்றியோ மற்ற கலைகள் குறித்தோ அல்ல: அஸ்கிளிபியஸ் போல் நீயும் நோய்த் துயரர்களை சுகப்படுத்தி இருக்கிறாயா என்று ஹோமரையோ வேறெந்த கவியையோ நாம் கேட்கப் போவதில்லை, அஸ்கிளிபியர்கள் போல் நீங்களும் ஒரு மருத்துவத் துறையை நிறுவிச் செல்லப் போகிறீர்களா என்று நாம் கேட்கப் போவதில்லை, நேரடி அனுபவத்தால் அல்லாமல் செவிவழிச் செய்திகளைக் கொண்டு மட்டுமே ஹோமர் மருத்துவத்தையும் மற்ற துறைகளையும் பேசுகிறானா என்றும் நாம் கேட்கப்போவதில்லை; மாறாக ராணுவ நடவடிக்கைகள், அரசியல், கல்வி இவை குறித்து விசாரிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது: இவையே ஹோமரின் கவிதைகளின் பிரதானமான, உயர்ந்த அங்கங்களாக இருக்கின்றன. இத்துறைகளில் அவனது நேரடி அனுபவம் எத்தகையது என்று அவரை அழைத்து விசாரிப்பதில் தவறில்லை. “தோழர் ஹோமர்,” என்று துவங்கும் நம் உரையாடல், “அறம் குறித்த உண்மைகளை நீங்கள் உங்கள் நேரடி அனுபவத்திலிருந்து பேசுபவராக இருந்தால், பிறரது தகவல்களை நம்பி இருப்பவராக இல்லாதிருந்தால்,- அதாவது, நீங்கள் போலி செய்பவராகவோ நகலெடுப்பவராகவோ இருக்கவில்லையெனில் – தனி வாழ்விலும் பொது வாழ்விலும் எத்தகைய செயல்பாடுகள் ஒருவனை நல்லவனாகவோ தீயவனாகவோ மாற்றுகின்றன என்பதை உங்களால் உணர முடியும் என்றால், சொல்லுங்கள் தோழர், உங்கள் உதவியால் மேலும் சிறப்பான ஆட்சியைப் பெற்ற தேசம் உண்டா?”

OoOoO

சாக்ரடீசை நஞ்சுண்ணச் சொல்ல பல காரணங்கள் இருந்திருக்கும்- நான் கனம் நீதிபதியவர்களாக இருந்திருந்தால் அவர் இப்படி பேசினதே இளைஞர்கள் புத்தியை அவர் கெடுத்தார் என்ற குற்றச்சாட்டை நிருபிக்கப் போதுமான ஆதாரமாக இருகிறது என்று முடிவு செய்திருப்பேன். அதை விடுவோம், அவருக்கு மீண்டும் விஷம் வைக்க முடியுமா என்ன!

பிளாட்டோவின் குடியரசில் கவிஞர்களுக்கு இடமில்லை – இந்த மாதிரியான அரசு ஒரு உடோபிய கனவாகவே இருந்து வந்திருக்கிறது, இதுவரை யாரும் ஒட்டுமொத்தமாக எல்லா கவிஞர்களையும் நாடு கடத்தியதாக சரித்திரமில்லை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்று பாலபாடத்திலேயே எழுத்தாளர்களுக்கு ஆப்பு வைக்கும் செம்மொழியாம் தமிழகத்தில் காலந்தோறும் கவிஞன் நாடற்றவனாக, “உண்டோ குரங்கு ஏற்றுக் கொள்ளாத கொம்பு” என்று உதார் விட்டுத் திரியும் கையேந்தியாகவே இருந்து வந்திருக்கிறான்.

ஆனால் இப்போது இருப்பது மக்களாட்சி. எந்த ராஜாவையும் அரசியல் கோட்பாட்டு கமிஸாரையும் ஒரு எழுத்தாளன் சார்ந்திருக்க வேண்டியதில்லை: வாசகர்களே அவனது புரவலர்கள். எல்லா உடோப்பியாக்களைப் போலவும் இதுவும் ஒரு தொடுவான் கனவே. இருந்தாலும் ஒரு சிறு துவக்கமாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினர் (இதுக்குத்தான் அத்தனை பில்ட் அப்பு!)- ஒரு விருதையும் பணமுடிப்பையும் அளித்து தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரை ஆண்டு இறுதியில் கௌரவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வகையில் இவ்வாண்டு திரு பூமணி அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது என்ற தகவல் அறியப் பெறுகிறோம். கள்ளிப்பெட்டி சங்கத்தினர் சார்பாக விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களுக்கு நம் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் எழுத்தில் சாதனை படைத்த ஒருவருக்கு விருது அளித்து கௌரவிப்பதோடு ஓய்ந்து விடக் கூடாது- இது எந்த வாசகர் வட்டத்துக்கும் அழகல்ல. இதை ஒரு துவக்கமாகக் கொண்டு அடுத்த ஆண்டின் இறுதிவரை வட்ட நண்பர்கள் திரு பூமணி அவர்களின் எழுத்தை வாசித்தும் விவாதித்தும் சிறப்பிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்- வாசகர்களாக அது நம் கடமை, இல்லையா?

சமஸ்கிருதத்தில் விமர்சா என்று ஒரு பதம் இருக்கிறது என்பதை அண்மையில் அறிய வந்தேன். அந்தச் சொல்லை புலன் விசாரணை என்று மொபெ செய்யலாம் என்று நினைக்கிறேன். சுயம்பிரகாசமாக இருக்கும் பிரம்மம் தானே தனித்திருக்கும், அதற்கு அறியப்பட இன்னொன்று கிடையாது. இந்த விமர்சா ஒரு பிரதிபலிப்பு போல, அதுவே இந்த உலகம் துலங்கக் காரணமாகிறது: தன்னைத் தானாய் அறியும் பிரகாசமே தன்னை துலக்கிக் கொள்ளும் விமர்சாவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் புரிந்து கொண்டது தவறாக இருக்கலாம்.

எழுத்தாளனும் வாசகனும் இது போன்ற ஒருமை நிலையில் உள்ளனர்: உறைந்த நிலையில் இருக்கும் எழுத்து தன் விமர்சா சக்தியால் வாசக வடிவில் துலக்கம் பெற வேண்டும்: எழுத்தாளர்களை சிறப்பித்தால் போதாது, அவனது எழுத்தை உயிர்ப்பிக்க வேண்டும். நாம் வாசித்து விவாதிக்கும் ஒவ்வொரு கணமும் எழுத்து மெய்ம்மை பெறுகிறது.  பிளாட்டோ சுட்டிக் காட்டும் குறைகள் வாசக விமர்ச உரையாடலால் நிறைவெய்தி எழுத்து தன் பூரணத்துவத்தை அடைகிறது.

எனவே விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் 2012ல் திரு பூமணி அவர்களின் எழுத்தைக் குறித்து நிறைய எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 🙂

விஷ்ணுபுரம் விருது விழா இனிதே நடைபெற உளமார்ந்த வாழ்த்துகள்.

6 thoughts on “விஷ்ணுபுரம் விருதுகள் – ஒரு சிறு வாழ்த்துரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s