ஒரு சிறு புத்தக விமரிசனம்

எப்போதோ நண்பராகியிருக்க வேண்டும், ஆனால் இப்போதுதான் நட்பு பாராட்ட வாய்த்திருக்கிறது. இப்போதும் நண்பருடன் புத்தகங்களை மிகத் தீவிரமாகப் பேசும் கணங்களில் அதன் அபத்தம், முழங்கால் வரை நனைக்கும் கடலலைகளின் கீழ் பாதங்களை விட்டுத் தரை விலகுவது போன்ற ஒரு மெல்லிய தலைசுற்றல் தருவதாக இருக்கிறது. இருந்தாலும் இலக்கியத்தின் ஆனா ஆவன்னாகூட தெரியாத எனக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்த ஆண்டு இறுதியில் ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்தார் என்று உள்ளுக்குள் பெருமிதமடைகிறேன் 🙂

அவர் நேற்று அறிமுகப்படுத்திய புத்தகம் ஜெயமோகனின் “சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்”. இன்று படித்தேன். என்னத்தைச் சொல்ல!

அதற்குரிய மரியாதை தந்து சரியானபடி பேசவேண்டும் என்றால் புத்தகத்தை செரித்துக் கொள்ள குறைத்தது ஒரு மாத அவகாசமாவது வேண்டும். ஆனால், அவசர அவசரமாக முதல் பார்வையில் சிக்கிக் கொண்டதைப் பதிவு செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. அது என்ன என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

தற்போதைக்கு ஐந்து மேற்கோள்கள் மட்டும் இவ்விடம் கவனிக்கப்படுகிறது.

உயிர்மையின் 2005ஆம் ஆண்டு பதிப்பில் ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:

“விஷ்ணுபுரத்தில் உயர் தத்துவம் ஆட்சி செய்கிறது. அது கருணையற்றது. திட்டவட்டமான ஒரு சராசரியை நிறுவி அது அதற்கு வெளியே நீட்டியிருக்கும் அனைத்தையும் வெட்டுகிறது. தத்துவ ஞானி ஆளும் அந்நகரமே அநீதிகளின் மீதுதான் இயங்குகிறது. உயர்ந்த அழகியலும் தத்துவமும் குரூரமும் முரணின்றி இயங்குகின்றன. அதை மீறி ஞானத் தேடல் முன்னகர்கிறது. சராசரி அதை விழுங்கியபடி பின்தொடர்கிறது. ஆம், விஷ்ணுபுரம்தான் சரியான ‘ஸேன் சொசைட்டி”
(பக்கம் 136)

ஆனால் யோசித்துப் பாருங்கள், இந்த உயர் தத்துவம் எங்கிருந்து வந்தது? ஒரு உயர் படைப்பூக்கத்தின் வெளிப்பாடாகத்தானே?

இந்தப் புத்தகத்தின் 72ம் பக்கத்தில் சுந்தர ராமசாமி சொல்வதாக வரும் குறிப்பு இது:

“எழுதிட்டே இருங்க. எழுதறதுதான் மருந்து…” எழுதினால் அம்மாவை மறக்க முடியுமா என்றேன்.

“மறக்கிறதாவது? இன்னும் துல்லியமா ஞாபகத்தில் பதிவாங்க. ஆனா எழுத்தில் இருக்கற நினைவுகளில வலி இருக்காது. ஏன்னா மத்த நினைவுகளில காலம் பின்னால ஓடுது. நாம முன்னால இருக்கோம். எழுத்து எவர் டைம்லைன்னா இருக்கு…” எழுத்தின் வலிமை பற்றி பல தடவைகளிலாக சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். அவமானங்கள், இழப்புகள் போன்ற தாங்க முடியாத விஷயங்களைக்கூட எழுதும்போது இனிமையாக மாற்றிக் கொள்ளலாம். எழுத்து உருவாக்கும் உலகம் எப்படியோ தன்னை இனிதாக்கிக் கொள்கிறது. “…ஏன்னா, நிஜ வாழ்க்கையின் துன்பங்களில் ஒரு சாரம் இல்லை. இருந்தா அது நமக்குப் புரியறதில்லை. அந்தத் தத்தளிப்புதான் துக்கமே. அப்பத்தான் மனசு கிடந்து அலையடிக்குது. மரணம், அவமானம், இழப்பு, பிரிவு….. ஏன் ஏன்னுதானே நம்ம மனசு கிடந்து தவிக்குது. எழுத்தில அதெல்லாம் வாறப்ப நமக்குத் தெரியறது ஏன்னு. அதான்….”

ஒரு எழுத்தாளனைக் குறித்துச் சொல்லப்பட்டாலும் இது அனைத்து சிந்தனையாளர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். எழுதிக் காண முடியாதவர்கள் உண்மையை விவாதங்களில், தொடர்ந்த உரையாடல்களில் கண்டடையக் கூடும். ஆனால் இந்த ஏன்கள், விஷ்ணுபுரத்தை ஆளும் ஏன்கள், உண்மையானவையா?

சொந்தமாக சித்திக்கத் தெரியாததால் நான் உங்களை மீண்டும் 136ம் பக்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன். “அநீதி என்பது உரிய தர்க்கம் இல்லாமல் என்றாவது பூமி மீது நிகழ்ந்திருக்கிறதா என்ன?” என்ற கேள்வியே சுந்தர ராமசாமியின் நவீனத்துவத்திலிருந்து தன்னைப் பிரித்து விஷ்ணுபுரத்துக்குக் கொண்டு சென்றது என்று குறிப்பிட்டுவிட்டு, தர்க்கத்தின் நவீனத்துவத்துக்கு மாற்றாக வேறொன்றை முன் வைக்கிறார் ஜெயமோகன்:

“ஆன்மீகம் என்பது எப்போதும் தெளிவான விளக்கத்துக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. விஷ்ணுபுரத்தில் வரும் இரு உவமைகளைக் கடன் கொள்கிறேன். கடல் மீன், கடலை அறிய முயலுதல் அது. அங்கே தர்க்கத்துக்கு எந்த இடமும் இல்லை. வெளியே பார்ப்பதனாலும் பலன் இல்லை. உள்ளே இருக்கும் கடலையே அறிய முடியும். அவ்வறிதல் மின்னலில் புயலடிக்கும் காட்டைப் பார்க்கும் கண நேரச் சித்திரம் போல. அக்கணம் பெற்ற காட்சி மறுகணம் இல்லை. ஆகவே அது விவாதத்துக்கு அப்பாற்பட்டது, அந்தரங்கமானது.”

நான் எங்கே வருகிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன். இந்த ஆன்மீக தரிசனம் எங்கே, எழுத்தாளன் எழுதிக் கண்டு பிடிக்கிற, சிந்தனையாளன் யோசித்தும் பேசியும் கண்டு பிடிக்கிற, ஏன்கள் எங்கே? இன்னும் எளிமையாகச் சொன்னால், சிந்தனையும் இலக்கியமும் நம் தேவைகள், ஆனால் சிந்தனையாளர்களும் இலக்கியவாதிகளும் தேவையா?

உண்மையைச் சொல்கிறேன், ஜெயமோகனின் ‘நினைவின் நதியில்’ படித்து முடிக்கும்போது, “இலக்கியம் தேவைதான். ஆனால் இலக்கியவாதிகள் தேவையா?” என்ற இந்தக் கேள்விதான் எழுந்தது. அங்கு உங்களைக் கொண்டு வரவே இந்த லாஜிக்.

தேவையில்லை என்று நினைக்கிறேன்.

————-

ஜெயமோகனின் விமரிசனங்களைப் படிக்கும்போது நமக்குக் கிடைக்கும் சித்திரம் வேறு, அவரது புனைவுகளைப் படிக்கும்போது நமக்குக் கிடைக்கும் சித்திரம் வேறு. கறாரான அளவுகோலின் மொத்த உருவமாக நிற்கும் விமரிசகரது நான்கு கரங்களில் ஏந்திய ஸ்கேலும், தராசும், கோலும், கூர்மையான பேனாவும் அவரை விஷ்ணுபுரத்தின் சாவிகளுக்குரியவராகச் சித்தரிக்கின்றன. ஆனால், கதைகளிலும், இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியலுக்கு வெளியேயும் அவர் இவற்றை விளையாட்டுக் கருவிகளாகத் தூக்கி வீசி விடுவார் என்று நினைக்கிறேன். நினைவின் நதியில் இந்த இரண்டு ஜெயமோகன்களும் ஒருவர் குரலை ஒருவர் அடக்கிப் பேசுகிறார்கள்.

இதனால் நினைவின் நதியில் ஒரு இருமை இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. மிக ஆச்சரியமாக, முரண்பாடுகள் வழி முன்னகர்தல் என்ற கொள்கையைப் பேசும் ஜெயமோகன் இருக்கிற இடத்திலேயே ‘இயற்கையின் கூத்து’ என்று முரண்பாடுகளை அதன் விடையிலி நிலையில் சிரித்துக் கொண்டே ஏற்கக்கூடிய ஜெயமோகனும் இருக்கிறார். என்ன ஒன்று, பின்னவரின் சிரிப்பு உணர்த்தும் தரிசனங்களை முன்னவரின் ஏன்கள் தரம் பிரித்து வகை வகையாக அடுக்குகின்றன. இந்தப் புத்தகத்தில் நாம் இந்த இரு ஜெயமோகன்களையும் கண்டு திகைக்கிறோம்- யார் எவர்? இவரை விரும்புவதா வெறுப்பதா?

ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அனுபவங்களுக்கு சொற்கள் பொருள் தந்தாலும், அனுபவங்களின்முன் சொற்கள் பொருளற்றவை என்பது புரியும். இந்த இரண்டையும் அதன் தீவிர உட்பொருளில் உணர்ந்திருக்கிறார் ஜெயமோகன் என்று நினைக்கிறேன். அதனால்தான் முரண்பாடுகளைப் பற்றி சிறிதும் அச்சமின்றி அவரால் இருவிதமாகவும் பேச முடிகிறது.

இதற்கு ஒரு அருமையான காட்டு இப்புத்தகத்திலேயே இருக்கிறது. இதை இயற்கையின் கூத்து என்றுதான் சொல்ல வேண்டும், அப்படியொரு மையத்தன்மை இதில் வெளிப்படும் முரண்பாட்டில் இருக்கிறது.

சுந்தர ராமசாமியை முதன்முதலில் அவரது ஜே ஜே சில குறிப்புகள் வாயிலாக தான் எதிர்கொள்வதாக இப்புத்தகம் துவங்குகிறது. ஜே ஜே சில குறிப்புகளின் வெறுமை அறிவின் ஆணவம் அடங்கும் வெறுமை. ஆனால் அறிவுக்கு அப்பாற்பட்ட, தர்க்கத்தில் சிக்காத நோக்கு ஒன்றுண்டு என்று தான் அப்போதே அறிந்திருந்ததாக எழுதுகிறார் ஜெயமோகன்-

“அந்த நோக்கில் வாழ்க்கை ஜே ஜே உணர்ந்த அந்த வெறுமையைச் சென்றடையாது என்று சுந்தர ராமசாமிக்கு எழுதினேன். ஜே ஜே அன்னியன். அவனைவிட ஒரு சாமியார் அன்னியர். ஜே ஜெயின் கால் கீழே மண் இல்லை, சாமியாருக்குக் கீழே ஒரு பிரபஞ்சமே இருக்கிறது என்று எழுதியிருந்தேன். நான் பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சுந்தர ராமசாமி தன்னை வந்து பார்க்கும்படி எழுதியிருந்தார்.”(பக்கம் 14)

இப்படிப்பட்ட நிராகரிப்பில் துவங்கும் நட்பை அடுத்த இருநூறு பக்கங்களில் அதன் அனைத்து பரிமாணங்களிலும் பேசி விட்டு சுந்தர ராமசாமியை மொத்த முடிவாக எப்படி பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார் ஜெயமோகன்:

“அவரது கால்கள் ஊன்றி நின்ற மண்ணை நாம் நோக்குவது எங்கிருந்து அவர் எழுந்திருக்கிறார், எத்தனை தொலைவு அவர் சென்றிருக்கிறார் என்பதை உணரும் பொருட்டே. இம்மண்ணில் வைத்து அவரை எத்தனை சிறப்பாக மதிப்பிட்டாலும் அது அவரை சிறுமைப்படுத்துவதேயாகும்…:” (பக்கம் 212)

சாமியாருக்குக் கீழே ஒரு பிரபஞ்சமே இருக்கலாம், ஆனால், தர்க்கித்துக் கொண்டே இருந்த சுந்தர ராமசாமியின் கால்கள் எங்கே நிற்கின்றன என்பது பொருட்டல்ல, அவை எங்கே செல்கின்றன?- அவரது தர்க்கம் அவருக்குத் திறந்த கதவுகள், உணர்த்திய ‘மனித ஞானத்தின் ஆகச் சிறந்த கணங்கள்”!

நிராகரிப்பை ஒரு அங்கீகாரமாக ஏற்கும், ஏற்க விரும்பும் மனம்தான் முரண்படுதல்களை அறிவளவில் பொருட்படுத்தலாக விரும்பி ஏற்றுக் கொள்கிற அதே கணம் அதற்குக் காரணமானவர்களை உணர்வளவில் சினத்துப் பிணங்குகிறது, அழுகிறது.. நினைவின் நதியை ஒரே மனதின் அறிவும் உணர்வும் நிகழ்த்திக் கொண்ட முடிவற்ற உரையாடல் என்று சொல்லலாம்- அறிவின் விகசிப்பும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் அதன் ஒவ்வொரு பக்கத்தையும் நிறைக்கின்றன.

(“சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்” – ஜெயமோகன், ரூ. 100. உயிர்மை பதிப்பக வெளியீடு. 2005)

 

4 thoughts on “ஒரு சிறு புத்தக விமரிசனம்

  1. Read also ‘ninaivu kuttai kanavu nathi’ published by ‘Puthia Kalacharam’ along with Jeyamohan’s book to get a complete view. It will help one understand about what is important and unimportant in knowing a person in Marxist perspective. I hope you will do justice by recommending ‘ninaivu kuttai kanavu nathi’.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s