ஒரு சிறு அறிவிப்பு

அண்மையில் இங்கு எழுதப்பட்ட ஜெயமோகனின் “நினைவின் நதியில்” குறித்த பதிவைப் படித்திருப்பீர்கள். எனக்கு அந்தப் புத்தகத்தைக் கொடுத்த கோவை நண்பர் இன்று அழைத்து, “என்ன பாஸ், பூடகமா என்னவோ சொல்லிட்டீங்க? என்னதான் சொல்றீங்க?” என்று கேட்டார். எழுத்தில்தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது வழக்கம், பேசச் சொன்னால் சப்த நாடியும் ஒடுங்கி விடும், குரல் எழும்பாது என்பது மட்டுமல்ல, மூளையும் வேலை செய்யாது. அவரிடம் பெரிதாக எதுவும் விளக்க முடியவில்லை.

இன்று நாளெல்லாம் யோசனை செய்த நிலையில் அவர் ஏன் அப்படி நினைத்தார் என்பதற்கு சிலபல காரணங்கள் புரிந்தன. தேவைப்பட்டால் அதற்கான விளக்கங்கள் தரப்படும். ஆனால் இப்போது ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒன்று என்றால் ஒன்றல்ல, இரண்டு. இரண்டாவதை முதலில் சொல்லி விடுகிறேன்.

கள்ளிப் பெட்டி சில காலம் பரணில் இருக்கப் போகிறது. ஆங்கில எழுத்துப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளேன்.

இனி முதல் விஷயம்.

ஷேக்ஸ்பியர் எழுதிய எந்த ஒரு டிராஜடிக்கும் இணையான படைப்பு “நினைவின் நதியில்”. யாருடைய டிராஜடி, என்ன டிராஜடி என்றெல்லாம் எதுவும் கேட்காதீர்கள். எப்படி கிங் லியரும் ஹாம்லட்டும் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இன்னும் இன்னும் என்று அவற்றுக்கு அப்பால் உயர்ந்து எழும்பிக் கொண்டே இருக்கின்றனவோ, அதே போல் “நினைவின் நதியில்” நம் எளிய கேள்விகளுக்கு முழுமையான பதிலளிக்காமல் அவற்றுக்கு மேலும் ஆழம் சேர்த்து, தன் விடையிலி தன்மையை இன்னும் திடமாக நிறுவிக் கொண்டு உயர்ந்தெழும் என்பது என் கணிப்பு. இப்புத்தகம் எழுதப்பட்டு ஏழெட்டு ஆண்டுகள் ஆன நிலையில், சுந்தர ராமசாமி – ஜெயமோகன் குறித்து எதுவும் அறியாத எனக்கே அதன் பல நுண்கண்ணிகள் புலப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் பின் ஐம்பது ஆண்டுகளின் தமிழகத்தில் நிலவிய சிந்தனைச் சூழலைப் பேசும் ஐகானிக் ஸ்டேட்டஸ் இன்னும் இருபதே ஆண்டுகளில் இப்புத்தகத்துக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட ஆளுமைகளின் நினைவுகள் மறைய மறைய இப்புத்தகத்தின் தாக்கம் வலுப்பெறும் என்று தோன்றுகிறது.

சில நேரங்களில் நாம் பேசுவது அபத்தமாக இருக்கிறது என்று நாமே நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வோம். ஆனால், இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரையில், இதற்குரிய இடத்தை முதன்முதலில் கணித்தவன் என்ற பெருமை என்னையே சேர வேண்டும் என்ற பேராசை, என் தன்னடக்கத்தையும் ஜாக்கிரதையுணர்வையும்தான் அபத்தமாக நினைக்கச் செய்கிறது.

ஷேக்ஸ்பியரின் எந்த ஒரு டிராஜடிக்கும் குறைந்த படைப்பல்ல இது. அவற்றுக்கு இருக்கும் நிரந்தரத்தன்மை இதற்கும் உண்டு. என்ன டிராஜடி, யாருடைய டிராஜடி, எப்படி சொல்கிறாய் என்று எதுவும் கேட்காதீர்கள் : அவற்றைப் பேசினால் நண்பர்கள், நண்பர்களாக இல்லாதவர்கள் என்று எல்லாரும் என்னை அடிக்க வருவீர்கள்.

ஆனால் ஒன்று. நினைவின் நதியிலைப் பொறுமையாகப் படித்துப் பாருங்கள். இதில் உள்ள ஆளுமைகளை அவற்றால் சுட்டப்படும் பெயர்களோடு தொடர்புபடுத்தாமல், ரத்தமும் சதையுமாக உங்கள் அகக்கண்ணில் உருவம் பெறும் பாத்திரங்களாக ஒரு முறை, ஒரே ஒரு முறை வாசித்துப் பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்.

ஷேக்ஸ்பியரின் டிராஜடிகளில் எதை நினைவின் நதியிலுடன் ஒப்பிட்டுப் பேசலாம் என்று. அந்த வரிசையைச் சேர்ந்த படைப்பு இது.