அம்பேல்!

திரு முத்துக்குமாரசாமி அவர்கள் தங்கள் அபிமான எழுத்தாளரையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு விவாதிப்பார் என்பது அடியேன் எதிர்பாராதது. அதிலும் குறிப்பாக எனக்கே நான் சொல்வதில் எதை சீரியஸாக எடுத்துக் கொள்வது எதை விளையாட்டாக எடுத்துக் கொள்வது என்பது குழப்பமாக இருக்கும் நிலையில், நண்பர்கள் மன்னிக்க வேண்டும், இது என்னை நான் குறித்த ஒரு மாதிரியான chora மனநிலைக்குத் தள்ளி விட்டது.

“கள்ளிப்பெட்டி வலைத்தளத்தில் என்னுடைய ‘சூத்திரங்களுக்கு’ மேலும் பாஷ்யம் எழுதியிருக்கிறார் நட்பாஸ். பார்க்க: பராக்கு பார்ப்பது எப்படி? இந்த முறை ‘சூத்திரங்களுக்கு’ ‘பாஷ்யம்’ எங்கெங்கோ சென்று விட்டது.”

என்று எழுதுகிறார் முத்துக்குமாரசாமி அவர்கள். இது நான் சற்றும் எதிர்பாராத பார்வை. எந்த ஒரு பிரதியும் பல்வகைப்பட்ட வாசிப்புகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது எழுத்துகளை வாசித்து நான் கற்பித்துக் கொண்ட நியாயம். எனவே சூத்திரங்களுக்கும் அவற்றின் பாஷ்யங்களுக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நான் எதிர்பாராத ஒன்று. அதிலும் குறிப்பாக பராக்கு பார்த்தலைப் பற்றிய பாஷ்யங்கள் எங்கெங்கோ செல்வதும் நியாயம்தான் என்பது என் எண்ணமாக இருந்தது. அதைவிட மேலும், இதற்கு முந்தைய கட்டுரையில் அவர்,

“இதைப் படித்த உடனேயே நான் பயன்படுத்திய உருவகங்களிலுள்ள பிழைகள் எனக்கு புலப்பட்டு விட்டன. ஒன்று நான் நானாகியது என்பதைப் பயணம் என்று உருவகித்தது. இரண்டு நான் என்பதை அனுபவ சேகரமாக எனவே ஒரு கிடங்கினை மறைமுகமாக உருவகித்தது.”

என்று எழுதியிருந்ததைச் சுட்டிக்ப் காட்டி பாராட்டிய நண்பர் ஒருவரிடத்தில், “பராக்கு பார்த்தலில் மேற்கே போய் கிழக்கே திரும்புவது தப்பில்லை – சொல்லப்போனால் கிழக்கும் மேற்கும் தொலைந்த நிலையில்தான் பராக்கே பார்க்க மூடியும்,” என்று மீசையை முறுக்கிக் கொண்டு சமத்காரமாக பதில் சொல்லியிருந்தேன். நிற்க.

“i survived therefore I am என்ற நிலையில் உள்ளவன் வீட்டின் தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தா சாவகாசமாகப் பராக்குப் பார்த்துக்கொண்டிருப்பான்? ஊழிக்கு, பேரழிவுக்கு, இனப்படுகொலைக்கு சாகாமல் தப்பிவிட்டவனின் பராக்கு பார்த்தல் புத்தம் புதிதாக உலகை அணுகுவதாக அல்லவா இருக்கும்? மொழியும் அர்த்தமும் தொலைந்து மீண்டும் ஆவி சேர்த்துக் கட்டி அணைத்து அல்லவா எழுப்பி நிற்க வேண்டும்? “

என்பது முத்துக்குமாரசாமி அவர்களின் கேள்வியாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு துயரம் நண்பரைப் பீடித்திருப்பதை அறியாதவனாக விளையாட்டாகப் பேசியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. “அர்த்தங்களின் உருவாக்கத்திற்கு முந்தைய ஜுலியா கிறிஸ்தவா குறிப்பிடும் chora அல்லவா அந்த நிலை? ” என்ற கேள்வியை நான் புரிந்து கொள்ளவே இல்லை. எவ்வளவு பெரிய பிழை! மயான நினைவுகளில் இருப்பவனின் வெறித்தலை பொருட்காட்சியின் கவர்ச்சிகளைப் பராக்கு பார்ப்பவனின் மனநிலையோடு குழப்பிக் கொண்டு விட்டேன் 😦

டமாரத்தைப் பார்த்தீர்கள் என்றால் உள்ளே ஒன்றும் இருக்காது – ஆனால் வாசிப்பவனின் திறமைக்கேற்ப தட்டத் தட்ட அது சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் மட்டுமே நான் பயன்படக்கூடும் என்று தோன்றுகிறது. என் ரேஞ்சுக்கு

மார்டின் பூபரிலிருந்து ழாக் தெரிதா வரை யூத தத்துவ அறிஞர்கள் அனவருமே யூத இனப்படுகொலைக்குத் தப்பி வாழ்ந்ததை தங்கள் சிந்தனையின் பகுதியாக மாற்றிக்கொள்ளத் தவறவில்லை. ஈழத்தில் நடந்து முடிந்துவிட்ட பேரழிவுக்குப் பின் வாழும் நம்முடைய சிந்தனையும் தப்பிபிழைத்து கிடப்பதை ஆதார உரையாகவும் (premise) அறிவுத்தோற்றவியல் உடைசலாகவும் (epistemological break) கொள்ள வேண்டும்

என்பதெல்லாம் பெரிய விஷயங்கள். இதற்கு என்ன பாஷ்யம் சொல்ல முடியும் என்றே தெரியவில்லை. எனவே பாஷ்யக்காரர் தன் படுதோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டதாக வாசக அன்பர்கள் எடுத்துக் கொள்ளலாம். இதுவரை பாஷ்யங்களைத் தொடர்ந்து வாசித்து வந்த நண்பர்களுக்கு நன்றி – இப்படி குற்றுயிரும் குலையுருமாக இந்தத் தொடர் முடிவடையும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை- தெரிந்திருந்தால் மூக்கை நுழைத்தே இருக்க மாட்டேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s