பராக்கு பார்ப்பது எப்படி?

அழகுக் குறிப்புகளுக்கான அடிக்குறிப்புகள் 2.

சூத்திரம்:

” காண்ட் பராக்கு பார்த்திருக்க  வாய்ப்பேயில்லை என்றே தோன்றுகிறது. வெளி நிகழ்வுகள் புலன்களுக்குள் சேகரமாகிற அதே வேகத்தில் அவருடைய உள் மனக்குரலும் பேசிக் கொண்டேயிருக்கிறது.

பாஷ்யம்:

பராக்கு பார்த்தலில் இரு வகை உண்டு என்பது பராக்குரமத்துவர்கள் அறிந்ததே. இரு வகைகள் என்று சொல்லும்போது “தண்ணீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி!” என்ற அமரத்துவ பாடலின் விபரீத பொருளில் அதை அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இருமைகள் மிக அரிதானவை. புறவுலக இருமைகள் இருப்பின், அவையனைத்தும் தம்மிடையே நகமும் சதையும் போன்ற நெருக்கமான உறவு கொண்டவை.

இது தொடர்பாக முன்னொருமுறை எழுதப்பட்ட பதிவைக் காண்க.

தன் வீட்டில் சாய்வு நாற்காலியில் கால்களை ஆட்டிக் கொண்டு ஜன்னல் வழியாக போகிற வருகிறவர்களைப் பராக்கு பார்த்துக் கொண்டிருப்பவன் மனதின் அடிப்படையில் தான் தன் வீட்டில் காபந்தாக இருக்கிறோம் என்ற பாதுகாப்பு உணர்வு இருக்கிறது. ஒரு திருடனோ பிச்சைக்காரனோ கதவை உடைத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்குள் நுழையும்போதும் அவனால் பராக்கு பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா என்பதே அவனது பராக்குரமத்துவம் எவ்வளாவு உறுதியானது என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

இவனுக்கு மாறாக ஒரு எல்லைக் காவலனின் விறைப்புடன் தகவல்களைச் சேகரம் செய்து வகைமைப்படுத்துபவன் பராக்கு பார்ப்பவனல்லன் என்பது வழக்கு. ஆனால், கான்ட் விஷயத்தில் அவனது உள்மனக்குரல் அண்டை அயலை நேசத்துடன் தன் கவனத்தில் வைத்துக் கொண்டேயிருக்கிறது. இந்தப் பராக்கு பார்வை தன்னை மையப்படுத்திக் கொண்ட சிந்தனையால் அயலாருக்கு வரக்கூடிய ஆபத்தை உணர்ந்ததாக இருக்கிறது, அதைத் தவிர்க்க முயற்சிக்கிறது. இவனது பராக்குரமத்துவத்தின் உறுதி அண்டை அயலிலிருப்பவர்கள் காப்பிப் பொடியையும் சர்க்கரையையும் பொட்டலம் கட்டித் தங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்ல முயலும்போது சோதிக்கப்படுகிறது.

“காண்ட்டிற்கு அகச் சமிக்ஞைகள் வெளியுலக ஊடாட்டத்தை சாத்தியப்படுத்துவது மட்டுமல்லாமல் தன்னை மீறிய கற்பித தளத்தோடும் பாலம் அமைக்கின்றன. ஹைடெக்கருக்கு இந்த உள்மனப் பேச்சு இடம் காலம் இல்லாமல் சாத்தியமாவதில்லை” என்பது நாம் காணவிருக்கும் (காணாதிருக்கவும் கூடும்) அடுத்த சூத்திரம்.

ஹைடெக்கரின் இடம் காலம் இல்லாத கணங்களின்- உள்மனப் பேச்சு இல்லாத கணங்களின்-, பேசப்படாத பராக்கு பார்வையின் உள்ளடக்கம் எப்படிப்பட்ட இடம்! எப்படிப்பட்ட காலம்! போன்ற ஆச்சர்யங்களால் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. ஹைடெக்கர் நாஜியா இல்லையா என்பது விவாதத்துக்குரியது. ஆனால் அவர் பல்கலைக்கழகம்
ஒன்றில் ரெக்டராக ஆனதும், தன்னை ரெக்டராகத் தேர்ந்தெடுத்த அமைப்பு உட்பட அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒழித்துக் கட்டினார் என்பதை யாரும் மறுப்பதில்லை.

மூன்றாம் வகை பராக்கு பார்வை உண்டு: இது தேவிகாலோத்தரத்து முப்பத்து ஒன்பதாவது சூத்திரத்தால் உணர்த்தப்படுகிறது: “படுத்துத் தூங்கும் மனதை எழுப்பு. பராக்கு பார்க்கும் மனதை அமைதிப்படுத்து. மனம் படுத்துத் தூங்காமல் இருக்கும்போதும், பராக்கு பார்க்காமல் இருக்கும்போதும், அதைத் தொல்லை செய்யாதே : சும்மா இரு.” என்பதுபோல் அது செல்கிறது.

அகம், புறம், ஓசை, அமைதி, அண்டை, அயல் போன்ற இருமைகள் நகமும் சதையும் போன்றவை. நகத்தையும் சதையையும் மறந்து, இவை நகமும் சதையுமாக இருக்கும் இடம் எது என்ற தேடலே பராக்குப் பார்வையாளர்களாகிய நாம் தெரிவு செய்ய வேண்டிய இடம். பராக்கு பார்வை உன்முகப்பட்ட ஒன்றா அல்லது பகிர்முகப்பட்ட ஒன்றா என்பதைத் தெளிய வேண்டியது அவசியமாகிறது. இதற்கேற்ற இடம், உள்ளும் புறமுமற்ற அந்த ஒரு தனித்துவம் கொண்ட, மௌனம் தன்னை நிறைத்துக் கொள்ளும் இடமே என்றறிக.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s