ஒரு நீதிக் கதை

மு. (வாசக அன்பர்கள் முழு புள்ளியை கவனிக்கத் தவற வேண்டாம்) ஒரு தேர்ந்த சிந்தனைவாதி என்பதையோ தேர்ந்த இலக்கியவாதி என்பதையோ அவரது எதிரிகளும் மறுக்க மாட்டார்கள். நாமெல்லாம் நாவரள கத்தினாலும் கண்டுகொள்ளாத அறிவு ஜீவிகள் அவரது கேலியாய் உயர்த்தப்பட்ட புருவத்துக்கும் ஏளனத்தில் தாழ்ந்த கீழுதட்டுப் புன்னகைக்கும் மட்டுமே பொங்கி எழுவார்கள்.

அப்படியாகப்பட்ட மு. ஒரு குடும்பச் சண்டையில் மூக்கை நுழைக்கும்படியாகிவிட்டது. தம்பதியர் இருவரும் மு.வுக்கு வேண்டப்பட்டவர்கள்தான். ஆனாலும் சண்டை என்று வந்துவிட்டபின் வாய்கலப்பு கைகலப்பு என்று ஒரே சலசலப்பு. கணவன் மனைவி என்று இருவீட்டாரும் கோஷ்டி பிரிந்து குடுமிப்பிடி சண்டை போட்டதைப் பார்க்க கூட்டம் கூடிவிட்டது.

மு. இதையெல்லாம் கண்டும் காணாதவராய் வாளாவிருந்தார். தேர்ந்த முரணியக்கவாதியான மு. இது போன்ற சண்டைகள்தான் முன்னேற்றப் பாதை என்பதை நன்கு அறிந்திருந்தார். ஆனால் கூடி நின்ற கூட்டத்தால் சும்மா இருக்க முடியவில்லை. ஆளுக்கு ஒன்று சொன்னார்கள்.

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு மு.வின் மேல் உயர்ந்த மதிப்பு இருந்தது. அவர் குடுமிப் பிடி சண்டையைப் பற்றி மு.வின் கருத்து என்னவென்று கேட்டார்.

மு. சாதாரணமாகத்தான் துவங்கினார். அவருக்கு இது போன்ற சச்சரவுகளில் ஈடுபடுவதில் கொஞ்சமும் ஆர்வமிருக்கவில்லை. ஆனால் கேள்வி என்று வந்தபின் பதில் சொல்லாமல் பின்வாங்குவது சரியில்லை.

“எனக்கு இவனை நன்றாகத் தெரியும். ரொம்ப நல்லவன்தான். ஆனால் கெடுபிடியான ஆள். இவன் செய்த அலும்பு தாங்காமல், “உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்,” என்று பெற்ற அம்மாவே கோபித்துக் கொண்டு போய் விட்டாள் என்றால் பாருங்களேன். பெற்ற தாயையே புரிந்து கொள்ள முடியாத இவனெல்லாம் எதற்கு கல்யாணம் பண்ணி என்னத்தை சாதிக்க நினைத்தான் என்றே எனக்குத் தெரியவில்லை. இவனைப் பார்க்கும்போது எனக்கு கல்யாணம் செய்து கொள்ளும் ஆசையே போய் விடுகிறது,” என்றார் அவர்.

அதைக் கேட்டதும் அந்த ஆளின் சொந்தக்காரர்கள் அவரை அடிக்கப் போய் விட்டார்கள். ஆனால் ஒரு நல்லவர் அவர்களைக் கையமர்த்தி, “என்னப்பா, இப்படி சொல்லிட்டே!” என்று அழாக்குறையாகக் கேட்டார், “எல்லா தப்பும் எங்க பையன்தான் செஞ்சானா?”

மு.வின் கவனம் முரண்பாட்டின் மறுபக்கம் திரும்பியது.

“அது சரி. அந்தப் பெண் மட்டும் கெட்டவளா என்ன? அவளும் நல்லவள்தான். ஆனால் கோபம் வந்தால் ஒரே வசவு மழைதான். இன்னது பேசுகிறோம் என்று தெரியாமல் ஒரே கூச்சல். தற்குறி வேறு. தனக்காகவும் தெரியாது, பிறத்தியார் சொல்லித் தந்தாலும் புரியாது. இவளும் பெண் என்று கல்யாணம் பண்ணிக் கொண்டாளே! இவளைப் பார்க்கும்போது எனக்கு கல்யாணம் செய்து கொள்ளும் ஆசையே போய் விடுகிறது,” என்றார் அவர்.

ரெண்டு பெரும் சேர்ந்து மு.வை மிகக் கடுமையாகத் திட்டிவிடவே மு.வுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.

“எனக்கு செய்வினை ஏதோ வைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அன்பையே நாடும், அன்பையே பேசும் என்னை எல்லாரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ரெண்டு பேரையும் நல்லவர்கள் என்று சொன்ன என்னை எல்லாரும் கெட்டவன் என்று சொல்கிறார்கள்,” என்று நாடி ஜோதிடர் ஒருவரிடம் கட்டை விரல் ரேகையைப் பதிப்பித்து முறையிட்டார் மு.

“அப்பனே, நல்வினை உன்னைத் தொல்மரபுக்குக் கொண்டு வந்தாலும் முன்வினை உன் முன்வந்து மன அமைதியைக் குலைக்கிறது.,” என்றார் அந்த ஜோதிடர்.

அதற்கு எது பரிகாரம் என்றுகூட கேட்க மறந்த மு. விம்மி வெடித்து அழுது கொண்டிருந்தபோது அவரது தோளை ஒரு கரம் தொட்டது.

கிழவர். பிரேம் போடாத கண்ணாடி. பொக்கை வாய்.

“தாத்தா!” என்று அவரைக் கட்டிப்பிடித்துக் கதறினார் மு. “நடுநிலை தவறாமல் இரு தரப்பின் குறைகளையும்தானே சொல்கிறேன்? இருபாலும் அன்பு செய்வது தப்பா? அன்பைத் தவிர எனக்கு வேறென்ன தெரியும்?”

கிழவர் ஆதரவாக அவனது கண்களைத் துடைத்தார்.

” தன் அன்புக்குரியவர்களையும் கொன்று அவர்களின் ரத்தத்தில் குளித்த முரணியக்கவாதத்தின் மூர்க்கத்தனம் உன்னை விட்டு இன்னும் விலகவில்லையே! முரண்களின் நியாயத்தைப் போற்றும் சமநிலை பயில். முரண்களை மறக்கும் மூர்க்கத்தனம் உனக்கு வேண்டாம். முரண்களை உயிருடன் புதைத்தபின் கலங்கி என்ன பயன்?”

“முரண்களைக் காண்பவன் கணப்போதும் பட்சபாதத்தை பாவிக்கலாகுமா?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டார் மு. அவரது உள்ளத்து இருள் மறைந்தது. “ஆம், எப்போதும் எங்கும் இருக்கும் முடிவிலித் தன்மை கொண்டவை முரண்கள்,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் மு., முரணியக்கவாதி. இல்லை, மு.மு., முன்னாள் முரணியக்கவாதி.

ஆம், இந்த கணம் முதல் அவர் புதிய மு.,- இனி அவர் முடிவிலிவாதி.

செக்கர் வானம் சிவந்தது. அதன் பொன்னொளியில் புது உலகம் பிறந்தது.