மெர்க்குரி முலாம் பூசிய காகங்கள்

பிரியம் சுரக்கும் கவிதைகள்- 1

இந்தப் பதிவில் இருக்கும் கவிதைகள் எப்படி இருந்தாலும், பேக்ஸ்பேஸ் பொத்தான் வேலை செய்யாத நிலையில் என்றுமில்லாத பயிற்சியாக ஒவ்வொரு எழுத்தையும் யோசித்து யோசித்து எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நினைக்கவே வருத்தமாக இருக்கிறது- இதைச் சொன்னதும், ஒரு பதிவுலக இலக்கியவாதி நண்பர், பிரபல எழுத்தாளருக்கும் உனக்கும் எல்லாம் எதுக்குய்யா பாக்ஸ்பேஸ் டெலிட் கீ எல்லாம் என்று ஒரு ஸ்மைலி போட்டார். நண்பருக்கு என் கடும் கண்டனங்கள் 🙂 (இலக்கியவாதிகள் சிரிப்பான் பாவிப்பது எதிர்மறை பொருளில்).

நிற்க. தற்போது திரு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சங்கச் சித்திரங்கள் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இது பற்றிய குறிப்புகளைப் பதிவுலக இலக்கியவாதி நண்பர் கிரி அவர்களின் ஸஸரிரி ப்ளாகில் எழுதுவதாக எண்ணம், பகவத் சித்தம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.

என்ன சொல்ல நினைத்தேன் என்றால் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் சங்கக் கவிதை மாதிரி எழுதுவது சுலபம் என்று தோன்றுகிறது. திணை சங்கதியைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஜெயமோகன் சொல்லிவிட்டதால் ஏறத்தாழ பாதி பிரச்சினை தீர்ந்த மாதிரிதான்.

ஒரு உதாரணம் சொன்னால் எளிதாகப் புரியும் – “எந்தப் பேருந்தும் நில்லாத இந்த மாநகர பஸ் ஸ்டாண்ட் என் பால் வண்ண சட்டையைக் காப்பி கலர் ஆக்கிவிட்டது, இந்தக் கோடைக் காலம் இங்கே புதிதாய்ப் பழகும் காதலர்களுக்கு மட்டும் புதிய திறப்புகளை ஊக்குவிக்கும் உறைபனிப் பொழுதாக இருக்கிறது, அவர் இருக்கும் ஊரில் பஸ்ஸே கிடையாதே” என்று மாம்பலத்தம்மா ஒரு கவிதை எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

சட்டையின் கலர் மாறி விட்டதால் தலைவி வெகு நேரம் காத்திருக்கிறாள் என்றும் அந்த சாலை அவள் மீது புழுதியை வாரி இறைக்கிறது என்றும் குறைந்தபட்ச கற்பனை செய்து கொள்ளலாம். மேலும், அவள் யாருக்காகக் காத்திருக்கிறாள் என்ற கேள்வியும், அவள் மீது புழுதி வாரி இறைக்கப்படுகிறது என்ற தகவலும் நீங்கள் மேலதிக கற்பனை செய்து கொள்ளக் காரணமாக இருக்க வேண்டும். மற்றபடி எல்லாரும் அனலில் வாட, பஸ் ஸ்டாண்டில் புதிதாக இணைந்த துணை மட்டும் ஜில்லென்று இருக்கிறார்கள், அவர்களுக்குக் காலம் உறைந்து விட்டது என்றெல்லாம் சொல்லிவிட்டு, அவர் இருக்கும் ஊரில் பஸ்ஸே வராதே என்று தலைவி தன் தோழியிடம் வருந்துவது, தலைவன் வெகு நேரம் தனியாக பஸ் ஸ்டாண்டில் நிற்பது குறித்த அவளது அச்சங்களை வெளிப்படுத்துகிறது, இல்லையா?

இல்லையா? சரி போகட்டும். நான் எழுதிய கவிதைகளுக்கு வருகிறேன்.

இவை ஒரு அவசத்தில் எழுதப்பட்டவை. ஒரு பதிவன் தான் எழுதிய ஒவ்வொரு எழுத்தையும் இணையத்தில் பகிர வேண்டும் என்ற விதி இருப்பதால் இதோ அந்த இரு கவிதைகள்.

௧.

பால்கனிக்குக் கீழிருக்கும் வேப்ப மரக்கிளையில்
மெர்க்குரி முலாம் பூசிய காகங்கள்
நீடுதவம் செய்யும் இந்த வீணாய்ப்போன ஊரில்
வண்ணக்கனவுகள் ஒளிரும் காரன்ன மசியால்
மௌனங்களை நிறைத்தேன்- காற்றில் படபடக்கும்
தாள்களில் அவன் பேசுகிறான், தோழி!

௨.

நெருப்பென ஒளிரும் சிரச்சுடர் அமர்த்தி
வாடி என மறிக்கும் பைக்கமர் கணவனை
விடு என விலகி நடைபயில் கோதை
குழந்தையின் அழுகையை கேளாச் செவியள்
இருக்கும் இவ்வூரில் ஒளியவிழ் ஞாயிறு
மறையக் காணாமல் மறைந்தொழிந்தானபின்
விளக்கிட்டென்ன!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s