கன்னி மொழி

இணையத்தில் வாசிப்பதைக் குறைத்துக் கொண்டு காகிதப் புத்தகங்களைப் படிக்கத் துவங்கியிருக்கிறேன். ஃபாண்ட் சைஸை எவ்வளவுதான் பெரிசு பண்ணிப் படித்தாலும் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறதில்லையா?

படிக்கும் புத்தகங்களில் தமிழ் புத்தகங்களும் சில இருக்க வேண்டும் என்று விருப்பம். இலக்கியம் என்று சான்றளிக்கப்பட்ட உயர்தர புத்தகங்களைத் தேடிப் பிடிக்க ஒரு நண்பரை முழுமுதல் உதவிக்குச் சார்ந்திருக்கிறேன். ஆனால் அவரைச் சந்திப்பதே பெரும்பாடாக இருப்பதால் கைக்குக் கிடைத்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது.

அப்படிப் படித்தப் புத்தகங்களில் ஒன்று சி சு செல்லப்பாவின் “தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது” என்ற ஒரு புத்தகம். தமிழ் இன்று எவ்வளவோ தேக்க நிலையில் இருக்கிறது என்பது இணையத்தில் வாசிக்கும் நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு சில உத்திரவாத எழுத்தாளர்களை விட்டால் நல்லக் கட்டுரைகளைப் படிப்பதே அதிசயமாக இருக்கிறது. கட்டுரைகளே அப்படி என்றால் கதைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் எழுத்துப் பயிற்சியை முறைப்படி தரக்கூடிய அமைப்புகள் இல்லை என்பதைதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் இருக்கும் சிறுபத்திரிக்கைகளின் பட்டியல் ஒன்று இங்கிருக்கிறது – ரிவ்யூ ரிவ்யூ.. அமெரிக்கா அமெரிக்காதான் என்பதை விட்டுவிடுவோம் – தமிழில் உள்ள ஜனத்தொகைக்கு எவ்வளவு சிறுபத்திரிக்கைகள் இருக்க வேண்டும்? அச்சுப் பத்திரிக்கை என்றாலாவது கைக்காசை செலவு பண்ணி லாப நஷ்டக் கணக்கு பார்க்க வேண்டும். இணையத்தில் எல்லாமே இலவசமாகக் கிடைக்கிறது. நான்கைந்து நண்பர்கள் சேர்ந்தால்கூட போதும், ஒரு இணைய இதழ் துவங்கி விடலாம். “நானும் சிறுபத்திரிக்கைதான்” என்று ஜீப்பில் ஏறி ஒரு ரவுண்டு வரலாம், ஆனால் பலருக்கும் அதற்கான ஊக்கமோ உத்வேகமோ இல்லை\ என்பது விநோதமாக இருக்கிறது.

இதற்குக் காரணம் முன்சொன்ன பயிற்சியின்மைதான். முறையான பயிற்சியில்லாமல் எல்லாவற்றையும் நாமே கற்றுக் கொண்டு செய்ய வேண்டியிருக்கிறது என்பதால், நினைத்தபோது நினைத்ததை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். அது சம்பந்தமாகப் பேசிப் பகிர்வும் தகுந்த மொழி பரவலாக இல்லை.

சி சு செல்லப்பாவைப் பற்றி சுஜாதா (தற்போது படிக்கும் இன்னொரு புத்தகம்) – “அவர்தான் எல்லாவற்றையும் ஆரம்பித்தார்<” என்று சொல்கிறார். செல்லப்பா எழுத்து இதழைக் கொண்டு செய்ததை மறந்தவர்களுக்கு அடுத்த வேளை சோறு கிடைக்காது என்றும் சாபம் கொடுக்கிறார். இன்றும் எல்லாரும் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதால் சுஜாதாவின் தவவலிமை வீக்காக இருக்கிறது என்பது தெரிகிறதே தவிர, செல்லப்பா குறித்து அவர் சொன்னது தவறு என்று எண்ண இடமில்லை.

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது என்ற புத்தகம் தமிழில் சிறுகதைகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் மிக அழகாக விவரிக்கிறது. ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் எழுதப்பட்டிருந்தால் அது எழுத நினைக்கும் ஒவ்வொருத்தரும் உலக அளவில் வாசிக்கும் முதன்மை முக்கியத்துவம் கொண்ட முதல் பத்து புத்தகங்களில் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் தமிழின் தலைவிதி- இவ்வளவு அருமையான ஆரம்பம் தொடரப்படாமல் போய் விட்டது.

முறையான எழுத்துப் பயிற்சி நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தரப்பட்டிருந்தால் நம் இணையத்தை இன்று இருபதுக்கும் மேற்பட்ட இணைய இதழ்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். புக் ப்ளாக் என்று சொல்லப்படும் இணைய தளங்கள் முன்னூறுக்கும் மேல் இருக்கும். ஆனால் இன்று இவையிரண்டும் என் இடது கை விரல்களின் எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. புத்தக விற்பனையும் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை என்பதைச் சொல்லவே வேண்டாம்.

இத்தனைக்கும் இன்று சாமியார்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அடுத்தபடியாக எழுத்தாளர்களுக்குதான் பக்தர்களும் தொண்டர்களும் இருக்கிறார்கள் (சில பேருக்கு குண்டர்களும் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது). ஆனாலும் தீவிரமாக எழுத நினைப்பவர்களில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை இணையத்தில் மிகக் குறைவாகவே இருக்கிறது.

சி சு செல்லப்பா முப்பதுகளின் துவக்கத்தில்கூட ஆண்டுக்கு அஞ்சு பத்து என்று சிறுகதைகள் வெளிவந்த காலம்தொட்டு, முப்பதுகளின் இறுதியில் மணிக்கொடியின் நான்கரை ஆண்டுகளில் ஆயிரம் சிறுகதைகள் என்ற சாதனை வரை சிறுகதை தன் பன்முக வளர்ச்சியை எப்படி பெற்றது, அதற்கு எந்தெந்த கதைகள் காரணமாக இருந்தன என்று எழுதுகிறார். இப்படி ஒரு அபரித வளர்ச்சியைப் பத்தே ஆண்டுகளில் தமிழ் சிறுகதை பெற்றதற்குக் காரணம் உயர்ந்த, தரமிக்க எழுத்தாளர்கள் இருந்தார்கள் என்பதல்ல : அவர்களுக்கு எழுதவும் அந்த எழுத்தைத் தொகுத்து வாசகர்களுக்குப் பகிர்வும் மணிக்கொடி என்ற சிற்றிதழ் போன்ற நான்கைந்து இருந்தன என்பது அதைவிட மிக முக்கியமான காரணம். இதுபோன்ற களம் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைப்பதே பெரிய விஷயம். அது செல்லப்பாவுக்குக் கிடைத்திருக்கிறது. அதன் சாத்தியங்களை அவர் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

உதாரணத்துக்கு, ந. பிச்சமூர்த்தியின் ‘முள்ளும் ரோஜாவும்’ என்ற சிறுகதையின் துவக்கத்தை அதுவரை வந்த சிறுகதைகளில் ஆகச்சிறந்த துவக்கமாகச் சொல்கிறார்:

மிராசுதார் ராமனாதனுடைய மனைவி கமலம் நல்ல அழகு. அழகுப் போட்டி நமது தேசத்திலிருந்தால் முதல் பரிசு அவளுக்கே கிடைக்கும். அதனுடன் கூர்மையான புத்தி, தங்கமான குணம். தற்காலத்துப் பெண்கள் பலரைப் போல் அசட்டுத் தமிழ் நாவலில் ஏறக்குறைய நூறாவது படித்திருந்தாள். எனவே பின்னால் வந்த கோளாறுக்கு முதல் வேர் அவைகளிடையில் பிறந்திருக்க வேண்டுமென்று நினைத்தால் அது பிசகாகாது”.

தற்காலத்துப் பெண்கள் பலரைப் போல் அசட்டுத் தமிழ் நாவலில் ஏறக்குறைய நூறாவது படித்திருந்தாள்,” என்ற வாக்கியம் எவ்வளவு விஷயங்களைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது என்று எழுதிவிட்டு செல்லப்பா எழுதுகிறார்,

“இப்படிக் குறிப்புணர்த்தலாக, இறுக்கமாகச் சொல்கிறது சிறுகதைக்கு ரொம்ப அவசியம். ஆரம்பத்தைப் பற்றி நான் இங்கே அதிகமாகத் துளாவினதுக்குக் காரணம், சிறுகதைக்கு அத்யாவச்யமான, பொருத்தமான, சிலாக்கியமான ஓர் ஆரம்பம் வாய்ந்த முதல் கதை தமிழில் இது எனக்குப் பட்டதைச் சொல்ல விரும்பியதுதான்”

அப்படி என்னதான் இந்த ஆரம்பத்தின் சிறப்பு என்றால் – குறிப்புணர்த்தலாக, இறுக்கமாகச் சொல்வது தவிர, கதையின் களத்தைத் துவக்கத்திலேயே அமைத்து, அதில் ஏற்படக்கூடிய மோதலையும் முதல் சில வாக்கியங்களில் அறிமுகப்படுத்தி விடுகிறார் பிச்சமூர்த்தி என்பதுதான் அது என்கிறார் செல்லப்பா. இன்றும் சிறுகதை எழுதுபவர்கள் பலரும் அறியாத விஷயம் இது என்று நினைக்கிறேன். ஒரே ஒரு ஊரிலே என்பதற்கு பதிலாக, ஊரை விவரித்துக் கதையைத் துவக்குகிறோம், ஒரு நாவலைப் போல 🙂

வாசகர்கள், விமரிசகர்கள், எழுத்தாளர்கள் என்று அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனென்றால், இதுபோல் சிறுகதை வளர்ச்சியின் ஒவ்வொரு முகத்த்துக்கும் யாருடைய எந்தக் கதை முன்னோடி என்று அருமையாக எழுதியிருக்கிறார் செல்லப்பா.

“சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்,” என்று ஒரு வாசக அன்பர் போனில் அழைத்துத் திட்டினார் என்பது நினைவுக்கு வந்தாலும் இதே புத்தகம் போன்ற ஒன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால், உலகமெங்கும் உள்ள எழுத்துப் பயிற்சி பாடத்திட்டத்தின் முதன்மையான முதல் பத்து நூல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை.

“இப்படிச் செய்யாமல் அந்த அம்சத்தை நடப்புக் கதையாக பின்நிகழ் சம்பவமாகத் தொடர்ச்சி கொடுத்து எபிசோடிகல் ஆகவும் சீக்வென்ஷியல் ஆகவும் அதாவது அடுத்தடுத்த கட்டத்துக் கதைச் சம்பவங்கள், கோர்த்த வரிசைத்தொடராகவும் செய்திருக்க முடியும். கதை கெட்டுப் போயிருக்காது. ஆனாலும் இது விளைவித்த வலுவான பலனை அது தந்திராது. கதை இழுபட்டுப் போயிருக்கும். ‘டென்ஷன்’ என்கிறோமே, விடைப்பும் நெகிழ்ந்திருக்கும். இந்த உத்தியால் அவை காப்பாற்றப்பட்டிருப்பது மட்டுமின்றி உக்ரம் அதிகமாகச் செய்யப்பட்டிருக்கிறது. கதை முடிகிறபோது சுண்டிவிட்ட துடிப்பை நம்முள் உணர்கிறோம்”

1970களில் செல்லப்பாவால் இப்படி எழுத முடிகிறதென்றால் இன்று கிரியேட்டிவ் ரைட்டிங் கோர்ஸ்கள் எந்த அளவுக்கு முன்னேறி இருக்க வேண்டும்? ஆனால், அப்போதே ஒரு நிலையான வடிவம் பெற்றுவிட்ட நவீன சிறுகதையின் இலக்கணம் குறித்த அறிதல் விரிவடையும்படி பரவலாக எதுவுமே நடக்கவில்லை.

சக்கரத்தை நாம் திரும்பத் திரும்ப கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம் என்ற வரலாற்றுப் பிரக்ஞை இல்லாததால்தான் நாலு எழுத்து எழுதத் தெரிந்த நாமெல்லாம் ஏதோ ஒரு பெரிய சாதனை செய்துவிட்ட மிதப்போடு நடமாட முடிகிறது. நமக்கு மட்டும் வாய்த்த பாக்கியம், அது இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் நம் கைவிட்டுப் போகாது என்பது உறுதி.

பின்குறிப்பு: வழக்கம் போலவே ஜெயமோகன் அவர்கள் இப்புத்தகம் குறித்தும் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார் :புத்தகம் குறித்து மிக விரிவாகவே எழுதியுள்ள ஜெயமோகன் முத்தாய்ப்பாக, “முன்னோடிகள் முக்கியமானவர்கள். அவர்களின் கண்கள் வழியாக நாம் பார்ப்பதை தவிர்த்து விடுவதே அவர்களை அறிய சிறந்த வழியாகும்” என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது (முன்னோடியின் கண்கள்)

(இங்கே ‘அவர்களை அறிந்து கொள்ள’ என்று ஜெயமோகன் குறிப்பிடுவது மணிக்கொடியினரால் கண்டு கொள்ளப்படாத எழுத்தாளர்கள்.)

காலச்சுவடு பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்ட இந்தப் புத்தகம் இணையத்தில் இங்கே கிடைக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s