ஒரு சிறு அங்கலாய்ப்பு

இதை நினைவிலிருந்து எழுதுவதால் சில பிழைகள் இருக்கலாம். விஷயமறிந்த நண்பர்கள் பொறுத்தருள வேண்டும்.

அண்மையில் நண்பர் ஸஸரிரி கிரி அவர்களின் ப்ளாகில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சங்கச் சித்திரங்கள் குறித்து இரு பதிவுகளடங்கிய தொடர் கட்டுரை எழுதத் திட்டமிட்டிருந்தேன்.

அப்படி எழுதப்பட்டிருந்தால் அதில் சமீப காலமாக மேனாட்டு பண்டிதர்கள் மத்தியில் பிரக்யாதை கூடிவரும் ஜெஃப் டயர் என்ற எழுத்தாளரின் முதலாம் உலகப் போரைக் குறித்த நூலான The Missing of the Somme முழுக்க முழுக்கவே ஜெயமோகனின் “கல் நின்றவர்” என்ற அத்தியாயத்தில் வரும் ஒரு கருத்தின் உருக்கமான நீட்சியாக இருப்பது – விளைவுகளால் ஈர்க்கப்பட்ட வினைகள், சிலைகளாகத் தங்களைக் கண்ட தலைமுறை, நினைவுத் தூண்களில் இறவாமையைத் தேடிய வீரம் – எழுதப்பட்டிருக்கும். மேலும், இன்னொரு அத்தியாயத்தில் பேசப்படும் போர்க்களத்தையும் ஆங்கண் வீரர்கள் வீழ்ந்த குன்று செம்மலர்களால் போர்த்தப்பட்டிருப்பதையும் பாடும் பாடலைக் குறிப்பிட்டு – இவை Poppy என்றழைக்கப்படும் அபின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முதலாம் உலகப் போர் நினைவிடங்களை எனக்கு நினைவூட்டுவதையும் எழுதி, சங்கப் பாடல்கள் மட்டுமல்ல, அதற்கு ஜெயமோகனின் உரையும் காலவெளி கடந்து எல்லோரிடமும் எப்போதும் பேசும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும் எழுதியிருப்பேன். ஆனால், அப்படி எழுதினால், அது சரியாக இருக்குமா என்ற தீவிர சந்தேகத்தில் அதுவரை மனதில் கட்டப்பட்டிருந்த மனக்கோட்டை சிதைந்தது= இன்றும் அவ்வப்போது அதன் இடிபாடுகளை ஒரு நீண்ட ஏக்கப் பெருமூச்சுடன் மனம் புரட்டிப் பார்க்கிறது.

இப்படியாகப்பட்ட நிலையில் இருக்கும் நம்மை ஒருத்தர் நீ எழுத்தாளனில்லை என்று சொல்லி நம் சான்றிதழைப் பிடுங்கிக் கொண்டுவிட்டார்.

“உங்களுக்கு என்ன சார், ஒரு புத்தகம் படிச்சா அதிலிருந்து நாலஞ்சு பத்திகளை உருவி, ஒரு மாதிரி தொகுத்து எழுநூறு எண்ணூறு வார்த்தைகளுக்குப் பதிவு எழுதி, முடிவில், “இதை எல்லாம் எப்பவோ ஜெயமோகன் எழுதிட்டார்”னு அவரோட சைட்டுக்கு லிங்க் கொடுத்து ஹிட்டுக்கு வழி பண்ணிப்பீங்க. ஆனா ஒரு உண்மையான படைப்பாளி எவ்வளவு பேர்கிட்டப் பேசிப் பழகி அவங்க அனுபவங்களை உள்வாங்கணும், அதை ஒரேயடியா ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரியும் எழுதாம நம்ப முடியாத கதை மாதிரியும் எழுதாம, உண்மையில் இருந்து தேவையான அளவுக்கு மட்டும் கற்பனையை வடிகட்டிக் கலந்து நல்ல ஒரு மிக்ஸாக் கொடுக்கணும்- அதைச் சரியாச் செய்யறவன்தான் உண்மையான எழுத்தாளன். ஏன்னா, நம்ப முடியாத கதையா இருந்தாலும் போச்சு, யாரைப் பத்தி எழுதறோம்னு தெரிஞ்சாலும் போச்சு, அடி பின்னிடுவாங்க” என்று நீண்ட உரையாற்றிவிட்டார் அவர்.

என்னத்தச் சொல்ல!

சி. சு. செல்லப்பா, சுபமங்களா பேட்டியில் எழுத்து இதழில் தன் விமரிசனங்களுக்குக் கிடைத்த எதிர்வினைகள் குறித்துச் சொன்னதாகப் படித்தது இது:

“ஒரு படைப்பு வந்தா, அதைப் படித்தவன், அந்தப் படைப்பைப் பற்றி அது என்ன, அதன் தரம் என்ன, அது நம்மை எப்படி பாதித்தது, எப்படி ரசித்தேன் என்று அதைச் சொல்லத் தெரியாதா? ஒரு ஸ்வீட்டைக் கொடுத்தால் அந்த ருசியைச் சொல்லத் தெரியாதா? அந்த அக்கறையே இல்ல. ஏதோ மாடு வெக்கலைத் திங்கற மாதிரி…. அதுகூட ரசிச்சு சாப்பிடும்”

இப்படி அங்கலாய்க்கும் நிலை எந்த எழுத்தாளனுக்கும் வராதிருக்கட்டும்.

image credit : Vision Aware

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s