பெற்றவர்களுக்கு ஒரு பாடம்

டிவிட்டரில் நான் தொடரும் மிகச் சில அறிவுஜீவிகள் வரிசையில் திரு ரோஜா வசந்த் அவர்களும் ஒருவர். ராஜா மீதான …. (வேண்டாம், கோபம் வந்துவிடப் போகிறது) – டேஷைத் தவிர்த்தால், சிலபல முன்னனுமானிக்கத்தக்கக் கண்ணிவெடிப் பிரதேசங்களுக்கு வெளியே தர்மநியாயத்துடன் பேசக்கூடியவர்.

இன்று அவரது டிவிட்டைப் படிக்க நேர்ந்தது.

நமக்குதான் தொண்டை அடைக்கக் கண்ணீர் விட்டு மூக்கு சிந்திக் கொண்டு படிப்பது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரியான வாசிப்பு அனுபவமாயிற்றே, அவசர அவசரமாக கட்டுரையைப் படித்துப் பார்த்தேன்.

நான் அழுதேன், என் மனைவி அழுதாள், அதை ஒரு எட்டு பத்து பேருக்கு பார்வர்ட் பண்ணி அவர்களையும் அழ வைத்தேன்.

நீங்களும் இந்தக் கட்டுரையைப் படிக்க கர்சீப் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். இரண்டு துளி கண்ணீராவது உத்தரவாதமாக திரண்டு நிற்கும்.

பின்குறிப்பு :

இதைப் படித்ததும் இன்ஸ்பிரேஷன் ஆகி, ஒரு பத்திருபது பேருக்கு, “There are no misfits if you give them enough space to fit in” என்று எஸ்எம்எஸ் அனுப்பப்போய், அதில் ஒரு நண்பர் விதிர்விதிர்த்து ????????? என்று தொடர்குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டார். நண்பரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் – இனி வழக்கம் போல நட்பு மற்றும் காதல் தத்துவங்களை மட்டுமே அனுப்பப் போகிறேன்..

23 thoughts on “பெற்றவர்களுக்கு ஒரு பாடம்

 1. பாஸ் வணக்கம் எப்படி இருக்கிறியள்

  ஜெமோவின் இந்தக்கட்டுரை எப்பவோபடித்துவிட்டேனே.அது மிக அருமையான கட்டுரை
  நன்றி

  1. நன்றி டாக்டர் 🙂

   ஏறத்தாழ கோமா நிலையில் இருக்கும்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள், போன மூச்சு திரும்ப வந்த மாதிரி இருக்கிறது…

   எழுந்து நடமாட முடியுமா என்ன என்று பார்க்கலாம் 🙂

   நலம்தானே?

 2. மாட்டுப்பொங்கலுக்கு ’’கோமா தா என் குலமாதாஆ…. ‘’ என்று மிக இரந்து கும்பிட்டீர்களோ என்னவோ.

  உங்கள் நிலை நிஷ்டை .
  நீங்கள் இப்போ மரம் ஆல மரம்.

  நலம்தானே என்று கேட்கிறீர்கள் என்னை?
  “ சுய நலன்துப்பித்துப்பி நான் பின்னியவலையில் சிக்கியிருப்பதும் நானே’’

 3. உனக்கு எல்லாம் மரத்துப் போச்சு என்கிறீர்களா? ஒரு விதத்தில் உண்மை 🙂

  என் நண்பர் ஒருவர் தன் கணவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தது பற்றிச் சொன்னார். அறைக்குத் திரும்ப அழைத்து வரும்போது கணவருக்கு நினைவு திரும்பவில்லையாம், ஆனால் ஒரு கண்ணின் ஓரத்திலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்ததாம்.

  எப்போதோ நடந்த நிகழ்ச்சி. ஆனால் அதைச் சொல்லும்போதே அவருக்குத் தொண்டை அடைத்து பேச முடியாமல் போய் விட்டது. அந்த மாதிரியான ஈரத்தைப் பார்ப்பது அபூர்வம், இல்லையா?

  இங்கே நான், “ஒருத்தருடைய வலி இன்னொருத்தருக்கு எப்படி தெரிகிறது?” என்று மோட்டுவளையைப் பார்த்து ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறேன் :))

 4. உங்களை சிங்கம் என்று சொன்னால் ”கொன்று நான் தின்பதில்லை ”என்பீர்களோ. 🙂

  எல்லாருடைய வலியையும் உணரமுடியாமல் இருப்பது எமது மனத்தின் பாதுகாப்பு பொறிமுறை.

  அதனால் வலியை உணரப்பிரச்சாரம் தேவைப்படுகிறது..அந்த வலி எப்படித்தெரியவேண்டுமென்பதை இன்றைய உலகில் பிரச்சாரம் தீர்மானிக்கிறது.
  இந்தக்கட்டுரையில் தந்தையான ஜெமோ தன்வலியை எழுத்தாற்றல் மூலம் பலரை உணரச்செய்கிறார்.ஆனால் இதே ஜெமோ எழுத்தாற்றலால் சிலரின் வலியை நிராகரிப்பதையும் செய்கிறார்.

  தலைவலியும் காய்ச்சலும் தன்க்குவந்தாத்தான் தெரியும் என்பார்கள்.

  ஒரே அனுபவம் ஒரே சூழ்நிலை என்றுவந்தால் வலியை ஓரளவுக்கு உணரமுடியும்.எழுத்து சினிமா மூலம் மனதில் சூழ்நிலையை உருவாக்கலாம்

  இலங்கை இராணுவ அடக்குமுறையின் வலியை இந்தியர் அனேகருக்கு இந்தப்பிரச்சாரம் அல்லது எழுத்தின் மூலமாகத்தான் உணரவோ நிராகரிக்கவோ கூடியதாக இருக்கிறது.தமிழர்களுக்கு இன உணர்வினூடான வெளிப்பாடாக இருக்கிறது.

  ஆனால் உலகில் நிகழும் எந்த ராணுவத்தினதும் அடக்குமுறையினதும் வலியை ஆதரவு …எதிர்ப்பிரச்சாரத்தை எம்மைப்போன்றவர்களுக்கு ஆழமாக உணரக்கூடியதாய் இருக்கிறது.காரணம் அனுபவம்.

  அடக்குமுறை வலி, வலி இருப்பது நிராகரிக்கப்படுதலால் ஏற்படுகிற வலி என இரண்டு வலிகளை அடக்குமுறை உருவாக்கும்.

  பார்வையாளர்கள் , தம் சிந்தனைகளை ஏதோ வறட்டுக்குக்கொள்கையொன்றில் சிறைவைத்த “சிந்தனையாளர்கள்,எழுத்தாளர்கள்,கருத்துச்சொல்லிகள்,ஊடகங்கள் இந்த வலியில் எண்ணை ஊற்றிக்கொண்டேயிருப்பார்கள்.

  வலியை விவாதங்களுக்கு அப்பாற்பட்ட பிரகடனமாக்கவேண்டும்.அப்போது ஆற்றுப்படுத்தும்

  ஆஸ்திரேலியா அபொரிஜனர்களுடனான மீளிணக்கப்பாட்டுக்காய் பிரகடனமாய்ச்செய்திருப்பது “அவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள்’ என்பதுதான்.

  ஒரு அபொரிஜனருக்கு சிகிச்சை அளிக்கப்படும்போது அவர்கள் வரலாற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற வலிச்சுமையோடு இருப்பார்கள் என்ற நிதானத்தோடு பேசுங்கள் என்று மருத்துவக்கையேடு சொல்லுகிறது.

  சகமனிதர்களால் உணரப்படவேண்டிய வலி நிராகரிக்கப்படுகிற அல்லது அலட்சியப்படுத்தப்படுகிறபோது அது பழிவாங்குதலை நோக்கி நகருகிறது.

  உலகுக்கு தேவை பேசமுடியாதமனிதர்களின் வலியை பேசுபவர்கள் இல்லையா?

 5. சில விஷயங்கள்

  தன் அனுபவத்தால்தான் வலியைப் புரிந்து கொள்ள முடியும் என்று சொன்னால் ஒவ்வொரு தனிமனிதனின் வலியும் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஏனென்றால், நான் என் அனுபவத்தால் மற்றொருவருடைய வலியை உணர்கிறேன் என்றால் அங்கு நான் என் வலியைதான் மீண்டும் உணர்கிறேன், இப்போதும் என் நியாயங்கள்தான் இங்கு செயல்படுகின்றன. வேறொருவர், வெறு காரணங்களால் உணரும் வலிகள் எனக்குப் புரியாது, அவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

  இந்த உலகத்தில் வலியை அனுபவிக்காதவர்கள் யார்? நோய், வறுமை, மரணம் இவை நம்மில் எவருக்கும் புதிதல்ல. இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் வலியில்லாத உலகில் இருக்கிறோம் – மற்றவர்களுடைய வலியை கவனிக்க மறுக்கிறோம்.

  ஆயிரம் சொன்னாலும் ஆஸ்திரேலியா, கனடா, அமேரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மனித உரிமைக்கு முக்கியத்துவம் தருவதாகத் தெரிகிறது. படித்தவர்களில் சாதாரணர்களும் இந்த விஷயத்தில் தேவலை. அதற்குக் காரணம் மனித உரிமைகளை பொது உரிமைகளாகப் பார்க்க முயற்சிப்பதுதான் என்று நினைக்கிறேன்.

  ஆனால் இங்கு, என் வலி, உன் வலி என்ற போர் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. எந்த வலியும் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் நாம் சிந்திக்கப் பழகவில்லை.

  பேச முடியாதவர்களின் வலியை உணர வேண்டும், பேச வேண்டும் : ஆனால் உன் வலி என் வலி என்ற பேதங்களைக் கடந்து உலக வலி என்ற அளவில் அதை அணுக நாம் பழக வேண்டும்.

  அப்படிப் பழகினால் அடுத்தவர்களின் வலியை அங்கீகரிப்பது, நமக்கு அச்சுறுத்தலாக இருக்காது : இதை நான் என்னளவில் சொல்கிறேன். என் அச்சங்களால் சில வலிகளை நான் காணாதிருக்கிறேன்.

 6. நன்றி சார்.
  ’’தன் அனுபவத்தால்தான் வலியைப் புரிந்து கொள்ள முடியும் என்று சொன்னால் ஒவ்வொரு தனிமனிதனின் வலியும் அர்த்தமற்றதாகி விடுகிறது.””
  தனியனுபவம் மீளமீள பலரால் அனுபவிக்கப்படுகிறபோது சமுகம் கற்றுக்கொண்டுவிடுகிறது இல்லையா.மரணப்பிரிவு அத்தகையது.பலர் அனுபவத்தின் விளைவு அந்த வலி தனிமனிதனுக்கு ஏற்படுகிறபோது ஆழமானதாகவும் நியாயமானதென்ற அர்த்தங்கொண்ட ஏற்று ஆதரிக்கப்படுகிற வலிஆகிவிட்டிருக்கிறது இல்லையா?

  வெகுசிலர்தான் மற்றவர்களின் துன்பங்களை உணர்ந்துகொள்ளக்கூடிய நுண்ணுணர்வோடு இருக்கிறார்கள்.

  வலிக்கு அன்ன அர்த்தம்?வேதனைதான் அர்த்தம்.வலியை க்கடந்து அவன் செல்லவேண்டும்.வலியிலேயே அவன் வாழ்க்கை தேங்கிவிடக்கூடாது.

  அனுபவத்தினூடான வலியின் ஒத்துணர்வு ஆழமானது.

  நீங்கள் சொன்னதுபோல மரணம் ,வறுமை நோய் ஏற்படுத்துகிற வலிகள் பொதுவானவை.அவற்றை அனுபவித்தவர்கல் அனுபவிக்கிறவர்கள் எம்மோடு கூடவே இருக்கிறார்கள்.அதனால் தான் அது காலத்தோடு வலியற்றதாகிவிடுகிறது.இது கூட்டு அனுபவம் தருகிற பரிசு.
  .
  ஒருத்தருடைய மகன் இறந்துவிட்டால் அவர் உணருகிற வலி நியாய அனியாயங்களுக்கு அப்பாட்பட்டது. அதை யாரும் நிராகரிக்கப்போவதில்லை ஆகக்குறைந்தது அவரைச்சூழ இருப்பவர்களாவது… தந்தைகள் ஒத்துணர்வார்கள்.அதற்கு காரணம் மரணம் என்கிற பொது அனுபவம் தருகிற ஒத்துணர்வு அதுவே அதை காலப்போக்கில் ஆற்றுப்படுத்திவிடுகிறது.

  நோய் நிலையிலும் அது நிகழுகிறது.எமது சமுகம் உடல் நோய்வாய்ப்படுகிறபோது அந்தத்துன்பத்துக்கு ஆறுதலாக நடந்து கொள்ளுகிறது.(sick Role).
  ஆனால் மனநோய்கள் அந்தளவு ஆதரவைப்பெறுவதில்லை.
  இங்கே மனநோயாளிகள் உள்ள குடும்பங்கள் துன்பங்களைக்குறைப்பதற்கு உளத்துணை செய்கிறார்கள். உதரணத்துக்கு schizophrenia fellowship அதைத்தலைமை தாங்கி நடத்துகிறபெண்மணியின் மகள் அந்த நோயால் பாதிக்கப்பட்டவள்.
  இந்த நோயென்றில்லை பலவேறு நோய்களுக்குமான அந்த நோயை அனுபவித்துக்கொண்டிருப்பவர்களுக்கான குழுக்கள் இயங்குகின்றன.

  அனுபவம் சாராத ஒருவர் அந்தவேதனையை புரிந்து கொள்வதற்கு அவருக்கு கல்வி தேவைப்படுகிறது.மருத்துவர்கள் நோயாளிகளைப்பற்றி அவர்கள் உணர்வதை பற்றி நிறையக்கற்கவேண்டியிருக்கிறது.

  சாதாரணவாழ்க்கையில் அசாதரணநிகழ்வுகள் ஏற்படுத்துகிற வலியை சிலர் புரிந்துகொள்ளமுடிந்தாலும் பலரால் உணர்ந்து கொள்ளமுடிவதில்லை.
  ஒரு பெண் கற்பழிக்கப்படு வந்து நிற்கிறபோது அது அவளிடம் ஏற்படுத்தும் தாக்கம் வலி என்பது ஒரு சிலரால் உணரமுடியும். அதனால்தான் அவர்கள் ஆற்றுபடுத்தப்பட முடிவதில்லை.வாழ்நாள்முழுவதும் அச்சுமையைக்காவுகிறார்கள்.ஆனால் உண்ராதவர்கள் நியாய அநியாயங்களைப்பேசிக்கொண்டிருப்பார்கள். இங்கே பாதிக்கப்பட்டவரைக்குற்றஞ்சாட்டுதல் கூட நிகழும்.(victim blaming).நிராகரிப்புக்கூட எஞ்சும்.

  சார் உலக வலி உன் வலி என் வலி என்பதில்லை.முதலில் பேசமுடியாதவர்களுக்காகப்பேசுவதிலிருந்தான் என் வலி சமுகத்தின் வலியாகி உலகத்தின் பொதுவலியாகிறது.

  அபொரிஜனர் பேசமுடியதவர்களாகத்தான் இருந்தனர். அவர்களுக்காகப்பேசியது பேசக்கூடிய வெள்ளையினத்தவர்களே.
  வலியை உணர்ந்தோ உணராமலேயோ அபொரிஜனர்கள் சொல்வதை கேட்டு உரத்துச்சொல்வதிலிருந்து அபொரிஜனர்களின் வலி பொது ஆஸ்திரேலியாவுக்குமான துன்பமாக மாறும் பயணம் தொடங்கியது. சிலர் உணர்ந்து பேசினார்கள். அபொரிஜனை உரத்துப் பேச வழிசெய்தார்கள். பேசுகிற அபொரிஜனுக்கு துணையாக இருந்தார்கள்.

  ”why warriors lie and die” என்கிற நூலை படித்துக்கொண்டிருக்கிறேன்.இந்த நுலாசிரியர் அபொரிஜனர்களின் வலியை உணர்ந்து கொள்வதற்காக பலவருடங்களை செலவழித்திருக்கிறார்.அவர்களின் மொழியைக்கற்று அவர்களுடனேயே வாழ்ந்து இவர் வெளியிட்ட இந்த நூல் அபொரிஜனர்களின் சுகாதாரமேம்பாட்டிற்கான அடிப்படை நூலாகக்கருதப்படுகிறது.
  பேசமுடியாதவர்களுக்காக இவர் பேசியது அவர்களின் வாழ்வில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்குத்துணைபுரிகிறது.

  வலியைப்புரிந்துகொள்வதற்கு முதல்படி பேசுவது.ஒருத்தர் உணருவதை எந்த மதிப்பீடுமின்றி உரத்துச்சொல்வதில் தொடங்கவேண்டும்.

  நீங்கள் சொல்வதுபோல பேசமுடியதவர்கள் பேசமுடியாததற்கான அதே காரணங்கள் அச்சுறுத்துங்காரணங்கள் பொதுவாகவே மிகுந்துவிட்டன.எனக்கு வலியேற்படுத்தாதிருக்க அதைப்பேசாதிருக்கவேண்டித்தான் ஏற்படுகிறது.

  ஆனால் அச்சத்தில் பேசாதிருப்பதை நியாயப்படுத்தவேண்டி வலிகளை நிராகரிப்பதும் புதுக்காரணங்களை உருவாக்கவும் தலைப்படுகிறார்கள் பேசிக்கொண்டிருக்கிறசிலர் இல்லையா.:)

  “அன்று அனேகமான அபொரிஜினப்படுகொலைகள் நிகழ்ந்ததற்கும் ஒரு காரணத்தை கண்டுபிடித்துச் சொல்லி நியாயப்படுத்திக்கொண்டேதான் இருந்தார்கள் குடியேறிய வெள்ளையினத்தவர். அதில் முக்கியமானது பிரித்தானிய அரசின் சட்டத்துக்கு விரோதமான செயற்பாடுகள் என்பது.”

  (அப்போது நிகழ்ந்தது victim blaming)

  என்னவோ எல்லாம் நாம் வாழும் கிணறுகளைப்பொறுத்தது 🙂

  1. குறிப்பாக ஒரு விஷயத்தைச் சொல்லாமல் பொதுப்படையாக – கொஞ்சம் abstract செய்து பேசுவதில் நமக்கு ஒரு தொலைவு கிடைக்கிறது, அதனால் அதை இன்னும் கொஞ்சம் சரியாகப் பார்க்க முடியுமோ என்ற ஒரு முயற்சி… ஆனால் சில சமயம் அது தப்பித்தலாகவும் ஆகிவிடுகிறது. அப்படி தப்பித்தலாக மாறும்போது பேசும் விஷயத்தில் தெளிவு கிடைப்பதில்லை.

   ஆறா வடு நாவலைப் படித்திருக்கிறேன். அதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் எல்லாருக்கும் அவரவருக்கு உரிய நியாயத்தைச் சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அமைதிப் படைக்கு மட்டும் அது மறுக்கப்பட்டு விடுகிறது. இலங்கை ராணுவ வீரனின் ஏழ்மை, அவனுடைய நிர்பந்தங்கள் போன்றவை பேசப்பட்டு, அவனோடு அண்ணா தம்பி என்ற உரையாடல் நடப்பது போல் கதை செல்கிறது. அமைதிப் படையில் இருந்த ராணுவ வீரனும் அவனைப் போன்ற ஒருவன்தானே? அவனது உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதில்லை : ஒரு கொலைகாரப்படையாக மட்டும் அவர்கள் இருக்கிறார்கள்.

   நான் இதைப் பற்றியெல்லாம் எழுதி, இன்றுள்ள நிலையில் இதுதான்+இந்தியாவைக் குற்றம் சாட்டுவதுதான்- சகோதர இலங்கை அரசுடன் இணக்கமான உறவை உருவாக்கும் என்றால், அப்படியே ஆகட்டும், ஏதோ ஒரு பொதுப் புள்ளியில் ஒரு துவக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண முடிந்தால் நல்லதுதான்,” என்று எழுத நினைத்தேன்.

   அப்புறம், இதெல்லாம் நமக்கு அதிகம் தெரியாத, பிரச்சினைக்குரிய விஷயங்கள் என்று விட்டுவிட்டேன். ஆனால் மனதில் என்னவோ அந்த நாவல் அவரவருக்கு உரிய நியாயங்களுடனும் அதன் அறியாமைகளுடனுடன் அதனால் ஏற்படும் தவிர்க்க முடியாத பிழைபுரிதல்கள் அச்சங்கள் துரோகங்கள் என்று போரிடும் சகோதரர்களுக்கிடையே ஒரு ஆக்கிரமிப்புப் படையாக, அராஜகப் படையாக அமைதிப் படை செயல்பட்டது என்ற தோற்றத்தை உருவாக்குகிறது என்ற எண்ணமே இருந்தது.

   —-

   என்னைப் பொறுத்தவரை அமைதிப் படை ஒரு வன்செயலைக் கூட செய்திருக்கக்கூடாது. ஒன்றா நூறா என்பது கேள்வியாக இருக்கவே முடியாது. ஒன்றே ஒன்றுதான் என்றாலும் அது தவறுதான். அதற்கு அனைவரும் பொறுப்பேற்றாக வேண்டும். எத்தனை என்று எண்ணி, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் குற்றத்தின் தன்மை தீர்மானிக்கப்படுவது சரியில்லை.

   ஆனால் இந்தப் புரிதல் இங்கு வர வெகு நாளாகும். காரணம் நமக்கென்று சில அச்சங்கள் இருக்கின்றன. அவற்றைத் தாண்டி நாம் செல்ல வேண்டுமானால் இவை universal valuesஆக மாறத் தேவையான abstraction இருக்க வேண்டும். அப்போதுதான் ‘நான் செய்தால் சரி, நீ செய்தால் தவறு’ என்ற மனப்போக்குக்கு அவசியம் ஏற்படாது.

   உலகில் எங்கே என்ன நடக்கிறது என்பது முதலில் தெரிய வேண்டும். அப்போதுதான் நம் மேதைமை, மெத்தனம் சரியாகும். அபோரிஜினல்களை ஆஸ்திரேலிய அரசு எப்படி அணுகுகிறது என்பது போன்ற விஷயங்கள் பரவலாக அறியப்படுவது நம் மனசாட்சிக்கு உணர்வூட்டும் ஒரு செயலாக இருக்கும்.

   பொதுவாக இங்கு எதற்கும் உணர்ச்சிகரமான மொழியைக் கையாள்கிறோம். “அவன்தானே நீ?” என்று எளிதில் கட்சி கட்டிவிடுகிறோம். ஒரு விஷயத்தைப் பேசும்போது நம் கருத்துகள் சரியாக இருக்கலாம், தவறாக இருக்கலாம், ஆனால் அதன் அடிப்படையில் நம் மீது முத்திரைகள் குத்தப்பட்டு அந்த முத்திரைகளுக்கு விழ வேண்டிய அடிகள் நம் மீது விழும்போது மெல்ல மெல்ல எல்லாரும் மௌனமாகி விடுகிறோம்.

   படிக்காதவர்களுக்குக் கல்வி கொடுப்பதைவிட, அதிகம் படித்தவர்களுக்கு எப்படி உரையாட வேண்டும் என்பதை நம் பள்ளிகள் சொல்லித் தர வேண்டும் 🙂

   00000

   அண்மையில் இந்தப் பத்தியைப் படித்தேன் :

   The best expression of this new terra ethica was articulated by Michael in Bernhard Schlink’s novel The Reader, on which the film was based: “I wanted simultaneously to understand Hanna’s crime and to condemn it. But it was too terrible for that. When I tried to understand it, I had the feeling I was failing to condemn it as it must be condemned. When I condemned it as it must be condemned, there was no room for understanding. But even as I wanted to understand Hanna, failing to understand her meant betraying her all over again. I could not resolve this. I wanted to pose myself both tasks – understanding and condemnation. But it was impossible to do both.”[3] In other words, when we try to understand the crime, then we stop condemning it; and when we condemn, then we stop understanding it.

   http://www.eurozine.com/articles/2012-03-02-horvat-en.html

 7. அமைதிப்படை சம்பவங்கள் பெரும்பாலும் உண்மையானவை.

  அமைதிப்படையின் கொடூரம் எதிர்பார்க்காதது.அதிர்ச்சி தந்தது.

  எனது ஆசிரியர் ஒருவரின் மனைவி கற்பழிக்கப்பட்டவர்களில் ஒருவர். அவர்கள் பெண்ணாக இருந்தால் கிழவிகளைக்கூட கற்பழித்தார்கள்.(முன்னேறும்போது)அப்படி ஏன்கற்பழித்தார்கள் என்று நாங்கள் எங்களுக்குள் ஒரு காரணத்தையும் கூடக்கொண்டிருந்தோம்.

  வல்வெட்டித்துறையில் ஒரு படுகொலையை நடத்தினார்கள்.அதில் கொல்லப்பட்டவர்களில் என்னோடு படித்தவனும் ஒருவன்.அது நடந்து சிலமாதங்களுக்குப்பிறகு நடந்த அமைதிப்படையின் ஒரு துடைத்தல் நடவடிக்கையில் நான் அகப்பட்டுக்கொண்டேன். நான் முன்னே சென்று துப்பரவாக்கும் பணியில் அமர்த்தப்பட்டேன்.எங்களை முன்னேவிட்டு நாங்கள் வேலிகளைவெட்ட அவர்கள் தொடர்வார்கள்.பணயம்தான்.

  புலிகள்ஒதுங்கிவிட்டதால் நாங்கள் தப்பித்தோம்.
  அமைதிப்படை இலங்கை இராணுவத்தைவிட மோசமானது என்ற அபிப்ப்ராயம் பொதுவானது. அதற்கு மிக முக்கியகாரணம் மொழி.ஆங்கிலத்தில் கூட அவர்களோடு பேசமுடிவதில்லை.அவர்களுக்கு சமுகக்கட்டமைப்பு புரியவேயில்லை.இலங்கை ராணுவத்தோடு பேசிக்கொள்ளலாம்.அரச உத்தியோகதர்கள்,தரம் என்பவற்றை அவர்களுக்கு விளங்கவைக்கக்கூடியதாக இருந்தது.

  ஒவ்வொருவருடமும் யாழ் ஆஸ்பதிரியில் அமைதிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மருத்துவர் தாதியர்கள் ஊழியர்களை நினைத்து பிரார்த்தனைசெய்வார்கள்.

  தகவல்தொழில்நுட்பயுகத்துக்கு முன்னர் நிகழ்ந்ததால் இந்திய அமைதிப்படை உலகச்செய்திகளில் அடிபடாமல் தப்பியிருக்கிறது.

  இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு கேலிக்கூத்து.தான் நினைத்தபடி ஒரு ஒப்பந்தத்தைப்போட்டு இன்னொரு நாட்டில் புகுந்து அதன் மக்களையும் போராளிகளையும் கொல்லுகிற அதிகாரத்தை இந்தியாவுக்கு எது அளித்தது?மேலாதிக்கவாதச்சிந்தனை.
  என்னத்தைச்சொல்வது

  ஈழப்போர் சகோதர யுத்தங்களுக்கும் இரத்தத்தில் தோய்ந்ததற்கும் காரணமாயிருந்தது திரைமறைவில் போராட்டத்தை திருகமுனைந்து கொண்டிருந்த இந்தியாவின் கரங்களே என்பதை எல்லோரும்உணர்ந்துதானிருந்தோம்..இருக்கிறோம்.

  அப்போது இலங்கைராணுவம் பலாலியினூடாக தமிழ் இளைஞர்களை தெற்குக்கு தப்பியோட உதவியும் செய்தது என்பது காலத்தின் கோலம்

  நீங்கள் ஆங்கில எழுத்தாளர் பிரிட்டிஷ் இன் காலனியாதிக்கவாதத்தை எதிர்க்கவில்லை அவரை பாரதியோடு ஒப்பிடமுடியாது ஜார்ஜ் ஆர்வெல் ஐ ஒப்பிடலாம் என்று எழுதியிருந்தீர்கள்.

  இந்தியமேலாதிக்கவாதத்தை அதன்விளைவின் இரத்தக்களரியை எந்த எழுத்தாளர் இதய சுத்தியோடு எழுதப்போகிறார் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்.இந்தியராணுவம் எங்களை வாட்டிக்கொண்டிருந்தபோது ஜெயகாந்தன் அன்புவழி வானொலியில் இராணுவத்துக்காகப்பேசி என் எழுத்துலகின் எழுத்தாளர்களின் கற்ற்பனப்பிரேமையை உடைத்து என் மூன்றாம் கண்ணைத்திறந்துவைத்தார்.:)

  இந்திய அமைதிப்படை காலம் பற்றி ஒரு நாவலே எழுதலாம்.இந்தியப்படையின் பிரிவுகள் தோடப்ட்டைச்சின்னங்கள். தலைவிரித்து உலர்த்தும் சீக்கியர்கள்.கூர்க்காப்படையணி.சுக்குமார் என்ற கேரளாக்கொமண்டர் ஊர்மொத்தமாய் வளைத்து தியேட்டரில் வைத்துத்தாக்கியது.தேடித்திரியும் இந்திய ராணுவத்தின் பின்னாலேயே ஒரு கையில் ஏகே 47 ஓடு தொடருகிற புலிப்ப்டியன்.அவனைப்பொத்திப்பாதுகாத்த ஊர். என்னோடு படித்து தெற்றுப்பல் தெரிய ச்சிரிக்கிற அருள்தாஸ்.
  பரா மிலிட்டரி தீப்பெட்டி ஜீப்பில் துரத்தி ஜீப்பலாயேமோதிக்கொல்லப்பட்ட சுருளி.இப்படிப்பலர்

  இந்தியராணுவ காலம் இப்படி மனம்முழுக்க நிறைந்திருக்கிற கதைகள்.

  இந்திராகாந்தி மரணித்தபோது முதிர்சிறுவர்களாயிருந்த நாங்கள் எங்கள் வீட்டின் முன் பத்திரிகைப்படத்தை ஒட்டிவைத்து தீபங் கொழுத்தி கருப்புக்கொடி கட்டியிருந்தோம்.
  இந்தியப்படை விதைத்துவிட்டுச்சென்ற வெறுப்பும் கோபாஊ ராஜீவ் காந்திகொல்லப்பட்டபோது பாவத்துக்கு தண்டனை என்று அப்போது நினைக்கவைத்தது என்பதைச்சொல்லத்தான் வேண்டும்.

  ராஜீவ் கொலையைத்தூக்கினால் அமைதிப்படை அட்டூழியங்களை பதிலுக்கு தூக்குகிற ஒரு நிலை தென்படுகிறது

  அமைதிப்படைவீரனின் மனப்பாங்கு பற்றி எழுதவேண்டும்.PTSD உலகப்போர் யுத்தத்தை விட வியட்நாம் யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்க வீரர்களை பெருதும்பாதித்தது.
  நியாயமற்ற யுத்தத்தில் போரிடுகிறோம் அல்லது தெளிவற்ற இலக்குகளோடு போரிடுகிறபோது அவர்கள் PTSD பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

  அமைதிப்படை இந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும். அதை ஆற்றுப்படுத்தவேண்டியது இந்திய அரசும் இந்தியராணுவ அமைப்பு .யுத்தத்தில் ஈடுபடுத்தியவர்கள் எந்தக்குற்ற உணர்வுமின்றி இருக்கிறபோது ஒரு வீரன் ஏன் பாரத்தைச்சுமக்கவேண்டும்.இப்படியும் பேசலாம்.

  இதில் குற்ற உணர்வுக்காளாகவேண்டியது அரசியல்வாதிகளும் இந்தியப்புலனாய்வு அதிகாரிகளுந்தான்.
  அந்தக்குற்றப்பழியுணர்வைமுள்ளிவாய்க்காலில்த்தீர்த்துக்கொண்டுவிட்டார் நாராயண்.

  இந்திய அரசு இறந்த இராணுவ வீரர்களுக்கு இலங்கையில் நினைவுத்தூபி எழுப்பியிருக்கிறது.

  30வருடங்கள் ஒவ்வொருமுறையும் ஏன் என்ற வினாவோடுதான் இயங்கிக்கொண்டிருக்கிருக்கிறேன் நான் மாத்திரமல்ல என்னைபோன்ற் பலரும்.எனக்குச்சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள்.ஐரிஷ் காரர் என்னோடு ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்.இந்தியாவின் ஒவ்வொருமானிலத்தைச்சேர்ந்த ஒருவரோடாவது தினமும் பேசச்செய்கிறேன்.கேரளாக்காரரோடு முல்லைப்பெரியாறு பற்றி உரையாடியிருக்கிறேன்.பாலஸ்தீன டாக்டரோடு யூதர்கள் பற்றிப்பேசத்தான் செய்கிறேன்..என் உலகம் விரிந்து கொண்டிருக்கிறது.பார்வைகளுந்தான்.

  ஒரு மேலோட்டமான தளத்திலேயே கருத்தாடல்கள் நிகழுகின்றன.வரலாறு தெரியாமலேயே பலர் கருத்துச்சொல்லுகிறார்கள்.

  1915 ஆம் ஆண்டு ரொக்பெல்லர் பவுண்டேஷனிலிருந்து கொழுக்கிப்புழு நோயை மலையகத்தமிழர்களிடைய கட்டுப்படுத்தவந்த டாக்டர் அப்போது எழுதியதை இப்போது படிப்பவர்கள் அவர் புலிக்குச்சார்பானவர் என்று சொல்லக்கூடும்.
  ”நான் கொழும்பில் இறங்கியபோது சிலோன் சிங்களவர்களுக்கே(ceylon for sinhalese) என்ற சுலோகம் (slogan)எங்கும் தென்பட்டது.”

  மேலும் அவர் அன்றைய நிலையை விளக்கி . பெரும்ப்பான்மைச்சிங்களவ்ர்கள் தமிழர் பறங்கியர் போன்றவர்களோடு பகிர்ந்து கொள்ளமறுக்கிறார்கள் என்று குறிப்பிடவும் செய்கிறார்.

  அவர் வந்து நூறுவருடங்களாகப்போகிறது.இன்னும் வெறி கூடியிருக்கிறது வரலாற்றின் வலிச்சுமையும்.

  கெவின் ருட் ஆஸ்திரேலியப்பிரதமர் அபொரிஜனர்களிடம் மன்னிப்புக்கேட்க 100 வருடங்கள் எடுத்தது.

 8. நீங்கள் சொல்லும் தகவல்கள் எதையும் நான் மறுக்கவில்லை – அது முடியவும் முடியாது.

  ஜார்ஜ் ஆர்வெல்லைப் போல் தார்மீக அறவுணர்வோடு சிந்திப்பவர்கள் இங்கு தலையெடுக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். பல சாதிகளாகவும் மொழிகளாகவும் சமயங்களாகவும் அரசியல் பிரிவுகளாகவும் இருக்கும் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான மனச்சாய்வுகள் இருக்கின்றன. அந்த மனச்சாய்வை மறைக்காமல் வெளிப்படுத்துகிறார்களா என்ற அளவில்தான் நேர்மை இருக்கிறது.

  “ஈழப்போர் சகோதர யுத்தங்களுக்கும் இரத்தத்தில் தோய்ந்ததற்கும் காரணமாயிருந்தது திரைமறைவில் போராட்டத்தை திருக முனைந்து கொண்டிருந்த இந்தியாவின் கரங்களே என்பதை எல்லோரும் உணர்ந்துதானிருந்தோம்..இருக்கிறோம்”

  என்று எழுதுகிறீர்கள்.

  ஏறத்தாழ இதே கருத்தை ஜெயமோகன் தன் உலோகத்தில் வெளிப்படுத்துகிறார என்று நினைக்கிறேன். நமது இந்த விவாதத்துக்குக் காரணமாக இருந்த அவரது கருத்துகளா அல்லது ஜெயமோகன் ஜெயமோகனாக அறியப்பட காரணமாக இருந்த அவரது புனைவா எதில் வெளிப்படும் உண்மை காலத்தில் நிற்கிறது என்று பார்ப்போம்.

  அந்த நினைவையொட்டி அவரைக் காலம் மன்னிக்கலாம் அல்லது கண்டனம் செய்யலாம்.

  நன்றி.

 9. சார் தமிழில் இந்தப்பதிவில் குறிப்பிட்டது போன்ற நல்ல விஷயங்களையும் அழ்காகத்தர அவரால்தான் முடிகிறது.

  ஜெமோ சுவடிக்காலத்தில் பிறந்திருந்தால் எத்தனை பனை ஓலை தேவைப்பட்டிருக்கும்?

  அப்போது புலவராக இல்லாமால் ஒரு வாள்வீரராக இருந்திருந்தால் இரவு பகலாய் வாளைச்சுழற்றிக்கொண்டே இருந்திருப்பார்.
  உறை துருப்பிடித்திருக்கும். 🙂 🙂

 10. 🙂

  அவரைப் போல் இன்னும் நான்கைந்து பேர் இப்படி ஊர்ப்பட்ட விஷயங்களையும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் அவர் சொல்வது தனித்துத் தெரியாது…. ஆணால் இங்கே பேசுபவர்கள் குறைவு, நம்புபவர்கள்தான் அதிகம்.

    1. ஓ, சாரி, நீங்க வரசித்தன்ட்ட சொன்னீங்களா?

     என்கிட்டதான் கவிதை கேக்கறீங்க அப்படின்னு சிரிச்சுட்டேன். ஸாரி சார்.

     நானும் வரசித்தன் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 11. “அடக்குமுறை வலி, வலி இருப்பது நிராகரிக்கப்படுதலால் ஏற்படுகிற வலி என இரண்டு வலிகளை அடக்குமுறை உருவாக்கும்.”

  எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! வலி இருப்பது நிராகரிக்க படுதலால் ஏற்படுகிற வலி அகத்தில் ஏற்படுவது, அதன் காயம் ஆற காலங்கள் தேவைபடுகிறது. அக்காயம் ஆறாமல் இருக்கும் காலம் தோறும் (அல்லது ஆற்ற படாமல் வைத்திருக்கப்படும் காலம் தோறும) அது உண்டாக்கும் விளைவுகள் எதிர்மறையாகவே இருக்கின்றன.

  ஒருவரது வலியை இன்னொருவர் உணர முடியாது, ஆனால் ஏற்று கொள்ள முடியும். பிறர் வலியை கேலி செய்வதும், அலசுவதும், கருத்து என்ற பெயரில் கொச்சை படுத்துவதும மன்னிக்கவே முடியாது.

  1. அட! நீங்களும் இந்த ப்ளாகைப் படிச்சுக்கிட்டுதான் இருக்கீங்களா?

   யாருக்காக நீங்கல்லாம் படிக்கறீங்கங்கறது ஒவ்வொருத்தரா கமெண்ட் பண்றதைப் பாத்தாலே தெரியுது 🙂

   நல்லா இருங்கப்பா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s