என் கண்ணின் பாவையன்றோ…

அறிவுடைநம்பியிடம் ஜெகன் அன்றைக்கு அலுவலகத்தில் நடந்த ஒரு விவகாரத்தின் அற நியாயங்களைப் பேசப் போய் அதுவே ஒரு பெரிய விவகாரமாகி, அதைவிட ஒரு பெரிய விவகாரத்தில் முடிந்து விட்டது.

அறிவுடைநம்பி சொன்னதன் சாராம்சம், “அறம் இடத்துக்கு இடம், நபருக்கு நபர் மாறுபடும். அது ரிலேட்டிவ்வான ஒன்று. எனக்கு சரியாக இருப்பது உனக்கு சரியாக இருக்காது. அனைவருக்கும் பொதுவான அறம் என்று ஒன்றை வலியுறுத்துவது சர்வாதிகாரத்திலும் அடக்குமுறையிலும்தான் முடியும். அப்படி வலியுறுத்தப்படும் அறம் அறமாகவே இருக்காது”

ஜெகன் சொன்னதன் சாராம்சம், “அறம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இல்லாவிட்டால் அது அறமாகவே இருக்க முடியாது. என்னைப் பொருத்தவரை, ‘எல்லாரிடமும் அன்பாக இருக்க வேண்டும்,’ ‘யாரையும் வெறுக்கக் கூடாது,’ ‘யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது,’ என்பதெல்லாம் எல்லாருக்கும் எப்போதும் பொருந்தும் அறங்கள். இவற்றைக் கடைபிடிக்க முடியாதது நம் தப்புதான். அதற்கு சூழ்நிலையைக் குற்றம் சொல்ல முடியாது.”

ஐந்தரை மணிக்கு அலுவலகம் முடிந்து விவாதம் ஆரம்பித்தது. ஒரு மணி நேரமாக எவ்வளவு சொன்னாலும் கேட்காமல், அறிவுடைநம்பி, “உன் மனைவியையோ மகளையோ ஒருவன் பலவந்தப்படுத்தும்போது நீ என்ன செய்வாய்?” என்ற புராதானக் கேள்வியையே வெவ்வேறு திசைகளிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தான். “இது போன்ற யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. அப்படி சொல்லப்படும் பதில்களுக்கு அர்த்தம் கிடையாது. அப்படியே நான் அவனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தாலும் அது என் செயலை நியாயப்படுத்தாது,” என்று பொறுமையாக பதில் சொல்லிப் பார்த்தான் ஜெகன்.

கடைசியில், “உன்னை மாதிரி முட்டாள்களிடம் எவ்வளவு சொன்னாலும் அதையேதான் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். உங்கள் உடலில் அவ்வளவு மூர்க்கத்தனம் இருக்கிறது, ரத்தத்தில் அவ்வளவு கொழுப்பு, மூளை அவ்வளவுக்கு வன்முறையில் ஊறியிருக்கிறது” என்று வெறுத்துப் போய் கத்தவும்தான் அறிவுடைநம்பி அடங்கினான்.

“சே! எப்போதும் கோபம் வராத ஜெகனைக் கோபப்படுத்தி விட்டோமே<” என்று அறிவுடைநம்பிக்குக் குற்ற உணர்ச்சி வந்திருக்க வேண்டும். வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஜெகனை அவன் ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துப் போய், ஒரு செட் பஜ்ஜி, அப்புறம் ஒரு மைசூர் மசாலா தோசை, ஸ்ட்ராங்கான காப்பி என்று வாங்கிக் கொடுத்து, சிரிக்கச் சிரிக்கப் பேசி, சமாதானப்படுத்தித்தான் அனுப்பி வைத்தான்.

அதற்கப்புறம் ஜெகன் வீடு திரும்பும்போது எட்டு மணி ஆகிவிட்டது. பளபளக்கும் உடைகள் அணிந்த அக்கம் பக்கத்துக் குழந்தைகள் தங்கள் கைகளில் சிறுசிறு பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதைப் பார்த்தபோதுதான் அவனுக்கு இன்று தன் மகனுடைய பிறந்த நாள், ஆறு மணிக்கே வீட்டுக்கு வந்துவிடும்படி அவன் காலையில் கேட்டுக் கொண்டிருந்தான் என்பது நினைவுக்கு வந்தது.

ஆன மட்டும் கெஞ்சியும் கொஞ்சியும் மகன் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டான். அதுவாவது பரவாயில்லை, அதுவரை பொறுமையாக இருந்த ஜெகனைப் பார்த்து அவன் கடைசியாக, “நீயெல்லாம் ஒரு அப்பாவா! சீ!” என்று வெறுப்பை உமிழ்ந்ததும்தான் அவனுக்குக் கோபம் வந்தது.

“பன்னெண்டு வயசுதான் ஆவுது, யாரைப் பாத்து என்ன பேச்சு பேசற? உன்னை மாதிரி நான் என்ன ஜாலியா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டியா? எவ்வளவு டிராபிக்ல வேலைக்குப் போய், நாள் முழுக்க வேலை செஞ்சுட்டு, களைச்சுப் போய் அரக்கப் பறக்க ஓடி வரேன், அதைப் புரிஞ்சுக்காம நீயெல்லாம் ஒரு அப்பனான்னு கேக்கறியே! உன்னைப் பெத்து உசிரைக் குடுத்து வளக்கறேன் பாரு என்னைச் செருப்பால அடிக்கணும்” என்று கத்திவிட்டான் ஜெகன். அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டிருந்தது.

அவனது மனைவியாவது சும்மா இருந்திருக்கலாம். “என்னங்க, சின்னப் பையன் ஏதோ தெரியாம சொல்லிட்டான், லேட்டா வெறுங்கைய வீசிட்டு வந்ததுமில்லாம பிறந்த நாளா அதுவுமா அவனைக் கண்டபடி திட்டறீங்க. இது உங்களுக்கே நல்லா இருக்கா?” என்று ஆரம்பித்து விட்டாள் அவள். பொதுவாக அவள் இப்படி ஆரம்பித்தால் ஒரு மணி நேரத்துக்கு ஊரைக் கூட்டிவிட்டுத்தான் ஓய்வாள். அன்றும் அப்படிதான் நடந்தது.

அவள் அப்படி ஓயுமுன் ஜெகன், “சீ சனியனே! அப்பன் வீட்டுக்கு ஓடிப் போனவளை வெக்கமில்லாம உங்க அக்கா கெஞ்சினாள்னு அழைச்சுட்டு வந்து ஒரு பிள்ளையைப் பெத்துக் குடுத்து உனக்கும் அவனுக்கும் சோறு போட்டு வெச்சிருக்கேன் பாரு, ஆபிஸ்ல வேலை செஞ்சு அசந்து வர மனுசனை நிம்மதியா ஒரு நிமிஷம் உக்கார விட மாட்டேங்கறீங்க ரெண்டு பேரும், உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது நன்றி இருக்கா!” என்று கத்த வேண்டியதாகியது., அப்படியும் அவள் ஏதோ வாயெடுக்கவே, கன்னத்தில் ஒன்று கொடுத்துதான் விவாதத்தை முடித்து வைத்தான் ஜெகன்.

அப்போதே அவள் அவனைப் புரட்டிப் போட்டு நாலு மிதி மிதித்திருந்தால் அவனது கதை முடிந்திருக்கும். ஆனால் அதைச் செய்யாமல், பொங்கி வரும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டு தாலிக் கொடியை கண்ணில் ஒற்றிக் கொண்டு நல்ல மனைவியாய் லட்சணமாய் அவனுக்கு சுடச் சுட பூரிக் கிழங்கு சமைத்துக் கொடுத்தாள்.

அத்தனை நேரப் போராட்டத்துக்குப் பின் அது ஜெகனின் வாய்க்கு அமிர்தமாய் இருந்தது. அதைச் சாப்பிட்டுவிட்டு படுக்கப் போனால் அவனது பையன் அங்கு ஒரு ஓரமாய் சத்தமில்லாமல் அழுதுக் கொண்டிருந்தான். பாவமாகத்தான் இருந்தது, இருந்தாலும் ஜெகன் அவன் தன் தவறை உணரட்டும் என்று மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, Francois Laruelle என்ற பிரஞ்சு நாட்டு தத்துவ மேதை எழுதிய, “Philosophies of Difference – A critical introduction to non-philosophy” என்ற ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகத்தைப் படிக்கலானான்.

(தமிழகத்து தத்துவ மேதை ஒருவர் எப்போதோ எழுப்பி பதிலளிக்காது விலகிய கேள்வியொன்றையும் அதன் பதிலையும் அவன் அந்தப் புத்தகத்தில் மங்கலான வெளிச்சத்தில் கண்டான். தெரிதா சொல்வதாகத் தான் வாசித்ததை ஜெகன் இவ்வாறு பொருள் செய்து கொண்டான் (இது ஒரு ஆவணப்படுதலுக்காக) :

“துக்கித்தல் துக்கமானதன் மறைதலில் முடிதலே இயல்பு. ஆனால் அவ்வாறில்லாமல் அத்தகைய துக்கத்தின் சாரத்தைக் கடந்து செல்வதான ஒரு துக்கித்தலை நாம் கற்பனை செய்து கொள்ள முடியும். இத்தகைய துக்கித்தல் நினைத்தும் பார்க்க முடியாதது. சிந்தைக்கப்பாற்பட்டது. ஆனால் அப்பால் செல்லாத இந்த அடியெடுத்தலின் நினைப்புக்கெட்டாத தர்க்கமே தெரிதாவின் நாட்டமாக இருக்கிறது. துக்கத்துக்கு அப்பாற்பட்டது எதுவோ அதன் இயக்கம் தன்னை துக்கித்தலின் பணியில் ஒப்புக் கொடுத்துக் கொள்ள முடியும். அப்படிச் செய்யும் ஒருவன் இறுதியில் இன்ப நாட்டத்தைக் கடத்தல் என்ற முட்டுச்சுவருக்குக் கொண்டு செல்லும் விசைக்கே திரும்பவும் வருவான். அப்பால் செல்லாத இந்த அடியெடுத்தலின் நினைத்தும் பார்க்க முடியாத தர்க்கமே நினைப்பதற் கரியதற்கு நிழலுருவமாவது கொடுக்கிறது. அப்பால் செல்லாத இந்த அடியெடுத்தல் எனும் புதிர்ப்பாதையில் முன்செல்லத் தூண்டியும் தடுத்தும் துணை நிற்பது ஈர்ப்பும் ஈர்ப்பின் பகுப்பாய்வும் : ஈர்ப்பு. ஈர்ப்பின் தன்னோக்கிய ஈர்ப்பு: ஈர்ப்பின் தன்னாட்டம். தன்னைவிடாத ஈர்ப்பு. இந்த முடக்கமே இருப்பின் கட்டற்ற இருப்பு.”

வண்ணநிலவனின் பாம்பும் பிடாரனும் என்ற கதையின் பாம்பு-மகுடிக்காரனின் நிலை போல இது என்று நினைத்துக் கொண்டான் ஜெகன். மகுடியும் அதன் இசையும் அவனது அச்சமும் பாம்பின் வானோங்கிய தலையும் அதன் குவிமையமும் அதன் கொடுவாயும் அதன் ஆடலும் ஒருமித்த ஒரு அபாரமான நிலையை ஐரோப்பியரான தெரிதா எப்படியோ தெரிந்து கொண்டு இப்படி விவரித்திருக்கிறார் என்பது ஜெகனின் கதைச் சுருக்கமாக இருந்தது : குரல்வளையைப் பிடித்த துக்கத்தின் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற துக்கித்தல் லயமாகி துக்கத்தில் தோய்ந்து தன் தோய்தலில் அதன் துயரைக் கடந்து அதன் தவிர்க்கமுடியாத் தன்மையில் உலக விடத்தை, அதன் துக்கத்தைத் தன் கண்டத்தில் இருத்திக் கொள்ளும் நிலை இது என்று கற்பனை செய்து கொண்டான் ஜெகன். சம்போ மகாதேவ!)

ஜெகனின் மனம் இவ்வாறு உலகத்தின் துயருக்கெல்லாம் விடை கண்டு கொண்டிருந்ததை அறியாத அவன் மகன், “அப்பா, கோவமா?” என்று அவனது வாசிப்பைக் கலைத்தான்.

“எனக்கென்னடா கோவம்?” என்று புத்தகத்தைக் கீழே வைத்த ஜெகனிடம், “ஸாரி!” என ஆரம்பித்து ஏதேதோ பேசிக் கொண்டு அவனது கழுத்தை கட்டிக் கொண்டு மகன் தூங்கிப் போன கொஞ்ச நேரம் கழித்து பிரச்சினை இரண்டாம் ரவுண்டு வந்தது.

இம்முறையும் ஜெகனின் மனைவிதான். தன் வேலைகளை முடித்துவிட்டு கை கால் முகம் கழுவிக் கொண்டு சோப் வாசனையுடன் படுக்கையறைக்குள் நுழைந்தாள் அவள். அவள் நைட்டிக்கு மாறும் வரை ஜெகனுக்கு இருந்த பொறுமை அவள் படுக்கையில் உட்கார்ந்ததும் அவளது முகத்தில் தெரிந்த களைப்பையும் வருத்தத்தையும் பார்த்ததும் காணாமல் போனது.

“என் குட்டி ராணிக்கு இன்னும் என்னடா வருத்தம்?” என்றான் ஜெகன், அவள் தோளில் கைபோட்டு அவளைத் தன் பக்கம் வளைத்து.

அவனது மனைவி தன்னை விடுவித்துக் கொண்டு அவனது கைகளைத் தன் கைகளில் பொதித்தாள். அவன் கண்களை நெருங்கி வந்து பார்த்தாள். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்கள் இருவரும், காரின் முகப்பொளியில் மாட்டிக் கொண்ட முயல் போல் ஜெகன் முழித்தான்.

“பிச்சைக்கார நாயி, நீ கெட்டக் கேட்டுக்கு உனக்கு குட்டி ராணி கேக்குதா?” ஜெகனின் தலையில் நங்கென்று ஒரு குட்டு விழுந்தது. வலியில் சுர்ரென்று மேலேறிய கோபம் அவள் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தாமதித்தது. “ஏய்…பிச்சிப்புடுவேன் பிச்சி!” என்றான் ஜெகன், செல்லமாக, தன் வலியை வெளிக்காட்டிக் கொள்ளாமல். ஆனால், அவனது மேலுதடு குழப்பத்தில் நடுங்கி இறுகிக் கொள்ளத் தாமதித்ததால் அந்த ‘ஏய்,’ அழுகையின் ஆயத்தக் குரல் போல் ஒலித்தது.

“அதானே உனக்குத் தெரியும்?” என்றாள் அவள். “எல்லாத்தையும் எடுத்துக்கத்தானே தெரியும், எதையாவது உன்னால கொடுக்க முடியுமா? கேள்வி கேட்டா எங்க சந்தோஷத்தைக் கெடுப்ப. உன்னால வேற என்ன முடியும்? பூரிக் கிழங்கு ஆக்கிப்போட்டா நல்லா தின்னுட்டு, பச்சைப் புள்ளையை அழப்பண்ணி அவனை மன்னிப்பு கேக்க வெச்சுட்டு, இப்ப என்கிட்டே கொஞ்சலா? மனுசன்தானே நீ? சோறுதானே…”

அவளது கன்னத்தில் விழுந்த அடி அன்றைய உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. அப்போதுகூட அவள் அவனைப் புரட்டிப் போட்டு நாலு மிதி மிதித்திருந்தால் அவனது கதை முடிந்திருக்கும். ஆனால் அதைச் செய்யாமல், பொங்கி வரும் கண்ணீரை நைட்டியில் துடைத்துக் கொண்டு தாலிக் கொடியை கண்ணில் ஒற்றிக் கொண்டு நல்ல மனைவியாய் லட்சணமாய் தூங்கிப் போனாள்.

ஜெகன் எப்போது தூங்கினான் என்று தெரியாது, ஆனால் அவன் எழுந்திருக்கும்போது மூளை பளிச் என்று கழுவி விட்டது போலிருந்தது. “ஆஹா!” என்று தன் அறிவின் பிரகாசத்தைக் கண்டு பிரமித்தான் அவன். “அதிகாரம் சீரழிக்கிறது, முழு அதிகாரம் முழுமையாகச் சீரழிக்கிறது என்றானே பர்க். ஞானி அவன். குற்றங்களைத் தீர்மானித்து அதற்கான தண்டனைகளையும் தீர்மானிக்கும் அதிகாரம் தனி மனிதனுக்கு இருந்தாலும் சரி ஒரு சமூகத்துக்கு இருந்தாலும் சரி, அதைச் சீரழிவிலிருந்து காப்பாற்றவே முடியாது. எல்லா அநியாயங்களையும் அவற்றுக்கான குற்றங்களைக் கண்டுபிடித்து சட்டாம்பிள்ளைத்தனம் பண்ணி நியாயமாக்கிவிட முடியும், இதைவிட அழிவு வேறென்ன வேண்டும்?”

கடிகாரத்தைப் பார்த்தான். ஆஸ்திரேலியாவில் விடிந்திருக்கும்.

அவசர அவசரமாக தன் மேதைமையையும் அறிவுக் கூர்மையையும் மனிதாபிமானத்தையும் அறச் சார்பையும் வெளிப்படுத்தும் கதை மாதிரி எதையோ நிமிஷங்களில் எழுதிவிட்டு அடுத்து வரப்போகும் கமெண்ட்டுகளுக்குக் காத்திருக்கலானான்.

 

 

16 thoughts on “என் கண்ணின் பாவையன்றோ…

 1. சார் எங்கியோ போயிட்டீங்க. முடிவும் நல்லா இருந்தது.

  அந்த தெரிதா மேட்டருக்கு மட்டும் கோனார் நோட்ஸ் ப்ளீஸ் 🙂

 2. concept எல்லாம் நல்லா தான் இருக்கு, ஒரு சில எடத்துல ஜெ மோ + பேயோன் கலந்து கட்டி எழுதின மாதிரி (புரிஞ்சும் புரியாம )இருக்கு.

  1. நாம என்னிக்குதான் ஒரிஜினலா எழுதியிருக்கோம்? 🙂

   ஜெமோ, பேயோன்கூட ரமணி சந்திரனையும் கலந்து கட்டி அடிச்சதா சொன்னாக்கூட சந்தோஷமே! – நீங்க படிச்சதே பெரிய விஷயம். நன்றிங்க.

   1. //ஒரு சில எடத்துல ஜெ மோ + பேயோன் கலந்து கட்டி எழுதின மாதிரி// இதை compliment ஆக எடுத்துக் கொள்ளவும் 😀

    1. அப்படியே எடுத்துக்கிட்டாச்சு. எனக்கு அதைவிடப் பெரிய காம்பிளிமெண்ட்டு நீங்க இதைப் பொறுமையா படிச்ச்சதுதான். அதுவே போதும். நன்றி. 🙂

 3. பள்ளிக் கூடத்திலே அதிகாரம் செய்தார்கள், கூடப் படித்த தடியன்கள் சமோசா வாங்கிவரச் சொல்லி அதிகாரம் செய்தார்கள், ரேஷன் கடைக்குப் போன போது “டேய் தம்பி! அந்தப் பெட்டிக் கடையில போய் ரெண்டு சிகரெட்டும் பான்பராக்கும் வாங்கிட்டுவா” என்றார்கள், ரோட்டிலே காவல் துறை அதிகாரம் செய்தது, லைசென்ஸ் வாங்கப்போனபோது ஆர்.டி.ஓ அதிகாரம் செய்தார், அலுவலகத்தில் அதிகாரம் செய்கிறார்கள், அதற்குத்தான் சம்பளமும் தருகிறார்கள், வருங்காலத்தில் இன்னும் யார் யாரோ வந்து அதிகாரம் செய்யப் போகிறார்கள். இருந்தாலும் இதுவரை அப்பா, அம்மாவிடம் மட்டுமே சொல்லியிருக்கிறேன் “நீங்களொன்னும் என்னை அதிகாரம் பண்ணத் தேவையில்லை”

  1. பராசக்தி சிவாஜி குரலில் (“ஓடினேன் ஓடினேன்) இதைப் படிச்சுப் பாத்தேன்…

   அழுகை வந்திருச்சு. நீங்க எழுதினதுதான் சார் உண்மையான நிமிஷக் கதை.

   எவ்வளவு சுருக்கமா எவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லிட்டீங்க!

   நன்றி.

 4. என்ன சார் ஜெகனை இப்படியாக்கிட்டீங்களே 🙂

  சொல்ல நினைத்ததை கதையாக்கும்போது சொல்ல நினைக்காததும் சொல்லப்பட்டுவிடுகிறது இதுதான் கதைகளுக்குரிய சிறப்பு.
  கருத்துக்களுக்கு அது இல்லை.

  ‘எல்லாரிடமும் அன்பாக இருக்க வேண்டும்,’ ‘யாரையும் வெறுக்கக் கூடாது,’ ‘யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது,’ என்பதெல்லாம் எல்லாருக்கும் எப்போதும் பொருந்தும் அறங்கள்.”

  அப்படிச்சொல்லலாமா? என்னைக்கேட்டால் ” யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது ” என்பதைத்தான் அறத்தின் மிக எளிமையான (version)வேர்சனாகச்சொல்வேன் கடைப்பிடிப்பது எளிது. Because it is more user friendly.அறத்தின் family, professional , business versions என்பவை வேறுபடும் என்பது எனது தாழ்மையான கருத்து.

  கீழ்பத்தியில் நீங்கள் பேசுகிற துக்கத்தைக்கடத்தல் போன்ற பகுதிகள் இந்து சமயதத்துவத்தின் யோகம் ஞானம் பக்கேஜ் களில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன இல்லையா.

  அன்பும் வெறுப்பும் சிக்கலானவை. யேசு புத்தருக்குரியவை.(அவர்களுக்கு குடும்பமில்லையென்பதைக்க்கவனிக்க துறவிகளுக்கானது)

  சரி தீங்கு என்று சொல்லிவிட்டாலும் தீங்கை வறையறை செய்வதுகூட கடினம்.
  நீங்கள் மேலே வன்முறை என்று சொல்லுகிறபோது வன்முறையக்கூட வரையறுக்க முடியாது போய்விடுகிறது. கதையில் மூன்று வன்முறைகள் பற்றி குறிப்புகள் வருகின்றன.
  உடல் உணர்வு பாலியல் இம்சைகள்.(physical abuse, emotional abuse sexual abuse)

  ஜெகனுக்கு உணர்வு ரீதியான இம்சை ஏற்பட்டபோது மனைவியை அடித்து உடல் ரீதியான இம்சை செய்கிறான்.

  தீங்கு செய்யபடுவதாக உணரப்படுவதில்லை.

  இந்தக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருக்குமானால் தீங்கு நிகழ்வதாகக்கூறிவிடுவார்கள்.ஏனென்றால் வரையறைகள் வேறு

  இப்படி அறத்தின் எல்லாக்கூறுகளுக்கும் அர்த்தம் வேறுபடுவதனால் அறம் எனப்படுவது பொதுவானதில்லை என்று தோன்றுகிறது.

  மனிதாபிமானம் என்று பேசினால் கூட
  ஒரு காலத்தில் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களை மனிதர்களாகக்கருதவில்லை.மனித உரிமை சுதந்திரம் பற்றி பிரகடனத்தை எழுதிய பெஞ்சமின் பிரங்ளின் வீட்டில் எத்தனை அடிமைகள் இருந்தார்கள் என்பதைப்பற்றிப்படித்த ஞாபகம்.அப்போது அவர்களை கால்நடைகளாகத்தான் கருதினார்களாம்.

  (We hold these truths to be self-evident, that all men are created equal, that they are endowed by their Creator with certain unalienable Rights, that among these are Life, Liberty and the pursuit of Happiness.
  —United States Declaration of Independence, 1776)

  ஆஸ்திரேலியாவில் அபொரிஜினர்களின் குழந்தைகளைதனியாக ப்பிரித்து மேலைத்தேய நாகரிகத்தைக்கற்பித்த போது நல்லது செய்வதாகத்தான் நினைத்தார்கள்.அபொரிஜினர்களுக்கு பிள்ளைப்பாசம் இருக்கும் என்பதை நம்ப மறுத்தார்கள்.

  இன்றைக்கு அது பெரிய தீங்காக கருத்தப்படுகிறது.

  எது நல்லது? எது கெட்டது?

  நல்வினைக்கும் தீவினைக்கும்
  இன்பத்துக்கும் துன்பத்துக்கும்
  ஆடிக்களைத்து
  மனிதர் உணர்ந்தது.
  எல்லாம் தளை
  எல்லாம் களை

  இந்தக்கதை பலதையும் பத்தையும் கிளறுகிறது.இன்னும் பேசலாம் 🙂

  இப்போதைக்கு நிறுத்தி பிறகு தொடருகிறேன். உங்களைவிட்டால் வேறு யாரிடம் நானும் சொல்வது 🙂

 5. தனிப்பட்ட வகையில் என் ஆதர்ச அறம் இதுவாக இருக்கும்:

  நல்லெண்ணம் கொண்ட ஒருவன், திறந்த மனதோடிருப்பவன், தேவைப்படும் தகவல்களை அறிந்து கொள்பவன், தனக்கு மன நிறைவளிப்பதைச் செய்வதே அறம்.

  இது எல்லாருக்கும் பொருந்தும்- குடும்பம், நட்பு, தொழில் என்று எங்கும் இது செல்லுபடியாகும். அவன் எப்படி இருக்கிறான் என்பதுதான் அறத்தின் தன்மையைத் தீர்மானிக்கிறது, அவனது செயல்களல்ல.

  நாம் அறம் ஆளுக்கு ஆள் மாறுபடும், இடத்துக்கு இடம் மாறுபடும் என்று சொல்லும்போது, சூழ்நிலை சார்ந்து மாறுபடும் தேவைகளாக இதைப் பார்க்கிறோம். இங்கே மனிதனின் இயல்பே அறத்தின் அடிப்படை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவனது செயல்களின் விளைவே அறத்தைத் தீர்மானிப்பதாக நினைக்கிறோம்.

  ஆனால் நல்ல நோக்கம், கனிந்த இதயம், தன் செயல்களின் காரணம் காரியம் விளைவு பற்றிய அக்கறை – இவை இருப்பவன், இந்தத் தன்னியல்பு மாறாதபடிக்கு நடந்து கொண்டு மன நிறைவு பெறும்போது அங்கே அறம் இருக்கும் என்று பெரும்பாலும் நம்ப இடமிருக்கிறது, இல்லையா?

  அப்புறம் ஏதோ செய்கிறோம், சிலது தப்பு, சிலது சரி, சிலது திருப்தியாக இருக்கிறது, சிலது உறுத்தலாக இருக்கிறது – இதையெல்லாம் தவிர்க்க முடியாது. இந்தக் குறைபாடுகளை அறிந்தும் நாம் நாமாக இருக்கும் இடத்தில்தான் இந்த துக்கித்தல் சங்கதி வருகிறது. அதை அப்புறம் பார்ப்போம். இப்போதுதான் யோசிக்கவே ஆரம்பித்திருக்கிறேன். 🙂

 6. நேற்று இரவு இந்தப்பின்னூட்டத்துக்கு பதில் எழுதத்தொடங்கி ஒரு கட்டத்தில் எதையோ தவறி அழுத்தி பின்னூட்டம் அழிந்துபோய்விட்டது.
  நேரத்தைத்தின்றுவிட்டிருந்தது.
  இன்றைக்கு வந்துபார்த்தால் நீங்கள் இரண்டு பதிவுகள் கடந்துசென்றுவிட்டீர்கள்.அதாவது நேற்றைய நட்பாஸ் வேறு இன்றைய நட்பாஸ் வேறு என்றாகிவிட்டிருந்தது.

  ஆனாலும் பின்னூட்டம் இன்னுமிருக்கிறதே என்று தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமனாக
  மீண்டும் விட்டதை எழுதுகிறேன்.
  என்னுள் இருக்கும் வேதாளம் எள்ளி நகைத்து எந்த ஆளியையும் அழுத்தாதிருக்கக்கடவது

  உங்கள் பதிலில் கண்ணை உறுத்தியது முரண்கள்

  ”நாம் அறம் ஆளுக்கு ஆள் மாறுபடும், இடத்துக்கு இடம் மாறுபடும் என்று சொல்லும்போது, சூழ்நிலை சார்ந்து மாறுபடும் தேவைகளாக இதைப் பார்க்கிறோம். இங்கே மனிதனின் இயல்பே அறத்தின் அடிப்படை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவனது செயல்களின் விளைவே அறத்தைத் தீர்மானிப்பதாக நினைக்கிறோம்”
  இப்படி மேலே சொல்லியிருக்கிறீர்கள்

  மனிதனின் இயல்பே அறத்தின் அடிப்படை என்பது ஒருபகுதி உண்மை.அவரவர் இயல்புக்கேற்ப சுதர்மங்களை நிறைவேற்றவேண்டும் என்று கீதை சொல்லுகிறது இல்லையா.

  இயல்பு ஆளுக்கு ஆள் மாறுபடுவதுதானே இயற்கை. ஆதலினால் இயல்பை அடிப்படையாகக்கொண்ட அறம் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்ற கூற்றை உங்கள் கூற்று உறுதியல்லவா செய்கிறது.

  சூழ்நிலைகளுக்கேற்ப செய்ற்படுவது கூட ஒரு மனிதனின் இயல்பில் தங்கியிருக்கிறபோது சூழ்நிலை நிலையற்றது .இயல்பு நிலையற்றது . செயல்களும் மாறுந்தன்மையுடயதாவதும் இயற்கை. அறம் செயல்களை வைத்துத்தானே தீர்மானிக்கப்படுகிறது. ஒரு கடினமான சூழ்நிலையிலும் ஒருவன் சில சமுகத்தின் பெறுமதியான நியமங்களைக்கடைப்பிடிக்கிறபோதல்லவா அதை அறம் என்கிறோம். செயல் அல்லது செயலின் விளைவைக்கொண்டுதானே அறத்தை சொல்லுகிறோம்.

  பல்வேறுபட்ட இயல்புகளுடைய மனித குழாம், மாறக்கூடிய மனம்( குணம் என்பதாகத்தான் நாங்கள் பேசிக்கொள்கிறோம் நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் சராசரிக்குணங்களும் கலந்த கலவையாக இருக்கிற மனிதனில் கெட்ட குணங்கள் தூக்கலாகத்தெரிகிறபோது அதை கெட்ட இயல்பு என்கிறோம்?) மாறிக்கொண்டிருக்கிற சூழல் – இப்படி மாறிக்கொண்டேயிருக்கிற பலகாரணிகள் உள்ள பின்னணி குழப்பமானதாக இருக்கும் செயல்களும் செயல்களின் விளைவுகளும் தறிகெட்டிருக்கும் என்பதனால் தானே அறம் உருவாகிறது. மனிதன் ஒரு சமுக விலங்கு என்பதனால் அவனுடைய அடிப்படை இச்சைகளை ஒழுங்கமைக்கின்ற தீர்மானிக்கப்பட்ட ஒரு ஒழுங்குதானே அறம். அறம் எனப்படுவது ஒரு குழுவில்தானே செயற்பட முடியும். அறம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அனுபவத்தால் கண்டுணரப்பட்ட கற்றுக்கொள்ளப்பட்ட செயலின் நல்லவிளைவை அடைவதற்கான நடத்தைக்கோட்பாடுதானே.

  நல்லது என்றால் என்ன? எது நல்லது? கெட்டது என்றால் எது கெட்டதை எது தீர்மானிக்கிறது?

  மனிதர்கள் கூர்ப்படையும் போது அதாவது மனித இனத்தின் தலைமுறைகளுக்கூடான வளர்ச்சியின்போது , அனுபவங்களும் அதற்கேற்ப மனித நடத்தைகள் செம்மைபட்டுச்செல்லுகின்றன அறங்கள் மாறிக்கொண்டே செல்லுகின்றன.

  மனிதன் குழுவிலங்கு.அன்புப்பிணைப்பும் சேர்ந்து வாழுதலும் அவன் இயல்பு.ஆனால் அது குழுக்களுக்கு மட்டுபடுத்தப்பட்டிருந்தது இப்போது உலகமாகவிரிவடைந்துகொண்டுவருகிறது.
  இப்படிவிரிவடைந்து செல்ல்லுகிறபோது இரண்டு முரண்பட்ட அறங்கள் சந்தித்து ஏதோ ஒரு முறையில்(வன்முறையோ கலப்போ ஒத்திசைவோ) அவை சமநிலை அடைந்து மேலும் விரிந்த குழுமங்களாகின்றன.நான் அந்த சிக்கல்களைப்பற்றி முதல் பின்னூட்டத்தில் பேசத்தலைப்பட்டேன்.

  நீங்கள் தனிமனித இயல்பு தனிமனிதனின் அறம் என்ற பார்வையைக்கொண்டுவந்தீர்கள்.
  யாருமற்ற தீவில் ஒரு பாறைத்தீவில் தனித்துவிடப்படுகிற ஒரு மனிதனுக்கு என்ன அறம் இருக்கும்.ஒரு குழுவாகிறபோதுதானே அறம் வருகிறது

  அறத்தைப்பேசுகிறபோது இயல்ப்பைப்பற்றி சொல்லத்தொடங்கினீர்கள்.

  அறத்தைப்பற்றி வெளிப்படையாக பேசிய கதை குணத்தையும் அன்பையும் பிணைப்பையும் பற்றி பேசுவதாக திரும்புகிறது

  சக மனிதர்களில் பாசம் வைப்பதையும் அவர்களை நேசிப்பதும் போதுமானது .உங்கள் கதை சொல்லுகிறது.

  ஆனல் வெறுமே அன்புவைப்பதுதான் அறமா என்றால் இல்லை ஒழுங்குபடுத்தி இச்சைகளால் சிதைவுறாதபடி பலநூற்றாண்டுகளாக வாழ்ந்து மனிதகுலம் கண்டுபிடித்த அமைப்பு குடும்பம். ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பை ஒழுங்குபடுத்தி சமுகத்தின் அமைப்பைச்சீராக வைத்திருக்கிற அந்த அறம் இல்லறம் எனப்படுகிறது.பல அறங்களில் அதுவும் ஒன்று.

  அறம் எனப்படுவது வாழ்க்கைத்திரைப்படத்தை நெறியாள்கை செய்கிற டைரக்டர்.
  அல்லது வாழ்க்கைச்சாலையின் விதி என்று சொல்லலாமா.மனிதர்களின் பயணங்கள் மோதிக்கொள்ளாதிருக்க அனுபவம் தந்திருப்பது.

  அதையும் உங்கள் கதைதான் சொல்லுகிறது.

  ஒன்று நேற்று எழுதி விதி அழித்த .பின்னூட்டம் இதுவல்ல மாறித்தான் வந்திருக்கிறது.வேட்டில் அடித்து வெட்டி ஒட்டியிருக்கிறேன்( வன்முறை )

  இன்னும் பல ஆழமான விஷயங்களை உங்கள் கதை சொல்லாமல் சொல்லுகிறது. அதை உங்கள் இன்றைய பதிவின் பின்னூட்டத்தில் பேசிக்கொள்ளலாமா 🙂

  i

  1. நான் கதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்ள மாட்டேன். கதை விடுகிறேன் என்ற அளவில்தான் இருக்கிறேன். இதில் என்ன வசதி என்றால் முரண்பாடுகளைப் பற்றி கவலைப்படாமல் எழுதலாம். சொல்லப்போனால் முரண்பாடுகள் அழகு சேர்க்கிறது – அதிர்ஷ்டமிருந்தால் ஆழமும் 🙂

   கருத்துகளைச் சொல்லும்போது அந்த வசதியில்லை. நம் ஒவ்வொரு சொல்லும் நம்மைச் சிறைப்படுத்துகிறது.

   உண்மையில் இந்தக் கதையை எழுதிய நட்பாஸ் சொல்லும் கருத்துகள் என் கருத்தல்ல. இருந்தாலும் அவர் சார்பாக நான்தான் பேச வேண்டியிருக்கிறது…

   இதை எழுதும்போது மூன்று விஷயங்கள் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தன : கண்முன் கண்ட ஒரு அறச் சிக்கல், எம் டி முத்துக்குமாரசாமி துவங்கித் தொடராமல் விட்ட தத்துவ விசாரம், நான் மேற்சொன்ன புத்தக வாசிப்பு. இவை ஒரு குழப்ப கணத்தில் இந்த வடிவில் வந்திருக்கிறது.

   கதையில் தலைப்புக்கு அடுத்த அடி : என்னுயிர் நின்னதன்றோ… என்பது கவனிக்கத்தக்கது.

   அதே போல் difference/ differance விஷயத்தையும் கவனிக்க வேண்டும் : இதைத் தமிழில் விளக்கம்/ விலக்கம் என்று பொருட்படுத்திக் கொண்டிருந்தேன்.

   அதாவது logocentricity என்பது சொற்களாலும் கருத்துகளாலும் ஆன இருமை நிறைத்த உலகைக் குறிக்கிறது. அறம் பற்றிய பேச்சே அறம் இல்லாத இடத்தில்தான் துவங்குகிறது என்பது ஒரு புறம் இருக்க, அறம் அறம் என்று பேசுபவர்கள் அறமற்றதை உருவாக்குகிறார்கள் : ஆசாரமானவர்கள் மடி மடி என்று பேசிக் கொண்டு மடியாக இருக்கும் இடத்தைத் தவிர எல்லா இடத்திலும் விழுப்பை உருவாக்குவது போல, அறம் பற்றி ரொம்ப பேசுகிறவர்கள், அற உலகைக் குறுக்கி, உலகில் அநியாயம்தான் அதிகமாக இருக்கிறது என்ற எண்ணத்தை வர வைத்து விடுகிறார்கள். எல்லா விஷயத்திலும் இதைத் தவிர்க்க முடியாது.

   சொற்களற்ற ஒருமை ஒரு உலகமாக இருந்தால் அங்கு விலக்கம் ஏற்படும்போதுதான் விளக்கங்கள் தேவைப்படுகின்றன. இந்தக் கதையைப் பார்த்தால் ஜெகனின் விளக்கங்கள், அற வியாக்கியானங்கள் எல்லாம் அவனது விலக்க நிலையால் மட்டுமே தேவைப்படுகின்றன. அவை வெளிச்சம் தருகிறது என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் தன் அடிப்படை விலக்கத்தை அவன் அறிவதில்லை.

   இந்த விலக்கம்/ விளக்கம் சங்கதியை மனதில் வைத்துக் கொண்டுதான் தெரிதா பற்றிய ஜெகனின் வியாக்கியானம் படிக்கபப்ட வேண்டியதாகிறது (எனக்கு): அதைப் பின்னொரு சமயத்தில்தான் பார்க்க வேண்டும்.

  2. “”நாம் அறம் ஆளுக்கு ஆள் மாறுபடும், இடத்துக்கு இடம் மாறுபடும் என்று சொல்லும்போது, சூழ்நிலை சார்ந்து மாறுபடும் தேவைகளாக இதைப் பார்க்கிறோம். இங்கே மனிதனின் இயல்பே அறத்தின் அடிப்படை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவனது செயல்களின் விளைவே அறத்தைத் தீர்மானிப்பதாக நினைக்கிறோம்”
   இப்படி மேலே சொல்லியிருக்கிறீர்கள்

   மனிதனின் இயல்பே அறத்தின் அடிப்படை என்பது ஒருபகுதி உண்மை.அவரவர் இயல்புக்கேற்ப சுதர்மங்களை நிறைவேற்றவேண்டும் என்று கீதை சொல்லுகிறது இல்லையா.

   இயல்பு ஆளுக்கு ஆள் மாறுபடுவதுதானே இயற்கை. ஆதலினால் இயல்பை அடிப்படையாகக்கொண்ட அறம் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்ற கூற்றை உங்கள் கூற்று உறுதியல்லவா செய்கிறது.”

   நான் அந்த விஷயத்தை சரியாக எழுதவில்லை.

   ” “அதிகாரம் சீரழிக்கிறது, முழு அதிகாரம் முழுமையாகச் சீரழிக்கிறது என்றானே பர்க். ஞானி அவன். குற்றங்களைத் தீர்மானித்து அதற்கான தண்டனைகளையும் தீர்மானிக்கும் அதிகாரம் தனி மனிதனுக்கு இருந்தாலும் சரி ஒரு சமூகத்துக்கு இருந்தாலும் சரி, அதைச் சீரழிவிலிருந்து காப்பாற்றவே முடியாது. எல்லா அநியாயங்களையும் அவற்றுக்கான குற்றங்களைக் கண்டுபிடித்து சட்டாம்பிள்ளைத்தனம் பண்ணி நியாயமாக்கிவிட முடியும், இதைவிட அழிவு வேறென்ன வேண்டும்?””

   இந்த சீரழிவு பிறருக்கு இழைக்கப்படுவது என்பதைவிட தன்னைச் சீரழிக்கிறது என்பதே எனக்கு வருத்தமான விஷயம். “மனிதனின் இயல்பே அறத்தின் அடிப்படை,” என்று சொல்லும்போது அவன் என்ன செய்கிறான் என்பதைவிட அவன் என்னவாகிறான் என்பதுதான் எனக்கு முக்கியமாக இருக்கிறது. நான் பொய் சொல்வதால் நல்லது நடக்கலாம் கெட்டது நடக்கலாம, ஆனால் என் பொய்கள என்னை என்னிடமிருந்து விலக்கி வைக்கின்றன, எனக்கு நியாயப்படுத்தல்கள், விளக்கங்கள் தேவைப்படுகின்றன. இவை பொய் நிலையில் மட்டுமே தேவைப்படுகின்றன, அதன் அத்தனை வெளிச்சங்களுடன். மெய் நிலையில் இவற்றுக்கு அவசியமேயில்லை.

 7. அறத்தைப்பற்றிப்பேசும்போது அறம் விலகிப்போய்விடுகிறது.
  ஆன்மிகத்தை விவாதமாகினால் அதில் ஆன்மீகம் இருக்குமா.

  இப்படி விவாதிப்பதிலிருந்து எங்களுக்கு என்று இன்னுமொரு பாத்திரத்தைத்தான் சமுகத்தில் உருவாக்கிக்கொள்ளமுடிகிறது,

  if we see ourselves as having many roles, these justifications of our failures are necessary to survive in other roles .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s