எல்லாருக்கும் பொருந்தாதது யாருக்கும் பொருந்தாது…

ஆரம்பித்தது ஆரம்பித்தாகிவிட்டது, இதை எப்படியாவது முடித்து விடலாம் என்று நினைக்கிறேன்.

அறத்தின் அடிப்படை எதுவாக இருக்க முடியும் என்ற கேள்வி முக்கியமான ஒன்று என்கிறார் குர்ட்ஸ். அரிஸ்டாட்டிலின் ‘ஆடாது ஆட்டுவிப்பவர்கள்’ சிந்தனையைச் சிந்திப்பவர்கள் : தூய சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர்கள். அவர் தொடங்கி அனைவரும் தங்களுக்கு எது உயர்ந்ததாக இருக்கிறதோ, அதுவே நல்லது என்று சொல்கிறார்கள். தெய்வநம்பிக்கை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால், மனித இயல்புகளில் உயர்ந்ததாக தாங்கள் நினைப்பதை கடவுளின் கல்யாண குணங்களாகச் சொல்கிறார்கள். அப்புறம் அப்படிப்பட்ட கடவுளின் பெயரால் நல்லது கெட்டது என்று வசதிப்பட்ட அத்தனையையும் நியாயப்படுத்துகிறார்கள். எனவே தெய்வ பக்தியோ சமய நம்பிக்கையோ அறத்தின் அடிப்படையாக இருக்க முடியாது என்கிறார் குர்ட்ஸ்.

சரி கடவுளை எடுத்துவிட்டு இயற்கையை அங்கே வைத்தால் அதுவும் அறத்தின் அடிப்படையாக இருக்க முடியாது. இயற்கைக்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரிவதாக இல்லை. அது பாட்டுக்கு நல்லார்க்கும் பொல்லார்க்கும் பெய்யும் மழையாக இருக்கிறது. ‘மனித இயல்பு’ என்று ஒன்று கிடையவே கிடையாது. ‘தர்மம்’ என்பது வல்லான் வகுத்த வாய்க்கால். ‘வரலாற்றுப் பேரியக்கம்’ முட்டுச்சந்தில் நின்றுவிட்டது. ‘பரிணாம வளர்ச்சி’யை அறத்தின் அடிப்படையாகச் சொன்னால் அடிக்க வருவார்கள் – எல்லாவற்றுக்கும் மேலாக இவை மனித அமைப்புகளைச் சார்ந்தவை, மனிதனை மறந்து விட்டு இவற்றைப் பார்த்தால் இவை அர்த்தமற்ற சொற்கள்.

எனவே அறம் எனப்படுவது ஆளாளுக்கு மாறுபடுகிறது என்பதை சந்தேகிக்க இடமில்லை என்று சொல்லலாம். சரி, அதை ஏற்றுக்கொண்டால் அறம் அகவயப்பட ஒன்று, அது புறவய விழுமியங்களாகவும் மதிப்பீடுகலாகவும் இருக்கவே முடியாது என்று சொல்ல முடியுமா? பொதுவாக அறத்தின் சார்புத்தன்மையைப் பேசுபவர்கள் இப்படிச் சொல்லிக் கையை விரித்து விடுகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் : ஒன்று, புறவுலகில் அறச்செயல்பாடு எதுவும் இல்லாததைப் பார்த்ததால் அது ‘நான் வைத்ததே சட்டம்’ என்று செயல்படும் போலீஸ்காரனின் தடியாகவே செயல்படுகிறது என்பதைக் கண்டதால் ஏற்படும் அவநம்பிக்கை. மற்றொன்று, ஆளாளுக்கு மாறுபடும் என்று தெரிந்து கொண்டே ஒரு சமூக ஒப்பந்தமாக சில புறவயப்பட்ட விழுமியங்களை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் சங்கடங்கள் : உதாரணத்துக்கு, எனக்குக் காசு வாங்க வேண்டும் என்ற ஆசையும் வாய்ப்பும் இருக்கிறபோது, எல்லாரும் லஞ்சம் வாங்கி வேலை செய்யும் நிலையில் நேர்மை என்பது ஒரு கோட்பாடாகவும் சமூக அழுத்தமாகவும் மட்டுமே இருப்பது எனக்கு அசௌகரியமாக இருக்கிறது. அறம் அகவயமானது, என்று சொல்லிக்கொண்டு, நூறு ரூபாய் லஞ்சம் வாங்கி அதில் இருபது ரூபாயை அநாதை இல்லத்துக்குக் கொடுத்துவிட்டு என்னளவில் என்னால் சமாதானம் அடைந்துவிட முடியும். ஏனென்றால், எல்லாரும் தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைத்தானே செய்கிறார்கள், என்னளவில் எது சரி என்று தோன்றுகிறதோ அதை நானும் செய்கிறேன்.

இது பேசுவதற்கு நன்றாக இருக்கலாம் – ஆனால் இந்த மாதிரி எல்லாரும் நினைத்தால் நீங்கள் தெருவைக்கூட கடந்து செல்ல முடியாது – எவனோ ஒரு பைக்காரன் உங்களைக் கீழே தள்ளிவிட்டு எந்தவித உறுத்தலும் இல்லாமல் போய்க கொண்டே இருப்பான் : “நாயி, அது ஏன் என் வழியில் வந்துச்சு?” என்று உங்களைத் திட்டிக் கொண்டு. இவனையும் ஒன்றும் செய்ய முடியாது ஹிட்லர் ஸ்டாலின் மாவோ என்ற மும்மூர்த்திகளையும் எதுவும் சொல்ல முடியாது : ஒருபடி மேலே போய், “என்ன சில fallacyகள் இருந்தன, மற்றபடி அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட அரசியலுக்கு ஓரளவு நேர்மையாகவே நடந்து கொண்டார்கள்,” என்று பிழைபுரிதலை சரிபடுத்தியும் புரிந்து கொள்ளலாம்.

எனவே அறம் ஆளுக்கு ஆள் மாறும் என்றாலும் அது அகவயப்பட்டது என்று சொல்வதில் அர்த்தமில்லை : காரணம், நாம் அந்த மாதிரி நடந்து கொள்வதில்லை. யதார்த்தத்தை மறக்கும், மறுக்கும் கோட்பாட்டை நாம் பேசிப் பிரயோசனமில்லை. அறம் புறவயப்பட்ட விழுமியங்களாகச் செயல்படுகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதை நம் அன்றாட வாழ்க்கையை ஒரு கணம் நினைத்துப் பார்த்தாலே புரிந்துவிடும்.. எனவே அறத்தின் சார்பியல்பைக் காரணம் சொல்லி அதை முழுமையாக நிராகரிப்பதோ, அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுப்பதோ உண்மையான நிலைப்பாடல்ல, அது ஒரு பாவனையாக மட்டுமே இருக்க முடியும் என்று சொல்லிவிட்டு தணிக்கப்பட்ட அறச்சம்சயம் (Mitigated Ethical Skepticism) என்ற விஷயத்துக்கு வருகிறார் குர்ட்ஸ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s