பார்வைக் கோளாறும் தகவல் பிழைகளும்

அற சம்சயிகளில் அற நிராகரிப்பாளர்கள் என்ற பிரிவினர் எல்லாருக்கும் பொருந்தாத அறம் யாருக்கும் பொருந்தாது என்று அதன் அகவயப்பட்ட, சார்புநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு அறம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று ஒரேயடியாக அதை காலி பண்ணினாலும்கூட, நம் அன்றாட தினசரி உலகில் இத்தகைய நம்பிக்கைகளுக்கு இடமில்லாதிருப்ப்தைக் கண்டு – நம்மில் யாரும் தண்ணி போட்டுக்கொண்டு கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் ஈடுபட்டு அவற்றை இந்த மாதிரியான அற நிராகரிப்புக் கோட்பாடுகளால் அநியாயப்படுத்துவதில்லை- தணிக்கப்பட்ட அற சம்சயிகள் யதார்த்த நடைமுறையை கவனித்து தங்கள் சம்சயத்தை ஓரளவுக்குக் கேள்விக்குட்படுத்தி கட்டுப்படுத்த இடம் தருகிறார்கள் என்று எழுதுகிறார் குர்ட்ஸ்.

தாமஸ் ஹாப்ஸ் போன்றவர்கள், யாருமே சட்டத்தை மதிக்காவிட்டால் உலகத்தில் ஒழுங்கே இருக்க முடியாது, எனவே பொது நன்மையில்தான் நம் நலம் காக்கப்படுகிறது என்ற சுயநலத்தால் நாம் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு நடக்க ஒப்பந்தம் செய்து கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். இங்கே பொதுநலம், அனைவருக்குமான சந்தோஷம் போன்றவை முக்கியமாக இருக்கின்றன. எது பொதுநலம், எது எல்லாருக்கும் சந்தோஷம் தருகிறது என்பதில் கேள்விகள் இருக்கலாம். ஆனால் இவை சோதனை அடிப்படையில் முயற்சி செய்யப்பட்டு பின்விளைவுகளைக்கொண்டு முடிவு செய்யப்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

இதையடுத்து ஹ்யூம் சொன்ன ஒரு விஷயம் முக்கியமானதாகிறது : எது பொது நலம் என்பதை நாம் தர்க்கப்பூர்வமாக, அறிவைக் கொண்டு மட்டும் முடிவு செய்வதில்லை என்றார் அவர் – உணர்ச்சிகளே நம் அறவுணர்வின் அடிப்படைகள். “தர்க்கம் உணர்ச்சிகளின் அடிமையாக இருக்கிறது, அப்படிதான் இருக்கவும் வேண்டும்,” என்று ஹ்யூம் வலியுறுத்துகிறார். நல்லது கெட்டதை நாம் நம் உணர்ச்சிகளைக் கொண்டுதான் முடிவு செய்கிறோம்- உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு அறிவின் பெயரால் லாஜிக்காக மனிதர்களை எந்திரங்களைப் போல நடத்த முடியாது என்பது இருபதாம் நூற்றாண்டின் படிப்பினைகள், நிற்க. ஹ்யூம் சொல்லவந்த விஷயம், அற விழுமியங்களின் அடிப்படைகள் உணர்ச்சிகளின் உந்துதல்களே, தர்க்கத்தின் முடிவுகள் என்று நம்பி ஏமாறக்கூடாது என்பதே.

இதை வலியுறுத்தும் விதத்தில் ஒரு விஷயத்தின் நியாய அநியாயங்களைப் பேசும் எவரும் உள்ளபடி நிலவரம் எப்படி இருக்கிறது என்ற விவரிப்பிலிருந்து எப்படி இருக்க வேண்டும் என்ற மதிப்பீட்டுக்கு ஒரே தாவாகத் தாவி விடுகிறார்கள், எந்த இடத்திலிருந்து இப்படித் தாவினார்கள் என்பதை நம்மால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஹ்யூம். உலகம் இப்படி இருக்கிறது, சரி, அது எப்படியும் இருக்கலாம் என்ற நிலையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க என்ன முகாந்திரம் இருக்கிறது? உங்கள் உணர்ச்சிகள் செலுத்தும் திசையில்தான் நீங்கள் பயணிக்கிறீர்கள்.

என்று சொல்லிய ஹ்யூம், அப்படியானால் ஆளாளுக்கு வெவ்வேறு திசையில் பயணிப்பதை நியாயப்படுத்த ஆரம்பித்துவிடுவார்களே என்ற அச்சத்தாலோ என்னவோ இது வேலைக்காகாது, நம் வழக்கப்படி காலங்காலமாக எதை அறம் என்று நம்புகிறோமோ அதையே அறமாக வைத்துக் கொள்வோம் எதற்கு வம்பு என்று கன்ஸர்வேட்டிவ் பெஞ்சில் உட்கார்ந்து கொள்கிறார்.

நல்லது கெட்டதெல்லாம் உணர்ச்சி வேகத்தால் நாமாகச் சொல்பவை என்பதும் அறத்தின் இயல்பை சார்புநிலை கொண்டதாக, அகவயமானதாக இருத்துகிறது என்பதற்கு என்னதான் மண்டையை உடைத்துக் கொண்டாலும் ஒன்றும் மாற்றிச் சொல்ல முடிவதில்லை என்ற நிலையில்தான் உணர்ச்சியாளர்கள் (emotivists) திரையில் தோன்றி நம்மை மகிழ்விக்க வருகிறார்கள்.

எந்த சண்டையிலும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன – ஒன்று அணுகுமுறை வேற்றுமை, இன்னொன்று நம்பிக்கை வேற்றுமை. நம்பிக்கை வேற்றுமைகளைத் தகவல்களைக் கொண்டு மாற்றி விடலாம். ஆனால் அணுகுமுறையில் இருக்கும் வேற்றுமையை என்ன செய்தாலும் மாற்ற முடியாது, ஏனென்றால் அது அவர்களின் இயல்பு என்கிறார்கள் இவர்கள். உதாரணத்துக்கு கருச்சிதைவு சரியா தவறா என்ற கேள்விக்கு நாம் தரும் சரி, தவறு என்ற பதில்கள் உணர்ச்சிகளால் தீர்மானிக்கப்பட்டவை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்த உணர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கும் விஷயங்கள் இரண்டு – ஒன்று வாழ்வை நாம் எப்படி அணுகுகிறோம் என்பது, இன்னொன்று அது குறித்த நம் நம்பிக்கைகள். உயிர் என்பது புனிதமானது என்ற அணுகுமுறை இருப்பவர்கள் கருச்சிதைவின் குறை நிறைகளை சீர்தூக்கிப் பார்க்க மாட்டார்கள். அது தப்புன்னா தப்புதான். ஆனால், கருச்சிதைவால் அநியாயமாக ஒரு உயிர் அழிகிறது என்று சொல்பவர்கள், விருப்பமில்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வதால் ஏற்படக்கூடிய துயரங்களை அறிய வரும்போது முடிவை மாற்றிக் கொள்ளக் கூடும். போன பதிவில் fallacy குறித்த உள்குத்து நினைவில் இருப்பவர்கள் அந்த விஷயத்த்துக்கு இந்த வேற்றுமையைக் கொண்டு விடை காணலாம்.

என்ன ஆனாலும் வன்முறை ஆகாது என்பவர்கள் இன்ன இன்ன சூழ்நிலையில் வன்முறையைத் தவிர்க்க முடியாது என்பவர்களுடன் இணங்க வாய்ப்பே இல்லை. இது அணுகுமுறை வேறுபாடு. இதைத் தெரிந்து கொண்டால் நாம் எங்கே எப்படி அறம் குறித்து புறவயமான ஒப்புதல்களை அடையலாம் என்பதற்கு ஒரு வழி கிடைக்கிறது.

இந்த அடிப்படைவாதிகளை ஓரங்கட்டிவிட்டு தகவல்களைக் கொண்டு உரையாடி நம் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள முடியும். அதே போல், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் நீ இவர்களுக்கு மட்டும் உரிமைகளை மறுக்கிறாயே, என்று சுட்டிக் காட்டலாம். இது consistency argument. அதே போல் பின்விளைவுகள். பதினாறு வயதில் ஓட்டுப் போடலாம் என்று இளைஞர்களை சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கும் சமூகம், அவர்களுக்குத் திருமண வயதை இருபத்து ஒன்று என்று நிர்ணயிக்கக் காரணம் பின்விளைவுகள் குறித்த அச்சம். பதினாறு வயதில் ஒருத்தர் வயதுக்கு வந்து சுயமாக முடிவெடுக்கும் தகுதி பெற்று விடுகிறார் என்று நம்பினாலும், திருத்திக் கொள்ளக்கூடிய தவறுகளை மட்டுமே அனுமதிக்கிறோம். : பதினாறு வயதில் தப்பான ஆளுக்குப் போட்ட ஓட்டை இருபத்து ஒரு வயதில் மாற்றிப் போட முடியும், ஆனால் தாலியை அபப்டி மாற்றிக் கட்ட முடியுமா?

இந்த மாதிரியான வாதங்களால் அறச் சம்சயிகள் உணர்ச்சி அடிப்படையிலானத் தங்கள் சம்சயங்களை இரண்டாகப் பிரித்து அவற்றின் ஒரு பகுதியை தர்க்கத்தின் நியாயத்துக்கு உட்படுத்தி அவற்றுக்கு புறவயப்பட்ட ஒரு தளம் அமைத்துக் கொடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் எத்தனைதான் பேசினாலும் எல்லாம் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவைதானே? குடித்துவிட்டு கார் ஓட்டுவது தப்பு என்று தர்க்கப்பூர்வமாகச் சுட்டிக்காட்டி தனிமனித சுதந்திரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களின் முடிவை மாற்றலாம், ஆனாலும்கூட, விபத்தில் ஒரு மனிதன் மரணமடைவது ஆகாது என்று சொல்ல என்ன அடிப்படை இருக்கிறது? அப்படிச் சொல்லும் நாமே போரை, மரண தண்டனையை, கருச்சிதைவை, இன்னபிற உயிரைப் பறிக்கும் காரியங்களை அனுமதிக்கிறோமே? இங்கு நம் உணர்ச்சிதான் வேலை செய்கிறது.

இதைச் சொல்லித் தீவிர சம்சயிகள் இந்தத் தணிக்கப்பட்ட அறச் சம்சயிகளின் வாதங்களில் உள்ள ஓட்டைகளில் அவர்களை வீழ்த்தி விடுகிறார்கள்.

என்றெல்லாம் எழுதுகிறார் குர்ட்ஸ். எல்லாமே உணர்ச்சிதான், எல்லாமே ரசனைதான், எல்லாமே அழகியல்தான் என்றால் என்னதான் முடிவு?

Advertisements

7 thoughts on “பார்வைக் கோளாறும் தகவல் பிழைகளும்

 1. நன்றி சார்

  போகிறபோக்கில் பல ஐயங்களுக்கு விடையளித்தபடி செல்கின்றன உங்கள் பதிவுகள். பார்வையை உண்மையை நோக்கி தெளிவை நோக்கி மேலும் நகர்த்தியிருக்கிறது.

  மாற்றம் நிகழ்கிறபோது மனம் சிக்கலுக்கு உள்ளாகி பிறகு புதிய நியாயங்களை கற்பித்துக்கொண்டு சமாதானமடைந்தபடி நகர்கிறது.
  இந்த இடத்தில் cognitive dissonance என்கிற கோட்பாட்டை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  1. நீங்கள் சொல்கிற விஷயத்தை நோக்கியே இந்தப் பதிவுகள் வருகின்றன.

   இப்போதே எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் சரியாக இருக்காது, அவ்வப்போது சிறிது சிறிதாக எழுதினால் சிந்திக்கவும் இடமிருக்கும் என்று நினைக்கிறேன்.

   ஊக்குவிப்புக்கு நன்றி.

   🙂

 2. நன்றி சார். இந்தப்புத்தகம் என் கையில் கிடைத்தால் கூட ஆழ்ந்து படிக்க எனக்கு நேரம் கிடைக்கப்போவதில்லை.
  சுஜாதா அவர்கள் எனக்குச்செய்த உதவியை நீங்கள் தொடர்கிறீர்கள்.கற்றதும் பெற்றதும் …சுஜாதா ஒரு புத்தகத்தைச்சொல்லி ஒரு அதன் ஆதாராமான சில கருத்துக்களைச்சொல்லிவிட்டுப்போவார்.
  அப்போது யாழ்ப்பாணம் இருந்த சூழலிலும்,என் தொழில் சூழலிலும் புதுவிஷயங்கள் உடனுக்குடன் கடினமாக இருந்தது.
  சில வரிகள் சிந்தனையைக்கிளறிவிட்டுவிடும்.

  உதாரணமாக தெ selfish gene என்கிற புத்தகத்தைப்பற்றிய சுஜாதாவின் குறிப்பு எனக்குபோதுமானதாக இருந்தது.ஜீன்கள் பற்றி விலாவாரியாகப்படித்திருந்த எனக்கு பார்வைக்கோணத்தை மாற்றி விட facts இன்னொரு கோணத்தில் ஒழுங்குபட்டுத்தப்பட்டது.
  அறம் பற்றிய பார்வைகளும் இப்படி ஒழுங்குபடுத்தப்படுகின்றன. 🙂

  1. உண்மையில் சுஜாதா ஆற்றியது அரும்பெரும்பணி. இணையச் சூழலில் கல்வி கற்பவர்களுக்கு அதன் அருமை பெருமை தெரியாது. அப்படியே ஒருவாறு அனுமாநித்தாலும் அவர் ஒரு சில வாக்கியங்களில் நம் சிந்தனையைக் கிளறிச் செல்வதுபோல் எல்லாராலும் செய்ய முடியாது. அவர் அத்தனை அறிவையும் மறைத்துக் கொண்டு நம் தோளில் கை போட்டுப் பேசும் நண்பராக இருந்தார்.

 3. மேலே பின்னூட்டத்தில் தவறியது இப்படி வந்திருக்கவேண்டியது

  புதுவிஷயங்களை உடனுக்குடன் தேடிப்படிப்பது கடினமாக இருந்தது.சுஜாதாவின் சில வரிகள் சிந்தனையைக்கிளறி விட்டுவிடும்.தேடுவது சுலபமாகும். அல்லது ஏற்கனவே தெரிந்த விஷயங்களுக்கு இன்னொரு கோணத்தில் கதவு திறக்கும்.(கோழி கிளறுவது என்று முன்பு எழுதியது)

  1. புத்தகங்களுக்குப் பெரும் பஞ்சம், குறிப்பாக ஆங்கிலத்தில் வரும் புதிய புத்தகங்கள் கைக்கெட்டா தூரத்தில் இருந்த காலத்தில் சுஜாதா செய்தது பெரிய விஷயம். அதில் அவருக்கு எந்தவிதமான உயர்நிலை பாவனையும் இல்லை என்பதுதான் அதில் ஆச்சரியம். அறிவின் எல்லைகளை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது இருக்கும் என்று நினைக்கிறேன். ‘என்னதான் படித்தாலும் பேசினாலும் இவ்வளவுதானே வாழ்க்கை!” என்று அவர் உணர்ந்திருந்தார்.

 4. உண்மை சார். அதனால்தான் அறிவோடு இதயத்துக்கும் நெருக்கமாயிருக்கிறார்.என்னில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போது நான் சொல்வதால் அவருக்கு எதுவும் மதிப்பில்லை. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s