தெய்வத் துகள்

ஹிக்ஸ் போஸானைப் பற்றி தமிழ் பேப்பரில் சி. சரவணகார்த்திகேயன் மிக அருமையாக எழுதியிருக்கிறார். அதைப் படித்தபின் தோன்றும் எண்ணங்கள் :

முதலில் ஒரு விஷயம். இந்த க்வாண்டம் இயற்பியல் சமாசாரமே முழுக்க முழுக்க புள்ளிவிவரங்களையும் நிகழ்தகவு சாத்தியங்களையும் (probability) நம்பி நிற்கிறது. நிகழ்தகவு சாத்தியங்கள் “கடிகாரம் எண்ணிக் கொண்டிருக்கிறது” என்ற கணக்காக காலமற்ற காலத்தில், வெளியற்ற புலத்தில், பிறவாதவனின் குருட்டு யோசனைகளாக இலகிக் கொண்டிருக்கையில், அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கையில் – எல்லாம் ஒன்றுதான்-, அப்போது ஒரு அபூர்வ கணமாய் அண்டப் பெருவெடிப்பு நிகழ்ந்து காலம் பிறக்கிறது : கிடைத்த வாய்ப்பின் அந்த சிறு சன்னலின் வழியே நிகழ்தகவு சாத்தியங்கள் உறுதிப்பாட்டை நோக்கி நகர்ந்து காலமாயும் வெளியாயும் அதை நிரப்பும் பொருளாயும் பருண்ம நிலையைத் தொடுகிறது. ஆயின், நீராவி குளிர்ந்து நீராகி உறைந்து பனிக்கட்டியானது போல், அந்த அண்டப் பெருவெடிப்பே குளிர்ந்து காலவெளியாய்- காலமாயும் பொருளாயும் – உறைந்தும் போனதா?

இல்லை. அவை புலப்படுகின்றன, அவ்வளவே. இன்னமும் நம் உலகு நிகழ்தகவுகளின் உலகம்தான். நாமிருக்கும் உலகம், அதன் காலம், அதன் பருண்மப் பொருட்கள் – இவை அனைத்தும் நிகழ்தகவு சாத்தியங்கள் சில எல்லைகளுக்குள் தம்மை இருத்திக் கொண்டதன் புலப்பாடே. நம் உலகை நிறைக்கும் வஸ்துக்கள், அவற்றை நிறைக்கும் அணுக்கள், அணுக்களுள் சுழலும் அணுத்துகள்கள் – இவையாயும் நாம் நம் மனக்கண் கொண்டு காணும் கோலிக் குண்டுகள் மட்டுமல்ல : நிகழ்தகவின் அலைகளும்கூட. காலத்தைக் கடந்த, காலத்தைத் தோற்றுவிக்கும் குருட்டுக் கணக்கு அலையலையாகப் பாய்ந்து சுழித்தோடுகிறது : தன் பாய்ச்சல் வெளியையும் தனக்கான தாளகதியையும் தோற்றுவித்துக் கொண்டு- ஜப்பானியர்கள் சொல்வதுபோல் இந்த அண்டம் அதில் மிதக்கும் நீர்க்குமிழ்.

ஏன் இந்த உலகம் ஓர் நீர்க்குமிழி என்று கேட்டால் எளிய விடையொன்று சொல்லலாம் : நாம் காணும் உலகின் மொத்த ஆற்றலில் ஏறத்தாழ முக்கால்வாசி நம் புலன்களுக்கும், நம் கருவிகளுக்கும் அப்பால் இருக்கிறது – கணக்குப்படி அண்டத்தில் இருக்கவேண்டிய ஆற்றலில் முக்கால் பங்கு தொலைந்து போய் விட்டது: இல்லாமல் போய்விடவில்லை- இருக்கிறது, ஆனால் அது எங்கே இருக்கிறது என்றுதான் தெரியவில்லை. நாம் பார்க்கும், புழங்கும் பொருட்களில் கால் பங்கும் இப்படித் தொலைந்து போன கணக்கில் வருகிறது : ஒரு கிலோ எடை இருக்க வேண்டிய கத்தரிக்காய் முக்கால் கிலோ இருப்பது போல. ஆக, நாமறியும் உலகம் அண்டப் பெருவெடிப்பில் உருவான உலகில் ஐந்து சதவிகித அளவோ என்னவோ – சிலர் இரண்டு சதவிகிதம் என்றும் சொல்கிறார்கள்.

ஸ்டாண்டர்டு மாடல் என்று சொல்லப்படும் இயற்பியலின் அடிப்படை அறிவியலின் அமைப்பு இப்படியாக இருக்கிறது. நேற்று போல கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் போஸான் என்றழைக்கப்படும் தேவ அணுத்துகள் இதை ஒன்றும் செய்யாது : சொல்லப்போனால் இப்படியான உலகம் சத்தியம்தான், இந்த மாதிரியான உலகை உருவாக்க எந்த சாமியும் தேவையில்லை என்பதை உறுதி செய்கிறது. “சனியன் பிடித்ததைக் கொண்டு வரப் போனவன் சனியனைக் கொண்டு வந்த மாதிரியல்லவா இருக்கிறது?” என்று கண்டுபிடிக்கக் கஷ்டமான Goddamned Particleஐ God Particle என்று சுருக்கமாக அறிமுகப்படுத்திய விஞ்ஞானி நொந்து கொள்கிறார் இன்று – இந்தத் துகளுக்கும் தெய்வங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

என்றாலும் அப்படி விட்டு விட முடியாது. ஏனென்றால் இந்த ஹிக்ஸ் அணுத்துகள்கள் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன என்கிறார்கள். ஏனைய அணுத்துகள்கள் இந்த ஹிக்ஸ் கடலில் நீந்தும்போது, அவற்றோடு உறவாடி நிறையை பெறுகின்றன. எவ்வளவு அதிக உறவாடலோ அதற்குத் தகுந்தபடியான நிறை. இதை வேறு மாதிரியும் சொல்கிறார்கள்- இந்த ஹிக்ஸ் கடலில் நீந்தும் அணுத்துகள்கள் எவ்வளவுக்கு எவ்வளவு முட்டி மோதி சிரமப்படுகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றின் நிறை அதிகரிக்கிறது. இங்கு நிறை என்ற சொல்லை நீங்கள் mass என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளில் படிக்க வேண்டும்.

மக்கள் வெள்ளத்தில் சூப்பர் ஸ்டாரும் நானும் நீந்துகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இந்த நீச்சல் போட்டியில் வெற்றி யாருக்குக் கிடைக்கும்? ஆனாலும் யாரை மாஸ் அதிகம் உள்ளவர் என்று கொண்டாடுவார்கள்? அந்த மாதிரியான சங்கதியாக இதைக் கற்பனை செய்து கொள்ளலாம். ஒன்றுமே இல்லாத, ஒன்றுக்குமே உதவாத (சூப்பர் ஸ்டாரை சொல்லவில்லை) அணுத்துகள்கள், போஸான்கள் வழிமறிப்பு செய்வதன் புண்ணியத்தில் மாஸ் பெறுகின்றன, பொருட்படுத்தத்தக்க செயல்களை செய்து முடிக்கின்றன. இதெல்லாம் உண்மைதான் என்பதை ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்படும்போது ஏற்க வேண்டியதாகிறது.

இந்த உலகத்தில் மாஸ் இல்லாமல் எதுவும் இல்லை என்பதால் அதைத் தரும் தெய்வங்கள் என்ற வகையில் வேண்டுமானால் ஹிக்ஸ் போஸான்களை தெய்வத் துகள்கள் என்று அழைப்பது நியாயம். மற்றபடி டிவிட்டரில் ஒருவர் சொன்னபடி,

ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடித்தபோது, அவர்களிடம் பிடிபட்டது ஹிக்ஸ் போஸான்தான் என்றால்,- இயற்பியல் விவரிக்கும் உலகின் அடிப்படை வடிவமைப்பு சரிதான் என்றாகிறது : அதை விவரிக்கத் தேவைப்படும் பன்னிரெண்டு அடிப்படை அணுத்துகள்களின் இருப்பும் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டபோது நிரூபிக்கப்படுகிறது. இனி என்ன? ஹிக்ஸ் போஸான்கள் நம் தொலைந்த உலகுக்கான பாலங்களாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை அதைக் கண்டுபிடித்தவர்கள் வெளிப்படுத்திருக்கிறார்கள்.. இப்போது நாம் கண்டிருப்பது அதன் நிழலை மட்டுமே, அதன் இயல்புகள் என்ன என்பதை அறியும்போது இப்போதிருக்கும் அடிப்படை வடிவமைப்பு விரிவடையலாம் என்று ஆசைப்படுகிறார்கள். ஏனென்றால், நம் அறிவியல் விவரிக்கும் நிகழுலகு இரண்டு முதல் ஐந்து சதவிகித எச்சம்தான் – ஏறத்தாழ எல்லாமே ஒரு நிழலுலகில், நம் அறிவுக்கெட்டாத இருளில், தொட்டும் தொடாத உறவில், நம் அறிதலுக்கு வெளியே இருக்கிறது.

Advertisements

23 thoughts on “தெய்வத் துகள்

 1. அற்புதம் ஐயா  – பிரமாதமாய் எழுதியுள்ளீர். சாத்தியக்கூறின் அரசியல் ஆட்டத்தில் நம் உருவாக்கத்தைப் போல மேற்கூறிய தேவதுகளின் உருவாக்கமும் எதிர்பாராத நிகழ்வுதானா?

  நிறை தரும் உருவம் தரும் துகள் பற்றி இன்னும் விரிவாய் எழுதவேணும் நீங்கள்.

  1. ஆமாம், எனக்குத் தெரிந்தவரை இந்த தெய்வத்துகள்கள் தானாகத் தோன்றியவை, யாரும் திட்டமிட்டு இவற்றை தூவவில்லை.

   இது எல்லாமே ஏறத்தாழ முழுக்க முழுக்க கணிதத்தின் முடிவுகள். கணிதம் என்னவெல்லாம் சொல்கிறதோ, அதை ஆய்வுக் கூடத்தில் சோதித்துப் பார்த்து, நாங்கள் நினைத்தது சரிதான் என்று சொல்கிறார்கள்.

   ஆனால், இந்த கணிதத்தின் முடிவுகளை நமக்குப் பிடிபடும் வகையில் வகையில் அவ்வளவு எளிதாக விளங்கிக் கொள்ள முடியாது. எல்லா விளக்கங்களும் ஏதோ ஒரு இடத்தில் மௌனத்தில் அடங்க வேண்டியதுதான்.

       1. ஆதாரமே இல்லை அதனால் புரிபடவில்லை. எல்லாம் இருக்கு ஆனாலும் புரியவில்லை. இரண்டும் அறியாமைதான், ஆனாலும் முதல் அறியாமை வேறு – கடவுள இல்லை என்று அருதியிட்டு கூறமுடியாத மாதிரி.

 2. ஏதோ ஒரு பெரிய விஷயத்த கண்டு புடிச்சிருக்காங்க போலிருக்கு. எல்லாம் அந்த கடவுளோட கிருபைதான்.

  அது சரி, இந்த நிகழ்தகவுங்கர வார்த்தைய நிறைய உபயோக படுத்திருக்கிங்கலே அதுக்கு என்ன அர்த்தம?

  உங்கள் பரிசிலனைக்கு ஒரு சின்ன ஆலோசனை. இங்க சைடு பார்ல ஒரு தமிழ் டு தமிழ் (அ) இங்கிலீஷ் டிக்க்ஷனரி ஒன்னு (உங்க பதிவுகள்ல வர கடினமான வார்த்தைகளுக்கு) வச்சிங்கன்னா நானும், என்னை போன்றவர்கலும் (அப்படி யாரவது இருந்தா) எங்க தமிழ கொஞ்சம் வளப்படுத்திகிட்ட மாதிரியும் இருக்கும், படிச்சத நல்லா புரிஞ்சுகிட்ட மாதிரியும் இருக்கும்.

  1. நான் இந்த தளத்தை பாவிக்கிறேன் – http://eudict.com/

   இதுவும் உண்டு – http://translate.google.com/

   இந்த இரு தளங்களையும் உங்கள் ப்ரௌசரில் புக்மார்க் செய்து வைத்துக் கொள்வது நல்லது. எங்கும் எப்போதும் பயன்படும்.

   1. இங்க படிச்சிட்டு அங்க போய் தெரிஞ்சிகிட்டு அப்புறம் மறுபடியும் இங்க வந்து புரிஞ்சுகிட்டு, தேவைன்ன மறுபடியும் அங்க போயிட்டு, திரும்பி இங்க வந்துட்டு,….ஏன் சாமி?

    நீங்களே ஒரு சரக்கு பக்கத்த ஆரம்பிச்சி 🙂 அப்பப்ப அப்டேட் பண்ணிங்கன்னா என்ன மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும். தாங்கள் இதை சற்றே தயை கூர்ந்து பரிசிளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    1. வர்ட்பிரசில் அப்படி ஒரு சைட் பாரை அமைக்க எனக்கு வழி தெரியவில்லை.

     ஒரு கட்டுரைக்கு இப்படி புரியாத சொற்கள் எத்தனை இருக்கின்றன? நான்கு? ஐந்து? எத்தனையோ பாத்துட்டோம், இதைப் பாக்க மாட்டோமான்னு தாண்டிப் போக முடியாதா? அந்த சொற்களைப் புரிந்து கொள்ளாமல் எழுதியதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா?

     இல்லை, அந்த சொற்கள்தான் புரிந்து விட்டாலும் எழுதியதுதான் புரிந்து விடுகிறதா!

     ஏதோ நான் பாட்டுக்கு எனக்குத் தோணினதை எழுதிட்டிருக்கேன், இதுக்கு அதைத் தாண்டி எந்த மதிப்பும் கிடையாது. ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு கஷ்டப்படுத்திக்காதீங்க 🙂

    2. கண்மணி குணசேகரன் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன் –

     “வண்ணாஞ்சாலாட்டம் வவுத்த வைச்சுக்கிட்டு, கண்ண மூடித் தொறக்கறதுக்குள்ள அர காணி கொல்லிய தடுமாறும்”

     என்றெல்லாம் எழுதுகிறார். வட்டார வழக்கு!

     1. அருமை . என்ன அர்த்தம் சார்? தமிழ் புரியாமல் போகிறபோது புளகாங்கிதமடையச்செய்கிறது.

      வண்ணாஞ்சால் – துணிகளை இன்னொரு துணியில் வைத்துக்குக்கட்டும்போது ஒரு துணிமூட்டை வருமே அதற்குப்பெயரா?
      பிள்ளத்தாச்சி(கர்ப்பிணி) யைக்குறிக்குதா?

      கர்ப்பிணி வயித்தோட வேகமாய் எதையோ கடக்கறப்ப்போல.

      சொல்லுங்க சார் என்ன அர்த்தமின்னு. பக்கத்து வசனங்களைப்படிச்சா புரிஞ்சு விட்டுப்போகிறது.

      1. முன்பொருமுறை பனிக்கட்டிகள் மோதும்ப்போது எழுகிற ஓசை பற்றிப்பேசிக்கொண்டோம்.Far north என்கிற திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தபோது அந்த ஓசையை உணர்ந்து கொண்டேன்.பல பித்தளைத்தாம்பாளங்களை ஆற்றில் மிதக்கவிட்டால் அது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளுகின்றப்போது ஏற்படுகிறஓசைப்போல பனிப்பாளங்களும் ஏற்படுத்துகின்றன என்பதை படத்தைப்பார்த்துக்கொண்டிருக்கும்போது உணர்ந்து கொண்டேன்

       இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் இங்கு பேசிக்கொள்வனவெல்லாம் இன்செப்ஷன் (inception)ஆகின்றன என்பதைச்சொல்லத்தான்

       1. “பல பித்தளைத் தாம்பாளங்களை ஆற்றில் மிதக்கவிட்டால் ” என்ன சத்தம் வரும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் 🙂

        உலகத்தில் எல்லாமே இன்செப்ஷன்தானே? சில சமயம் எது எப்போது நடந்தது என்பதே குழப்பமாக இருக்கிறது. ஒருத்தருடன் பேசிக் கொண்டிருக்கும்போதே இது ஏற்கனவே நடந்து விட்ட நிகழ்ச்சி என்றும் அவர் பேசப்போவது என்ன என்பது முன்கூட்டியே தெரிந்து விட்ட மாதிரியுமான உணர்வும்கூட சில சமயம் வருகிறது.

        இதை நான் ஈஎஸ்பி மாதிரி ஒரு சித்தி என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அப்புறம் பார்த்தால் வலிப்பு நோய் மாதிரியான ஒரு வகை மூளைக் கோளாறாம் 😦

      2. ஆமாம், புரிந்தும் புரியாமலும் இருப்பதுவும் நன்றாக இருக்கிறது, இல்லையா?

       கண்மணி குணசேகரன் அருமையாக எழுதுகிறார். இங்கு இரவில் பயிர்களைத் திருட்டுத்தனமாகத் தின்றுச் செல்லும் மாடுகள் பேசப்படுகின்றன.

       இந்த பத்தி வரும் பகுதியை தனியாகப் பதிவிடுகிறேன். 🙂

       நன்றி.

 3. நன்றி சார்

  நல்ல மனப்பதிவு அதாவது போசோனின் உங்கள்மீதான தாக்கம்.. ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு உலகம்.இப்படி விளங்கி பிறகு விளங்கப்படுத்துவதற்கு உங்களைப்போல நிறையப்பேர் வேண்டும் தமிழில்.

  உலகம் ஈதரால் நிரப்பட்டிருக்கிறது என்று சொன்னவர்களும் பிராண சக்தி என்றவறும் ச்சீ சக்தி என்பதுவும் ஒருபுறம்.

  இப்போதைக்கு போசன் எனக்கு பொடிமாஸ்.
  உலகத்தை அரை அரை யென்று அரைத்தால் இறுதியாக எஞ்சுகிற துகளில் ஒன்று.

  பாலாஜி சார்

  கடவுள் செயலால் உண்மை .எங்கள் வழியில் சொன்னால் அது இப்போது வெளிப்படவேண்டுமென்பது அதற்கான விதி 🙂

  எங்கள் கணக்குப்பாடப்புத்தகங்களில் probability – நிகழ்தகவு என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அதனால் எனக்கு அது மிகவும் பழகிய சொல். ”நிகழ்வதற்கான சாத்தியப்பாடு” (chance to happen) என்பதைக்குறிப்பதாகத்தான் புரிந்து வைத்திருக்கிறேன்.
  தமிழ்நாட்டுப்பாடப்புத்தகங்களில் எப்படி என்று தெரியாது.
  நட்பாஸ் விளக்கவேண்டும்.அவர் கடினமான சொற்களைப்பயன்படுத்துகிறார் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். 🙂

  1. உண்மை 🙂

   நட்பாஸ் bracketla probability ன்னு குடுத்திருக்கறது ‘சாத்தியங்கள்ங்கர’ வார்த்தைக்குன்னு நினைச்சிட்டேன். தமிழ் நாட்டு பாட புத்தகங்கள்ல நான் படிச்ச காலத்துல ரொம்ப எளிமையான வார்த்தைகள்தான் இருந்தது. ஆங்கில ஆதிக்கம் பல தமிழ் சொற்க்கள புழக்கத்தில் இருந்து விளக்கி, கடின சொற்களாக ஆக்கிவிட்டது 😦 உண்மையாவே நட்பாஸ் ஒரு தமிழ் டு தமிழ் (அ) ஆங்கிலம் டிக்க்ஷனரி சைடு பார்ல போட்டருன்னா ரொம்ப உதவியா இருக்கும்.

   1. //ஆங்கில ஆதிக்கம் பல தமிழ் சொற்க்கள புழக்கத்தில் இருந்து விளக்கி, கடின சொற்களாக ஆக்கிவிட்டது //

    இதை கவனிக்கலையே!

  2. உண்மைதான், அவரவர் உலகம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. இந்த விஷயத்தைப் படிக்கும்போது உங்கள் எண்ணங்கள் வேறாக இருக்கும். அறிவியல் குறித்து நான் வாசித்ததில் ரொம்ப சரி என்று நினைப்பது இது: அறிவு என்பது தீவு மாதிரி – நம் தீவு விரியும்போது நமக்கு அறிய இன்னும் பல விஷயங்கள் கிடைக்கின்றன.

   நாமெல்லாம் அறிவியல் விடைகளை நோக்கிச் செல்கிறது என்று நினைக்கிறோம், ஆனால் அவர்களோ கேள்விகளையே விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில்கூட சில விஞ்ஞானிகள், “என்னது, ஸ்டாண்டர்டு மாடல் சரிதான்னு ஆயிடுச்சா? சுத்த போர்” என்று சொல்லியிருக்கிறார்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s