மாடுகள்

தெருவில் கும்பலாயிருந்தது. வீட்டுக்குள் போகாமல் போர்வையையும், கைவிளக்கையும் திண்ணையில் வைத்துவிட்டு, வெள்ளையன் தெருவிற்கு ஓடினான். கயிற்றோடு வடக்கிருப்பு ஆள் ஒருவன் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் வெள்ளையனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.கடித்துக் குதறிவிடுகிறமாதிரியான கோபத்தில், செல்வராசு பேசிக் கொண்டிருந்தான்.

“ஓம் மாடுதான, தே இருக்கு. நா ஒண்ணும் கடிச்சுத் தின்னுடல. ஆனா அப்பிடியே ஒரு நாலடி, மேலவெளியில அந்த நெல்லுக் கொல்லியப் போய் பாத்துட்டு வா, என்னா பாடுபடுத்தியிருக்குன்னு. இந்நேரம் நீங்களா இருந்தா, படைய தெரட்டிக்கிட்டு வந்து, அண்ணாக்கவுத்துல கோமணத்துணி இல்லாம துள்ளிக்கிட்டு நிப்பிங்க…”

“ஏம் மாடுலாம் அதிகமா வராது.தே, நேத்திலேர்ந்து மாட்டக் காணம்னு வந்தன். இனிமே வராது. அவ்வளவுதான் நாஞ் சொல்லுவேன்” அவன் தெனாவெட்டாகப் பேசினான்.

“நேத்திலேர்ந்துதான் காணமா. யோவ் இதுவும் இதுகூட நாலஞ்சி மாடுவுளும், இங்கியே உத்திமாக்கொளத்தப் பக்கம் சுத்தி சுத்தி நின்னுட்டு வருது,” நடப்பதைக் காதில் வாங்கிக்கொண்டே வந்த குருமூர்த்தி சொன்னான்.

“நீங்க என்னா நெனப்புல மாட்ட அவுத்து வுட்டு அழும்பு பண்றிங்கன்னு எங்குளுக்குத் தெரியும். ஆனா அந்த நெனப்பு நீடிக்காது. பள்ளம் உள்ள எடத்துல தண்ணி நின்னுடும்.” ஊர் ஓரம் மிளகாய் வைத்திருக்கும் உத்தண்டி தலையை ஆட்டியபடி பேசினான்.

கட்டில் அகப்பட்ட மாடுகளை ஓட்டிக்கொண்டு போக, அவர்கள் வரும்போது இங்கு ஏதாவது பிரச்சினை என்றால், இங்கித்திய ஆட்கள் நெய்வேலி வேலைக்கு, ஊர் சேதிக்கு அவர்கள் ஊர் வழியாகப் போகும்போது மடக்கிவிடுவது. பசங்களை வைத்து ஊரிலோ, நடு முந்திரிக் காட்டிலோ மிரட்டச் சொல்வது. ராத்திரியில் ரெண்டாலங்கெட்ட நேரத்தில், திடுமென போதையில் ஒன்டியாய் வருபவனை மறிக்கும்போது, யார்தான் என்ன செய்ய முடியும். கடந்து மக்யாநாள் நாலு பேர் போய் கேட்டால், “அந்த புளியாங்கொட்டை பெத்தது போதையில பண்ணிட்டுது. சரி வுடுங்க” என்று கட்டை பஞ்சாயத்து பண்ணுவது. இதற்கு பயந்துகொண்டு, மாடுகள் தொடர்பான பிரச்சினைகளில் கடும் புடியாக நடந்து கொள்வதில்லை. இந்த கொக்குமிரட்டல்களில்தான் அவர்கள் மாடுகளைக் கூச்சமின்றி அவிழ்த்து விடுவது.

“சரி மேலூருக்குக் கீழூரு. பாத்து செத்த மாட்டக் கட்டி வையிங்க. அவவன் இந்த மானக்காய்ச்சல்ல தண்ணி எறச்சி நொந்துபோயி குந்தியிருக்கான்,” கலியபெருமாள் பேச்சை ஆயக்கட்டினார்.

“இனிமே இந்த மாட்டக் கண்டன், நடக்கறது வேற…” செல்வராசு வேப்பமரத்து வேரில் கட்டி வைத்திருந்த மாட்டை அவிழ்த்துவிட்டான். கூட்டத்தைப் பார்த்து மிரண்டபடி போனது அது. மாட்டுக்காரன் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு போனான்.

“போவுது பாரு. வண்ணாஞ்சாலாட்டம் வவுத்த வைச்சிக்கிட்டு. கண்ண மூடித் தொறக்கறதுக்குள்ள அர காணி கொல்லிய தடுமாறும். நோவாத புடிச்சிக்கிட்டு போறான். அதப் புடிச்சிக் கட்றதுக்கு என்னா பாடு பட்டம் தெரியுமா. என்னா ரவன சவாரி பாஞ்சுது!”

– “ராக்காலம்” சிறுகதையின் ஒரு பகுதி, வெள்ளெருக்கு, கண்மணி குணசேகரன், சிறுகதைத் தொகுப்பு, டிசம்பர் 2004, தமிழினி.

நன்றாக இருக்கும் என்று நம்பி படிக்கலாம்.

Advertisements

5 thoughts on “மாடுகள்

 1. நன்றி சார்

  கதைப்பின்புலத்தில் இந்த வட்டார வழக்கு புரியக்கூடியதாகத்தான் இருக்கிறது.

  கதைநிகழ்வுகள் எனக்கும் பரிச்சயமானவை. 🙂

 2. மாடு தேடிச்செல்லும்போது கம்பரின் இந்தப்பாடல் ஞாபகத்துக்கு வரும் எனக்கு 🙂

  மாடு நின்ற அம் மணி மலர்ச் சோலையை மருவி,
  தேடி, இவ் வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை;
  ஊடு கண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை;
  வீடுவேன், மற்று இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி.’

  1. அந்த அளவுக்கா பாடாப் படுத்தும் உங்க மாடுகள்?

   எனக்குத் தெரிஞ்சு கம்ப ராமாயணப் பாடல்களை பாடிக் கொண்டு மாடு மேய்த்த ஒரே ஆள் நீங்கள்தான். வழக்கமா இங்க படிப்பு வராத பசங்களை, “நீ மாடு மேய்க்கதான் லாயக்கு” என்று திட்டுவது வழக்கம்.

 3. மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று திட்டுவது எங்களுக்கும் சொந்தம்.மாட்டை மேய்ப்பதில்லை.மாடு வளர்ப்பதுதான்.அதுதவிர சுந்தரகாண்டம் காட்சிப்படலம் ஒன்பதாம்/பத்தாம் வகுப்பு இலக்கியப் பாடம்

  பட்டி மாடுகள் என்று ஒரு தொகை மாடுகளை வளர்ப்பவர்கள்தான் அந்த மாடுகளை மேய்ச்சல் வெளிபார்த்து ஓட்டிச்செல்வார்கள்.மேய்பார்கள்

  குறிப்பிட்ட ஒரு வயலில் மாடுகளை அடைத்து (எங்கள் பகுதிகளில் பட்டி அடைத்தல் என்று சொல்வார்கள் )அதன் சாணம், சலம் எல்லாம் வயலில் சேரவிடுவதற்கு ஒரு கட்டணம் இருக்கிறது.
  இப்படி பட்டி அடைப்பது ஆஸ்திரேலியாவிலும் இருந்திருக்கிறது.

  இப்படி ஆடு மாடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை,புல்வெளி தேடி மாடுகளை ஓட்டிச்செல்வது பற்றிய மேலை நாட்டுக் கவுபோய்(cowboy)க்கதைகள் போல எங்களுக்கும் கதைகளும் இருக்கின்றன.:)

  கசகஸ்தானில் செம்மறியாடு மேய்ப்பவர்களைப்பற்றிய Tulpan என்கிற திரைப்படம் ஒரு கவிதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s