தொடரும் நினைவுகளுக்கு எதிராக – சா. கந்தசாமியின் “வேலையற்றவன்”

ஆம்னிபஸ் ப்ளாக்கில் எழுதியது. மீள்பதிவு.

அங்கே எழுதுவதால் இங்கே வாசிப்பதைவிட அதிகம் வாசிக்கிறார்கள் என்றெல்லாம் எதுவும் இல்லை. நமக்கு உள்ளதுதான் நமக்கு. ஆனால் ஆறேழு பேராக இணைந்து எழுதுவதால் தொடர்ந்து புத்தகங்களை வாசிக்கவும் எழுதவும் ஒரு தேவை ஏற்படுகிறது.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

“நீ புறப்படு ரேணு. பிரண்ட் ரொம்ப நேரமா நிற்கிறார்”
இவன் காரில் ஏறி உட்கார்ந்தான். பக்கத்தில் அவள் அமர்ந்தாள். டிரைவர் கதவை அடித்துச் சாத்தினான். வந்தனாதேவி கை அசைத்தாள்.  கார் புறப்பட்டுச் சென்றது.
கொஞ்ச நேரம் வரையில் அவள் ஒன்றும் பேசவில்லை. கன்னத்தில் கைவைத்து, யோசனையில் மூழ்கி இருப்பது மாதிரி இருந்தாள். கார் பள்ளத்தில் இறங்கி மேட்டில் ஏறியது. இவன் மேலே சாய்ந்தாள். அப்புறம் நிமிர்ந்து உட்கார்ந்து, “பிரசாத் எப்படி?” என்று கேட்டாள்.
“ஒன்னும் தெரியல”
“அவன் ரொம்ப நல்லவன். பெரிய திறமைசாலி. பணத்தைப் பணம் என்று பார்க்கவே மாட்டான். குடிக்கும் பெண்ணுக்கும் என்ன வேண்டுமானாலும் செலவு செய்வான். எங்கள் சொந்தத்தில்தான் கல்யாணம் பண்ணிக் கொண்டான். நாலு வருஷம் வரையிலும் ஒரு பிராப்ளமும் இல்லை. அப்புறம் மனைவி இவனை விட்டுவிட்டுப் போய் விட்டாள். பிரசாத் அப்புறம் எங்கெல்லாமோ சுற்றினான். ஒரு வருஷம் பாரீசில் இருந்தான். பாரீசில்தான் சுசீலாவைப் பிடித்தான். இவன் கெட்ட குணத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு சுசீலா கூட இருக்கிறாள். அவள் மட்டும் இல்லை என்றாள் இவன் இல்லை… அழிந்து போயிருப்பான்”
கார் வேகம் குறைந்தது.
“மனித மனதின் விசித்திரம் பற்றி யார் என்ன சொன்னாலும், அது சரியா இருக்கறது இல்ல…”
இவன் பதிலொன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தபடி இருந்தான்.

மூன்று குறுநாவல்கள் – வேலையற்றவன், ஏரிக்கரையில்எட்டாவது கடல்.  இந்தக் கதைகள். தனி மனிதன் சமூகத்துடனும், பிழைப்பு மண்ணுடனும், நிகழ்வுகள் நினைவுடனும் பிணைந்திருப்பதைப் பேசுவதாகக் கொள்ளலாம் : முதல் இரண்டு கதைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியால்  உருவாகும் சமூக நிர்பந்தங்கள் கடந்த காலத்தை கடந்து செல்லப்பட வேண்டியதாக்குகின்றன : முதுகைத் திருப்பிக் கொள்ளுதல் இயல்பான தேர்வாகிறது.  கடைசி கதையில் கருணையால் இந்த முதுகைத் திருப்பிக் கொள்ளுதல், நினைவுகளைவிட்டு, தன்னியல்பைவிட்டுத் திரும்பி நிற்றல் நிகழ்கிறது.

வேலையற்றவன்’ கதையில் படிப்பு வராத கதிரவன் வேலைக்குப் பதிவு செய்து கொள்கிறான்; மாட்டு வண்டியோட்டும் அவனது அப்பாவின் வாழ்க்கை பேருந்தால் அழிகிறது; சுதந்திரமான, யாரையும் சாராத, உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் வாழ்க்கை முறை மக்களாட்சியின் மகத்துவத்தால் அரசியல்வாதிகளிடம் பிச்சை கேட்கும் அதிகாரப் பறிப்பாகிறது; கடந்த காலம் பொருளற்றுப் போய் கதிரவன் தனக்கானத் தேர்வைச் செய்து கொள்கிறான். உழைப்பின் கௌரவம் குன்றி, வேலையில் சேர்வதைக் கட்டாயமாக்கிய பொருளாதார வளர்ச்சி இந்தக் கதையில் நுட்பமாக விமரிசிக்கப்படுகிறது.

;ஏரிக்கரையில்‘ கதை இருளில், அறிவாரற்று நிகழும் கொலை போன்றது. அழகு ஒரு புல்டோசர் டிரைவர். ராணுவத்தில் பணிபுரிந்தவன். தான் பிறந்த ஊரில், தன் தந்தையும் பிறரும் ஒன்றுகூடி அமைத்த ஏரியை உடைக்கும் அரசுப் பணியாளனாக, புல்டோசரை ஓட்டிக் கொண்டு தன் சொந்த ஊர் திரும்புகிறான் அழகு – இன்று வற்றிய, குப்பை மண்டிய, சேற்றுக் குட்டையாக இருக்கும் அந்த ஏரி, குடியிருப்பாக மாறப் போகிறது. சாதி வேறுபாடுகளைக் கடந்து தன் தந்தையும் தானும் தன் ஊரே ஒன்றுகூடி ஒவ்வொரு சட்டியாய் மண் போட்டுக் கட்டிய அந்த ஏரியின் உயர்ந்த கரைகளை எந்த வருத்தமும் இல்லாமல், ஒரு உத்வேகத்துடனும்கூட, அவன் உடைத்து நாசமாக்குகிறான்.: அவனது இந்த உக்கிரத்தின் பின்னணியில் அரசியலும், சமூக மாற்றங்களும், சுயநலமும் மனிதர்களையும் மண்ணையும் தமிழக கிராமங்களின் இயல்பையும் கீறிக் கொலை செய்வது பேசப்படுகிறது, இவை அனைத்தும் அடங்கிய குரலில் உணர்த்தப்படுகின்றன. இந்தத் தொகுப்பின் சிறந்த கதை, மிக முக்கியமான குறுநாவல்.

“சாயாவனம்” நாவலில் பரவலான கவனத்தைப் பெற்ற  அவரது சூழியல் அக்கறை சா. கந்தசாமியின் எழுத்தில் தொடரும் சரடு.  நமது நீர்நிலைகள் குப்பை மேடுகளாகி குடியிருப்புகளாக மாறுவதில் உள்ள மூர்க்கத்தனமான மனநிலையை அழகுவைக் கொண்டு சா கந்தசாமி நுட்பமாகப் பதிவு செய்கிறார். அண்மையில் இணையத்தில் வாசித்த ஜெயமோகனின் “நீர்ப்படுகொலை” என்ற கட்டுரையின் செய்திகள் எனக்கு இந்தக் கதையை நினைவுபடுத்தின.

“எட்டாவது கதை” எனக்குப் புரியவில்லை. விசாகபட்டினத்திலிருந்து ஒரு ஆய்வாளன் ராஞ்சிக்குப் பயணம் செல்கிறான். அந்தப் பயணத்தில் நிகழ்வுகளாகவும் நினைவுகளாகவும் வெளிப்படும் சமூக யதார்த்தங்கள்- இவை மட்டுமே இந்தக் கதையைப் படிக்கப் போதுமான காரணங்களாக இருக்கின்றன.

மனிதன் தன் இருப்பை தன்னை மீறிய சக்திகளிடம் பறி கொடுத்து தன்னையும் தன் மண்ணையும் தன் இயல்பையும் அழித்துக் கொள்வதை இந்தக் கதைகள் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன. பழைய நினைவுகள் அனைத்து கதைகளிலும் குறுக்கிட்டுக் கொண்டேயிருப்பது ஒரு கட்டத்தில் அலுப்பாக இருக்கிறது என்பது ஒரு குறை. ஆனால், இதுவே இந்தக் கதைகளுக்கு அவசியமான தனித்தன்மையைத் தருவதாகவும் இருக்கிறது.

மூன்று கதைகளிலுமே, தம்மபதத்தில் சொல்வது போல், வண்டிக் காளையின் தடத்தைத் தொடரும் சக்கரமாய், கடந்த காலம் நிகழ்காலத்தை நெருக்கமாகத் தொடர்கிறது. எப்போதும் மாற்றத்தின் விளிம்பில் இருக்கும் இதன் பிரதான பாத்திரங்களின் நினைவுகள் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.  நிகழ் காலம், கடந்ததன் நினைவுகளை ஒற்றிய ஒரு காலக்கூடாய் கவிந்திருக்கிறது, கதைகளின் முடிவில் உறவுகள் மறுநிர்ணயம் செய்யப்படுகின்றன : மண் மற்றும் சமூகம் சார்ந்த இருப்பைத் துணித்துக்கொண்டு மனிதனின் தனித்துவம் எதிர்பார்த்திராத முகம் கொண்டு வெளிப்படுகிறது – ஒரு தீர்வாக அல்ல, ஒரு புதிய சமன்பாட்டை உருவாக்குவதாக மட்டும்.

வேலையற்றவன் – சா கந்தசாமி.
முதல் பதிப்பு, நவம்பர் 2001
உள்ளடக்கம் : நாவல்
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, தி நகர், சென்னை 17
319 பக்கங்கள், விலை ரூ, 80

Advertisements

One thought on “தொடரும் நினைவுகளுக்கு எதிராக – சா. கந்தசாமியின் “வேலையற்றவன்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s