திக்கு தெரியாத காட்டில்…

முதலில் முன்னூறு சொற்கள் என்று துவங்கியது, ஐநூறு போதாது என்று ஆயிற்று, இப்போது எழுநூறும் திருப்தியாயில்லை. சில முக்கியமான புத்தகங்களை அவ்வளவு எளிதாகப் பேசிவிட முடிவதில்லை. இந்த ஆம்னிபஸ் பதிவு கிட்டத்தட்ட எண்ணூறு வார்த்தைகளைத் தொட்டுவிட்டது – இருந்தாலும் விட்டுப் போன விஷயங்கள் இதைவிட இரு மடங்கு அதிகம். தமிழில் வாசித்ததை எழுதும்போது மையச் சரடு என்று ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டுவந்து தந்துவிட முடிகிறது : ஆங்கிலத்தில் அது கடினமாக இருக்கிறது : இந்த இடத்தில் எம். கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை நாவலைச் சொல்ல வேண்டும் – இன்ன உருவம் என்று அடையாளம் காண முயற்சி செய்கிறேன், முடியவில்லை.

வாரம் ஒரு பதிவு என்றாகிவிட்டது : இரண்டாக்க முயற்சிக்கிறேன். முடியுமா தெரியவில்லை.

====

“The General in His Labyrinth” என்ற இந்த நாவலைப் பிழைதிருத்தும்போது, பிறக்குமுன்னே போர்க்களம் சென்ற ஒரு ராணுவ வீரனையும் தன் கணவனுடன் ஐரோப்பா சென்ற விதவை ஒருத்தியையும் கண்டுபிடித்து அப்புறப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார் மார்க்வெஸ்,. மேலும், “iஇத்தகைய அபத்தங்கள் இந்தக் கொடூர நாவலில் தெரியாத்தனமாகவாயினும் சில துளி நகைச்சுவையைக் கலந்திருந்தால் நன்றாகக்கூட இருந்திருக்கும்,” என்ற கருத்தையும் பதிவு செய்கிறார். எதை நகைச்சுவை என்று கருதுகிறார் மார்க்வெஸ் என்பது ஒரு புறமிருக்க, இந்த நாவல் ஒரு கொடூரத்தை விவரிக்கிறது என்று அவர் சொல்வதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் – தென் அமெரிக்க வரலாற்று அறிவில்லாத நம் மேம்போக்கான வாசிப்பில் அப்படி எந்தக் கொடூரமும் தென்படுவதில்லை.

யாரோ ஒரு ஜெனரல், அவர் என்னதான் தென்னமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித் தந்தவராக இருந்தாலும், இந்த நாவலில், நாற்பத்து ஏழு வயதிலேயே எண்பது வயது கிழவன் போலாகி விடுகிறார்; வயோதிகத்துக்குரிய உடல் உபாதைகள், பிடிவாதங்கள், மனக் குழப்பங்கள். அரசாங்கங்களுக்கு வேண்டாதவராகிவிட்ட அவர், ஐரோப்பாவில் தஞ்சம் புகத் தயாராகிறார்; இதோ போகிறேன், இப்போதே போகிறேன் என்று சொல்லிக் கொண்டே காலந்தாழ்த்தி,தயங்கித் தயங்கி துறைமுகம் நோக்கிப் பயணிக்கிறார்; இந்தப் பயணத்தில் அவர் பார்க்கும் இடங்கள், முகங்கள், அவை எழுப்பும் பழைய நினைவுகள். ஏதோ ஒரு பெரிய நோயால் இறந்து கொண்டிருக்கும் அவர், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியான ஒரு மனநிலையில், முன்னும் பின்னும் அலைகழிக்கப்படுவதே கதையோட்டம். எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் போர் முனைக்குத் திரும்பும் வழியில் நோய் முற்றி இறந்தும் போகிறார்.

வரலாற்றைத் தழுவி எழுதப்பட்ட இந்த நாவல் தென்னமெரிக்காவில் இன்றும் லிபரேட்டர் என்று கொண்டாடப்படும் சைமன் பொலிவாரின் கடைசி நாட்களை விவரிக்கிறது. தன் தாயகத்தைக் காலனியாதிக்கத்தில் வைத்திருந்த ஸ்பானிஷ் ஆட்சியை அகற்றுவதாகத் தனது இருபதாவது வயதில் ரோம் நகரின் மலைச் சிகரமொன்றில் அவர் செய்திருந்த சபதம் எப்போதோ நிறைவேறியாயிற்று; என்றாலும், தென் அமேரிக்கா முழுமையும் ஒரே தேசமாக இணைந்து அங்கு ஒரே அரசு அமைய வேண்டும் என்று போராடி, அதை முன்னிட்டு அனைத்து அதிகாரங்களையும் கையகப்படுத்திய பொலிவார் நாற்பத்து ஏழாவது வயதில் ஆட்சி, அதிகாரம் ஆதரவு அனைத்தும் இழந்து, தன் மக்களால் வெறுக்கப்பட்டு, ஒரு கடலோர நகரில், கப்பல் வரக் காத்திருக்கிறார், ஐரோப்பாவில் தஞ்சம் புக. பயணச் செலவுக்குக்கூட அவரிடம் போதுமான அளவு பணம் இல்லை, பயணிக்கவும் அரசு அனுமதியில்லை.

பிரமிக்க வைக்கும் தீவிரத்துடன், போர்முனையைத் தேடி தென் அமெரிக்காவில் குறுக்கும் நெடுக்குமாக ஏறத்தாழ ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் பயணித்து, ஐரோப்பாவைவிட ஐந்து மடங்கு அதிக பரப்பளவுள்ள பகுதிக்கு விடுதலை பெற்றுத் தந்து ஒருமைப்பாட்டுக்கப் போராடியவரின் இறுதி நாட்கள் வறுமையிலும் தனிமையிலும் கீழ்மையிலும் அடங்கி ஓய்வதுதான் இந்த நாவலின் பெருஞ்சோகம். காலத்தில் முன்னும் பின்னும் பயணித்துக்கொண்டே இருக்கும் ஜெனரல், நிராகரிப்பின் வலி, இதைத்தான் மார்க்வெஸ் கொடூரம் என்று சொல்லியிருக்க வேண்டும். விடுதலை பெற்றது போல், தேச ஒருமைப்பாட்டையும் எந்த விலை கொடுத்தும் அடையலாம் என்ற தீவிர லட்சியம் அவரை சகோதர யுத்தத்தில் தள்ளி, அவர் வெறுக்கப்பட்டு, தனித்து விடப்படவும் காரணமாகிறது. நாவலில் ஓரிடத்தில் ஜெனரல், “நீ தவறான போரைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய். இதில் சகோதர யுத்தங்களையே சந்திப்பாய், அது உன் தாயைக் கொல்வதைப்போல் கொடுமையானது” என்கிறார். எவ்வளவுதான் தியாகங்கள் செய்திருந்தாலும், எவ்வளவுதான் உயர்ந்த நோக்கங்கள் கொண்டிருந்தாலும், ராணுவ தலைமைக்கு, அமைதியை நாடும் மக்கள் எங்கும் அடங்கிப் போவதில்லை. எதார்த்தங்கள்தான் வெல்கின்றன.

தென் அமெரிக்காவின் மிக வளமான குடும்பங்களில் ஒன்றில் பிறந்த ஜெனரல், விடுதலைப் போர்களுக்குத் தன் செல்வத்தின் பெரும்பங்கைச் செலவிடுகிறார். விதவைகளுக்கும், போரில் ஊனமுற்றவர்களுக்கும் தனது கணிசமான உடமைகளின் வருவாயைப் பகிர்ந்து தருகிறார். தன் கரும்புத் தோட்டங்களையும் வீடுகளையும் உறவினர்களுக்குத் தருகிறார், விளைநிலங்களை விடுதலை பெற்ற அடிமைகளுக்குக் கொடுத்து விடுகிறார். இந்தத் தியாகங்களுக்குப் பரிசாகத் தன் கடைசி காலத்தில் வழிச் செலவுக்கு அரசுப் பணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அரசு அவருக்கு ஆயுட்கால ஓய்வூதியம் வழங்க முடிவு செய்திருக்கிறது என்ற தகவல் கிடைத்ததும், “நாம் பணக்காரர்களாகி விட்டோம்” என்று மகிழ்கிறார்!

“இல்லாத ஒன்றைத் தேடிச் சென்று என் கனவில் நான் தொலைந்து போனேன்,” என்கிறார் மார்க்வெஸ்ஸின் பொலிவார். “புரட்சிக்குச் சேவகம் செய்பவன் கடலில் உழவு செய்கிறான்,” என்கிறார் ஒரு கடிதத்தில். இன்னோரிடத்தில், “புரட்சிப் போர்கள் கடலலைகள் போல் ஒன்றையொன்று தொடர்கின்றன, அதனால்தான் நான் கலகங்களை விரும்பியதேயில்லை…. நம்பினால் நம்புங்கள், ஸ்பானிஷ் அரசை எதிர்த்து நாம் செய்த ஆயுதப் போராட்டத்தைக்கூட இப்போதெல்லாம் நான் கண்டிக்கிறேன்,” என்று தன் லட்சியங்கள் தரை தட்டிய கசப்பை வெளிப்படுத்துகிறார்.

விடுதலைப் போரில் பெற்ற வெற்றியின் புகழ் வெளிச்சத்தில் வாழ்ந்திருக்கலாம், ஆனால் அதையும் தாண்டிய ஒரு லட்சியத்தை நோக்கிச் செல்லும்போது உட்பகையைச் சந்திக்கிறார், அதன் இயல்பை அவர் புரிந்து கொள்ளாததுதான் அவரை இழிவுபடுத்திவிடுகிறது. “ஒரே கடிதத்தில், ஒரே நாளில், ஒரே நபரிடம், முன்னர் ஒன்று சொல்லி, பின்னர் அதற்கு முரணான கருத்து சொல்கிறேன் என்று என்னை கேலி செய்கிறார்கள்…” என்று குறைபட்டுக் கொள்கிறார் ஜெனரல், அவரைக் குறித்துப் பேசப்படும் எண்ணற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் : “அவையெல்லாம் உண்மையாகவும் இருக்கலாம், ” என்கிறார். “ஆனால் அவை அந்தச் சந்தர்ப்பங்களுக்குரியவை. இந்த கண்டத்தை ஒரே சுதந்திர நாடாக நிறுவ வேண்டும் என்ற அந்த ஒரு நோக்கத்தில்தான் நான் அனைத்தையும் செய்தேன், அதில் நான் முரண்பட்டதே கிடையாது, அதில் எப்போதும் எனக்கு சந்தேகம் வந்ததில்லை”.

ஆனால் அவர் சந்தர்ப்பங்களுக்கேற்ப எடுத்த முடிவுகளும் அப்படியொன்றும் பெருமைப்படக்கூடியவையல்ல- மருத்துவமனையில் உள்ளவர்கள் உட்பட 800 ஸ்பானிஷ் கைதிகளைச் சுட்டுக் கொள்ள உத்தரவிட்டதைக் கடைசிவரை நியாயப்படுத்துகிறார் ஜெனரல் (அப்போது, “எந்த வரலாறாவது ரத்தத்திலும், சிறுமைப்படுத்துதலிலும், அநீதியிலும் தோய்ந்திருக்கிறது என்றால் அது ஐரோப்பிய வரலாறுதான்: உங்களுக்கு எங்களைக் கண்டிக்கும் தார்மீக உரிமை கிடையாது,” என்று ஜெனரல் பேசுவது, மார்க்வெஸ்ஸின் நோபல் பரிசு உரையின் கருத்தை ஒத்ததாக இருக்கிறது என்ற குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன : இந்த நாவல் இரக்கமற்றதென்றாலும் பொலிவாருக்கு எதிரானதல்ல) ; வேறோரிடத்தில், “நமது அதிகாரமும் உயிர்களும் எதிரிகளின் ரத்தாதாலன்றி காப்பாற்றப்பட மாட்டாது” என்கிறார் ஜெனரல். எதிரிக்கும் உட்பகைக்கும் வேறுபாடு தெரியாத சூழல்களில் இது போன்ற நம்பிக்கைகள் எந்த ஒரு சமூகத்தையும் சிதைத்து விடுகின்றன.

அன்றாட வாழ்க்கையே போர்க்களமாய் மாறிவிடும்போது லட்சியத்தையும் அதன் சேவையில் இரக்கமின்மையையும் அதற்கு இட்டுச் செல்லும் ஒற்றை நோக்கத்தையும் மக்கள் ஆதரிக்கக்கூடும்; ஆனால், மனிதர்கள் எப்போதும் வாழ்வையே தேர்ந்தெடுப்பதால், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் அவகாசம் கிடைத்தாலும் லட்சியங்களை நிராகரித்து விடுகிறார்கள், மரணம் தவிர்க்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அதை யாரும் விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை.

வாழ்க்கையில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு விடுதலையும் புரட்சியும் வெற்று முழக்கங்கள்தான்.. மக்களின் ஆதரவை இழந்த அதிகாரம் அவர்கள் விருப்பத்தைப பொருட்படுத்தாமல் பிரயோகிக்கப்படும்போது சர்வாதிகாரமாகிறது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கும் லட்சியவாதிகள் கொடுங்கோலர்களாக வெறுக்கப்படுகிறார்கள். தன் செல்வங்களைத் தியாகம் செய்த, அரசுபணியில் பத்து பெசோ பெறுமான ஊழல் செய்தாலும் மரண தண்டனை, என்று சட்டம் இயற்றிய ஜெனரலும் இதற்காகவே வெறுக்கப்படுகிறார், வெளிப்படையாகவே ஊழல் செய்யும் சான்டண்டர் என்ற அரசியல்வாதியை மக்கள் வரவேற்று அவரது iiடத்தில் அமர்த்துகிறார்கள்.

“நான் மரணமடையும் நாளன்று காரகாஸ் நகரம் ஆலய மணிகள் ஒலிக்க என் சாவைக் கொண்டாடும்” என்கிறார் ஜெனரல். ஆனால்,அவரது மரணத்தைத் தொடர்ந்து அதைவிடக் கொடுமையான அவமானம் அவருக்கு இழைக்கப்படுகிறது.:ஜெனரலின் மரணம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும் மாராகைபோ மாகாண ஆளுநர், மையத்தில் உள்ள காரகாஸ் அரசுக்குக் கடிதம் ஒன்று எழுதுகிறார் : “இந்த மகத்தான செய்தியைத் தங்களுடன் விரைந்து பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந்த நிகழ்வு சந்தேகத்துக்கிடமில்லாமல், சுதந்திரப் போராட்டத்துக்கு சொல்லொண்ணா நன்மைகள் கொடுக்கும், நம் தேசத்தின் நலனை உறுதி செய்யும். தீவினையின் உருவம், ஒழுங்கைக் குலைக்கும் எரிதழல், இந்த நாட்டை அச்சுறுத்திய கொடுங்கோலன், இனி இல்லை”. ஒரு தகவலாக வந்த இந்தச் செய்தி, தேசிய பிரகடனமாக அறிவிக்கப்படுகிறது.

புத்தகம் : The General in His Labyrinth
ஆசிரியர் : Gabriel Garcia Marquez
விலை : ரூ. 269
வகைமை : நாவல்.
இணையத்தில் வாங்க : Amazon, Flipkart

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s