வாகனமில்லா வழிப்பயணிக்கான அகில உலக இன்பச் சுற்றுலா கையேடு!

கெஞ்சிக் கேட்டாலும் ஆம்னிபஸ்ஸிலும் எழுத மாட்டேன்,  உன் ப்ளாகிலும் எழுத மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்யும் நண்பர் அஞா யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் கூகுள் ப்ளஸ்ஸில் புத்தக விமரிசனம் செய்து வருகிறார். இந்தப் பதிவைத் தவறவிட மனமில்லை. அஞாவிடம் மானசீக மன்னிப்பு கேட்டுவிட்டு ஈவு இரக்கம் பார்க்காமல் கடத்தி வந்துவிட்டேன். என்னப்பன் முருகன் என்னை மன்னிப்பானாக…

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

கிண்டலும் கேலியும் பிரமிப்பூட்டும் அறிவியல் கற்பனைகளும், இடையிடையே சில மொக்கைகளும் கலந்த ஒரு கதையேயில்லாத கதை.

கதையின் முப்பதாவது பக்கத்திலேயே, விண்வெளியில் அமைக்கப்படும் பாதைக்கு குறுக்காக இருக்கும் காரணத்தினால் பூமி திடீரென்று அழிக்கப்படுகின்றது! கதாநாயகன் ஆர்தர் டென்ட்டும், ஒரு ஆய்வுப் புத்தகத்திற்கு தகவல் திரட்ட பூமிக்கு வந்திருக்கும் அவனது வேற்றுக்கிரகவாசி நண்பனும் பூமியை அழிக்கும் விண்கலங்களிலேயே திருட்டுத்தனமாக லிப்ட் வாங்கி தப்பிக்கிறார்கள். அதே நேரம், பால்வெளியின் புதிய ‘அண்ட அதிபர்’ ஆக பொறுப்பேற்கும் Zaphod எனும் இருதலை ஏலியன், Infinite Improbability Drive எனும் அற்புத கருவியைக் கொண்ட அதிசய விண்கலத்தை,  பதவியேற்பு விழாவில் வைத்தே திருடிக் கொண்டு தப்பிக்கிறான். இவர்களும் இவர்களது நண்பர்களும் என்ன ஆனார்கள் என்பதே ஐந்து பாகங்கள் கொண்ட இந்தக் கதையின் முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளின் சுருக்கம்.

இப்படி இலக்கேயியில்லாமல் பயணிக்கும் கதையை திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுவது ஆடம்ஸின் நகைச்சுவையும் அறிவியல் கற்பனைகளும்தான். ‘The Trilogy of Five’ எனும் tagline இல் ஆரம்பிக்கும் அவருடைய irony கலந்த நகைச்சுவைகள், பல இடங்களில் சிந்தித்து சிரிக்க வைக்கின்றன. உதாரணமாக, ஏலிய உலக தத்துவஞானிகளின் அறிமுக உரையாடலில் வயிறு வலிக்கச் சிரித்தேன். தொழில்நுட்பங்களுக்கும் கருவிகளுக்கும் சூட்டிய பெயர்கள்: Kill O Zap guns, Infinite Improbability Drive, Nutri Matic போன்றவையும் ‘two to the power of infinity minus one’ எனும் கணித ஜோக்குகளும் சுவாரஸ்யம். நாத்திகம், அறிவியல், தத்துவம், தொழில்நுட்பம், கணினிகள் என வகைதொகையில்லாமல் எல்லாவற்றையும் (ரசிக்கும்படி) கிண்டலடித்திருக்கிறார் ஆடம்ஸ்.

சிரிக்கவைக்கும் நகைச்சுவையோடு, கதையில் வரும் ஆடம்ஸின் கற்பனைகள் பல பிரமிப்பூடுகின்றன. அண்டவெளியின் மகா பணக்காரர்களுக்கான வாசஸ்தலங்களாக பிரத்தியேக கோள்களை வடிவமைக்கும் தொழிற்சாலை, மறைமுக கேலி கலந்த அற்புத கற்பனை. வீடியோக்களின் மேம்படுத்தலான Sense O Tape போன்ற தொழில்நுட்பங்களும் Infinite Improbability Drive எனும் ஐடியாக்களும் புதுமை. மனிதர்களின் ஆய்வுக்கூடங்களில் ஆய்வுக்குட்படுத்தப்படும் எலிகள், உண்மையில் நம்மைவிட புத்திசாலியாக இருந்து, நம்மையே ஆராய்ச்சி செய்வதற்காக அவ்வாறாக நடிக்கின்றன எனும்போதும், பூமி எனும் அண்டத்தின் மாபெரும் பரிசோதனைக்கூடமும், அதன் வரலாறும் விவரிக்கப்படும்போதும், நான் திறந்த வாய் மூடாமல் படித்துக் கொண்டிருந்தேன்…

மைனஸ்கள் என்று பார்த்தால், பொதுவான அறிவியல் புனைவுகள் போலவே, இதிலும் சிலபல அறிவியல் விதிகள் மீறப்படுகின்றன. உதாரணம், 30 செக்கன்களுக்கு காற்றில்லாத விண்வெளியில், விண்ணுடை ஏதுமில்லாமல் மிதக்கும் ஆர்தரும் அவன் நண்பனும். அத்தோடு, பல இடங்களில் வரும் கதையுடன் தொடர்பில்லாத சில மொக்கை நகைச்சுவைகள் கதையின் வேகத்தை குறைக்கின்றன.

மொத்தத்தில், நல்ல நகைச்சுவையும், முரண்நகைகளும், பிரமிப்பூட்டும் கற்பனைகளும் கலந்த, நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய நாவல். லாஜிக்கை எதிர்பார்க்காமல் படித்து ரசிக்கலாம்… அடுத்த பாகமான ‘Restaurant at the End of the Universe’ ஐ படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

பி.கு: ஆங்கில நாவல்களுக்கும் திரைபடங்களுக்கும் ஆங்கிலத்திலேயே குறுவிமர்சனம் எழுதும் எனது வழக்கத்தை, இந்த நாவலுக்காக மாற்றிக்கொள்கிறேன். நினைப்பதை அப்படியே ஆங்கிலத்தில் எழுத முற்படும்போது, இலக்கணத் தவறுகள் மற்றும் சொற் கட்டமைப்புகள் குறித்த ஒரு விழிப்புணர்ச்சி, நினைவுகளின் ப்ளோவைத் தடுக்கின்றது. இப்படியொரு அற்புதமான புத்தகத்திற்கு எழுதும் விமர்சனம் சப்பென்று ஆகிவிடக்கூடாது எனும் முன்னெச்சரிக்கையில் தமிழில் எழுதியிருக்கிறேன்.

Advertisements

9 thoughts on “வாகனமில்லா வழிப்பயணிக்கான அகில உலக இன்பச் சுற்றுலா கையேடு!

     1. சார், இந்த கூகிள் ப்ளஸ் (குறு)விமர்சனமெல்லாம் டக்குன்னு கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து, பதினைஞ்சு நிமிஷத்துல அடிச்சு, ரெண்டு நிமிஷத்துல எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை திருத்தி, அடுத்த நிமிஷம் போஸ்ட் பண்ணிட்டு போயிடலாம். ஆனா, ஆம்னிபஸ் மாதிரி இடங்கள்ல எழுதும்போது, நேரம் எடுத்துக்கிட்டு கட்டுரை தயார் பண்ற பொறுமையும் நேரமும் எனக்கு (இப்போ) குறைவா இருக்கு.

      அது மட்டுமில்லாம, இந்த (குறு) விமர்சனமெல்லாம், நான் ப்ளாக் எழுத வர்றதுக்கு ஒரு ப்ராக்டீஸாவும், தமிழ் மறக்காம இருக்கறதுக்கும், படிச்ச புத்தகம் பற்றின உணர்வுகள் மறக்காம இருக்கவும் தான் எழுதிட்டிருக்கேன். ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு, எழுத்து இன்னும் இம்ப்ரூவ் ஆனதும் ப்ளாக் எழுதி, அப்புறமா கொஞ்சம் அனுபவம் வந்ததும் நல்ல கட்டுரை தயார் பண்ணி தரேன். தப்பா நினைச்சுக்காதீங்க…

      வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

      1. சீரியஸா எங்கயும் எதுவும் எழுத வேண்டாங்க.

       இன்னிக்கு எந்த வேலை முக்கியமா இருக்கோ, அதை நல்லபடியா முடிங்க, அப்புறம் வாங்க.

       அதுவரை இலக்கியத்தை நாங்க காப்பாத்த முயற்சி செய்யறோம். அப்புறம் ஆண்டவன் விட்ட வழி. 🙂

       1. 😀 நான் வர்ற வரைக்குமாவது இலக்கியத்த காப்பாத்தி வச்சிருங்க… அதுக்கப்புறம் நீங்களே நினைச்சாலும் அது முடியாம போகலாம்.. 🙂

        1. அதுக்குள்ளே எங்களால முடிஞ்சத செய்யறோம் ஸார், உங்க கையில்தான் அந்த மகத்தான பணி நிறைவடையணும்னு ஆண்டவன் எழுதி வச்சிருந்தா அதை யாரால மாத்த முடியும்?

         வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s