பிரிவோம் சந்திப்போம் – ஒரு விமரிசனப் பார்வை

ஆம்னிபஸ்ஸிலும் ஒரு மூடப்பட்ட குழுமம் இருக்கிறது. அங்கு சுவையான விவாதங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இரண்டு மூன்று நாட்களாக சுஜாதா பற்றி ஜெயமோகன் சொன்ன விஷயம் குறித்து படுபயங்கர சண்டை – ஒருத்தருக்கு காதே போய் விட்டது என்றால் எவ்வளவு தீவிரமாக விவாதிக்கிறோம் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் (காது கடித்துத் துப்பப்பட்ட நண்பர், ஏன் ஸார் இப்படி செஞ்சீங்க என்று அறுந்த காதைக் காட்டி நியாயம் கேட்டதற்கு, “அப்பவே இப்படி காது குடுத்து கேட்டிருக்கலாமில்ல.” என்று அறிவுரை சொல்லி அரசு மருத்துவமனை வரைக்கான வழிச்செலவுக்குப் ஆறு ரூபாய் ஐம்பது பைசா பணம் கொடுத்து அவரைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம், #கடி ஜோக்)

அப்படியான விவாதத்தில் இந்தக் கடிதம் எழுதப்பட்டது: அதில் சில விஷயங்களை வெட்டிவிட்டு மிச்சம் இருப்பதை இங்கே ஒட்டுகிறேன். வளரும் விமரிசனக்காரர் அஞாவை இந்தக் குழாயடிச் சண்டையில் பயன்படுத்திக் கொள்ள வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவரும் தமிழ் இலக்கிய விவாதத்தின் எல்லையற்ற துரோகங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கும் கூடுதலாக நூல் மதிப்பீட்டின் முக்கியத்துவத்தை அவருக்கு உணர்த்துவதும்தான் என் நேர்மையற்ற நோக்கங்கள்.

இதுதான் யார் இலக்கியவாதி, எது இலக்கியம், ஏன் இலக்கிய விவாதம் என்ற கேள்விகளுக்கு முகமன் கூறிய அந்தக் கடிதம்:

என்னைப் பொருத்தவரை இலக்கியவாதின்னு சொல்லிக்கத் தகுதி எதுவும் கிடையாது. நீங்கள் சில புத்தகங்கள் படித்திருக்க வேண்டும், அதைப் பற்றி பேச அல்லது எழுதத் தெரிய வேண்டும். அவ்வளவுதான். ஆனால் மற்றவர்கள் உங்களை இலக்கியவாதி என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், உங்களுக்கென்று உள்ள குறிப்பிட்ட சில விழுமியங்களையாவது வலியுறுத்த வேண்டும். அதைப் பேசும் புத்தகங்களைப் பாராட்டவேண்டும், அந்த விழுமியங்களுக்கு எதிராக இருக்கும் புத்தகங்களைக் கண்டிக்க வேண்டும். இவை தவிர, முடிந்தால் நீங்களே கதை கவிதைகள் எழுதி, இதாண்டா இலக்கியம்! என்று எதிரிகள் மூக்கில் நச்சென்று குத்தலாம். வாழ்த்துகள்.

எது இலக்கியம்? இதற்கு பதில் சொல்வது கடினம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி  சொல்கிறார்கள். அதுபோல்தான் ஜெயமோகனும் சொல்கிறார். நீங்க ஏற்றுக்கொள்ள விருப்பப்பட்டால் ஏற்றுக் கொள்ளலாம்,, இல்லையென்றால் இலக்கியம் இப்படியும் இருக்கலாம் என்று நீங்கள் நினைப்பதைச் சொல்லலாம். ஆனால் எது இலக்கியம் என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது என்று நீங்கள் சொல்ல முடியாது, இல்லையா?

ஆக, ஜெயமோகன் சொல்வதுதான் இலக்கியம் என்றில்லை. அவர் சொல்வது போல்தான் நாம் வாசிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் முன்வைக்கும் மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமோ நிர்ப்பந்தமோ யாருக்கும் கிடையாது.

நீங்களும் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உள்ள விழுமியங்களின் பின்னணியில் அந்தப் புத்தகத்தை வாசித்துப் பார்த்து நீங்கள் அதைப் பேசலாம். உங்கள் அனுபவங்கள், உங்கள் வாசிப்பு, உங்கள் வாழ்க்கை அதன் பாடங்களோடு சேர்த்து அவற்றின் வெளிச்சத்தில் புத்தகங்களைப் பேசலாம் புத்தகம் பேனா பென்சில் மாதிரியான உயிரற்ற ஆப்ஜக்ட் அல்ல. அது உயிர்ப்புள்ள ஒன்று,

அர்னால்ட் டாய்ன்பீ சொல்வார், ஒரு பண்பாட்டின் ஆயுள் ஒரு தலைமுறைதான். ஒரு தலைமுறை கைமாற்றித் தரத் தவறிவிட்டால் அது அழிந்துவிடும். சுஜாதா என்று இல்லை யாராக இருந்தாலும் இதுதான். பேச்சு வெறும்பேச்சுதான். ஆனால் அது நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. ஜெயமோகன் என்று இல்லை. ஒரு புத்தகத்தை, எழுத்தாளரைப் பேசும் யாரும் அவரை உயிருடன் வைத்திருக்கிறார்கள்.

தன் அந்தரங்கம் வெளிப்பட எழுதுவதுதான் நேர்மையான எழுத்து என்று ஒரு பரவலான கருத்து இருக்கிறது. ஒரு எழுத்தாளனின் எழுத்தில், அவனது மௌனத்தில், வெளிப்படும் அந்தரங்கம் எப்படிப்பட்டது என்று பார்க்க வேண்டும், அது அவனுடைய எழுத்தை எப்படி பாதிக்கிறது என்று நாம் பேசவேண்டும் என்று ஜெயமோகன் சொல்கிறார் இதைச் சொல்லக் கூடாதா? நான் நம்பும் எழுத்தாளன் தன் அந்தரங்கம் வெளிப்பட எழுதுகிறான் என்று கொண்டாடலாம், ஆனால், அவன் அப்படி எந்த அந்தரங்கத்தை வெளிப்படுத்தினான் பாருங்கள், என்று அதை ஒருத்தர் கூறு போடக்கூடாதா?

ஏன், இப்போது ஜெயமோகனின் நோக்கங்களைப் பேசும் நாமும் அவரது அந்தரங்கத்தைதானே விசாரிக்கறோம்? இப்படி நான், நீங்க எல்லாரும் செய்யலாம், ஜெயமோகன் செய்யக்கூடாதா?

சொல்கிறேனே தவிர, இப்படி எழுத்தையும் அந்தரங்கத்தையும் சேர்த்து வைத்து முடிவு செய்வது பிரச்சினைக்குரிய அணுகுமுறை, முழுமையானதல்ல, அது பெரும்பாலும் பிழைபுரிதல்களுக்கே கொண்டு செல்லும் என்பது என் கருத்து. ஆனா அது வேறு விஷயம்.

இறுதியில் காதையிழந்த நண்பர் சொல்வதுதான் சரி: The book must be left to the individual reader”,ஜெயமோகன் விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. நீங்க சொல்வது தவறென்று அவர் சண்டை போடலாம், அத்தோடு சரி. உங்கள் வாசிப்பு உங்களுக்குரியது, அதில் நீங்கள் சுஜாதாதான் உலகின் தலைசிறந்த எழுத்தாளர் என்று சொன்னால் அவரால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

ஜெயமோகன் உங்களைப் பிக்மின்னு திட்டினா நீ என்ன பெரிய மகாவிஷ்ணுவா என்று பதிலுக்குத் திருப்பித் திட்டுங்கள். எப்ப அவருக்கு சரியாக பேசஆரம்பிக்கிறீர்களோ அப்போதே அவரும் நீங்களும் விவாதிக்கத் தேவையான சமதளத்திற்கு வந்துவிட்டதாகவே பொருள். இங்கு எப்போதுமே வாசகன்தான் ராஜா, விமரிசகன் காவல்காரன்கூட இல்லை, புத்தகத்தையும் எழுத்தாளனையும் உங்களிடம் கொண்டு வந்து கொடுக்கும் கட்டியக்காரன்தான். அவனது தேவை அவ்வளவோடு முடிந்து விடுகிறது..

அதன்பின் விருப்பப்பட்டால் நீங்கள் அந்த புத்தகத்தையும் அதைக் கொண்டு உங்கள் மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் இன்னொருவருக்கு அறிமுகப்படுத்தலாம். அதை எப்படி செய்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம்தான்.

ஆறு ரூபாய் ஐம்பது பைசா பத்திரம். அரசு மருத்துவமனைக்குச் சென்று சேரும்வரை பத்திரமாக வைத்திருங்கள்.

அன்புடன்,
க. ங. ச

இந்தக் கடிதத்தில் எவ்வளவு நீளமாக தப்பும் தவறுமாக ஒரு சாதாரண விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது! – ஆனால், புத்தகங்களைப் பேசும் சாக்கில் தன் விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் மூட்டை கட்டிக் கடத்திச் சென்று கைமாற்றித் தருவதை இளம் விமரிசனக்காரர் அஞா எவ்வளவு அருமையாகச் செய்திருக்கிறார் பாருங்கள். அவரிடம் கற்றுக் கொள்ள நமக்கு விஷயமிருக்கிறது.

பிரிவோம் சந்திப்போம்
– அஞா

சுஜாதாவின் ஒருவித இரட்டை முக்கோண (?!) காதல்கதை. வெகுளியான, ஆனால் அழகான பெண்ணை காதலித்து, கடைசி நேரத்தில் அமெரிக்க மாப்பிள்ளையின் திடீர் அறிமுகத்தால் வஞ்சிக்கப்பட்டு, தற்கொலைக்கு முயற்சிக்கும் கதாநாயகன், அவனது தந்தையின் சமூக உறவுகள் என கதையின் முதல் பாகத்தை இந்தியாவிலும், படிப்புக்காக அமெரிக்கா வந்து, அங்கே அதே பெண்ணைச் சந்தித்து…என இரண்டாம் பாகத்தையும் கொண்டு சென்று, நல்லதொரு முடிவுடன் கதையை எழுதியிருக்கிறார்..

இந்தக் கதைகளில் காட்டப்பட்டிருக்கும் காதலில் எனக்கு உடன்பாடு இல்லாததால், முதல் பாகத்திலிருந்தே என்னால் கதையில் ஒட்டமுடியவில்லை. வெகுளியான, சுயபுத்தியற்ற ஒரு பெண்ணின் அழகுக்காக மட்டுமே அவள் பின்னால் அலைந்து, காதலித்து, தற்கொலை கொலையெல்லாம் செய்யத் துணிவது, எந்தவகையான காதல் என்பது எனக்குப் புரியவில்லை. இப்படிப்பட்ட வெகுளியை கல்யாணம்செய்து எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று கொஞ்சமும் யதார்த்தமாக யோசிக்காத ரகுவையும் எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை. இரண்டாம்பாகத்தில், தேடி வந்த, ஒரு புத்திசாலிப் பெண்ணின் காதலை மறுப்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், கதையின் முடிவு, தெளிவாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமாகவும் இருப்பது ஒரு ப்ளஸ்.

இரண்டாம் பாகத்தில் அமெரிக்கா என்னும் மாயதேசத்தின் நியூயார்க், லாஸ் வேகாஸ் நகரங்களையும், அவற்றில் நாயகனின் அனுபவங்களையும் விபரிப்பதில் சுஜாதா தெரிகிறார். நாயகனின் தந்தை, மற்றும் தந்தையின் அமெரிக்க நண்பர் பாத்திரங்கள் நன்றாகக் காட்டப்பட்டுள்ளன. அமெரிக்க வர்ணனைகளுக்காகவும், சுஜாதா சார் எழுத்துக்காகவும் ஒருமுறை படிக்கலாம். 🙂

Advertisements

6 thoughts on “பிரிவோம் சந்திப்போம் – ஒரு விமரிசனப் பார்வை

 1. நீங்க சொன்ன கணக்கு படி அ ஞா வுக்கு பதினஞ்சு வயசு இருக்கலாம், 15 வயசு பையனுக்கு எல்லாம் காதல் பத்தி என்ன தெரியும் , கடவுளே , காதல் சயின்ஸ் படி, common sense படி எல்லாம் வராது, அது அ ஞா வே போக போக புரிஞ்சுப் பாரு

  1. அதாவது தம்பி இன்னும் சுஜாதாவையெல்லாம் படிச்சுப் புரிஞ்சுக்கற அளவுக்கு வளரலை அப்படின்னு சொல்றீங்க?

   என்னடா இது அஞாவுக்கு வந்த சோதனை! 😦

  2. //15 வயசு பையனுக்கு எல்லாம் காதல் பத்தி என்ன தெரியும்//

   இதே கேள்வியை எனக்கு நானே பலமுறை, பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். உண்மையில், பல சாதாரண விஷயங்களைப் பற்றிய எனது வித்தியாசமான கருத்துக்களும் புரிதல்களும் ஒருவேளை, முற்றும் தவறானவையோ என்றும் யோசித்திருக்கிறேன், யோசித்துக் கொண்டிருக்கிறேன். இருந்தும், இப்போதைக்கு காதல் பற்றிய எனது புரிதல் அதுதான் சார். இன்னும் விரிவாக எழுதலாம், ஆனா வயசும், இது பப்ளிக் இடங்கற உணர்வும் தடுக்குது… மன்னிக்கவும்

   1. இளம் பெண்ணை மணம் செய்து கொள்ளும் முதியவர்களுக்கு இல்லாத புரிதல் உங்களுக்கு இருக்கு. உங்களை வாழ்த்தும் முதிர்ச்சி எனக்கில்லை, வணங்குகிறேன். நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.

 2. தம்பி அ ஞா அவர்களே , sorry for this late reply, i used to be think like you, when i was young around 17- 18 even at my early twenties, சில பேரை பார்த்தவுடன் பிடித்து விடும், சில பேரோட பழகினா பிடிக்கும், (ok don’t compare this with that dhanush film dialogue), உங்களோட புரிதல் தவறு இல்லை, நான் சொல்ல வரது , ரோட்ல ஒரு பெண்ணை பார்த்துட்டு அவங்க பின்னாடியே போய் காதல் சொல்றது இல்லை. நீங்க என்றைக்காவது உங்கள் வாழ்வில் காதல் வயப்பட்டால், இப்போ நீங்க சொன்னதுக்கும் அதுக்கும் வித்தியாசம் இருக்கும், வாழ்த்துகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s