கோயமுத்தூர் பவபூதிகளுக்கு ஒரு குட்டி ஜெ!

..

நண்பர் பைராகி இன்று ஆம்னிபஸ் தளத்தில் அற்புதமாக எழுதியிருக்கிறார். அவசர அவசரமாய் எழுதியிருக்கிறார் என்பது அவரது சிந்தனைகள் சரடு பிரிந்து விரிந்து குவியும் திசை தேடி அலைவதைப் பார்க்கும்போது கண்கூடாகத் தெரிகிறது – அதனாலேயே அவர் எழுதியுள்ள விஷயத்துக்கு ஒரு ஆத்மார்த்தமான தொனியும் கிடைத்துவிடுகிறது. “கோயமுத்தூர் பவபூதி” என்ற தி. ஜானகிராமன் சிறுகதை குறித்த ஒரு சிறு சிலாகிப்புதான் அது. ஆனாலும் பிரமாதம் என்று சொல்ல வேண்டும்.

இலக்கியத்தால் என்ன பிரயோசனம்? இதில் பரிச்சயம் உள்ளவர்களிடம் பேசிப் பழகி நண்பர்களாகி அப்புறம் ரொம்பப் பழகி அவர்களின் பகைமையைச் சம்பாதித்துக் கொள்வதைவிடப் பெரிதாய் என்ன சாதித்துவிடப் போகிறோம்? இதே நேரத்தை இன்ட்ரஸ்ட் ரேட் பற்றியெல்லாம் தினப்படி பேசுபவர்களிடம் பழகச் செலவிட்டால் நாலு காசு சம்பாதிக்கும் உத்வேகமாவது கிடைக்கும், இந்த லோகாயதத்தின் மறுமுனையில் கிருஷ்ணா! ராமா! என்றோ அத்வைதா! மோட்சா! என்றோ பக்தியாலோ ஞானத்தாலோ வாழ்க்கையின் சாரத்தைத் தேடுபவர்க்ளுடன் பழகினால் பேரானந்தம் பரமானந்தம் சொர்க்க போகம் அது இது என்று எந்த நம்பிக்கைக்காவது இடமாவது ஏற்படும். இலக்கியம் நமக்கு எதைப் பெரிதாகத் தந்துவிடப் போகிறது? ஒன்றும் புரியவில்லை.

“காளிதாசனுக்கு அடுத்த நிலையில் இருந்த கவிமேதை பவபூதி ஒரு போட்டியின்போது `காலம் நீண்டு கிடக்கு. இன்றில்லையேல் என்றேனும் யாராவது நான் பாடுவதைக் கேட்பார்கள்` என நம்பிக்கையோடு இருந்ததாகக் கதை” என்று எழுதுகிறார் பைராகி.

தமிழில் நாலு எழுத்து எழுதும் அத்தனை பேரும் இந்த பவபூதியின் வாரிசுகள். அவர்களைப் பாராட்டியும் திட்டியும் இன்று பேசும் வாசகர்களாகிய நாம், பவபூதியின் நித்திய நம்பிக்கையை மெய்ப்பிக்கிறோம். இன்று ஒரு அட்சரமானாலும் அதை எழுதும் ஒவ்வொரு கோயமுத்தூர் பவபூதிக்கும், உங்களுக்கும் ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறோம்.

பஜனை மடங்கள் வாழ்க!

இனி ஆம்னிபஸ் பதிவின் துவக்கப் பத்திகள்:

தி.ஜா வாரத்தில் அவரது படைப்புகளைப் பற்றி எழுத வேண்டும் எனும் முடிவை ஆம்னிபஸ் நண்பர்கள் சொன்னபோது சந்தோஷம் அடைந்தவன் எழுத ஆரம்பித்தபின் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டேன். என்னவென்று எழுதுவது? தி.ஜா எனும் எழுத்தாளரின் கதைகளைப் பற்றி மட்டுமல்ல, எந்தொரு கதையைப் பற்றியும் என்ன எழுதுவது. ஏதோ கதையென அவர்கள் எழுதியதை நாமும் படித்துப் பிடிக்கிறதா இல்லையாவென முடிபுகளை முழங்கும்போது கதைகளுக்கு ஏதாவது ஆகிவிடுகிறதா என்ன? இல்லை எழுத்தாளர்கள் திருப்தி அடைந்துவிடுவார்களா? எப்போதோ எழுதிய கதைகள் கிணற்றில் கல்லெனப் புத்தகங்களிலும், இணையத்திலும் தேமேவெனக் கிடக்கின்றன.

ஒரு படைப்பைப் பற்றி எழுதி என்னவாகப்போகிறது? ஏனோ வேஷம் கட்டின நடிகர்களாட்டம் சில மனிதர்கள் வருவதும் பேசுவதும் மூக்கைச் சிந்துவதும் கோவப்பட்டு கத்துவதும் ஏதோ சினிமா போல நடிப்புதானே? நமக்கும் பொழுது போக ஐந்தாறு பக்கங்களில் அவர்களை எல்லாம் உலவவிட்டு கதைபண்ணிவிட்டுப் செல்பவர் தானே எழுத்தாளர்?
இதற்குமேல் ரசித்த கதையைப் பற்றிப் பேசும்போது கதையை விளக்கமாகச் சொல்லக்கூடாது, தான் படித்துத் தெரிந்துகொள்வதுக்கு முன்னாடி முந்திரிக்கொட்டையாட்டம் முழுக்கதையையும் சொல்லணுமா என நண்பர் எரிச்சல் பட்டார். கும்பமுனி போல சிலருக்கு சட்டென கோபம் வந்துவிடுகிறது பாருங்கள் – `இதெல்லாம் என்ன ரசனை விமர்சனமா, நல்லாயிருக்கு நல்லாயில்லைனு சொல்லிவிட்டு போவியா. நாலு பக்கக் கதைக்கு முழு கதையுமே சொல்லி நாற்பது பக்க விமர்சனம்` என அலுத்துக்கொண்டார்.

கதை கதையாய் மனிதர்களைப் பற்றிப் பேசுவதை விட வாழ்க்கையில் என்ன லயிப்பு இருந்துவிட முடியும் எனும் கொள்கைவான் தி.ஜாவின் கதைகளைப் பற்றி எல்லா வகையிலும் பேசிப் பேசித்தான் ரசிக்க முடியும்.

ராமாயணத்தைக் காலட்சேபம் செய்பவர் ராமன் பட்டாபிஷேகத்தை அனுபவித்துப் பாடுகிறார், தசரதனிடம் விடைபெற்று காடு செல்லும் பாங்கை அனுபவிக்கிறார், சரிதான் எனப்பார்த்தால் ஆபரணங்களை முற்றும் துறந்து காட்டில் இருக்கும் ராமனையும் ரசிக்கிறார், அவரது அனுசரணையை பார்த்து கண்ணீர் விடுகிறார், மோகித்த ராட்சசியிடம் ராமன் காட்டும் பரிவைக் கொண்டாடுகிறார். இப்படி விடிகாலை வரை அங்குலம் அங்குலமாகப் பேசிப் பேசித்தானே நமது முன்னோர்கள் எதையும் ரசித்தனர்?

ஆம்னிபஸ் பதிவு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s