தி ஜானகிராமன் எழுதிய சிறுகதை – பாஷாங்கராகம்

திடீரென்று ஒரு நாள் இருந்தாற்போல தி ஜானகிராமன் பதிவுகள் ஒரு வாரம் முழுக்க போஸ்ட் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டபின் எழுதப்பட்டது இது. குறைந்த அவகாசம் இருந்ததால் ஒரு சிறுகதையை மட்டமே பேச முடிந்தது. எழுத அப்புறம் பார்த்தால், எழுதியதைவிட எழுத இன்னும் நிறைய இருக்கிறது என்று தெரிந்தது. இப்படி இருக்கிறது கதை என்று சொல்லி தி ஜானகிராமன் எழுதுவதைத் தீர்த்துவிட முடியாது என்பது உண்மை.

இனி ஆம்னிபஸ் பதிவு.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

வடக்கு வாசல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன், “ஜூகல்பந்தி” என்ற ஒரு சிறுகதை தொகுப்பு பதிப்பித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு பதிப்பு . எல்லாம் சங்கீதக் கதைகள் : ஸ்வாமிநாத ஆத்ரேயனில் துவங்கி எஸ்/ ராமகிருஷ்ணன் வரை 28 சிறுகதைகள். ஜெயமோகன், பிரபஞ்சன், கல்கி, வாஸந்தி, மௌனி, செ. யோகநாதன், நீல. பத்மநாபன், கு. அழகிரிசாமி, சம்யுக்தா என்று நீளும் இந்தப் பட்டியலில் யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா, பா. ராகவன் முதலான இலக்கிய ஆளுமைகளும் உண்டு. நாஞ்சில் நாடன், அ. முத்துலிங்கம், ஆ மாதவன் முதலான முதுபெரும் இலக்கிய பேராளுமைகளும் உண்டு.

அத்தனையையும் எழுத ஆசை, ஆனா தி.ஜா வாரப் பதிவாக இது இருப்பதால் ஒரே ஒரு கதைதான் – “பாஷாங்கராகம்”.

இசையைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதால் இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போது பாஷாங்கராகம் என்பது என்னவோ பாடக்கூடாத ராகம் போலிருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருந்தேன் – கதை நெடுக அப்பாவும் மகனும் பாஷாங்க ராகத்தை அவ்வளவுக்கு வசை பாடுகிறார்கள்! பிற்பாடு பாஷாங்க ராகத்தில் “அந்நிய ஸ்வரம் எதுக்கு வரும்? ராகத்துக்கு ரக்தி கொடுத்து வரும், அதை இன்னும் போஷிக்க வரும்” என்றெல்லாம் விளக்கம் வரும்போதுதான் பாஷாங்கராகத்திலும் நல்லது உண்டு போலயே என்ற சந்தேகம் வந்தது. விக்கிப்பீடியாவைப் பார்த்தும் சாட்டில் நண்பர்கள் பாஸ்கர் லக்ஷ்மன், ரா. கிரிதரன் ஆகியவர்களுடன் பேசியும் பாஷாங்கராகம் தோஷமல்ல, சொல்லப்போனால் அது மெருகு சேர்க்கும் விஷயம் என்று புரிந்து கொண்டேன். நண்பர்களுக்கு நன்றி – இதை புரிந்து கொள்ளாமல், இந்தக் கதையைப் புரிந்து கொண்டிருக்க முடியாது.

கதையில் பாஷாங்கத்துக்குதான் என்ன ஒரு திட்டு! பாட்டு வராத பிள்ளையை அப்பா, “அட, பாஷாங்க சனியனே!” என்று திட்டுகிறார். அவர் சங்கீதத்தில் கரை கண்டுவிட்டாலும் எப்போதும் அதிலேயே நீந்திக் கொண்டிருந்தார் என்று எழுதுகிறார் தி. ஜா. அப்படியாகப்பட்டவர், பிள்ளையை இப்படி திட்டுகிறார் என்றால், காவேரியில் நீந்தியவனுக்கு கூவத்தில் நீந்துகிற மாதிரியான அனுபவமாக இருக்கும் பாஷாங்க ராகம் என்று நான் நினைத்துக் கொண்டது தப்பா? பின் ஏன் அவர் அப்படி திட்ட வேண்டும்? அது இசையை அவமானப்படுத்தும் விஷயம்தானே? அந்தப் பிள்ளைக்குக் கல்யாணம் ஆனபின் வீட்டுக்கு வந்த மாட்டுப்பெண்ணும்கூட, தன் புருஷனை மாமனார் “பாஷாங்க சனியனே!” என்றெல்லாம் திரும்பத் திரும்பத் திட்டுவதைக் கொண்டு பாஷாணம் என்பதைதான் அவர் அப்படி தவறாகச் சொல்கிறார் என்று நினைத்துக் கொள்கிறாளாம், அப்படியானால் மாமனார்காரர் குரலில் பாஷாங்கத்தின்மீது எந்த அளவுக்குத் தீவிரமான வெறுப்பு வெளிப்பட்டிருக்கும். ஏன் இத்தனை வெறுப்பு? கடைசியில், “பாஷாங்க ராக ராக்ஷஸ பயலே… ஒழி” என்று பாட்டு வராத பிள்ளையிடமிருந்து சங்கீதத்துக்கு விடுதலை கொடுத்துவிட்டு, கொஞ்ச நாளிலேயே மனமுடைந்து செத்துப்போய் விடுகிறார். சாகும்போது அவராலும் பாட முடியவில்லை, பிள்ளைக்கும் பாட்டு வரவில்லை. அவனைப் பார்த்து அழுதுகொண்டே சாகிறார்.

இப்போது கதை கவிதை என்று எதுவும் எழுத வராத நானெல்லாம் எப்போது பார்த்தாலும் இலக்கியம் பேசிக் கொண்டே இருப்பதில்லையா, அந்த மாதிரி இந்தப் பாட்டு வராத பிள்ளை, “கூகூ” என்று அழுதபடியே அப்பாவுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு, “இனி சங்கீதத்துக்கே என் வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறேன்” என்று முடிவு செய்கிறது. அப்போது ஆரம்பித்து சங்கீதத்தைப் பேசிக் கொண்டே இருப்பது பிற்காலத்தில் அவரது மனைவிக்கு மாவு மெஷின் குரலாகத் தெரிகிறதாம்!

பாஷாங்க ராகம் கதையில் வரும் இந்த இடம் முக்கியமானது. பாரபட்சமற்ற சங்கீத விமரிசகர் என்றும் சங்கீத சிரோமணி என்றும் பேர்பெற்ற அந்த மாவு மெஷின் குரல்காரரின் மனைவி அவரிடம் இப்படி சொல்கிறார்: “அந்நிய ஸ்வரம் எதுக்கு வரும்? ராகத்துக்கு ரக்தி கொடுத்து வரும். அதை இன்னும் போஷிக்க வரும். இப்ப நாலு மாசமா குடும்ப போஷணை விஜயராகவன்னாலேதான் நடக்கிறது. நாலு மாசமா நீங்க திங்கற அரிசி, குடிக்கிற காபியெல்லாம் அவன் வாங்கிப் போட்டுதுன்னேன்…. இத்தனை சாஸ்திரம் படிச்சும் வீட்டிலே இருக்கிற பாஷாங்க ராகமே புரியலே”. சங்கீத விமரிசகருக்கு சம்பாதித்துப்போட வக்கில்லாதபோதும் மனைவியின் கற்பில் சந்தேகம் வந்துவிடுகிறது.

மனைவி இப்படி பூடகமாக பதில் சொன்னதை தாங்கிக் கொள்ள முடியாத சங்கீத சிரோன்மணி, பாரபட்சமற்ற சங்கீத விமரிசகர், பலராமன் தன் மனைவியையும் பெண்ணையும் பாஷாங்க கிராதகிகள் என்று வைதுவிட்டு வேட்டியைக் கிழித்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார் – “பாஷாங்க ராகம் பாடாதேள்! குடும்பத்துக்குக் கெடுதல் – கெடுதல்’ என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் கறாரான முழுநேர விமரிசகர் ஆகிவிட்டார் அவர். பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்தான் அவருக்கு சாவு.

தி. ஜா சங்கீத விமரிசகர்களை எள்ளி நகையாடியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டுதான் முதல் தடவை படித்தேன் : பாட்டும் தெரியாது, பிழைக்கவும் தெரியாது, பெண்டாட்டி பிள்ளையைத் தக்க வைத்துக் கொள்ளவும் தெரியாது, வக்கணையாக்க் கூப்பாடு மட்டும் போடத் தெரியும்” என்று தி.ஜா முரட்டு விமரிசகர்களை கேலி செய்வதாக என் வாசிப்பு – உண்மையில் வாழ்க்கையை மறுப்பவர்கள் அனைவரையும் கேலி செய்திருக்கிறார் தி. ஜா. என்பது தாமதமாகவே புரிகிறது.

பாஷாங்க ராகங்கள் அப்படி ஒன்றும் கேவலமானவை அல்ல என்பது தெரிந்தபின்தான் அந்தப் புரிதல் – “சங்கீதத்தில் கரை கண்டவர். கரையைக் கண்டுவிட்டாலும் எப்போதும் அதிலேயே நீந்திக் கொண்டிருப்பாராம்,” என்று தி.ஜா மாவு மெஷின் குரல் விமரிசகர் பலராமனின் அப்பாவை விவரிப்பதில் என்ன ஒரு உள்குத்து இருக்கிறது என்பதாக ஒரு சந்தேகம் – தான் கரைகண்ட சங்கீதத்தின் உள்ளாழ்ந்து திளைக்காமல் இது என்ன மேம்போக்கு நீச்சல்? பாட்டு வராத பிள்ளையை “பாஷாங்க ராக ராக்ஷசப் பயலே… ஒழி” என்று கைகழுவிய அவருக்கும் “நீ உன் பொண்ணு எல்லாம் பாஷாங்கம் தாண்டி, கிராதகி!” என்று குழந்தையை வையும் மகனுக்கும் சங்கீதம் குறித்தான புரிதலில் என்ன வேறுபாடு இருக்கிறது? இசையை அவர்கள் என்னவென்று புரிந்து கொண்டிருக்கிறார்கள்? வாழ்க்கையை?

தி.ஜா. குடும்ப அமைப்புக்கு வெளியேயான உறவு குறித்த ஒரு இணக்கமான புரிதல் வைத்திருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். கதையின் கடைசி வாக்கியத்தில், “என் மாமனார் செய்த பாபத்தை அவர் தலையில் சுமந்து கொண்டு அலைந்தார். அதற்கு நாங்கள் எவ்வாறு பிணையாக முடியும்?” என்று விஜயா விஜயராகவனாகக் கேட்கும்போது தி. ஜாவின் எழுத்தின் நுட்பம் நம் பிடிநழுவிப் போகிறது.

அப்பா செய்த பாபம்.

சாபம் போல் அவரது மகன் மேலேறிய சுமை.

“நாங்களா அதுக்குப் பிணை?” என்று கேட்கும் மருமகள்.

வாழ்வின் ராகம்தான் என்ன, அதில் அந்நிய ஸ்வரத்தின் இடம்தான் என்ன? “இத்தனை சாஸ்திரம் படிச்சும் வீட்டிலே இருக்கிற பாஷாங்க ராகமே புரியலே” என்று சொல்லும் அந்தப் பெண்ணை நம்மால் நேர்மையாக என்னவென்று புரிந்து கொள்ள முடியும்?

ஜூகல்பந்தி
சிறுகதை தொகுப்பு – எஸ். ஷங்கரநாராயணன்
வடக்கு வாசல் வெளியீடு
ரூ. 180

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s