திரை விமரிசனம்

The Dark Knight Rises – அஞா சிறப்பு விமரிசனம்

பேட்மேனை வைத்து இதுவரை எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தாலும், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய Batman Trilogy படங்கள், மற்ற பேட்மேன் படங்களையும், வழக்கமான சூப்பர் ஹீரோ படங்களையும்விட மிகவும் வித்தியாசமான, சூப்பர் ஹீரோவின் பிரம்மாண்ட சாகசங்களின் விஷுவல் ட்ரீட்டாக மட்டும் இல்லாமல், சமூக உளவியல், அதிரடி திருப்பங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுவாக இவ்வகைப் படங்களில் எதிர்பார்க்க முடியாத ஒருவகை ஆழம் என ஒருவித ‘நோலன்’ தன்மையுடன் (The Prestige, Memento, The Dark Knight பார்த்தவர்களுக்கு இந்த நோலன் தன்மை பற்றி தெரிந்திருக்கும்). வெளிவந்து, அத்தனை விமர்சகர்களையும் தலைமேல் தூக்கி கொண்டாடச்செய்தது மட்டுமில்லாமல், வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தன.

இத்தகைய Trilogy யின் இரண்டாவது பாகமான The Dark Knight (என்னுடைய All Time Favorite களில் ஒன்று) ஒரு முழுமையான நோலன் படமாக வெளிவந்ததும், பிய்த்துக்கொண்டு ஓடி ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் வாரிக் குவித்து, பல ஒஸ்கார்களையும் அள்ளி, விமர்சகர்களாலும் epic, அது இது என தாறுமாறாக பாராட்டப்பட்டது..

இத்தகைய ஒரு படத்திற்குப் பிறகு நோலன் இன்னொரு பாகம் இயக்கி, தன்னுடைய கதையை நிறைவு செய்யப் போவதாக அறிவித்ததும், Dark Knight ரசிகர் (வெறியர்)களிடையே  பெரும் சலசலப்பு உண்டானது. நோலனின் வார்த்தைகளிலே சொன்னால், ஒரு படத்திற்கு இன்னொரு பாகம் எடுக்க வேண்டுமானால், அது அதற்கு முன் வந்த அத்தனை பாகங்களை விடவும் சிறந்ததாக இருக்கவேண்டும். ஆனால், பேட்மேன் எழுத்தாளர்களின் துருப்புச் சீட்டான, பேட்மேனின் தன்னிகரற்ற வில்லனான ஜோக்கருக்குப் பிறகு, பேட்மேனுடன் மோத ஜோக்கரைவிட சிறந்த வில்லன் கிடைக்கமுடியாது என்பதனாலும்,  பிற சூப்பர் ஹீரோக்களைப் போலல்லாமல், வில்லனின் வில்லனிசத்திலேயே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் கதாபாத்திரமாக பேட்மேன் இருப்பதனாலும் அடுத்த பாகம், இதைவிட சிறந்ததாக இருக்க முடியாது என (நான் உட்பட) பலர் கருதினர். இருந்தும் புதிய வில்லன் Bane (பேன்?!) ஜோக்கரைவிட பலசாலி, புத்திசாலி, இந்தப் படம் சும்மா பட்டையைக் கிளப்பப் போகிறது என நோலனும் பேலும் சேர்ந்து கிளப்பிய ஹைப்பில், ராக்கெட் கவுன்ட்டௌன் போல படம் வெளியாகும்வரை நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். ஒருவழியாக படம் வெளிவந்தும், பல வாரங்களுக்குப் பிறகு, இன்றுதான் பார்க்க முடிந்தது.

 

உண்மையில், The Dark Knightஐப் பார்த்துவிட்டு அதன் புத்திசாலித்தனத்திலும், அதிரடியிலும் complexityயிலும் மயங்கி, இந்தப் படம் அதைவிட நல்லாயிருக்கும் என எதிர்பார்த்தால் நிச்சயம் ஏமாற்றமே. ஆனால் பொதுவாக, ஒரு சிறந்த கதையில் தெளிவான ஆரம்பமொன்றும், அதிரடியான உச்சக்கட்டம் ஒன்றும், கடைசியாக ஒரு அமைதியான, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவும் (resolution) இருப்பதைக் காணலாம். அதேபோல, நோலனின் Batman Trilogyஐ ஒரு தனிக்கதையாக, பேட்மேன் எனும் கோதம் நகரின் ரகசியக் காவலனின் கதையாக எடுத்துக்கொண்டால், பொறி பறக்கும் கிளைமேக்ஸான Dark Knight க்குப் பிறகு, ப்ரூஸ் வெய்னுக்கும் பேட்மேனுக்கும் என்னவாயிற்று என ஒரு சாதாரண ரசிகன் ஏற்றுக் கொள்ளும்படியாகச் சொல்வது அவசியமாகின்றது. (Inception கொஞ்சம் உயர் லெவல் ரசிகர்களுக்கான படம். அதில் வைத்த மாதிரி ஒரு கிளைமேக்சை எல்லாத் தரப்பு ரசிகர்களிடமும் பிரபலமான பேட்மேன் போன்ற ஒரு கதாபாத்திரத்துக்கு வைக்க முடியாது என்று நினைக்கிறேன்) எப்படியோ Rises அந்தப் பொறுப்பை சரியாகவே நிறைவேற்றியிருக்கிறது

குற்றங்கள் அற்ற, அமைதியான கோதம் நகரம். The Dark Knight இன் முடிவில், எந்தவொரு சூப்பர் ஹீரோவும் செய்யாத தியாகமாக, Harvey Dent செய்த கொலைகளின் பழியையும் அவனைக் கொன்ற பழியையும், சில சமூக உளவியல் காரணங்களுக்காக தன்மேலேயே போட்டுக்கொண்டு போலீசிடமிருந்து ஓடி ஒளியும் பேட்மேன், எட்டு ஆண்டுகளாக தென்படவில்லை. ஓரளவு வயதான ப்ரூஸ், தனது காதலியின் இறப்பால் மனமுடைந்து, தனது மாளிகையில் பல ஆண்டுகளாக அடைந்து கிடக்கிறார். கோர்டன் பதவி விலகப் போகிறார். இந்நிலையில் நகரத்திற்கு வருகிறான் Bane என்ற தீவிரவாதி / மாமிச மலை. பேட்மேனின் முதுகை முறித்து அடைத்து வைக்கும் Bane, நகரத்தின் (கிட்டத்தட்ட) அத்தனை பொலிசாரையும் தரையடியில் அடைத்துவிட்டு,  Wayne Industries இன் மாற்று சக்தி முயற்சியான nuclear fission reactor ஒன்றை அணுகுண்டாக மாற்றி வெடிக்க வைக்கப் போவதாக மிரட்டி, முழு நகரத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். பேட்மேன் தப்பிக்கிறானா, போலிசை விடுவிக்கிறானா, நகரத்தை காப்பாற்றினானா என்பதெற்கெல்லாம் ‘ஆம்’ என்ற தெரிந்த பதிலை சுவாரஸ்யமான திருப்பங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.

Bane, Venom எனும் மருந்தை ட்யூப் மூலமாக இரத்தத்தில் கலந்து உடல் அளவையும் பலத்தையும் மாற்றிக்கொள்ளக் கூடியவன் எனும் கார்ட்டூன் பிம்பத்தை அப்படியே அலேக்காக திருப்பி, தாளமுடியாத வலியைத் தாங்கிக்கொள்ள ஒருவித வாயுவை தொடர்ந்து முகமூடி மூலம் சுவாசிக்கும் ஒரு சாதாரண பலசாலியாக காட்டியிருக்கிறார் நோலன். இவன் ஜோக்கரைவிட பெரிய புத்திசாலி என ஏற்றி விட்டதெல்லாம் சும்மா.. ஜோக்கர் கத்தியால் செய்யும் கொலையை, இவன் வெறும் கையால் கழுத்தை முறித்தே செய்வதைத் தவிர பேட்மேனுக்கு ஒரு physical challenge ஆக மட்டுமே சண்டைபோட்டு முதுகெலும்பை முறிக்கிறான். அவ்வளவே…

அதிரடி என்று பார்த்தால், பறக்கும் பிளேனை பாதியாக உடைத்து, ஒருவனை மட்டும் கடத்திக்கொண்டு போகும் Bane இன் அறிமுகம் அபாரம். படம் முழுவதும் வரும் ஜுனியர் போலிஸ் ஆபிசரும், அவனை வைத்து கடைசியில் வைக்கும் திருப்பமும் அற்புதம்.

படத்தில் சிலபல லாஜிக் குறைகள் இருக்கின்றன. உதாரணம், மூன்று மாசம் அத்தனை போலீசாரையும் அடைத்து வைத்து, அமெரிக்காவின் முக்கிய நகரத்தை கைக்குள் வைத்திருக்கிறான் ஒரு தீவிரவாதி. அணுகுண்டு பயமுறுத்தலுக்கு பயந்துகொண்டு அரசாங்கமும் சும்மா இருக்கிறது. முதுகு முறிந்த ப்ரூஸ், அடுத்த காட்சியிலேயே ‘கை’வைத்தியத்தில் உடம்பைத் தேற்றிக்கொண்டு டிப்ஸ் எடுக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, அடைத்து வைத்திருந்தது மூன்று மாசம் என்பது மிகவும் மேலோட்டமாகவே காட்டப்படுவதால், ஏதோ இரவு அடைத்துவிட்டு காலையில் ரிலீஸ் செய்வது போல இருக்கிறது.

படத்தின் இசை பற்றி சொல்லியே ஆகவேண்டும். Dark Knight இன் தீம் மியூசிக்குடன் புது இசையும் சேர்ந்து, குறிப்பாக, ப்ரூஸ் தப்பிக்கும்போதும், கடைசியில் டைட்டில் போடும்போதும், அதிரடி…

எல்லாவற்றுக்கும் மேலாக, படத்தின் க்ளைமேக்ஸ் அற்புதம். பேட்மேன் சாகிறார், சாகவில்லை எனும் பல்வேறு வதந்திகளிடையே அழகாக, அமைதியாக கதையை முடித்து, ஒரு தொடர்ச்சியையும் விட்டு வைத்திருக்கிறார் நோலன்.The legend ends, literally. அடுத்த பாகம் என்று கிளம்பாமல் இருந்தால் சரிதான்.

இருந்தாலும் நோலனின் கைவண்ணமான புத்திசாலித்தனமான நகர்வுகளும், மூளையைக் கசக்கவைக்கும், படம் பார்த்து பல வாரங்களுக்கு யோசிக்க வைக்கும் திரைக்கதை உத்தியும் இப்படத்தில் மிஸ்ஸிங். Rises, பேட்மேனின் கதைக்கு பலரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு முடிவைக் கொடுத்திருக்கிறது. எனவே இதை ஒரு ஆக்ஷன் படமாகப் பார்த்தால் அற்புதம், நோலன் படமாகப் பார்த்தால் ஏமாற்றம்…

26 thoughts on “திரை விமரிசனம்

 1. நீண்ட காலமாகிவிட்டது பின்னூட்டம் ஒன்றை இட்டு. 🙂

  அஞா வின் விமரிசனம் நன்றாக இருக்கிறது.
  ஆனால் நோலனின் படவரிசையில் இன்செப்ஷனைப்பற்றி அஞா குறிப்பிடவில்லை. நட்பாஸ் கூட எங்கள் கதைகளிலிலிருந்து ஒன்றை பதித்து எங்கள் கற்பனை நோலனை விட உயர்ந்ததே என்று நிருபித்ததாக ஞாபகம்.
  நான் மிக அண்மையில்தான் இந்தப்படத்தையும் இன்செப்ஷனையும் பார்க்க நேரிட்டது.(எனக்கு எல்லாமே நேர்வது).அனால் ப்ளாக் நைட் ஐ விட இன்செப்ஷன் பிரமிக்க வைத்தது.
  யாரடா இதை எடுத்தவன் என்று நினைக்கவைப்பது தான் டைரக்டர் ஒருவரின் வெற்றி. எனக்கு ப்ளாக் நைட் அதைத்தரவில்லை. ஆக நோலன் முத்திரை அதிலிலில்லை.
  இன்செப்ஷன் வெளிவந்த நேரம் அது இங்கு மிகவும் பேசப்பட்டது.உடனே பார்க்க முடியவில்லை.
  கனவுக்குள் கனவு . ஒரு சிந்தனை விதை யை விதைத்தால் போதும் அது வளர்ந்து விருட்சமாகி வாழ்க்கை நிர்ணயிக்கவும் செய்யும். இப்படி பல கருத்துக்கள் அத்திரைப்படத்தில். அவர் சிருஷ்டித்த உலகம் என்பதால் அது அவர் லாஜிக்குக்கு உட்பட்டதாயுமிருக்கிறது.
  பட்டாம்பூச்சியின் கனவும் வேடனும் பற்றிய கதையும் அதை மருத்துவ பீடத்தில் என்னுடைய ஜூனியர்கள் ஒரு போட்டியில் நாடகமாக்கியிருந்ததால் அவர் கனவுள் இவரும் இவர் கனவுள் அவரும் எனக்கு பரிச்சயமானதாக இருந்தது.

  ஆனால் எல்லாவற்றிலும் மேலாக ஒரு உயர்ந்த படைப்புத்தரும் செய்தியை அது என்னுள் விதைத்தது.

  நாயகன் கனவுலகத்தில் தன் மனைவியுடன் அகப்பட்டுக்கொள்ளுகிறான். அவன் மனைவி அந்த உலகத்தை நிஜ உலகாக எற்றுக்கொள்ளத்தலைப்படுகிறாள்.உண்மையை உணரக்கூடிய நாயகனான அவன் பிரயத்தனப்பட்டு அது நிஜ உலகல்ல கனவுலகு என்பதைப்புரியவைக்கிறான்.கனவுலகில் இறந்தால் நிஜ உலகுக்கு வரலாம்.இதுதான் நோலன் சிருஷ்டித்த உலகின் நியதி.அவர்கள் இருவரும் கனவுலகில் தற்கொலை செய்து கொண்டு நிஜ உலகுக்கு வந்து விடுகிறார்கள்.
  ஆனால்…………………………..
  மனைவியின் மனதில் இது நிஜ உலகல்ல என்று,,கனவுலகில் நாயகன் வலிந்து விதைத்தது நிஜ உலகில் மனைவியின் மனத்தில் வளர்ந்து விருட்சமாகிறது.அவள் நிஜ உலகையும் கனவுலகென்று நம்பத்தொடங்கி ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துவிடுகிறாள்.

  இது என்ன செய்தியைச்சொல்லுகிறது?

  உதாரணத்துக்கு வன்முறை மூலம் ஒரு தீர்வைக்கொண்டுவருகிறோம் சரி. அதை வன்முறை மூலமே பாதுகாக்க நினைப்போம்.அந்த வன்முறை மூலமே அதை இழப்போம்.

  எது விதைக்கப்பட்டதோ அது வளர்ந்து விருட்சமாகக்கூடிய அளவுக்கு சூழல் எல்லாவற்றையும் அளித்து உதவினால் விருட்சம் இன்னும் அதே விதைகளைத்தானே விதைக்கும்.

  இங்கு சொல்வார்கள்..I am wired to be like that.

  கனவுலகத்தினூடாக ஆளுமையைத்தீர்மானித்த, வளரிளமைக் காலத்து தந்தையால் வெறுக்கப்படுவதான உணர்வுகள் தீயாய் வெந்து பதப்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஆளுமையைத்தாங்கி நிற்கிற .. உணர்வு பூர்வமான நினைவுகளில் தந்தையின் அன்பு ,நம்பிக்கை விதையை அறியாமல் புதிதாய் விதைத்து அதை உண்மையாய் உணரச்செய்து அதன் மூலம் எதிர் பாத்திரத்தின் ஆளுமையை மீள் வடிவமைப்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

  நோலன் உளவியலையும், மிஸ்டிக்கையும் , விஞ்ஞானத்தையும் கலந்து தொழில் நுட்பத்தோடு தருகையில் யாராடா நீ மோகனா என்று கேட்கத்தோன்றியது.
  அந்த “இது” ப்ளாக் நைட் இல் இல்லை.. இல்லையா அஞா?

  1. நலம்தானே? 🙂

   எனக்கு இன்செப்ஷன் குறித்து இன்னும் ஒரு சந்தேகம். படம் முடியும்போது கனவை கனவு என்று காட்டக்கூடிய அந்த நில்லாத பம்பரம் சுற்றிக் கொண்டிருக்கும் என்று நினைவு. அப்படியானால் அவர்கள் கனவில்தான் இருக்கிறார்களா?

   இதற்கும் டார்க் நைட் இன்செப்ஷன் ஒப்பீட்டுக்கும் அஞாவின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

    1. ஆமாம், எப்படியோ உறுத்தலில்லாமல் மனம் அதை ஏற்றுக் கொள்ளும்வகையில் திரைக்கதை செய்திருக்கிறார்கள் 🙂

     நோலன் புத்திசாலி;, எதையும் சந்தேகிக்கச் சொல்கிற புத்திசாலி/

     அஞா எங்கே?

 2. Hello Varasitthan sir, never had a chance to reply for your comment in this blog(or any other blog).

  You didn’t like “The Dark knight” right. With due respect please watch the movie again,

  hopefully you have watched “The Dark knight” in English version , and in a PC or laptop.

  If it is on TV, it’s ok , try to watch it on PC or laptop, with ear phones.

  With this consider my points,

  1.Every one of us lose some fight in our life, for a good cause,here fight means some form of challenge or goals.

  2. What do we do at the time, we try to blame some body or ourselves for the loss of fight.

  3. Instead of consider Joker as a character, try to consider him some form of Vithi(thamizh word)

  Just to try to concentrate on just two scenes in the movie
  1.when the joker gets caught and batman investigates in the cell
  the dialogue just starts like this “don’t start with the head the victim always gets fuzzy”
  Just concentrate on the scene and dialogue

  2. When the joker meets the Harvery double face in the hospital and changes him, as i said before, just give a ear to the dialogues

  “Introduce a little bit of anarchy, upset the established order, there will be chaos”

  that’s it, with this scenes in the mind, a replay of the movie, it is absolutely mind blowing for me.

  Even after watching again, you may not like the movie, cheers, it ‘s democracy, welcome to movie club

  S.Balaji

  1. நன்றி பாலாஜி சார்.

   Dark Knight Rises என்கிற இந்த இறுதிப்பாகத்தைத்தான் பிடிக்கவில்லை என்று குறிப்பிட்டேன். :)fall of “rises” from the sentence.- a mistake 🙂
   இதில் நோலன் தெரியவில்லை.

   Dark Knight அருமை.
   உங்கள் தரிசிப்பும் அருமை.

   இப்படி சில திரைப்படங்களில் வெளிக்குத்தெரிகிற ஒளிக்கும் ஒலிக்கும் அப்பால் தெரிகிற உள்ளொளி என்னையும் வாசிப்பிலிருந்து சினிமாவுக்குத் தள்ளியது. 🙂

   1. அடடா… இந்தக் கமெண்டை கவனிக்காம கீழே ரெண்டு பக்கத்துக்கு சொற்பொழிஞ்சுட்டேனே…

    என்னோட கருத்தும் அதேதான். 😦 TDKR இல் நோலன் தெரியவில்லை… ஒரு சாதாரண ஆக்ஷன் படமாக ரசிக்கலாம். (Karundhel வெப்சைட்டுக்குப் போனால், காமிக்ஸ் பின்னணியுடன் “The Fall of TDK Rises” பற்றி முழுமையான அலசல் பார்க்கலாம்…)

 3. Oh… Due to a small technical problem, the comment feed’s item count has been hidden in Reader. Just now I checked.. So sad that I missed such an argument.

  @Varasiththan,

  த டார்க் நைட்டும், மெமெண்டோவும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அளவுக்கு இன்செப்ஷன் என்னைப் பாதிக்கவில்லை. படத்தின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட விமர்சனங்களைப் படித்ததும், படத்தை முதன்முதலில் லோ க்வாலிடியில் பார்த்ததும் காரணங்களாக இருக்கலாம்.

  ஆனால் அதற்கும் மேலாக நான் டார்க் நைட்டை விரும்ப சில காரணங்கள் இருக்கின்றன. உண்மையில் நீங்கள் சொன்னதுபோல் இன்செப்ஷன் நோலனின் சொந்தக் கதைக் களன்.. அதில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால், பேட்மேன் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட கதாபாத்திரங்களையும் எதிர்பார்ப்புக்களையும் அடக்கியது. அவ்வாறான ஒரு கதையில் உளவியல், சமூக உண்மைகள் போன்றவற்றை நாசூக்காக உள்ளடக்கி, அதே சமயம் சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்காக விறுவிறுப்பையும் ஆக்ஷன் காட்சிகளையும் வைத்து ஒரு சரியான கலவையில் திரைக்கதையைத் தயாரித்து ஒரு நோலன் படத்தை, சாதாரண ஆக்ஷன் ரசிகர்களும், cerebral படங்களை விரும்புபவர்களும் ஒருசேர பாராட்டும்படியாக தந்திருப்பது சாதாரண வேலையில்லை. நான் மேலே சொன்னதுபோல, பேட்மேன் எனும் ஒரு பிரபல கதாபாத்திரத்துக்கு ஒருவர் நினைத்த விதமாக கதை எழுதிவிட முடியாது. உதாரணமாக, மெமண்டோ, ப்ரெஸ்டிஜ் போன்ற படங்களில் ‘justice is relative’ எனும்படியான கருத்து காணப்படுவதாக நினைக்கின்றேன். ஆனால், பேட்மேனின் கதைக்கு அப்படியானதொரு தீர்வைக் கொடுத்திருக்க முடியாது. பேட்மேனுக்கென்று இருக்கும் சிலபல இமேஜ்களைப் பாதிக்காமல், தன்னுடைய முத்திரையையும் பதிக்கும்படியான சவாலான காரியத்தை The Dark Knight இல் நோலன் கச்சிதமாகச் செய்திருப்பதாக உணர்கிறேன்.

  இன்செப்ஷனில் இன்னும் எனக்கு சில விஷயங்கள் முழுதும் புரியவில்லை. இன்னொருதரம் பார்க்க வேண்டும். அதிலும், மூன்றாம் நிலைக் கனவில் வரும் சண்டைக் காட்சிகளில் தேவையான அளவு வேகம் இல்லை. எனவே TDK இல் படம் முழுதும் தொடரும் விறுவிறுப்பு, இன்செப்ஷனின் சில காட்சிகளில் மிஸ்ஸிங். இருந்தும் படத்தின் அடிப்படை விதிகளை முதல் கொஞ்ச நேரத்திலேயே தெளிவாக விளக்கியது போன்ற டெக்னிக்குகளும் இறுதிக் காட்சியும் படத்தைப் பற்றிய பிரமிப்பை உண்டாக்கின.

  @natbas

  அந்தக் காட்சியில் படத்தின் முடிவை நோலன் பார்வையாளர்களுக்கே விட்டுவிடுகிறார். (இப்படி பேட்மேனில் செய்ய முடியாது) இதைப் பற்றி (க்ளைமேக்ஸ் பற்றி மட்டுமே தனியாக) இன்செப்ஷன் விசிறிகள் இணைய ஆலமரங்களில் பெரிய பெரிய பஞ்சாயத்துக்கள் நடத்தி வருகிறார்கள். போய் வேடிக்கை பார்க்கலாம்… செம இன்ட்ரஸ்டிங்….

  “படத்தின் முடிவில், கனவை அறிந்துகொள்ள totum இல் தங்கியிருக்க வேண்டிய நிலையைக் காப் கடந்துவிடும் அதேவேளை, பார்வையாளன் அதே totum இல் தங்கியிருக்கும் நிலையை அடைகிறான்” என்றெல்லாம் அதில் சிலபேர் சொல்கிறார்கள்

  @balaji

  உண்மைதான், நான் நோலனின் படங்களைப் பார்க்க 4-5 மணித்தியாலங்கள் எடுத்துக்கொள்கிறேன். subtitle உடன், ஒவ்வொரு முக்கிய வசனத்திலும் நிறுத்தி, முழுதாக உள்வாங்கி, சில காட்சிகளை திரும்பத் திரும்ப பார்த்து என அதிக நேரம் எடுக்கிறது.

  1. அஞா,

   ஏதோ உங்களுக்கு சினிமாவே பாக்கத் தெரியாது என்கிறமாதிரி பாலாஜி, “Just to try to concentrate on just two scenes in the movie” அப்படின்னு சொல்றார் – அதாவது முழு படத்தையும் பாத்துப் புரிஞ்சுக்க முடியாட்டியும் ரெண்டே ரெண்டு சீனையாவது கவனமா பாக்கச் சொல்றார், இதுக்காக சண்டைக்குப் போவீங்கன்னு பாத்தா என்னமோ விளக்கம் சொல்றீங்களே, இதுக்கெல்லாம் எங்க பாலாஜி அசர மாட்டார்.

   நாலஞ்சு மணித்தியாலம் பாத்தா என்ன நாப்பத்தஞ்சு மணித்தியாலம் பாத்தா என்ன, அது எப்படி நீங்க நோலன் படத்தில் குற்றம் சொல்லலாம்? உண்மைதான்னு சொல்லிட்டு அவர் பாயிண்ட்டை ஏத்துக்காம எஸ்கேப் ஆகப் பாக்கறீங்க, எங்க பாலாஜி இதை விடறதா இல்லை.

   1. பார்த்து சார், ‘பதிவுலக நாரதர்’னு யாராவது பட்டம் குடுத்துடப் போறாங்க.. என்னமா ப்ளான் பண்றீங்க… (அந்தக் கமெண்டுக்கு மேல Hello Varasiththan sir னு போட்டதை நோட் பண்ணியாச்சு…)

    1. சரி, போனா போவுது, பொழச்சு போங்க.

     ஆனா உங்களுக்கு மட்டும் திராணி இருந்தா குட்டியா ஒருத்தர், புட்டி கண்ணாடி போட்டுக்கிட்டு ஹீரோயினை எல்லாம் ஏணி வச்சு லவ் பண்ணுவாரே, தலையிலகூட முடி இருக்காதே, வுட்டி ஆலன்னு ஒரு காமடி படம் பண்றவர், அவர் படம் பாத்து விமரிசனம் பண்ணுங்க, ரத்த ஆறு ஓடுதா இல்லையா பாத்துருவோம்.

     1. அந்தப் பேரை இன்னிக்குதான் கேள்விப்படறேன் (என்ன ஒரு சினிமா அறிவு!!).. ஏன் சார், நான் பதிவு எழுத முன்னாலேயே அடிவாங்க வச்சுப் பார்க்கறீங்க? (ஒருவேளை வேண்டுதலா இருக்குமோ…?)

  2. இங்கே இவ்வளவு பேசியிருக்கிறார்கள் என்று இன்றைக்குத்தான் பார்த்தேன்.
   விறுவிறுப்பை எதிர்பார்க்கிற வயசை நான் கடந்துகொண்டிருக்கிறேன் போல. எனக்கு படத்தில் கிளைமாக்ஸோ அல்லது விறுவிறுப்போ தேவையில்லை. தேவை உயிர்ப்பு அல்லது வாழ்க்கை.
   கிளைமாக்ஸும் விறுவிறுப்பும் படங்களை ஒரு போர்முலாவுக்குள் அடக்கி விடும். அதிகத்திரைப்படங்களைப்பார்ப்பவன் நான்.( ஒரு கிழமைக்கு 10 இப்பொது இல்லை)
   போர்முலா இலகுவில் சலிப்பூட்டிவிடுகிறது.
   அதுதான் டாக்னைட் ரைசஸ் இல் நிகழ்ந்தது. மகனுக்காக அவனோடு தியேட்டரில் பார்த்தேன். அதே போமுலா, போமுலா.
   இப்படியான போர்முலாவில் அடங்காத நிறைய ஆங்கிலப்படங்கள் இருக்கின்றன. அது வாழ்வைப்பற்றிய படங்கள். கதைகள் அல்ல.
   ஆனால் அக்‌ஷனோடு வாழ்க்கையும் சொல்லுவதிலும் சிலர் இருக்கிறார்கள். நோலன் அதில் ஒருத்தர்.
   இன்ஷெப்ஷன் என்னுடைய துறை.அதனால் என்னால் அதனோடு ஒன்றிப்போக முடிந்தது.
   உங்கள் வயசுக்கு அது கொஞ்சம் ஓவர். 🙂

   வூடி அலன் படங்களை எனக்குப்பிடிக்கும். ஆனால் நான் யாரினுடையதும் fan அல்லன். mystic river . side ways,,Fargo , Anne hall, Ground hog day, இப்படி நிறைய. நல்ல படங்களின் ரசிகன்
   இங்கு world cinema என்ற உலகசினிமாவில் பார்த்தது மணிரத்தினத்தின் ரோஜா, பம்பாய், சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி, சல்மானின் மை நேம் இச் கான், திரீ இடியட்ஸ் இப்படி. 🙂

   என்னுடைய இரசனை வேறுபட்டது. ஒரு சந்தையில் நாற்காலி ப்போட்டு உட்கார்ந்து அதை போரடிக்காது பார்க்க என்னால் முடியும். ஆனால் என் நண்பனுக்கு முடியாது. சந்தையில் ஒரு சண்டை ,களேபரம் உருவானால் அவன் சுவாரசியமாகப் பார்ப்பான்
   அதனால் தான் Lost in translation , submarine எனக்குப்பிடிக்கிறது, அவனுக்குப்பிடிப்பதில்லை.’
   நன்றி

   1. ரைசஸ் ஒரு சாதாரண, நோலன் தேவைப்படாத ஒரு பார்முலா படம் என்பதுதான் எனது கருத்தும். ஆ னால், இன்செப்ஷன் நீங்கள் சொன்ன மாதிரி என் வயதுக்கு அதிகமாக இருக்கலாம்.. விறுவிறுப்பையும் கடந்து படங்களை, உணர்வுகளை ரசிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். சில படங்களை ரசிக்க முடிந்தாலும் வெளிநாட்டு உலக சினிமாக்கள்… இன்னும் முழுதாக முடியவில்லை.

 4. Hello AR, I too didn’t like Dark Knight Rises, so i am not going to talk about that :-)) for the usual reasons 🙂 I am woody allen fan, Natbas is trying to set a trap ,don’t fall into that 😛

  Even if you watch & review a woody allen movie, i am not coming for a fist fight with you :-)))

  Natbas sir why why why this this this kolaveri ?

  1. “I am woody allen fan, Natbas is trying to set a trap ,don’t fall into that ”

   வுடி ஆலன் யாருன்னே தெரியாதுங்கறார், இதைவிட கடுமையான விமரிசனம் இருக்க முடியுமான்னு தெரியல. இனி பொறி வச்சுப் பிடிச்சாதான் கேவலமா வேற என்ன சொல்லிடப் போறார்! 🙂

 5. நான் நினைக்கிறேன் வாழ்வில் கண்டும் காணாமலும் அல்லது அலட்சியப்படுத்திவிட்டுச்செல்லுகின்ற மிக மெல்லிய உணர்வுகளை சித்தரிக்கிற படங்களை எனக்குப்ப்டிக்கின்றதென்று தோன்றுகிறது.நட்பாஸின் கதைகளைபோல….

  கோபம் வீரம், பழிவாங்கும் உணர்வு, நேர்மை நல்மனப்பான்மை ,தந்திரம், இப்படியானவை அலுத்து விட்டன.
  நோலனின் கனவுக்குள் கனவை விட sideways இல வைனோடு வாழ்க்கையை ஒப்பிடுகிறகதை பிடிக்கிறது.
  sunshine இல் முதலாவது த்லைமுறையில் பெயரை மாற்றுவதோடு தொடங்குகிற Ralph Finnes பாத்திரம் மூன்றாவதுதலைமுறையில் மீண்டும் முதல் பெயருக்கே திரும்புகிற வாழ்வின் எல்லாப்பக்கங்களயும் ஒரு சேரத்தருகிற கதைகளும் பிடிக்கின்றன.

  எழுத்தைப்போலவே சினிமாவில் எல்லாம் இருக்கிறது… 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s