சுவையான சம்பவங்கள்

..

பதிவர் வாழ்க்கைக்குத் திரும்பியதில் ஒரு மாற்றம் என்னவென்றால் எழுதக்கூடிய அளவுக்கு சுவாரசியமாக  எதுவும் நடக்கிறதா என்று கவனித்து நாளெல்லாம் எது எதையோ மனதில் குறித்து வைத்துக் கொண்டே இருக்கிறேன். தெய்வாதீனமாக, இல்லை, வாழ்க்கையில் சுவாரசியமாக எதுவும் நடப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்ள மறுத்த நண்பர் ஸஸரிரி கிரி மற்றும் நாம்தான் சுவாரசியமான சம்பவங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நண்பர் திண்டுக்கல் தனபாலன் ஆகியோரின் வாய்முகூர்த்தம், இன்றைக்கு ஒரு மிக சுவாரசியமான சம்பவம் நடந்தது.  மறப்பதற்குள் அதைப் பதிவு செய்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆம்னிபஸ்ஸில்  ஹோமியோபதி மருத்துவ அனுபவங்களை அண்மையில் சிறப்பு பதிவர்  எழுதியிருந்தார் அல்லவா,  அதற்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்த விஷயம் நண்பர்கள் அறிந்ததே. ஆனால், அது எனக்கு வாசகர் மத்தியில் ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பது இன்றுதான் தெரிந்தது.

மதியம் ஒரு இரண்டு மணி அளவில் பிரபல பதிவர் ஒருவர் அழைத்தார்.

“ஹலோ?” என்றேன்.

மறுமுனையில் பதிவரின் பெருமூச்சுகள் ஏதோ ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல முனைந்தன.

“சொல்லுங்க ஸார்…”

பேஸின் பிரிட்ஜ் தாண்டிய ரயில் மாதிரி பெருமூச்சுகள் வேகம் பிடித்தன.

“என்ன ஸார்?”

“பையன் மாத்திரை டப்பாவை முழுங்கிட்டான் ஸார்”

“ஐயையோ! டப்பாவையே முழுங்கிட்டானா! எவ்வளவு பெரிய டப்பா?”

“ஹோமியோபதி மருந்து டப்பா ஸார்”

“அது ரொம்ப சின்னதாச்சே, வெளியே வந்திடும் கவலைப்படாதீங்க. ஆமாம், அவன் ஏன் அதை முழுங்கினான்?”

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், “டப்பான்னா டப்பா இல்லை ஸார். டப்பாவில் இருந்த மாத்திரை எல்லாம்,” என்று கடுப்பான குரலில் பதில் வந்தது.

“அப்ப அந்தக் கவலையும் இல்லை. அவன் கைக்கு எப்படி அது போச்சு?”

“எங்க அம்மா மைக்ரேன் தலைவலிக்கு ஆறு மாசமா ஹோமியோபதி மாத்திரை சாப்பிடறாங்க ஸார். ஏ1, பி2, சி3 ன்னு மூணு மருந்து டப்பா. அதில் என் பையன் பி2 மாத்திரை எல்லாத்தையும் முழுங்கிட்டான்.  ஏதாவது ஆயிடுமா ஸார்?”

“உங்க அம்மா ஆறு மாசமா இந்த மூணு மருந்தையும்தான் தினமும் சாப்பிடறாங்களா? இல்லை, டாக்டர் ஒவ்வொரு தடவையும் வேவ்வேற மருந்து கொடுக்கறாரா?”

“ஆமாம் ஸார். எப்பவுமே இது மூணும்தான். மூணு வேளையும் சாப்பிடறாங்க”

“ஆச்சரியமா இருக்கே! சரி, ட்ரீட்மெண்ட் எடுக்க ஆரம்பிச்சப்புறம் இப்ப பரவாயில்லையா?”

“இதுவா ஸார் முக்கியம்? என் பையன் அத்தனை மருந்தையும் முழுங்கிட்டான். டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணுமா, எவ்வளவு சீக்கிரம் கூட்டிட்டுப் போகணும், அதைச் சொல்லுங்க ஸார்!”

நண்பரின் கோபம் எனக்கு வியப்பாயில்லை. ஹோமியோபதி மருத்துவம் பற்றிய புரிதல் இல்லாத எவருக்கும்  ஏற்படக்கூடிய குழப்பம்தான்.

“சொல்றேன், ஒரு நிமிஷம் பொறுத்துக்குங்க. அம்மா இப்ப எப்படி இருக்காங்க?”

“மாசம் டாக்டருக்கு முன்னூறு ரூபா தண்டம் ஸார்!  ஆட்டோவுக்கு வேற போக வர நூறு ரூபா செலவு”

“ஸார், ஆறு மாசமா அந்த மூணு மாத்திரையையும் தினமும் மூணு வேளை சாப்பிடற உங்க அம்மாவையே அதெல்லாம் ஒண்ணும் பண்ணலை, அதில் ஒண்ணே ஒன்னை  ஒரே ஒரு வேளை சாப்பிட்ட உங்க பையனை என்ன பண்ணிடப் போவுது?”

இந்த பதிலால் பிரபல பதிவரின் மனம் அமைதியடைந்திருக்க வேண்டும். பதில் பேசாமல் போனை வைத்து விட்டார்.

ஆம் நண்பர்களே, ஹோமியோபதி மாத்திரைகள் நான்கு சாப்பிட்டாலும் ஒன்றுதான், நானூறு சாப்பிட்டாலும் ஒன்றுதான், எல்லாம் ஒரே டோஸாகத்தான் கணக்காகும்.

இதை மனதில் வைத்துக் கொண்டால் பல கவலைகளைத் தவிர்க்கலாம்.

OoO

அப்புறம் ஒரு செய்தி.

உங்கள் அபிமான வலைதளமான ஒழுங்கறு அஞா என்ற ஒரு நுண்பார்வை கொண்ட திரை விமரிசகர் மற்றும் பானபத்திர பைராகி என்ற நவ கவிஞரையும் அறிமுகப்படுத்தியதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதில் பானபத்திர பைராகி ஆம்னிபஸ்ஸில் எழுதும் நூல் அறிமுகங்களுக்கு ஏராளமான பெண் வாசக ரசிகைகள் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் அதுதான் உண்மை.

இந்த வரிசையில் ஒரு படைப்பிலக்கியவாதியை, அவர் எழுதிய முதல் சிறுகதையைப் பதிப்பித்து தன்னை கௌரவித்துக் கொள்கிறது ஒழுங்கறு.

“எத்தனையோ இணைய இதழ்கள் இருக்க இங்கு ஏன் தங்கள் படைப்பைப் பதிப்பிக்க விரும்புகிறீர்கள்?” என்று புதிதாக புனைவிலக்கியவாதி வேடத்தில் வந்திருந்த நண்பரிடம் கேட்டேன். முகத்தில் அங்கங்கே பவுடர் திட்டுக்கள், உதட்டில் கொஞ்சம் தடிமனாகவே செஞ்சாயம். நடையை மாற்றுகிறேன் பேர்வழி என்று மூன்வாக் பண்ணுவதுபோல் தரைக்கு அரை அங்குலம் மேலாகவே மிதந்து வந்திருந்தார்.

“பானபத்திர பைராகி எண்டர் ஆன இடத்தில் எனக்கு என்ட்ரி கிடைப்பது ஒரு பெரும்பாக்கியம். நீங்கள் ஒரு பாலச்சந்தர் பாரதிராஜா பாக்கியராஜ் என்று சொல்ல மாட்டேன், ஆனால் அதற்காக கதையைப் போஸ்ட் செய்ய  மாட்டேன் என்று சொல்லக் கூடாது,” என்று அடித்துச் சொல்லிவிட்டார் நண்பர். நமக்குதான் புகழ்ச்சி என்றால் எப்போதும் பிடிக்காதே, அதனால் அவரது வேண்டுகோளை ஒப்புக் கொண்டேன்.

ஆம் நண்பர்களே, நாளை அவரது கதை இங்கே பதிப்பிக்கப்படுகிறது. நாளை காலை ஆறு மணிக்கு ஒழுங்கறு வரத் தவறாதீர்கள். ஆகச்சிறந்த எழுத்தாளர் ஒருவரின் முதல் சிறுகதையை வாசிக்கப் போகிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும். தூங்கித்தான் ஆகவேண்டும் என்றால் அலாரம் வைத்துவிட்டுத் தூங்குங்கள்.

எழுத்தாள நண்பருக்கு அடியேனின் தாழ்மையான ஆலோசனை – சிறுகதை எழுத்தாளனின் இரும்புக் கரங்கள் எப்போதும் வெல்வெட் உறையில்தான் இருக்க வேண்டும்.  முகத்தில் குத்தும்போது மட்டுமே  இரும்பு வெளிப்பட வேண்டும்.

நாளை சந்திப்போம். நன்றி.

Advertisements

12 thoughts on “சுவையான சம்பவங்கள்

 1. ஆக கொத்தாக விழுங்கினாலும் ஹோமியோபதி மருந்து மாத்திரைகள் ஒன்றுஞ்செய்யாது 🙂

  உங்கள் உற்சாகம் திரும்பிவிட்டது.களப்பணியைத்தொடங்கிவிட்டீர்கள்.

  அறிமுகம் ஒரு பெண் எழுத்தாளரைப்போல தோற்றுகிறது.
  அல்லது எழுத்து நடையச்சொல்லுகிறீர்களோ தெரியவில்லை
  குழப்பமாயிருக்கிறது குத்து வெட்டு என்றும் சொல்லுகிறீர்கள்.

  விடிஞ்சா கல்யாணம் என்ற மங்கலப் பெயரில் ஒரு திகில்படம் தமிழிலதான் வந்தது
  வாழ்த்துக்கள் சார்.

  1. //ஆக கொத்தாக விழுங்கினாலும் ஹோமியோபதி மருந்து மாத்திரைகள் ஒன்றுஞ்செய்யாது :)///

   சார், இத நான் எப்படிப் புரிஞ்சுக்கிறது? 🙂

   1. அதுக்காக கொத்து கொத்தா சாப்பிட்டா, அதிகம் செலவாகுமில்லையா? ஒரு வேலைக்கு நாலு மாத்திரையே போதும்.

  2. நன்றி டாக்டர்…

   எதிர்பாராத விதமாக எங்கள் பாட்டி (அம்மாவின் அம்மா) திடீர் இயற்கை எய்திய காரணத்தால் நேற்றும் இன்றும் பயணிக்க நேர்ந்ததால் பதிவிடவும் பின்னூட்டமிடவும் இயலவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.

  1. பிரபல பதிவர்னு சொன்னப்புறம் ஏன் ஸார் மஞ்ச மாக்கான் யாரு அது இதுன்னு கேக்கறீங்க?

   ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது!

 2. சுவாரஸ்யம் என்று சொல்லி விட்டு திகைக்க வைத்து விட்டீர்கள்… ஒன்றும் செய்யாது ஒருபுறம் இருக்கட்டும்… மருந்து டப்பா முழுங்கவில்லை, அது வரையில் சந்தோசம்… ஹிஹி…

  அலாரம் தேவையில்லை… மின்வெட்டு தினமும் எழுப்பி விடுகிறதே…

  வாழ்த்துக்கள்….

  1. “சுவாரஸ்யம் என்று சொல்லி விட்டு திகைக்க வைத்து விட்டீர்கள்… ”

   அப்படியா? இதை நானே எதிர்பார்க்கவில்லை 🙂

   தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s