சிறுகதை அறிமுகம்

..

கடந்த பத்திருபது ஆண்டுகளாக தியாகத்தை வலியுறுத்தாத துறவும் நேயத்தை முன்னிருத்தாத பக்தியும் தமிழகத்தை ஆட்டுவித்து வருகின்றன. ஆன்மிகமும் லௌகிகமும் அடிப்படையில் எதிரானவை, இல்லற அமைப்புக்கு வெளியேதான் துறவு அமைப்புகள் இருக்க முடியும். ஆனால், மானசீக துறவு மட்டுமே போதுமானது என்றும், ஏதோ ஒரு குருவிடமும் அவரது போதனைகளிலும் மனதை ஒப்புவித்துவிட்டால், பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து வழக்கம்போல மனைவி மக்கள் மனை தொழில் என்று வாழ்க்கைக்குண்டான சகல சௌபாக்கியங்களையும் துய்த்த வண்ணம் அமைதியாக முன்னேற முடியும் என்றும் இந்த புதிய ஆன்மிக குருமார்கள் சொல்கிறார்கள். அவர்களும் வளர்கிறார்கள், நாமும் வளர்கிறோம். கறுப்புப் பணம் கோவில்களாகவும் ஆன்மிக மையங்களாகவும் புழக்கத்துக்கு வருகிறது, இருந்தாலும் பரவாயில்லை இதில் நமக்கு நன்மையுண்டு என்று நாமும் இதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் இதெல்லாம் மனதளவில் இருக்கும்வரை சரி, நான் நம்புகிறார்போல் நம்புகிறேன் என்ற நாடகமாக இருக்கும்வரை பிரச்சினையில்லை. ஆனால் யாராவது நம்பிவிட்டால்? அல்லது எனக்கு என்று யாரும் இல்லை, எல்லாம் உனக்கே என்ற பக்தி பாவம் நியாயமாகவோ அநியாயமாகவோ மெய்ப்பட்டுவிடும் என்ற அச்சுறுத்தல் எழுந்தால்?

இந்த முரண்பாடுகளைப் பேசும் இரு கதைகளை அண்மையில் வாசித்தேன். சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த இவை நம்பிக்கையின் நிழலில் உள்ள அவநம்பிக்கையை உள்ளிருக்கும் புகைப்படலத்தினூடே வெளிச்சப்படுத்தும் சமகால ஆன்மிக பதிவுகள். வாசித்துப் பாருங்கள்:

“இப்பொழுது நான் சொல்வதை நீங்கள் கவனத்துடன் கேட்க வேண்டும்,” என்று தலைமை சீடரான போலந்து விஞ்ஞானி ஆசிரமத்தின் ஒரு தனித்த அறை ஒன்றில் நாற்காலி மேல் அமர்ந்து, அருணாச்சலமும் சங்கரியும் கீழே அமர்ந்திருக்க, முன்னால் குனிந்து சொல்லத் தொடங்கினார். ”உங்கள் தாத்தா வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள். படிப்பது, ஏதோ ஒரு வேலை செய்வது, குடும்பம் வளர்ப்பது, பிள்ளைகளுக்குச் சேர்ப்பது, பின் கடைசி காலத்தில் இருமிச் சாவது. இதையேதான் உங்கள் தந்தையும் செய்திருப்பார். சிறிய மாற்றங்களுடன் நீங்களும் செய்திருப்பீர்கள். நீங்கள் போன பின்பு உங்களை இங்கு யார் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள்? உங்கள் வாழ்க்கையால் நீங்கள் அடைந்ததும் பிறருக்கு கொடுத்ததும் என்ன?” பூஜ்யம் என்று சொல்லும் வண்ணம் அவர் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து முன்னால் காண்பித்தார். “ஆனால் உங்கள் பெண் இந்த சமுதாயத்திற்கு ஒரு பெரிய சேவையை ஆற்ற வந்துள்ளார். பலர் உங்கள் பெண்ணை தங்கள் வாழ்நாள் தோறும் நன்றிப் பெருக்கோடு நினைவு கரப் போகின்றனர். பெரும்பாலானோர் வாழும் சராசரி வாழ்க்கையில் இருந்து உங்கள் பெண் மேலெழப் போகிறாள். அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் தேவை.”

நம்பிக்கை, ஆர். பிரபு

வைதேகிக்கும், எனக்குமிடையே எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் இருந்ததற்கும் ஆசானே காரணமாக இருந்திருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரையில் வைதேகி ஆசான் சம்பந்தமாக எந்த விஷயத்திலும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை என்றுதான் சொல்வேன். ஆசான் அவளிடத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் உருவாக்கியுள்ளதை விடுப்பில் கோவை வரும்போதெல்லாம் காண முடிந்தது. மனதளவில் அவளது எண்ணங்களிலும், வெளிப்புற குணாதிசயங்களிலும் நல்ல விதமான மாற்றங்களை காண முடிந்தது.

அம்மா போன் பண்ணி யார், யாரோ வீட்டுக்கு வருவதாகச் சொன்னார்கள். சத்சங்கம் என்ற பெயரில் வீட்டைச் சுத்தம் செய்து, ஆசானின் ஆளுயர புகைப்படத்தின் முன்னர் ஊதுபத்தி வைத்து தியானம் செய்கிறார்கள், ஆசானின் பேச்சுக்களை டிவிடியில் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அவர்களை வெளியிலிருந்து காண்கையில் மிக ஆச்சரியமாகவும், மனிதர்களிடம் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது.

அவரவர் அளவில் ஒரு ஆன்மீகத் தேடல் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. குழு மனப்பான்மை இருந்தாலும்கூட, அதில் கடைபிடித்து வரும் கட்டுப்பாடான முறையின் காரணமாகவும்கூட, ஆன்மீகத் தேடலை நோக்கியே எல்லாமும் பயணித்து வருவதாகத் தோன்றியது.

அந்த குழுக்களில் பொதுவாக வயதானவர்களும், மிகவும் இளம் பருவத்தவர்களுமே இருந்தார்கள். ஆசானின் பாதை நடுத்தர வர்க்கத்துக்கும், நடுத்தர வயதினருக்கும் ஒரு முழுமையான் நம்பிக்கையை உண்டாக்கவில்லை போலிருக்கிறது என்று எண்ணிக் கொள்வேன். ஆனால், வைதேகியைப் போன்ற சிலரும் இருப்பதைக் காண்கையில் அவர்கள் ஆசானின் பாதையில் பயணிப்பதை விட, குடும்பம், சூழல் என்ற வழக்கமான வட்டத்தை விட்டு ஒரு வெளி வட்டத்தில் பிரயாணிக்க ஆர்வம் காட்டுவதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அந்த வெளி வட்டத்தைத் தாண்டி மற்றுமொரு வெளி வட்டத்தை எந்த ஒரு இடத்திலும் சந்திப்பதில் அவர்களுக்கு ஆர்வமில்லை என்றே தொன்றியது.

அவரவருக்கு என்று ஒரு வட்டப் பாதையை ஏற்றுக் கொண்டு அந்த வட்டப் பாதையில் மற்றுமொரு குழு எதிர்ப்படுவதை எப்போதும் தவிர்ப்பதாகவே தோன்றியது. சூரியனைச் சுற்றி பல கோள்கள் தமக்கிட்ட பாதையில் சுற்றி வருவதைப் போல ஆசானைச் சுற்றியும் இப்படி பலக் குழுக்கள் இருக்கக் கூடும். ஆசானைப் போல இன்னும் பல ஆசான்கள் அவரவர் குழுக்களில் தனித்தனி வட்டப் பாதைகளில் பயணிக்கிறார்கள். மேலும் பார்த்தால் ஆசான்கூட ஒரு வட்டப் பாதையில்தான் பயணிக்கிறார். பல ஆசான்கள் ஒரு குழுவாக சார்ந்து ஒரு வட்டப் பாதையில் பயணிப்பதாகவும், மற்றவர்களுக்கு அந்தப் பாதையில் இடமில்லை என்றும் தோன்றியது.

இவற்றையெல்லாம் வைதேகியிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றினாலும் எங்களின் ஒப்பந்த நிபந்தனைகளின் கண்ணியத்தை காத்துக் கொள்ளும் பொருட்டு என்னுளே வைத்துக் கொண்டேன். மேலும், இப்படியெல்லாம் பேசுவது வைதேகிக்கு எப்போதும் புரியாது.

வட்டங்களுக்கு வெளியே, ந. பிரபாகரன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s