சீசர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவன்!

ஆம்னிபஸ் தளத்தில் எழுதிய சில புத்தக மதிப்பீடுகளை இங்கே தொகுக்கப் போகிறேன். அதற்கு வசதியாக, “புத்தம் புதிய காப்பி” என்று பிளாக்கின் தலைப்பையும் மாற்றி விட்டேன். இதில் என்ன பிரயோசனம் என்பதைவிட, ஏதோ எழுதினோம் அப்புறம் மறந்தோம் என்றில்லாமல் திரும்பிப் பார்த்து எடைபோட இது ஒரு வாய்ப்பாகிறது.

நம்மில் எவரும் ஆணவமில்லாதவர்கள் அல்ல – சிலர் அதை வெளிக்காட்டுகிறோம், சிலர் மறைத்து வைத்துக் கொள்கிறோம். எனவே, ஆணவம் இருக்கிறது இல்லை என்பதல்ல விஷயம், ஜெயகாந்தனைப் போல் மேன்மையை நோக்கிச் செல்கிறீர்களா அல்லது கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறீர்களா என்பதுதான் விஷயம்.

ஜெயகாந்தனின் எழுத்தில், மேன்மையான விஷயங்கள் இருக்கின்றன என்ற ஒரு காட்சி கிடைக்கிறது. அவற்றுக்காகப் போராடலாம், தப்பில்லை என்ற நம்பிக்கை கிடைக்கிறது. இனி ஆம்னிபஸ் மதிப்புரை :

OoO

ஜெயகாந்தன் முன்னுரையில் எழுதுகிறார் பாருங்கள், இதைப் படிப்பவர்களுக்கு ஜெயகாந்தனின் ஆணவத்தைப் பார்த்து பயங்கர கோபம் வரலாம் –

இலக்கியமும் எழுத்தும் இந்தப் பத்திரிகைகளை அண்டியில்லை என்றே இப்போதும் நான் நம்புகிறேன். எழுத்தையும் இலக்கியத்தையும் நம்பி நமது பத்திரிகைகள் உயர வேண்டும் என்றே விரும்புகிறேன். மேலும் அபிமானமுடைய எழுத்தாளர்களும், தேர்ந்த ரசனையுடைய வாசகர்களும் நமது தமிழ் பத்திரிகைகளில், இலக்கியம் தேடுவதை இன்னும் விட்டபாடில்லை. அவர்கள் என்னையேனும் கண்டு ஓரளவு ஆறுதல் பெறட்டும் என்ற இலக்கியப் பொறுப்பினால் செய்யப்படும் நிஷ்காம்ய கர்மமாகவே நான் இந்த அச்சு வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கிறேன்.

ஆனால் தரிசனம் என்பது இந்த ஊர்கோலம் மட்டும் அல்ல. அது விஸ்வரூபம்.”

இதைவிட அகங்காரமாக எழுதக்கூடியவார்கள் இங்கே ஒருவர் இருவர்தான் உண்டு. அவர்களும்கூட ஜெயகாந்தன் “இந்த இடத்தில் இருந்து,” என்ற கதையில் செய்கிற அளவுக்கு யாரும் தங்களைத் தாங்களே போற்றிப் பேச முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது –

“நீர் பிரதிபாவான்! பிரதிபை என்பது வெறும் மேதாவிலாசம் அன்று. அது புதிது புதிதாய்ப் பளீர் பளீரென்று ஸ்புரித்துப் பிரகாசிக்கிற பிரக்ஞை. பிரக்ஞா நவ நவோன் மேஷ சாலினீ… விசுவரூபமெடுக்க நின்ற வாமன!” என்று இரண்டு கரங்களையும் அவனது சிரத்தின் மேல் உயர்த்தி அவன் பொருட்டு அவர் கடவுளை ஸ்தோத்திரம் செய்தார்.

அவன் தன் கையிலிருந்த புகைக் குழாயைப் பக்கத்தில் தள்ளி வைத்து ‘குரவே நமஹ’ என்று அவரை நமஸ்காரம் செய்து கொண்டான்.”

ஆம்னிபஸ் பதிவொன்றில் நண்பர் சுகி, “… ஜெ.கேவைப் பொருத்தவரை எழுத்து என்பதை தாண்டி எழுத்தாளர் எனும் ஆளுமையின் மீதான ஈர்ப்புதான் அவரை அத்தனை பிரம்மாண்டமாக ஆக்கியது என தோன்றுகிறது. படைப்பாளி எனும் திமிரும், உச்சபட்ச நேர்மையும் அவரை இன்றும் வாசகர்கள் கொண்டாடும் ஒரு படைப்பாளியாக ஆக்கியுள்ளது,” என்று எழுதியதை நினைத்துக் கொள்கிறேன். ஜெயகாந்தனை நிறைய படித்திருந்தாலும், பழக்கம் விட்டுப் போய்விட்டதால், “…அக்காலகட்டத்தை சேர்ந்த, அவரைக் காட்டிலும் அபார மொழித்திறன் கொண்ட கதை சொல்லிகளை நான் வாசித்திருக்கிறேன்,” என்ற குறிப்பை மனதுக்குள் ஆமாம் போட்டுக் கொண்டே வாசித்தேன். ஆனால் இப்போது ‘சக்கரம் நிற்பதில்லை’ சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும்போது ‘எவ்வளவு பெரிய ஆள்!” என்ற ஆச்சரியம் வருகிறது. இந்த மாதிரியான எழுத்து அபூர்வமானது, இத்தனை நாட்கள் இவரை மறுபடியும் எடுத்துப் படிக்காமலிருந்தது பெரிய தப்பு என்று தோன்றுகிறது.

இந்த தொகுப்பில் உள்ள கதைகள் ஐந்து – சீசர், அரைகுறைகள், குருக்கள் ஆத்துப் பையன், ‘இந்த இடத்தில் இருந்து’, சக்கரம் நிற்பதில்லை. இதில் சீசர் நாம் ஜெயகாந்தனிடம் எதிர்ப்பார்க்கக்கூடிய கதைதான். சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பதை, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவனாக இருப்பவன்தான் சீசர் என்று மாற்றுகிறார் – சந்தர்ப்ப சாட்சியங்கள் எவ்வளவு எதிராக இருந்தாலும் தன் மனைவி சொல்வதை நம்புகிறார் அவர். “மங்களம் எப்படிப்பட்டவளாக இருந்தால் என்ன, சீதாராமய்யர் சீசர்தான் என்று நினைத்துக் கொண்டேன்’. ‘அரைகுறைகள்’ கதையில் ஜெயகாந்தனிடம் நாம் எதிர்பார்க்கிற அறம் சார்ந்த கவலைகள் இல்லை – ஓ ஹென்றித்தனமான திருப்பத்தைக் கொண்ட கதை. ஆனால், ‘அரைகுறைகள்’ என்ற தலைப்பு யாரும் பைத்தியமாகப் புரிந்துகொள்ளப்படக் கூடும் என்று நம்மை நினைக்க வைக்கிறது. இந்த நிலையில் பைத்தியக்காரத்தனம் குறித்த அச்சங்களும் அர்த்தமற்றுப் போய் விடுகின்றன.

‘குருக்கள் ஆத்துப் பையன்’ படிப்பு பிழைப்பு என்று கவலைப்படாமல் தன் தந்தையை இழந்த நாள் முதலே கிராமத்துப் பிள்ளையாருக்கு பூஜை பண்ணிக் கொண்டிருக்கிறான் – அதற்கான மந்திரங்கள்கூட சரியாகத் தெரியாது. பிள்ளையாருக்குப் பண்ணின நைவேத்தியம்தான் அம்மாவுக்கு உணவு, வேறு வருவாயில்லை. உண்மையாகவே பிள்ளையாருக்கு பூஜை பண்ண பாத்தியதைப்பட்டவர் பணிமூப்பு எய்தியபின் ஊருக்குத் திரும்புகிறார். அம்மாவும் பையனும் சாப்பாட்டுக்கு என்ன வழி என்று கவலைப்பட்டு, பையன் பிள்ளையார் வழி காட்டுவான் என்று அம்மாவையும் ஊரையும்விட்டுக் கிளம்பிப் போய் விடுகிறான். கிராமத்துக்குத் திரும்பி பிள்ளையார் பூஜையை எடுத்துக் கொண்ட பெரியவர் கதைக்கு ஒரு நயமான முடிவைத் தருகிறார்.

மேற்கண்ட மூன்று கதைகளையும் சுருக்கமாக இன்னதுதான் கதை என்று சொல்கிற மாதிரி, ‘இந்த இடத்தில் இருந்து’ என்ற கதையையோ, ‘சக்கரம் நிற்பதில்லை’ என்ற கதையையோ சொல்லிவிட முடியாது. இரண்டும் இரு தியானங்கள். முன்னதை பால் வேற்றுமை குறித்த தியானமாக அமைந்த கதை என்று குத்துமதிப்பாகச் சொல்லலாம், அதுவும்கூட சரியில்லை. “ஞானம் என்பது நபும்ஸக லிங்கமாகவும், புத்தி என்பது ஸ்திரி லிங்கமாகவும் க்ரது (யாகம்) என்பது புருஷ லிங்கமாகவும் இருப்பது குறித்து நான் யோசிக்கிறேன்…” என்றும் “இவள் தனது உழைப்பை, ஞானமும் புத்தியும் நீங்கிய யாகம் போலல்லவா ஆகுதி செய்கிறாள்! இவளல்லவா புருஷ லிங்கம்,” என்றும் கதையில் வரும் சமஸ்கிருத பண்டிதர் கட்டிடப்பணியில் செங்கல் சுமக்கும் ஒரு எளிய பெண்ணை குறித்து நினைக்கிறார். எழுத்தாளனோ, “எப்படியும் சிந்திக்கலாம்; அதுதான் சிந்திக்கும் சுதந்திரம். ஆனால் அதை எப்படி வெளியிடுவது என்பது சிந்திக்கிறவனின் சுதந்திரம் மட்டும் சம்பந்தப்பட்டதா? அது சிந்திக்க வேண்டியவர்களின் சுதந்திரத்தை மறுப்பதும், கட்டுப்படுத்துவதும் ஆகலாமா?” என்ற திசையில் சிந்திக்கிறான், இந்த மாதிரி என்னென்னவோ. இன்னதுதான் கதை என்று சொல்ல முடியாத ஒரு கதை – பல முக்கியமான விஷயங்களைக் குறித்த தியானம் என்று சொல்லலாம். ஆனால் சிந்தனைச் சிதறல்களாக இல்லாமல் ஒருமைப்பாடு கொண்டதாக இருக்கிறது. இதையெல்லாம் விளக்கி எழுத இது இடமில்லை.

‘சக்கரம் நிற்பதில்லை’ என்ற கதையின் வடிவம் இதைவிட திறந்த தன்மை கொண்டதாக இருப்பதால், அதைப் பற்றி இது போன்ற ஒரு சிறிய பதிவில் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு போவதே மேல். புத்தக அறிமுகம் என்று வைத்துக் கொண்டாலும்கூட இந்த மாதிரி, இந்தக் கதையின் முன் நான் தோற்று விட்டேன் என்று சொல்வது சரியில்லை என்று புரிகிறது. ஆனால், இதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் – இந்த இரண்டு கதைகளும் வடிவ அமைப்பிலும், கதைக்களம், கருத்து ஓட்டம் என்று அனைத்து வகைகளிலும் துணிச்சலான முயற்சிகள். வெற்றிபெற்ற முயற்சிகள். என்ன கதை என்று புரியாவிட்டாலும், கதைகள் இரண்டும் ஜெயகாந்தன் விவாதத்துக்கு முன்வைக்க விரும்பும் விஷயங்களை உணர்வுபூர்வமாக அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்று விடுகின்றன.

கடைசியாக இந்தக் கதைகளைப் படித்த வகையில் சில குறிப்புகள், இவற்றுக்கான ஆதாரங்களைக் கதையிலிருந்து எடுத்துப் பேச முடியும் – ஜெயகாந்தன் சமத்துவ பாவனை கொண்டிருந்தாலும் அவர் மேன்மை, கீழ்மை என்ற பாகுபாட்டை உணர்ந்தவராகவே இருக்கிறார். கீழ்மை என்று நாம் எதை நினைக்கிறோமோ அதையும் மேன்மையை நோக்கிக் கொண்டு செல்லவே விரும்பினார். சிறுமைகளை அறவே வெறுத்தார் – மேன்மையாக மதித்துப் போற்றப்பட வேண்டிய விஷயங்கள் சிறுமைப்படுத்தப்படுவதைக் கோபித்தார். அவரது அறச்சீற்றத்தை, அவர் யாரை, எப்போது ஆதரித்தார் என்பதை இப்படிதான் புரிந்து கொள்ள வேண்டும் – ஜெயகாந்தனின் உந்துதல் மேன்மையை நோக்கியே இருக்கிறது. மேன்மைக்குரிய விஷயங்கள் எவரால் சிறுமைப்படுவதையும் அவர் விரும்பவில்லை.

நான் மேலே சொல்வது தவறான அரசியலாக இருக்கலாம். மேன்மை கீழ்மை என்றெல்லாம் மனிதர்கள் விஷயத்தில் பாகுபடுத்துவது தவறாகப் போய் விட்டது. ஆனாலும், பெரியோர் சிறியோர் என்ற ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ தமிழகத்தில்தான் வியப்பும் இகழ்ச்சியுமே எங்கும் நிறைந்திருப்பதை நாம் காண்கிறோம். ‘பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே,’ என்ற தமிழ் மரபு இன்று இல்லை. எங்கும் வியப்பொலியை வசைகள் சமன் செய்கின்றன. வியத்தலும் இகழ்தலும் இன்றி பெரியோரிடமும் சிறியோரிடமும் மேன்மையையே தேடிய ஜெயகாந்தன் தன் எழுத்தை நிறுத்திக் கொண்டபின் ஒரு தலைமுறையே கணியன் பூங்குன்றனின் பாடல் சுட்டும் நீண்ட தமிழ் மரபின் அறிமுகமில்லாமல் வளர்ந்திருப்பது தமிழகத்தின் இழப்பு.

எத்தகைய ஒரு பண்பாட்டை ஜெயகாந்தன் எதிர்த்தாரோ அதன் ஆரவாரக் கூச்சலில் அவரது குரல் அமைதியாய் அடங்கி விட்டது. இந்த இழப்பின் துயரை இன்று நாம் அறியாதிருக்கிறோம், ஆனால் எதிர்காலத் தலைமுறைகள் அத்தனை எழுத்தையும்விட இந்த மௌனத்தில்தான் நமக்கெதிரான அவரது வன்மையான கண்டனத்தைக் காணும்.
சக்கரம் நிற்பதில்லை, ஜெயகாந்தன்
மீனாட்சி புத்தக நிலையம், ரூ.45,
இணையத்தில் வாங்க : NHM, உடுமலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s