சிறுகதை எழுதுவது எப்படி?

(இந்தக் கதை நண்பர் வரசித்தனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது)

அண்மைக்காலமாக சிறுகதைகள் குறித்த விவாதங்களில் நிறைய பங்கேற்றுக் கொள்ள நேர்ந்திருக்கிறது. இதனால் சில சமயம் நாம் எப்படிப்பட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியே எழுந்து வந்துவிடுகிறது – கதை என்பது பொய் என்று தெரிந்திருந்தாலும் அது ஏதோ ரொம்ப நிஜம் மாதிரி இது அப்படி இருந்திருக்கலாம், அது இப்படி அர்த்தம் ஆகிறது, இது ஏன் இங்கே வந்தது என்று தொடர்ந்து பேசப் பேச, ஒரு கட்டத்தில் நாம் எப்படி இங்கே வந்து சேர்ந்தோம் என்ற குழப்பம்தான் அதிகரிக்கிறது. இத்தனைக்கும் நாம் எழுதும் கதைகள் நிமிஷக்கதைகள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் – நம் கதைகளை யாரும் ஒரு பொருட்டாகவே நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.

உதாரணத்துக்கு நம் கதையின் நாயகன் சினிமாக் கதை எழுதாத ஒரு எழுத்தாளரைச் சந்திக்க ஒரு இடத்துக்குச் செல்லலாம். சினிமாக் கதை எழுதாத எழுத்தாளர் என்றால் ஏழை என்று சொல்ல வேண்டியதில்லை. அந்த எழுத்தாளர் தமிழின் சிறந்த புத்தகங்களை வெளிநாட்டில் உள்ள நூலகங்களுக்குத் தருவித்துக் கொடுப்பவராக இருக்கலாம். அவரது அலுவலகத்தில் நம் நாயகன், இணையத்தில் எல்லாருக்கும் கேலிப்பொருளாக இருக்கும் இளம் சினிமா விமரிசகர் ஒருவரின் புத்தகத்தைப் பார்க்க நேரிடலாம். மிகவும் ஆச்சரியத்துடன், “இது எங்கே ஸார் போகுது?” என்று நம் நாயகன் கேட்க, அந்த எழுத்தாளர், புத்தகம் அமெரிக்காவில் உள்ள ந்யூ ஜெர்ஸி பல்கலைக்கழக நூலகம் செல்கிறது என்று சொல்லக்கூடும். ஆனால் அவர் அத்தோடு நிற்காமல், “அமெரிக்காவில் ரிசஸ்ஷன் இருப்பதால் ஒரு புத்தகம் ரெண்டு புத்தகம்தான் ஆர்டர் செய்கிறார்கள், நான்தான் மனசு கேட்காமல் நான்கைந்து வாங்கி வெவ்வேறு நூலகங்களுக்கு அனுப்புகிறேன். இன்னும் நாற்பது ஐம்பது வருஷங்கள் போன பின்னால் இவை இங்கே கிடைக்காது. ஆனால் இந்தப் புத்தகங்கள் அமெரிக்காவில் பத்திரமாக இருக்கும்,” என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் கையில் உள்ள புத்தகத்தைப் பார்த்து, “இதுவா ஐம்பது வருடங்கள் தாண்டி நம் காலத்து நாயகனைப் பேசும் ஆவணமாக இருக்கப் போகிறது!” என்று நம்ப முடியாமல் விழிக்கிறான் நம் நாயகன் என்று போகும் கதை.

ஆனால் இது நாம் எழுதும் கதையாதலால் இத்தோடு நில்லாது – நம் அழகியல் எளிய கதைகளை ஏற்பதில்லை. எனவே விடைபெற்றுக் கிளம்பும்போது அந்த எழுத்தாளர், ஓஹையோ பல்கலைக்கழகம் சென்றிருந்தபோது தான் அங்கு ஆற்றிய ஒரு சிற்றுரையைக் கேட்ட அப்பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர், “அடடா.. நீங்கள் எம்.ஏ.வாவது படித்திருந்தால் இங்கேயே தமிழிலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றலாம்,” என்றுச் சொன்னதாக, “அன்றுதான் நான் கல்லூரிப் படிப்பு படிக்காததற்கு என் வாழ்வில் முதல் முறையாக அழுதேன்,” என்று உடைந்த குரலில் நம் நாயகனிடம் சொல்லும் எழுத்தாளர் ரா…, “அன்றைக்கு அதைப் படித்திருந்தால் நான் இப்படி எலக்ட்ரிக் பில்லுக்கும் பெட்ரோல் செலவுக்கும் பயப்பட வேண்டியிருக்காதே!” என்று வருந்தியதாகக் கதை முடியும்.

முடியும் என்றால் முடியும்ம்ம்ம்- ஆனா முடியாது.

இதை டைப் செய்து கொண்டிருக்கும் நம் கதையின் எழுத்தாள நாயகன், “நினைவுகளின் சுமைகளை மீண்டான். அவனது மனைவி நாளை வரும் உறவினர்களுக்கும் சேர்த்து காய் நறுக்கிக் கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் நின்று நிதானிக்க மூடிய கண்களைத் திறந்து பார்த்தான். அவன் முன் இருந்த கணிணி திரை மிதந்து கொண்டிருந்தது, வலப்பக்கம் இருந்த புத்தகங்கள் மிதந்து கொண்டிருந்தன, அவை நிலைபெற்றிருந்த மேஜையும் தரையும் மிதந்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு மாயத்தால் எல்லாம் கட்டுண்டிருந்தன” என்று எழுதுவதாகக் கதை முடியும்.

ஏனென்றால் நம் நோக்கம் பூடகமாக எழுத வேண்டும் என்பதற்காகப் பூடகமாக எழுதுவதல்ல : எடுப்பு தொடுப்பு முடிப்பு என்ற கணக்கு யதார்த்தத்தில் செல்லுபடியாவதில்லை என்பது நம் புரிதல். உடம்பு சரியில்லாத காரணத்தால் உப்புமா பரிமாறும் மனைவிக்கும் தன் மனைவி தன்னை மதிக்காமல், இவனுக்கு இது போதும் என்று நினைத்துக் கொண்டு அதைக் கொண்டுவந்து வைக்கிறாள் என்று கோபப்படும் கணவனுக்கும் இருக்கும் புரிதலே உலக வழக்கு – எனவே எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவும் இவ்வண்ணம் இருப்பதே யதார்த்தம் என்பதே நம் புரிதலாக இருக்கிறது. பொய்கள், புரட்டுகள், புரளிகள், பிழைபுரிதல்கள், பூடகங்கள், சொல்ல மறந்த கதைகள், செவ்வெரிங்குகள் என்று ஏகத்துக்கும் வாரியிறைத்து எது நிஜம் எது பொய் எது சரி எது தப்பு எது நல்லது எது கெட்டது என்று சொல்லத் தெரியாமல் வாசகனைத் திக்குமுக்காடச் செய்வோம் வாருங்கள்.

4 thoughts on “சிறுகதை எழுதுவது எப்படி?

 1. நன்றி சார்.

  நலந்தான்.

  நல்ல எழுத்து ஒரு டெக்னிக். அல்லது எழுத்துத்தொழில் நுட்பம் (கற்றுக்கொள்ளக்கூடியதுதானே). படைப்பு மேலானது.. சிலர் இரண்டையும் குழப்பிக்கொள்கிறார்கள். முயல்வோம்.விவாதங்களில்தான் நம் எழுத்தாளர்கள் அதைப்புரிந்து கொள்ளுகிறார்கள் நல்லது. இங்கு (ஆஸி) எழுத்துத்தொழில்நுடபத்தைக்கற்றுத்தருவதால் கற்பனையும் புத்தாக்கமும் இயல்பாகவே தேடிபார்க்கப்படுகிறது.
  எமது எழுத்தாளர்கள் தாமே வளர்த்துக்கொண்ட திறமை எனவே அது ஒருவகையில் உயர்ந்தது.
  ஆனால் எழுத்துத்தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டவர்கள் தாம் எழுத்துவது எல்லாமே சிறந்தபடைப்பு என அறியாதவர்களையும் நம்பவைக்கலாம்.
  உங்கலைப்போல நிறைய வாசிப்பவர்களின் கருத்துக்கள் முக்கியமானவை

  1. கடைசி வரியை நீக்கியிருக்கலாம் 🙂
   நான் தொழில்நுட்பக்காரர்களின் கட்சி. தானாய் கற்றுக் கொண்டவர்கள், ஏதோ எழுத்து என்பது அசரீரி மாதிரி நேராய் வந்து இறங்குகிறது என்றும் அதில் கைவைக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள் – அதில் தப்பு சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தொழில்நுட்பம் என்றால் அந்தப் பிரச்சினை இல்லை.
   மேலும் தொழில்நுட்பமாய் அணுகும்போது கிடைக்கும் பரவலான தேர்ச்சி, Bell’s curveஐ உயர்த்துகிறது. சுயம்புக்கள் நிறைந்த சமூகத்தில் வழிபாட்டுக்கான ஆதர்சங்கள், மேதைகள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ரசிக்கும்படி இருக்கின்றனர் – மற்றபடி சராசரிகளின் தரம் ரொம்ப மட்டமாகவே நின்றுவிடுகிறது.
   நன்றி!

 2. தொழில்நுட்பமும் உள்ளீடும் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது நல்ல கதை உருவாகுமோ என்னவோ..தொழில்நுட்பம் ஒரு வகையில ரொம்ப முக்கியம்- வாசிப்பவர்களை சென்றடைய வசதியாக இருக்கும்..அப்படி இல்லையென்றால், பலரையும் சென்றடையாது..எழுதுவதோடு எழுத்தாளன் பணி முடிந்துவிட்டது..எதிர்வினைகளைப் பற்றி கவனம் கொள்ள தேவையில்லை என்று ஒரு தரப்பு இருக்கிறது ஆனால் அப்படி சொன்னாலும் வாசக எதிர்வினை வழியாகவே எழுத்தாளன் வளர்கிறான்..தெரில, சரியாத்தான் பெசுறேனா:)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s