மிஸ்தாவ்ஸ்கியின் பேய் (I)

ஜனார்த்தனத்தை சில மாதங்களாகத்தான் எனக்குப்பழக்கம்.இலக்கியக்கூட்டங்களில் கேள்விகள் கேட்காமல், அமைதியாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறவர்களில்  அவரும் ஒருவர்.அவரோடு பலதடவை உரையாடியிருக்கிறேன்.இலக்கிய அறிவும் பரவலான வாசிப்பும் எப்போதும் என்னை வியக்கவைக்கும். ஒரு இலக்கியக்கூட்டத்தின் முடிவில் என்னைத் தன்வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.அருகில் வாரியர் தெருவில் இருந்த நவீனமோஸ்தர் வீடுகளில் அவருடையதும் ஒன்று.

கீழ்தளத்தில் மின் அடுப்பு ,டிஷ்  வோஷர் .ஆளுர குளிரூட்டி என்று சமையலறை ; ஒரு பெரிய தட்டை ரீவியுடன் கூடிய உயர்ந்த ரக சோபக்களோடு கூடிய ஹோல்; விருந்தினர்களுக்கன பாத்ரூம் டொய்லட்.சுவர்களில் ஜனாவும் மனைவியும் நின்ற இருந்த பெரிய படங்கள் தொங்கின. மனைவியும் அவரும் அன்னியோனியமான அரவணைப்போடும் சிரிப்போடும் நின்றுகொண்டிருந்தார்கள். வீடு மிக நேர்த்தியாக அலங்கரிகப்பட்டுச்சுத்தமாக இருந்தது.

சோபாவில் உட்கார்ந்து,கூல்ட்ரிங்க் குடித்தபடியே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம் .

“இரஷ்ய நாவல்களை வாசித்திருக்கிறீர்களா ”என்றுகேட்டார்.

“தமிழில் சில மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில்  அப்படி இப்படி வாசித்திருக்கிறேன்” என்றேன்

“மிஸ்தாவ்ஸ்கியின் பேய் படித்திருக்கிறீர்களா”

“தாய் என்ற நாவல் படித்ததாக ஞாபகம்”

“படித்திருக்கமாட்டீர்கள். ஏனென்றால் ஒரு சிறு இலக்கியக்குழுமத்துக்காக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.அந்த வட்டத்தை விட்டு  அந்த நூல் வெளியில் வரவில்லை.. அந்த வட்டத்தோடு அந்தப்புத்தகம் பற்றிய பேச்சும் நின்றுவிட்டது. இப்படித்தான் இன்ம்சிலநாடுகளில் அந்த அந்த மொழிகளில் நிகழ்ந்தது.’

‘ஏன் அப்படி? கறுப்பு மாஜிக் அப்படி எதாவது? புத்தகத்தைப்படித்தவர்கள் ஒரு சாபத்துக்கு ஆளாகி….”

அவர் சிரித்தார்.

”இல்லையில்லை. அந்தப்புத்தகம் பலருக்கும் புரியவில்லை. இந்தச்சிறுகுழுமம் அதைப்புரிந்து கொள்ளமுயன்றது.அது எல்லோருக்கும் ஒரு குழப்பமான அனுபவத்தைத்தந்தது.ஆனால் அவர்கள் அந்த நாவலைப்பெறுமதி மிக்கதென்று கருதினார்கள் ஆணித்தரமாக நம்பவும் செய்தார்கள்.ஆனால் இலக்கிய உலகை ஏற்றுக்கொள்ளவைக்கமுடியவில்லை”.”

“வாசகர்களும் இலக்கியவாதிகளும் நிராகரித்ததை எப்படி பெறுமதி மிக்கதென்று..?””

“ எப்படியென்றால்  நூல் ஒரு சிறப்பான வாசகனுக்காக காத்திருக்கிறதென்பது அவர்களது வாதம்.இந்த நாவல் திறக்கக்ககூடிய கதவு அல்லது இந்த நாவலைத்திறக்கக்கூடிய சாவி எங்கோ காத்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.எங்கோ என்பது காலத்துக்கும் பொருந்தும் . ஒருவேளை சிலநூற்றாண்டுகளுக்கப்பால் வரப்போகிறவாசகர்களுக்கானது என்று கூடச்சொல்லலாம்.”

”சுவாரசியமாக இருக்கிறதே ”என்றேன் நான்

“சுருக்கமாகச்சொன்னால்  நாலாம் உலகத்துக்குச்செல்லக்கூடிய வாசகனுக்காக அதுகாத்திருக்கிறது’’

 ” மேலும் குழப்பமாகிறது எனக்கு” என்றேன்.

“ எழுத்தாளன் சிருஷ்டிக்கிற உலகம் ஒன்று. வாசகனின் உலகம் இன்னொன்று. வாசிக்கிறபோது எழுத்தும் வாசகனின் மனமும் சேர்ந்து உருவாகிற உலகத்தை மூன்றாவது உலகம் என்கிறேன் வாசிப்பனுபவம் என்றும் சொல்கிறோம். வாசிப்பனுபவமும் எங்கள் வாழ்க்கைஅனுபவத்தில் சேருகிரது இல்லையா.இதற்கு மேலாக நாலாவது உலகம் ஒன்றிருக்கிறது. அது நிர்வாணமான உண்மை யைத்தருவது. வாசகன் எழுத்தாளனின் பிடியிலிருந்தும் தன் இன்றைய உலகத்து மனத்திலிருந்தும்  விடுபடுகிறபோது நாலாவது உலகம் சித்திக்கிறது.”

“ அது எப்படி “

“ ராஜ ராஜ சோழன் காலத்துக்கதையைப்படிக்கிறீர்கள். ஒருகதாபாத்திரத்தை மையமாகவைத்து கதையைப்பின்னியிருப்பார்கள்.அவர் ஹீரோ. வாசகன் தன் மதிப்பீடுகளை அன்றைய சூழலுக்குள் பொருத்தி ஒரு உலகத்துக்குள் சுழலத்தொடங்குவான். எழுத்துக்களால் எழுத்தாளன் உருவாக்கும் உணர்ச்சிகளோடு வாசகன் தன் அனுபவங்களினூடாக பெற்றுக்கொண்ட உணர்வுகளும் கலந்து எழுகிற உலகம் தொங்கிகொண்டிருக்கிற ஒரு மாய உலகம் . ராஜராஜசோழன் காலத்துக்கதையை இன்றையகாலத்து எழுத்தாளர் எழுத  ராஜராஜசோழன்காலத்து வாசகன் படிக்க  நேர்ந்தால் அவன் எப்படிஉணரக்கூடும்?  எழுத்தாளர் விடும் இடைவெளிகளை த்ன் அனுபவத்தால் நிரப்பாமல் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து உண்மைநிலைகளால் நிரப்புவது.அது  அன்றைய காலத்தின் உண்மை நிலை அல்லவா?”.

”கொஞ்சம் புரிகிறது …  அதாவது வாசிப்பு  ஒரு வாசல் போல. எழுத்தாளன் சிருஷ்டித்த உலகத்தையும் தன் உலகத்தையும் சேர்த்து தனக்கான வாசிப்பு அனுபவத்தை உருவாக்கித்தேங்காமல்  அதைக்கடந்து போய் மெய்யான உலகை அல்லது நிலையை உணர்வது…..சரிதானே. இப்படியும் ..சொல்லலாம் இல்லையா?…… கிபி 3000 ஆண்டில் நடக்கிற கதையை  எழுத்தாளர் கற்பனையில் எழுதுகிறார்.நாலாம் உலகத்தை அடையக்கூடிய வாசகன் வாசிக்க நேர்ந்தால் அவனால் 3000 ஆண்டில் நிஜ உலகம் எப்படியிருக்கும் என்று கூறமுடியும் … சரியாக விளங்கிக்கொண்டிருக்கிறேனா..?’’

“ஒரு வகையில் சரிதான்…எழுத்து ,எழுத்தாளன் ,இன்றைய வாழ்வின் அனுபவங்கள் .. எல்லாம் தளை கள் என்பது அவர்கள் வாதம் மாறிக்கொண்டேயிருக்கிற சூழ்நிலைகள்;நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன சம்பவங்கள். இவற்றிலிருந்து சரடுகளை உருவிப்பின்னிஎழுத்தாளர்கள் புது சூழ்நிலைகளையும் சம்பவங்களையும் எழுத்தில் உருவாக்குகிறார்கள்.சூழ்நிலைகளும் சம்பவங்களும் மீண்டும் மீண்டும் நிகழச்சாத்தியமானவை..சூழ்நிலையை எழுத்தாளன் காட்டியதற்குமப்பால் சொந்த அனுபவங்களுக்குமப்பால்  முழுமையாக அதன் சமநிலையோடு புரிந்து கொள்வது சிலவாசகர்களுக்குச்சாத்தியம் என்று நினைக்கிறேன்.””

”  நாம்  வாசிப்பனுபவத்துக்காகத்தானே வாசிக்கிறோம். என்னை இழந்துவிட்டு அப்பால் செல்வதில் என்ன இருக்கிறது.?” நான் கேட்டேன்;அவர் சொன்னார்.

 “வாசிப்பனுபவம் என்கிற மூன்றாம் உலகத்தில் எழுத்துக்களினூடே சுழன்றுவிட்டு நீங்கள் திரும்புகிறீர்கள்.அதுபோலத்தான் இதுவும்.எழுத்தாளன் மாயயதார்த்தவாதியானால் நீங்கள் மிதப்பீர்கள்.யதார்த்தவதியானல் நடப்பீர்கள்.ஆயினும் யதார்த்தவாதமென்பது உண்மைக்கு வெகு தூரத்தில்தானே இருக்கிறது?.நிஜம் எவ்வாவு சிக்கல் கொண்டதாயிருக்கின்றது? எழுத்தில் இருமைகளாக் பிரிக்கக்கூடியவை நிஜத்தில் கரைந்து போயிருக்கின்றன இல்லையா? அப்படி உணரச்செயக்கூடியதுதான் அடுத்த தளமென்கிறேன்.

 ‘ அப்படியென்றால்  நாலாம் உலகத்தை நேரடியாக ஒரு எழுத்தாளனால் உருவாக்கமுடியாதா?”

“அதை நோக்கித்தான் படைப்புக்கள் எப்போதும் பயணிக்கின்றன. ஏதோ ஒன்றை முன்னிலைப்படுத்தவேண்டியநிலையில்தான் கலைவடிவம் இருக்கிறது. அதற்குள்ளும் சிலர் அதிசயம் நிக்ழ்த்திக்காட்டுகிறார்கள்.வடிவத்தைக்கடக்க வாசகனால்தான் முடியும்.படைப்பு கதவைத்திறந்துவிடுதலைச்செய்கிறதென்று எனக்குத்தோன்றுகிறது”

நான் ஆசுவாசப்படுதிக்கொண்டு வரண்டுபோய்விட்ட தொண்டையை எஞ்சிய கூல்ட்ரிங்கை விழுங்கி நனைத்துக்கொண்டேன்.

அவர் நிறுத்தவில்லை. தொடர்ந்தார்.

“மிஸ்தாவ்ஸ்கியின் எழுத்தில் சொல்லப்படுகிற சூழ்நிலைகள் சம்பவங்கள்  வாசிப்புக்கு புதியவை.எந்தவொரு வாழ்க்கையனுபவத்தினூடாக அணுகும்போதெல்லாம்  பாதை ஒடுங்கிப்போய் வழியற்றுநின்றுவிடுகிறது. என் தந்தையும் அவர் நண்பர்களும் இந்தகுழுவைத்தோற்றுவித்தார்கள். தந்தை ஒவ்வொருவருடமும் புத்தகத்தை வாசிப்பார். வயதும் அனுபவமும் வாசித்தலை இன்னொரு தளத்துக்கு நகர்த்தும் என்று அவர் கருதினார். நானும் அவருடன் சேர்ந்து வாசித்தேன். அவர் இறக்குமுன் சில நாட்களுக்குமுன்னால் கூடவாசித்துக்கொண்டிருந்தார்.

“நீங்கள் வாசித்துக்கொண்டிருகிறீர்களா?”

“ இல்லை.தந்தை அளவுக்கு கூட நான் இல்லை. எனக்கு ஆளுமைச்சிக்கல்கள் இருக்கின்றன.ஆணியடித்தாற்போல க்கருத்துக்கள் வேறு. காற்றாடியின்ன் வால் சிக்கிய வண்டிச்சக்கரம்போல சுழலசுழல என் கருத்துக்களே என்னைச்சுற்றி இறுக்கத்தொடங்கி நிறுத்திவிடும்….  மிஸ்தாவ்ஸ்கியின் பேய் என் தந்தையை அலைக்கழித்தது; என்னையும் அலைகழித்துக்கொண்டிருக்கிறது.”

அவர் சிலவினாடிகள்  மவுனமாக இருந்தார்.பிறகு சொன்னார்

’இதற்கு  உங்களால் ஒரு தீர்வு கிடைக்கக்கூடும் என்று தோன்றியது.அதனால்தான் இவற்றையெல்லாம் உங்களுக்குச்சொல்லுகிறேன்.

”எப்படி” என்றேன் நான் வியப்புடன்.

(முடிவுப்பகுதி அடுத்தபதிவில்…)

Advertisements

One thought on “மிஸ்தாவ்ஸ்கியின் பேய் (I)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s