இந்துத்துவத்தின் பெயரில் ஒரு முட்டாள்தனம்

வழக்கமாக ஆம்னிபஸ் பதிவுகளுக்கு இங்கே போஸ்டர் ஒட்டும் பழக்கம் கிடையாது. ஆனால் இந்த தடவை Josephine Tey எழுதிய Daughter of Time என்ற நூல் மதிப்பீட்டுக்கு சுட்டி கொடுக்கும்படி ஆகிவிட்டது. அது என்னவோ அருமையான புத்தகம்தான் என்றாலும், அதை எல்லாரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தால் இதை இடுகையிடவில்லை. உண்மையான காரணம் இதுதான் – அதில் வரலாற்றாய்வாளர்களை தே கடுமையாக விமரிசித்திருக்கிறார். நல்லது, வாழ்க என்று நினைத்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்களாக இருந்த ஆத்திரத்தை அதன் இறுதி பத்திகளை எழுதி தணித்துக் கொண்டேன்.

வழக்கம் போல் ஆத்திரம் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் அது அத்தோடு சத்தமில்லாமல் போயிருக்க வேண்டும். ஆனால் எதை எழுதினாலும், அந்த விஷயத்தைப் பரிவோடு அணுகி நேர்மையாக கருத்து சொல்லும் நண்பர் ஒருவருக்காவது அனுப்பி அதில் குற்றம் குறை இருந்தால் சுட்டிக் காட்டச் சொல்வது வழக்கம். அந்த மாதிரி ஒரு நண்பருக்கு எழுதப்போய் அவர் மிகுந்த மனவேதனையுடன் பதில் அனுப்பினார். அதை இடுகையிடும் நோக்கத்தில்தான் இந்தப் பதிவு.

OoO

நண்பர் எழுதியது இது-

இதைப் பற்றி எழுதவே கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

உங்களுடைய எதிர்வினை வலிமையானதுதான். ஆனால், இது இவர்கள் காதில் விழாது.

சமீபமாகவே இந்த இந்துத்துவவாதிகளின் முட்டாள்தனம் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது. அவர்கள் யாரையும் வெறுக்கவோ சிறுமைப்படுத்தவோ தயாராக இருக்கிறார்கள் – மோடியைத் தவிர.

போன வாரம் ஒருவர், அக்பருடைய இந்து எதிர்ப்பைப் பற்றிப் பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.

உண்மையில் இவர்களுக்கு வெட்கமோ, கொள்கையோ எதுவும் கிடையாது. சும்மா பொழுது போக வேண்டும். இல்லையென்றால், இந்துக்களுக்கு வேலை கொடுப்பவரின் கடையில் மட்டும் சாமான் வாங்குங்கள் என்று பிரச்சாரம் செய்வார்களா?

மனிதர்களை மனிதர்களாக அணுகுவதை விட்டுவிட்டு அவர்களை ஒரேடியாக வழிபாடு செய்யத் தொடங்கிவிடுகிறார்கள். இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இணைய உலகில் செயல்படுகிறார்களோ என்று தோன்றுகிறது.

ராஜா, ரகுமான், மோடி, காந்தி, பெரியார், அம்பேத்கர், நேரு இப்படி யாரை எடுத்துக் கொண்டாலுமே ஒன்று அதீத வெறுப்பு, இல்லையேல் தனிமனித வழிபாடுதான் நடக்கிறது. (எதற்கு இத்தனை பேர் காந்தியைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதை காந்தி ஜெயந்தியையொட்டி நாம் பேசியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இத்தனை பேர் திடீரென்று காந்தியைப் பற்றிப் பேசுகிறார்களே. இவர்கள் முழுமையாக காந்தியைப் புரிந்து கொண்டு தான் இப்படிச் செய்கிறார்களா அல்லது காந்தியும் ஒரு நவீன மோகமாக மாறிவிட்டிருக்கிறாரா?).

நேருவைப் பற்றி இதே தொடரில் அநீ எழுதிய வேறொரு கட்டுரையும் கண்டேன். குப்பையென்பது இப்படித்தான் இருக்க வேண்டும்.

எனக்குப் புரியவில்லை. ஒரு முதிர்ந்த சமூகத்தில், நேருவுக்கும் அவருடைய காதலி(?)க்குமான உறவைப் பற்றி இன்னமும் பேசிக் கொண்டேயிருக்க வேண்டுமா? பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இதைப் போன்ற scandalகளையே முன் வைக்கின்றன. யார் யாரோடெல்லாம் போனார்கள் என்பது நமது வாழ்வுக்கு எத்துணை அவசியமான தகவல் என்பது இப்போதுதான் புரிகிறது.

நீங்கள் சொன்னபடி வரலாற்றை எடுத்து பிய்த்துப் போட்டு என்னென்னவோ எழுதிக் கொள்கிறார்கள். தங்களுக்கு வேண்டியபடி திரிக்கிறார்கள். இந்த விஷயத்தில், பெரியாரிஸ்டுகள், இந்துத்துவவாதிகள் என்று அனைவரும் ஒரே கட்சிதான்.

அடுத்தது இந்த பணக்காரன் – ஏழை வித்தியாச விளையாட்டு. சச்சின் ஓய்வு பெரும் போதுகூட, இப்படித்தான் நிறைய பேர் சச்சின் பணம் வாங்கித்தானே விளையாடினார், அவருக்கு எதற்கு விருது ரொம்ப வருத்தப்பட்டார்கள், வேதனைப்பட்டார்கள்.

அவரவரைப் பொறுத்தவரை, தன்னைவிட ஒரு பைசா கூடுதலாகச் சம்பாதிக்கிறவன் பணக்காரன். தான் ஏழை. தன்னைவிடக் கீழே இருப்பவர்கள் எல்லாரும் முயற்சியற்ற மூடர்கள். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் இன்னும் கொஞ்சம் பணம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இல்லாமல் இல்லை.

இந்த அநீ கட்டுரையில்கூட, அநீ ஏதோ அனைவரும் ஏழைகள் என்று அளந்திருக்கிறார். அதற்கு பதில் போட்ட ஜடாயு, நடுத்திரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான் நாட்டை வழிநடத்தியிருக்கிறார்கள் என்று அளக்கிறார்.

சும்மா தங்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டுமென்பதற்கு எதையாவது அளந்துவிடுகிறாரகள்.

உண்மையில், இவர்களைப் பற்றியெல்லாம் பேசும்போது கைநடுங்கத்தான் செய்கிறது.

OoO

தமிழ்ஹிந்து நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் – உங்கள் வசந்த காலத்தின் வருகையை குளிர்காற்று அறிவிக்கிறது என்பது சாமரம் தாங்கிகளாகிய உங்களுக்குப் புரியவில்லை. வெண்பூச்சின் தேவையில் இருக்கும் உங்கள் இளவரசனை உங்கள் எதிரிகள் மட்டுமல்ல, நீங்களும்கூட வெறுப்பையும் காழ்ப்பையும் அவதூறையும் கொண்டு இருள் போர்வை போர்த்து அழைத்து வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். உங்களை ஆட்டுவிக்கும் இந்த நம்பிக்கைக்கு இன்னும் பால்ய பருவம்தான் – துளிர்த்த நிலையில் உறைந்து அடங்கிய தளிர்கள் எத்தனையோ, நினைவிருக்கட்டும்.

விபூதி குங்குமம் இட்டுக் கொள்ளாமல் வீட்டை விட்டுக் கிளம்பாத சாதாரண இந்து நான் – உங்கள் வழிபாட்டுக்குரியவர்கள் பீடமேற இந்த தேசத்தின் விக்கிரகங்கள் ஒவ்வொன்றாக என் பெயரில் காட்டுமிராண்டித்தனமாக உடைக்கப்படுவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எங்கள் பெயரில் இதைச் செய்ய வேண்டாம், உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

Advertisements