திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

மிக உக்கிரமான காட்சியைக்கூட ஒவ்வொரு  ஃப்ரேமாக நிறுத்தி நிறுத்தி மெல்ல மெல்ல ஓட்டினால் காமெடியாகிவிடும். நான் பார்த்தவரையில் இணையத்தில் ரொம்ப வேகமாக ஆரம்பிக்கும் பலவும் மெல்ல மெல்ல வேகம் குறைந்து அபத்தத்தில் முடிகின்றன. அதற்கான அறிகுறிகள் அரவிந்தன் நீலகண்டனின் – நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1 என்ற பதிவிலும் தெரிகின்றன.  எனவே நண்பர் அரவிந்தன் நீலகண்டனுக்கு ஒரு வேண்டுகோள் – என்னதான் காந்திய அன்பு இருந்தாலும் உங்கள் வேகத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள், இதே காட்டத்தையும் நையாண்டி நக்கலையும் (23ஆம் புலிகேசி ஜனாப் நேரு!) தொடருங்கள். உங்கள் பலம் அதுதான், தர்க்கமல்ல.

தகவல்களையும் தரவுகளையும் எப்படி வேண்டுமானாலும் கோர்த்து என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது “மீ த பர்ஸ்ட்டு” என்று பின்னூட்டமிடும் அப்பாவி நண்பர் முதல் ஃபேஸ்புக்கில் தீவிரமாகச் செயல்படும் பலபோக்கு அறிவுஜீவிகள் வரை எல்லாருக்கும் தெரியும். அதில் நாமெல்லாரும் வல்லவர்களும்கூட – நான் பார்த்தவரை எந்த ஒரு அறிவுஜீவியும் இதற்கு விலக்கல்ல. விவாதங்கள் எல்லாம் அவரவர் நிலைப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்த மட்டுமே உதவுகின்றன, மற்றபடி இணையத்தில் விவாதம், திறப்பு, புரிதல்  என்பதெல்லாம் அழகிய பொய்கள்.

பிராமணர்களை கழகச் சிந்தனையாளர்கள் பார்ப்பான் என்று சொல்வார்கள், அதையேதான் படித்த, பண்பான முற்போக்காளர்கள் இந்துத்வா என்று சொல்வார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். தமிழ்ஹிந்துத்வர்கள் மனுவாதி என்று  சொல்வார்கள் என்பதை நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1  என்ற உங்கள் தலைப்பைப் பார்த்து தெரிந்து கொள்கிறேன்,  தலைப்பு செம 🙂

நீங்கள் நேருவுக்கு ஆதரவாகப் பேசுவதைத்தான் மனுவாதம் என்று சொல்கிறீர்கள் என்று நம்ப விரும்புகிறேன் – இல்லாவிட்டால் நேருவுக்கு ஆதரவாகப் பேசுபவர்களில் எத்தனை பேர் என்னைப் போன்ற பார்ப்பனர்கள் என்று கணக்கு பார்த்து நீங்கள் இனவாதம் பேசுவதாக ஆகிவிடும். அது தப்பு, அந்த தவற்றை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்த தலைப்பைப் படித்த எவனாவது நேருவை ஆதரித்துப் பேசுவானா, அவன்தான் பார்ப்பனியன் – மன்னிக்கவும், – மனுவாதி ஆயிடுவானே! காந்திய அன்பும்கூட  உங்கள் புத்திசாலித்தனத்தை மழுங்கடிக்கவில்லை என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் சில பேருக்கு அவர்களது புத்திசாலித்தனமே கெடுதலாகவும் போய் விடுகிறது, அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காந்தி-நேரு இரட்டையரின் ஊழலையும் தேசத்துரோகத்தையும் அம்பலப்படுத்த யாரையெல்லாம் legitimise செய்கிறீர்களோ, அவர்கள் மத அடிப்படைவாதத்தைப் பற்றிப் பேசியது உங்களை அனாதையாக்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது  – இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது அரசியலில் மட்டும்தான் சரிப்படும், அறிவு சார்ந்த விஷயங்களில் அந்த மாதிரியெல்லாம் ஒருத்தரை ஆதரிப்பது அல்டிமேட்டாக நம்மை அம்பேலாக்கி விடும். எனவே எதற்கும் இந்த பாபு ராஜேந்திர பிரசாத், படேல், ராதாகிருஷ்ணன் போன்றவர்களை முழுமையாகத் தாங்கிப் பிடிக்காமல் காலில் கொஞ்சம் களிமண் வைத்தே மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள், அப்போதுதான் அவர்களால் ஆக வேண்டிய வேலை முடிந்ததும் அவர்களை டிஸ்போஸ் செய்ய முடியும். அண்மைய பதிவுகளில் இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

தலைப்பில் காந்திய அன்பு என்ற மந்திரச் சொற்களை நீங்கள் கையாண்டிருப்பதால் நான் உங்கள் தரவுகளையோ தரப்புகளையோ தகவல்களையோ மறுக்க விரும்பவில்லை. நம் எல்லாருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதற்குத் தகுந்த ஆதாரங்களைக் கொண்டாடுகிறோம், இதில் உங்களை மட்டும் ஏன் திட்ட வேண்டும்? யாரும் செய்யாததையா நீங்கள் செய்கிறீர்கள்! காந்தி நேரு குறித்த உங்கள் அவதூறுகளும் வசைகளும்கூட உங்கள் mirror imagesகளான முற்போக்கு முகாமில் உள்ளவர்கள் செய்யாததா என்ன,  அதற்கும் உங்களை மட்டும் திட்டி எதுவும் ஆகப போவதில்லை.

நேருவிய மனுவாதி என்பதில் உள்ள மனுவாதி என்ற அடைமொழியைப் போன்றதுதான் காந்திய அன்பு என்பதில் உள்ள அன்பு என்ற அடைமொழியும், இரண்டுமே வசை  என்று யாராவது ஒரு முட்டாள் சொல்லக்கூடும். அவர்களைக் கண்டுகொள்ள வேண்டாம். ஒரு தலைப்பிலேயே உங்கள் இருநிலைகளையும் நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், இதன் புத்திசாலித்தனத்தைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. உங்கள் அறிவின் வீச்சையும் உணர்வுகளின் கொந்தளிப்பையும் கவித்துவ உச்சத்துடன் வெளிப்படுத்துகிறது அந்த தலைப்பு, வாழ்த்துகள்.

OoO

முன் ஒரு பதிவில் நான் கையாண்ட ஒரு மேற்கோள் இது – இதை நீங்கள் ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன்:

“இம்மானுவேல் கான்ட் அப்படித்தான் நினைத்தார். அவர் நட்பே அதர்மம் என்று நம்பினார். நாம் நமது நண்பர்களுடன் இணைந்து செயல்படும்போது தர்ம நியாயங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவதில்லை. நமது உணர்வுகள், நினைப்புகள் மற்றும் விசுவாச உணர்வால் உந்தப்படுகிறோம். இதை தத்துவ மொழியில் சொல்வதானால், பாரபட்சத்தன்மை இருப்பதால் “friendship is not amenable to universalisable imperatives”. மற்றவர்களிடமிருந்து நீ எதை எதிர்பார்க்கிறாயோ, அதையே அவர்களுக்கும் கொடு என்பதுதான் ஒழுக்கத்தின் பொன்னான விதி என்றால், நட்பு அதை மீறுகிறது. நீ மற்றவர்களுக்கு செய்வதை விட மிக அதிக உதவியை உன் நண்பன் உனக்குச் செய்வான். கான்ட் எந்த அளவுக்கு போனாரென்றால், அவர் சுவர்க்கத்தில் நட்பே இருக்காது என்றார், அங்கு முழுமையான ஒழுக்கம் இருக்கும் என்பதனால்.”

எது எப்படியானாலும் கான்ட் கண்ட சொர்க்கத்தில் உங்களுக்கு நிச்சயம் இடமுண்டு. ஏனென்றால் நீங்கள் எப்போதும் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்.  நான் இதுவரை எழுதியது உங்களை கேலி செய்வதாகவோ எப்படியோ இருப்பதாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் இதை உண்மையாகவே ஒரு admirationஓடுதான் எழுதுகிறேன் – எது நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களோ, அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கும் உங்கள் தேசபக்தியைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் நட்பை மட்டுமல்ல, intellectual integrityயையும் இதற்காக தியாகம் செய்யத் தயங்கவில்லை நீங்கள் என்று நினைக்கிறேன், ஆனால் அது என் கருத்து மட்டுமே. உண்மை உங்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சம், இல்லையா?

Advertisements