பாலக்காடு ஸ்ரீராம்

..
அம்மாவில் துவங்கி அகவலோசைகள் ஒவ்வொன்றும் நமக்கு அழைப்பாகவே ஒலிக்கின்றன. “எங்க ஏரியா உள்ள வராதே,” என்ற பறவைகளின் போர்க்குரல்கள் நம் காதுகளில் இனிய கானமழை பொழிவதாய் இருக்கின்றன – குயில் வசந்தத்தை அழைக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அது தான் ஆக்கிரமித்த மாமரக் கிளையிலிருந்து யாரையோ மிரட்டிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்மால் நம்ப முடிவதில்லை. குயிலின் அயோக்கியத்தனங்களை விவரிக்கும் எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் சில வெயில் கால மதியப் பொழுதுகளில் குயில் நீண்ட குரலெடுத்து அமைதியின் ஆழத்தைத் துளைக்கும்போது நெஞ்சைப் பிசைகிறது. ‘இலக்கியங்கள் பிழைவாசிப்பில் உருவாகின்றன,’ என்று சொன்ன ஹரோல்ட் ப்ளூமை நினைத்துக் கொள்கிறேன்.
 
நேற்று ஒரு நண்பர் பாலக்காடு ஸ்ரீராமின் புல்லாங்குழல் இசையைப் பகிர்ந்து கொண்டிருந்தார். இசை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை – எத்தனையோ முறை வெட்கமில்லாமல் அதை இங்கு சொல்லியிருக்கிறேன். ஆனாலும்கூட இந்தப் புல்லாங்குழலின் நீண்ட அகவல்கள் துரித கதியிலும் நிதானமாயும் குமிழிட்டும் உயர்ந்தும் தாழ்ந்தும் ஒலிக்கும் தேடல்களாய் என் காதில் ஒலித்தன. 
 
இப்படிச் சொல்வது கிறுக்குத்தனமாக இருக்கும், கொஞ்சம் மிகையாகக்கூடத் தெரியலாம் – தைத்திரிய உபநிடதத்தில் ஒரு இடத்தில், பிரம்மத்தைத் தொட முடியாமல் தோற்று மனதோடு சொற்களும் திரும்புகின்றன என்று வரும். இதைக் கேட்கும்போது அப்படிப்பட்ட ஒரு தேடல், ஒரு அழைப்பு, ஒரு ஏகாந்தக் கூவல், அம்மா என்பதைப் போன்ற நெஞ்சத்தின் அடியாழத்து அகவலின் உணர்வு ஏற்படுகிறது. உயிரில் தொலைந்த நினைவை எழுப்பக் கூவும் அந்த அழைப்பினூடே எத்தனையோ உணர்வுகள், அவற்றின் துள்ளல்கள் துவளல்கள் எத்தனை இருந்தாலும், திரும்பத் திரும்ப குழல் தன் அகவலுக்குத் திரும்பி நெஞ்சைப் பிசைகிறது.
 
எப்படிப் போட்டுப் பார்த்தாலும் எத்தனை துழாவினாலும் மனதோடு சொற்களும் தோற்றுத் திரும்புகின்றன என்று திரும்பத் திரும்பச் சொல்வதாக இருக்கிறது இந்த அகவல். உயிருக்குயிரான, மறக்கவும் முடியாத, இழக்கவும் முடியாத அந்த ஒரு நினைவை, அதை மூடி மறைக்கும் பிற உணர்வுகளைத் துழாவிக் கண்டெடுத்து அதன் தூய ஒளியோடு உயிர்ப்பிக்க இயலுமா என்ற ஏக்கமாய் அது கேட்கிறது.
 
திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன், என் உணர்வுகள் அத்தனையும் பொய்யாகவும் மாய்மாலங்களாகவும் இருந்தால்கூட கணிதத்தின் மறுக்க முடியாத சமன்பாடுகளைப் போன்ற ஒரு உண்மை உணர்வை இந்த இசை தேடுகிறது என்பதை உறுதியாய் உணர்கிறேன். குழலோசையின் அகவல்கள் தொடாமல் தோற்கும்போதும் தன் தொடர்ந்த தேடலில் இந்த இசை ஒரு மெய்ம்மையை விவரிக்கிறது – கொஞ்சம் தளர்ந்து கொடுத்தால் போதும், அதன் ஆனந்தத்தை இந்த ஏக்கத்தைக் கொண்டு உணர்ந்து விடலாம் 
 
என்றெல்லாம் தோன்றுகிறது – அது எதுவும் நம்மால் முடியாது என்பதும் நன்றாகவே தெரிகிறது.
 
கேட்டுப் பாருங்கள் : பாலக்காடு ஸ்ரீராம் 
Advertisements

3 thoughts on “பாலக்காடு ஸ்ரீராம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s