சொல்வனம் 100

மனித மனம் மிகக் குறுகியது – இலக்கியம் அதற்கொரு விரிவு அளிப்பதாக இருக்கிறது. பொதுவாக நாம் சுயநலமிகள், நம் விருப்பு வெறுப்புகளுக்கு அறச்சாயம் பூசுபவர்கள், குறுகிய ஒரு நட்பு வட்டத்தைத் தாண்டி வர இயலாதவர்கள், நமக்குள்ள உணர்வுகளையும் நியாயங்களையும் அறிவையும் பிறருக்கு அங்கீகரிக்க மறுப்பவர்கள். மகத்தான இமயம் நம்மைச் சூழ்ந்திருந்ததாலும், எல்லையற்ற வானின் எண்ணற்ற நட்சத்திரங்கள் நம்மைப் போர்த்திருந்தாலும், நாமே அனைத்துக்கும் நடுநாயகமாய் நிற்பவர்கள். இது மனித மனதின் இயல்பு, இதனுள் ஒடுங்கி இருப்பதல்ல, இதைக் கடந்து செல்ல முனைவதே மானுடம். ஆனால் இது நம் அனைவர்க்கும் சாத்தியமில்லை. ஏன், நம் யாருக்குமே சாத்தியமில்லை.
 
இதையெல்லாம் நேரடியாகச் சொன்னால் நம் ஒவ்வொருவருக்கும் கோபம் வரும். ஆனால் ஒரு புனைவைக் கொண்டு ஒருத்தர் இதைச் சொல்லும்போது அவரை ஆகச் சிறந்த எழுத்தாளர் என்று கொண்டாடுவோம். கடுகளவுச் சிறுத்த நம் சித்தத்தில் கடலளவு ஆன்ம ஒளி பாய்ச்சும் கதவுகளின் திறவுகோல்கள் புனைவிலக்கியவாதிகளின் கைகளில் உண்டு – அவர்களும் குறைபட்ட மனிதர்களாக இருப்பினும். இத்தகைய முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் நம் வணக்கத்துக்குரியவர் ஆகிறார்.
 
எனவேதான் அசோகமித்திரன் குறித்த கட்டுரைகள் பதிப்பித்து, தன் நூறாவது இதழைச் சிறப்பித்துக் கொண்ட சொல்வனமும் அதன் பதிப்பாசிரியர் குழுவும் நம் வணக்கத்துக்குரியவர்கள் ஆகின்றனர். ஏனெனில், நம் அனைவரையும் பிணிக்கும் தடித்தனத்தைக் கடந்து ஒரு சிறப்பான சாதனை செய்திருக்கின்றனர் இவர்கள். 
 
மாதமிரண்டு என்று நூறு இதழ்கள் என்பது சாதாரண ஒரு எண்ணிக்கையல்ல. இலக்கிய ஆர்வலர்களுக்குத் தெரியும், ஓராண்டு தொடர்ந்து உரையாடுவது என்பது உணர்வுக் கொந்தளிப்பில் பத்தாண்டுகளுக்குச் சமம் என்று. கோபம், கசப்பு, மன வருத்தம், தொய்வு, தளர்ச்சி, பரஸ்பர நம்பிக்கை துரோகங்கள் எக்கணமும் சாத்தியம். 
 
இதனால்தான் எனக்கு சொல்வனம் நூறாவது இதழ், நுண்ணுணர்வுகள் முழுமையாய் தோல்வியடைந்து விடவில்லை என்பதற்கு ஒரு அத்தாட்சியாய் இருக்கிறது. தனி மனிதர்களின் குறை நிறைகளைக் கடந்து, தனி மனிதர்களின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், நம் சூழலின் நெருக்கடிகளை உடைத்து ஒரு பெரும்பாய்ச்சல் நிகழும் சாத்தியத்துக்கு மெய்ம்மை உண்டு என்பதை உறுதிப்படுத்தும் சான்று இது. தற்காலிக இழப்புகளைப் பின்னர் சரி செய்து கொள்ளலாம் என்று நம் காயங்களுக்கு ஆற்றுப்படுத்தல் அளிக்கும் மருந்து இது, நம் பயணம் நெடுந்தூரம். போக வேண்டிய தொலைவு மிக அதிகம் என்றாலும் தடைகளைப் பொருட்படுத்தாமல் முன்னேற உங்களாலும் முடியும் என்ற அறைகூவல். 
 
ஆம், இவர்களால் இயலும் என்றால் எவராலும் இயலும். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s