பித்து நிலைகள் இரண்டு

வழக்கம் போலவே இந்தப் பதிவு குழப்பமாக இருக்கப் போகிறது, இதில் தெளிவாக எதையும் யோசிக்க முடியுமா என்று தெரியவில்லை. தவிரவும் இதை யாருக்கும் சாதகமாவோ பாதகமாவோ எழுதவில்லை; எதையும் போற்றும் தோத்திரமாகவோ நிராகரிக்கும் விமரிசனமாகவோ எழுதவுமில்லை; சில விஷயங்களை யோசித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது, எழுதுகிறேன். அதற்கு மேல் இதில் பாயிண்ட் எதுவும் கிடையாது. என்னதான் சொல்ல வருகிறாய் என்று கேட்டால், என்னமோ தோணிச்சு என்பதுதான் பதில்.

அண்மையில் ஜெயமோகன் எழுதி வரும் வெண்முரசு பற்றி அடிக்கடி நண்பர்களிடம் விவாதிக்க நேரிட்டு விடுகிறது. அது தொடர்பாக இது.

1887ல் பிறந்து 1920 வரை, என் கணக்கு சரியாக இருந்தால், கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் வாழ்ந்தவர் கணிதமேதை என்று நாம் மதிக்கும் ஸ்ரீனிவாச ராமானுஜன். அவர் எழுதிவைத்த தீர்வுகளைப் புரிந்துகொள்ள நூறாண்டுகளாகக் கணிதவியலாளர்கள் தேடிக் கண்டுபிடித்தபடி இருக்கின்றனர். அப்படிப்பட்ட சிக்கலான ஒரு ராமானுஜன் தீர்வுக்கு இன்றைய கணிதவியலாளர்கள் விடை கண்டுபிடித்த கதையை இங்கு பார்க்கலாம். இதில் என்ன விஷயம் என்றால், ரத்தம் கசியும் செந்திரையில் நாமகிரித் தாயார் தன் விரல்கள் கொண்டு கனவுகளில் எழுதும் கணிதச் சமன்பாடுகளையே தான் குறித்து வைத்துக் கொண்டதாக அவர் சொல்கிறார். நாவில் எழுதினார், காதில் சொன்னார் என்பது போன்ற தகவல்களும் உண்டு. மிகச் சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு பித்து நிலை எனலாம்.

ஜெயமோகனையும் ராமானுஜனையும் ஒப்பிட்டால் குறைந்தபட்சம் இரு நண்பர்களாவது வருத்தப்படுவார்கள். ஆனால், வேறு வழியில்லை, அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தவிரவும், வியாசன், கம்பன் வரிசையில் ஜெயமோகன் பேசப்படும்போது இது ஒன்றும் அவ்வளவு பெரிய தெய்வகுற்றமாகத் தெரியவில்லை. என்ன காரணமாக ஜெயமோகனை இங்கே பேசுகிறேன் என்றால், அண்மையில் நீலம் நாவல் எழுதி முடித்ததும் அவர் அது எழுதப்பட்ட மனநிலையை விவரித்து ஒரு கட்டுரை எழுதினார். அதில் ராமானுஜன் மாதிரி எந்த ஒரு அமானுட, தெய்வீக அருளும் அதைச் செய்தது என்று அவர் சொல்லவில்லை. மாறாக, தன் படைப்பூக்க மனநிலை ஸ்கீஸோஃபிரெனியா போன்ற ஒரு பிறழ்மன நிலையை ஒத்திருந்தது என்றுதான் சொல்கிறார். அது தவிரவும், அந்த பித்து நிலையில் கனவு நனவு தடுமாற்றங்கள் ஏற்பட்டதாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கிச் சாப்பிட்டதாகவும் சொல்கிறார்.

இருவருமே இந்த இரு பித்து நிலைகளையும் தாம் உணர்ந்தவாறே உண்மையாய்ப் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். எனவேதான், இந்த பித்து நிலை வெளிப்படும் உருவம் ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் அப்ஸ்ட்ராக்ட்டான, ரோமன், கிரேக்க எழுத்துகளைக் கொண்ட சமன்பாடுகளை நாமகிரித் தாயார் எழுதிக் காட்டுகிறார்; இந்து ஞான மரபுக்குரிய, இந்திய ஆன்மிக அடித்தளமாக விளங்கும் பாரதத்தின், பக்தி இலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் கிருஷ்ணனின் கதை ஒரு மாதிரி பிறழ்மன நிலையில் எழுதப்படுகிறது. இது ஒரு பக்கம்.

இன்றுள்ள நிலையில், சிங்கம் சிரித்தது, நிலவு உதித்தது, குருவாயூரப்பன் தலையசைத்தார் என்றெல்லாம் சொல்லி ஒரு படைப்பின் உச்சத்தை நிறுவ வேண்டிய அவசியமில்லை. படிப்பதற்கு நன்றாக இருந்தாலே போதும், அது உச்சத்தைத் தொட்டுவிட்டது என்பதை நம் அனுபவத்தைக் கொண்டே சொல்லி விடலாம் என்பது நம் தீர்மானம். அதுதவிர, சிங்கம் சிரிப்பது, நிலவு உதிப்பது, குருவாயூரப்பன் தலையசைப்பது என்பதெல்லாம் நம் அனுபவத்துக்கு சாத்தியப்படாத விஷயங்களாக இருப்பதால், அவற்றைப் புனைகதைகள் என்றும் நம்புகிறோம். ஜெயமோகன் இந்த மாதிரி ஏதாவது சொன்னால், அவர் கதை விடுகிறார் என்றுதான் நினைப்போம். அப்படியே அவர் சொல்வதை நம்பினாலும், அதைக் கொண்டு அவரது எழுத்தை மதிப்பிட மாட்டோம்.

இதெல்லாம் நம்மை எங்கு கொண்டு செல்கிறது என்றால் ஒரு காலத்தில், இலக்கியம் என்பது நம் அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது- இதிகாசம், இவ்வாறே நிகழ்ந்தது, என்று நம்ப வைக்க நம் அனுபவத்துக்கு அப்பாற்பட்டவற்றின் அங்கீகாரங்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்போது, அனுபவமே போதுமானதாக இருக்கிறது. கம்பனையோ, அபிராமி பட்டரையோ, நாராயண பட்டாத்ரியையோ, செவ்வியல் இலக்கியவாதிகளாக அறிய மொழி, வடிவம் போன்ற நம் வரையறைகள் மட்டுமே போதுமானதாக இருக்கின்றன. சொல்லப்போனால், சிங்கம், நிலவு, குருவாயூரப்பன் போன்ற சமாசாரங்களை ஏதோ சதிகளாகவோ அல்லது மூடநம்பிக்கைகளாகவோ அல்லது இடைசெருகல்களாகவோ ஒதுக்கி வைத்துவிட்டே நாம் அவற்றின் இலக்கிய தரத்தை நிர்ணயிக்கிறோம்.

வியாசனும் கம்பனும் இப்படி முழுமுதல் இலக்கியவாதிகள் ஆவதில் ஒரு மாயம் இழக்கப்படுகிறது என்பது குறித்த வருத்தம் யாருக்கும் இல்லை என்று நினைக்கிறேன். அப்படி சொன்னாலே, ஐயோ, மறுபடியும் இதெல்லாம் மூடநம்பிக்கைக்குதானே கொண்டு போகும், என்றுதான் நம்மில் பலரும் கேட்போம். ராமனும் கிருஷ்ணனும் புனிதம், அவர்களைப் பற்றி எதுவுமே திரித்து எழுதக்கூடாது என்ற மதவெறியைக் காட்டிலும் அவர்களும் புனைவெழுத்துக்குரிய பாத்திரங்கள்தான், யாரும் என்னவும் எழுதலாம் என்ற சுதந்திரம் நன்மை செய்வதாக இருக்கிறது.

இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கிறது என்று சொல்வார்கள். நாமகிரித் தாயாரின் காலமல்ல இது; பகுத்தறிவு, இறைமறுப்பு இயக்கங்கள் வெற்றி பெற்று பாரதத்திலும் கைவைத்திருக்கும் காலம் என்பதைதான் வெண்முரசுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும், அதன் படைப்பூக்க திரிபுகளை வியாச பாரதத்தையும் கம்ப ராமாயணத்தையும் சுட்டி நியாயப்படுத்துவதும் காட்டுகிறது என்று நினைக்கிறேன். வெண்முரசை எந்த பிள்ளையார் தன் கொம்பை உடைத்து எழுதினார், எந்தச் சிங்கம் சிரித்தது, எங்கே நிலவு உதித்தது என்று கேட்பது கேலியாக இருக்கும். அது மட்டுமல்ல, வியாசனுக்கும் கம்பனுக்கும் அபிராமி பட்டருக்கும் இது நேர்ந்தது என்றாலும் சிரிப்போம்.

நம் காலத்தில் வியாசனும் கம்பனும் இலக்கியவாதிகள்; கிருஷ்ணனும் ராமனும் கதாபாத்திரங்கள். அதற்கு அப்பால் மாயம் அது இது என்று எது சொன்னாலும் அது மூடநம்பிக்கை. இன்றுள்ள மாயங்கள் சொற்களால் நிகழ்த்தப்படுகின்றன. அதையே நாம் அன்றாடம் பத்திரிக்கைகளும் செய்தி ஊடகங்களும் செய்யக் காண்கிறோம் என்பதுதான் யதார்த்தம். நாம் யாரும் தொன்மங்கள் நிஜமென்று நம்புவதில்லை. அர்பன் மித்துக்களே நமக்குப் போதுமானவையாக இருக்கின்றன. சமய நம்பிக்கை உள்ளவர்களும்கூட, ‘பாரதத்திலும் நாராயணீயத்திலும் புனையப்பட்டவை நிஜம் என்று நம்பி நாங்கள் அந்த சாமிகளைக் கும்பிடுவதில்லை; மாறாக, எதனால் விவரிக்கப்படுபவராக இருக்கிறாரோ, அந்தப் புனைவில் நம்பிக்கை வைத்து அறியப்படக்கூடிய மெய்ம்மை கொண்டவராகவே  அவர் இருக்கிறார்,’ என்று சொல்லும் மெடாநிலையை அடைந்து விட்டனர்.

இப்படிதான் நடந்தது என்பது ஒரு புனைவு என்ற புரிதலுடன் இதிகாசங்களை இதிகாசங்களாக வாசிக்கும், இறையருளின் அத்தாட்சி தேவைப்படாத இலக்கியங்களை பாரதத்துக்கும் ராமாயணத்துக்கும் இணையாகப் பேசும், இதிகாச நாயகர்களின் இறைதன்மைக்கு பங்கம் ஏற்படாமல் கதாபாத்திரங்களாய் ஆராதிக்கும், பகுத்தறிவு சார்ந்த பக்தி இலக்கியம் அனைவருக்கும் சாத்தியமல்ல.  ஆனால் அது நமக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது.

Advertisements

8 thoughts on “பித்து நிலைகள் இரண்டு

 1. ஒரு துறையில் அதிதீவிர ஈடுபாடும்,அதற்கான தேடுதலும் இடையறா சிந்தனையும் பயிற்சியும் அந்தத்துறையில் ஒரு இயல்பான நிலையை தோற்றுவிக்கும்.இதுவரை சொல்லப்படாத புதுமைக்கும் இட்டுச்செல்லும்.
  இது மூளையின் இயல்பு.பிரபஞ்சத்தின் இயல்புங்கூட.

  1. ஆமாம், ஓரளவுக்கு இது அனைவருக்கும் சாத்தியப்படும் என்றாலும் படைப்பூக்க மனநிலைக்கு வேறேதோ ஒன்று தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். பயிற்சி இருந்தால் ஓரளவு தேர்ச்சி பெறலாம், ஆனால் அதற்கு அப்பால் வேறேதோ விஷயம் இருக்கலாமோ என்னவோ.

 2. ஒருவர் மூளையின் ஏதோ ஒரு பகுதி விருத்தியடந்த படி பிறக்கலாம். அது தவிர
  hypomania உம் creativity உம் தொடர்புபட்டிருக்கிறது.கணித அழகியல் ,number sense என நீங்கள் தொட்டிருப்பது ஆழமானது. பரந்த வாசிப்பு தேவை. சட்டென “பித்து நிலை” என்று முடிவுக்கு வருவது பொருத்தமற்றது.
  ஆனால் உங்கள் விளக்கம் அபாரம். ராமானுஜர் கடவுள் விளக்கம், ஜெமோ உளவியல் விளக்கம்.
  இவை அந்தக்காலத்து தன்னிலை விளக்கம்.அது பற்றிய உங்கள் social interpretation
  is good.

  1. நன்றி, பொதுபுத்தி சார்ந்தே பித்துநிலை என்று சொன்னது. ஆழ்ந்து அறியப் போனால், எந்த ஒரு அசாதாரண மனநிலையும் ஏதோ ஒரு மருத்துவநிலைக்குதான் கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். நாம் வாழும் காலம் அப்படி!

   1. 🙂 பயிற்சி இருந்தால் ஓரளவு தேர்ச்சி பெறலாம், ஆனால் அதற்கு அப்பால் வேறேதோ…:
    ஒரு துறையில் அதிதீவிர ஈடுபாடும்,அதற்கான தேடுதலும் இடையறா சிந்தனை என்பவற்றுடனான பயிற்சி
    தமிழ் இலக்கியத்துறையில் அப்படியான அதீத அர்ப்பணிப்போடு இருக்கிற ஒருவர் ஜெமோ. .அதீத தேடல்,வாழ்க்கை அனுபவம்.தீவிர வாசிப்பு,விவாதங்கள் உரையாடல்கள்,. ஒரு தீவிர இலக்கிய வாழ்க்கை. ஆழமான அடித்தளம்.
    ஆழமான அடித்தளம் இல்லாதவர்கள் ஒரு உந்துதலில் எழுதவந்து எழுதிவிட்டு திருப்தியடைந்து விடுகிறார்கள் அல்லது இலக்கியத்தை விட ஏதோ ஒன்று முக்கியமாகி அவர்களை திருப்பி விட்டுவிடுகிறது.அங்கு படைப்பூக்கம் தேவைப்படும் .
    கலை உச்சமடைகிறபோது இயல்பாகிவிடுகிறது.அது நிகழ்த்தப்படுவதிலிருந்து நிகழ்வதாகிறது.முயற்சி தேவையில்லை.

    கற்பனை உலகத்தில் கதாபத்திரங்களை உலவ விட்டு எழுத்தாளர் சும்மாயிருப்பார் .வார்த்தைகள் வந்து விழும்.கதை தானே எழுதிக்கொள்ளும்.
    என்ன நிஜ உலகில் எழுத்தாளர் இருக்கமாட்டார். .அது பித்து நிலை என்றால் பித்து நிலை.
    இலக்கியம் மட்டுமல்ல கணிதத்துறையில் இராமனுஜர் மட்டுமல்ல பலருடைய அனுபவங்கள் ,விஞ்ஞானக்கருத்துக்கள், இசை,இப்படி. எல்லாத்துறைகளிலும் உச்ச ஞானம் என்பது இப்படித்தானே இருக்கிறது.

    இதையும் பாருங்கள்:http://www.quickanddirtytips.com/education/grammar/what-new-research-on-the-brain-says-every-writer-should-do?page=1

    1. முதல் கதை அச்சாவதற்கு முன்பே, தொண்ணூற்று ஒன்பது கதைகள் எழுதியவராயிற்றே, அப்புறம் சொல்லணுமா 🙂

     உண்மையில் நீங்க சொல்வது போல் எப்போதும் எழுத்தைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன், எதுவும் நினைக்காதபோதும் மூளை அந்த திசையில் வேளை செய்துகொண்டிருக்கும் போல – நம் மூளை எதையாவது நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு, பயப்பட்டுக்கொண்டு அதில் எக்ஸ்பர்ட் ஆவது போல்.

     ஆனால் மொழியும் கற்பனையும் கூடிவரும் வேளையில் காலமும் கூடிவரவேண்டும் என்று நினைக்கிறேன்- காகிதம் காகிதமாக எழுதித் தள்ளுபவர்கள் பலர் வீட்டிலேயே குப்பை போடுவதாகத் திட்டு வாங்குகிறார்கள் 🙂

     பயிற்சிக்கும் அப்பால் ஏதோ ஒரு மேதைமை இருக்கிறது, அது மூளை சார்ந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதை என்னவென்று சொல்ல!

 3. hypomania என்கிற மன எழுச்சி நிலையில் எண்ணங்கள் கொந்தளிக்கும்.flight of ideas, அவர்கள் வேகமாக பேசுவார்கள்.வார்த்தைகள் கூட புதுமையாக இருக்கும். சிலர் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்.தூக்கம் வருவதில்லை. அது பித்து நிலை.
  முன்பு ஊரில் அனுமார் வாலாயம் செய்யும் ஒரு வர் இருந்தார் .அவரின் மீது அனுமார் வருவராம்.வந்துவிட்டால் அவர் ஒரு அறையின் மூலையிலிருந்து மறுமூலைக்கு பாய்வாராம்.வால் வளருவதைத்தவிர மற்ற குணாதிசயங்கள் எல்லாஞ்செய்வார் போல
  ஜெமோ வியாச வாலாயம் செய்திருப்பாரோ? 🙂

  1. நண்பர் ஒருவர் அண்மையில் ஆங்கிலச்சொல் ஒன்றுக்கு தமிழில் என்ன என்று கேட்டுவிட்டு, கடைசியில் யாழ்ப்பாணத் தமிழில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டும், அதுதான் சரியாக இருக்கும் என்பதுபோல் பதில் சொன்னார். வாலாயம் என்ற சொல்லை தாயுமானவர் பாடலிலும் நடராஜப் பத்து (இங்கே அதை பாக்கெட் சைசில் அச்சிட்டு இரண்டு ரூபாய்க்கு விற்கிறார்கள்) நூலிலும் படித்திருக்கிறேன், அது என்ன என்று கேட்கத் தோன்றவில்லை. நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன். நன்றி.

   ஜெமோவே ஒரு வாலாயக்காரர்தான், அவர் எதையும் வாலாயம் செய்ய வேண்டிய தேவையில்லை :))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s