அகிம்சையின் தன்மைகள்

ஜெயமோகன் அவர்கள், நகைச்சுவையும் வன்முறையும் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் சுட்டப்பட்டுள்ள கட்டுரையை மொழிபெயர்த்தவன் என்ற வகையில் சில குறிப்புகள்-

1. தேவதத்த பட்டநாயக் யார் என்ன, அவரது அரசியல் என்ன என்று எனக்குத் தெரியாது, அவ்வளவு ஏன், இந்தக் கட்டுரையை அவர் எழுதியதன் நோக்கமும் சரியாகப் பிடிபடவில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கைவிட்டு, வன்முறைச்சுழலில் இருந்து விடுபட வேண்டும் என்று அவர் சொல்வதாக அனுமானிக்கிறேன். இதற்கு ஒரு முக்கிய காரணம், அவரது கட்டுரையின் கடைசி வாக்கியம்- “மன்னிப்புக்கு எல்லை உண்டு, ஆனால் அன்புக்கு எல்லைகள் இருக்க முடியாது,” என்கிறார் அவர். நான் நினைப்பது தவறாக இருக்கலாம்.

2. காரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம் என்பதைத் தவிர ஜெயமோகன் எழுதிய எல்லாமே சரி, கடைசி வாக்கியம் ஒன்றைத் தவிர. அது தவறு என்றுகூட சொல்ல முடியாது, அந்த வாக்கியம் அவர் முன்வைக்கும் விஷயத்துக்கு பொருத்தமற்றது எனபதால் அங்கு சற்றே வேறுபடுகிறேன்.

சமணத்தில் ரத்னத்ரயங்கள் என்று அழைக்கப்படும் மூன்றில், சரியான நடத்தையும் அடக்கம். சரியான நடத்தையில் அகிம்சைக்கு பிரதான இடம் உண்டு. அகிம்சை என்றால் வெட்டுவது, குத்துவது மட்டுமல்ல, சொல்லால் காயப்படுத்துவதும்தான்- சிந்தையாலும், சொல்லாலும், செயலாலும் நாம் செய்யும் தீங்கு ஒவ்வொன்றும் நம்மைக் கர்ம பந்தத்தில் ஆழ்த்துகின்றன. இதில் இது மோசமில்லை என்று எதையும் சொல்ல முடியாது. அவசரத்துக்குத் தேடியதில் அகப்பட்டது-

A Treatise On Jainism, By – Shri Jayatilal S. Sanghvi

Karmic matter is bound to the soul by the vibrations (yoga)
of mind, speech and body, coloured by passions (Kashaya) of
anger, pride, deceit, and greed mainly. The vibrations
determine the kind (Prakriti) and the quantity (Pradesha) of
the Karmic matter to be drawn towards and bound to the soul.
The passions determine the duration (Sthiti) of the bondage
and the mind or intense fruition (Anubhaga) of the karma at
its maturity.

… Any injury whatsoever to the material or conscious vitalities
caused through passionate activity of mind, body or speech is
Himsa. Under the influence of passion, a person injures the
natural purity of Jiva; and, as a result of the working of
passions, he loses his life forces, or life itself, and
similarly, causes pain to others, or even the deprivation of
vitalities or of life itself. Passion is thus the moving
cause which leads to himsa.

சித்தம், வாக்கு, காயம் என்ற கருவிகளைக் கொண்டு உணர்ச்சி மேலிட்டுச் செய்யக்கூடிய இம்சை எதையும் தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறது சமணம் என்று புரிந்து கொள்கிறேன். அப்படியே காயப்படுத்தும் எண்ணம் இல்லாமல் நாம் எதையாவது சொல்லிவிட்டாலும், செய்துவிட்டாலும், அது பிறரைக் காயப்படுத்திவிட்டது என்று தெரிந்தால், அதன் தாக்கத்தைக் குறைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் என்றும் சமணம் சொல்வதாகப் புரிந்து கொள்கிறேன் (இது எங்கேயோ படித்த விஷயம், சரியான சுட்டி தேட வேண்டும்). அப்படியிருக்க, உணர்ச்சிவசப்படச் செய்வதே, provoke செய்வது, எங்கள் நோக்கம் என்று இருப்பவர்களை அகிம்சைவாதிகள் என்று சொல்வது கொஞ்சம் கஷ்டம் என்று நினைக்கிறேன். என் புரிதலில் பிழை இருக்கலாம்.

3. குறியீட்டுப் போர்களை நோக்கி மானுடத்தைக் கொண்டு செல்வதே மானுட வளர்ச்சி என்பது துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் கொன்று கொள்வதைக் காட்டிலும் மேன்மையானது என்ற அளவில் சரியே. ஆனால், இங்கே சிலைக்கு செருப்பு மாலை போட்டால் வெட்டு குத்து என்றாகி ஊரே ரெண்டுபட்டு நிற்கிறது, இதற்கு பயந்து கொண்டு சிலைகளைப் பாதுகாக்க அவற்றை இரும்புக் கூண்டுகளுக்குள் நிறுத்த வேண்டியிருக்கிறது, அல்லது பாதுகாப்புக்கு ரெண்டு போலீசை நிறுத்த வேண்டியிருக்கிறது. அதனால் கட்டற்ற கருத்து சுதந்திரம் என்பது எங்கேயோ நடக்கும் விஷயம் என்று நினைத்துக் கொண்டு அதற்கு முன்நிபந்தனையற்ற வரவேற்பு அளிக்க முடியாது. கண்டிஷன்ஸ் அப்ளை. வள்ளுவரும்கூட, தீயினால் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு, என்று சொல்லியிருக்கிறார்.

4. சார்லி ஹெப்டோ குறித்து ஒரு வார்த்தை- அவர்கள் எல்லாரையும் கிண்டல் செய்தது என்னவோ சரிதான், ஆனால் அவர்களுக்கு என்று அரசியல் இல்லாமல் இல்லை. இடதுசாரி அரசியல் சார்பு கொண்ட அந்த இதழின் சமீபத்திய அவதாரம் குறித்து டிம் பார்க்ஸ் இவ்வாறு எழுதுகிறார், “Wound down for lack of funds in 1981, Charlie Hebdo was resurrected in 1991 when cartoonists wanted to create a platform for political satire about the first Gulf War.” நல்லது நினைத்துதான் ஆரம்பித்தார்கள், ஆனால் இப்படி வந்து நிற்கிறது. Limits of Satire என்ற அந்தக் கட்டுரை பல காரணங்களுக்காகவும் படிக்கப்பட வேண்டிய ஒன்று.

5. இவ்வளவு பேசுகிறாயே, இந்த மொழிபெயர்ப்பை இங்கே இடுகையிடாமல் ஏன் வேறெங்கோ கொண்டு சென்றாய் என்று புத்தம் புதிய காப்பி வாசகர்கள் கோபிக்கலாம். பெரும்பாலும் பௌத்தம் தொடர்புடைய பதிவுகள் நிறைய இடம்பெறும் அந்தத் தளத்தில், அகிம்சைக்கு  வன்முறைக்கு எதிரான செய்தியைத் தாங்கிய இந்தக் கட்டுரை பொருத்தமாக இருக்கும், என்று நினைத்தேன். என் நினைப்பு பொய்த்து விட்டது. Medium is the message, என்று எங்கேயோ படித்ததை நம்பி ஏமாந்து போனேன். அதைச் சொன்ன பாவியைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும்; அண்மையில் மேற்கோள் காட்டிய கிராதகரையும் சும்மா விடப் போவதில்லை.

பிற்சேர்க்கை: நம் சுதந்திரங்களுக்கு கருத்துச் சுதந்திரமே ஆதாரம். அது ஒடுக்கப்படுவதை ஆதரித்தால், நாம் அதற்காக அனைத்துச் சுதந்திரங்களையும் விலை கொடுக்க வேண்டி வரும். அந்த ஒரு காரணத்துக்காகவே,  எந்நிலையிலும், ஏதாயினும், எப்பாடுபட்டும் கருத்துச் சுதந்திரங்களைப் பாதுகாக்கும் கடமை நமக்கு உண்டு. ஆனால், அதை ஒரு fetish ஆக்கி, “கொஞ்சம், பாத்து நடந்துக்கப்பா, நீ சொல்லால் அடித்தால் அவன் கல்லால் அடிப்பான்,” என்று அறிவுறுத்தும் உரிமையை நாம் பறிகொடுக்க வேண்டியதில்லை.  அது வன்முறையை ஊக்குவிப்பதும் ஆகாது- “சட்டம் என்ன சொல்லுதுன்னு பாத்துக்குங்க,” என்று நாம் நண்பர்களிடம் சொல்வதில்லையா என்ன, அது பாசிஸத்தை ஊக்குவிக்கிறது என்றா நினைக்கிறோம்!  

(திருத்தமும் பிற்சேர்க்கையும் இடுகையிட்ட தினத்தன்று மதியம் இணைக்கப்பட்டவை)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s