அரை நிஜங்களுக்கு ஆதரவாக

தெய்வ நிந்தனை கடும் குற்றமாகக் கருதப்பட்ட ஆசாரம் போய் இப்போது தெய்வங்களின் இடத்தில் கருத்துச் சுதந்திரம் வந்து உட்கார்ந்து கொண்டது போலிருக்கிறது.

இந்நேரம்.காம் என்ற தளத்தில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலியூர் முருகேசன் சிறுகதை தொகுப்பு பற்றிய செய்தி படித்தேன். அதில் உள்ள காணொளி இணைப்புகளில் ஒன்றில் அவர் அந்நூலில், “நான் ஏன் எழுதுகிறேன்” என்ற தலைப்பில் எழுதியதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அது தொகுப்பின் முன்னுரை என்று நினைக்கிறேன். அங்கு இப்படிச் சொல்கிறார் அவர்- “கடந்த காலங்களிலும் நிகழ் காலத்திலும் என் மேல் துயரம் கவியச் செய்தவர்களையும், என்னை ஒரு நூறு முறை தற்கொலைக்குத் தூண்டியவர்களையும், அவர்கள் வாழும் காலத்திலேயே எழுதிக் காட்டுவதுதான் சரியானதாக இருக்கும் என்பதனாலேயே “புனைவற்ற கதைகளாக” முன் வைத்திருக்கிறேன்.”

Capture

இந்தக் கதைகள் புனைவுகள் அல்ல என்று மேற்கோள் குறியிட்டு அழுத்திச் சொல்பவர் முருகேசன் (“புனைவற்ற கதைகளாக”). அந்தக் காணொளியில், அதே சொற்களை அடிக்கோடிட்டு அதற்கு கூடுதல் அழுத்தம் தந்திருக்கிறார்கள்- காணொளியில் இருப்பது போராட்டக்காரர்களின் பிரதி என்று நினைக்கிறேன்.

தி ஜானகிராமன், “என் மரப்பசு என்னைப் பெற்று உருவாக்கிய சமுதாயத்திற்குத் தண்டனை,” என்று எழுதியதாக கரிச்சான்குஞ்சு குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது. தண்டனையை யார் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடையே உள்ள உறவு எப்படிப்பட்டது, அதிகார நிலை என்ன என்பதும் இன்னும் பல விஷயங்களும் இருக்கின்றன, நிற்க.

அதே சொல்வனம் இதழில் சென்ற மாதம் அசோகமித்திரன் முன்னுரை ஒன்றும் வந்துள்ளது. அதில் அவர், “பொதுவாக, புனைகதைகளைப் புனைக்கதைகளாகவே கருதுவதுதான் எக்காலத்திற்கும் ஏற்றது. புனைக்கதை அரை நிஜத்தைத்தான் கூறுகிறது. அரை நிஜம் நிஜமாகாது. ஆனால் புனைக்கதையின் ஒரு தனிக்குணமான அந்த அரைநிஜம்தான் புனைக்கதைக்கு உயிரூட்டுகிறது.என்று எழுதியிருக்கிறார். இது கொஞ்சம் சமநிலைத்தன்மை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

நம் மக்கள் மத்தியில் எழுத்துக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. பொய்யும் மெய்யும் கலந்ததுதான் வாழ்க்கை என்ற புரிதல் அவர்களுக்கும் உண்டு. ஆனால், எது புனைவு எது உண்மை, என்பதை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவும் குறிப்பாக, எழுத்தில். ஒரு விஷயம் எழுத்தில் வந்தால் அது உண்மையாக ஏற்கப்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள். இதெல்லாம் உண்மை, ஆவணங்கள் என்றெல்லாம் சொல்லி ஒரு கதையைப் பதிப்பிக்கும்போது அந்த பயம் ஆத்திரமாகிறது.

ரமணி சந்திரன் வாசகர்கள் மட்டுமல்ல, தீவிர இலக்கிய வாசகர்களுக்கும் இந்த பயம் வேறு வடிவில் இருக்கிறது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் சிலர் நிறைய படிப்பவர்கள், தாம் படிக்கும் புத்தகங்கள் பற்றி நிறைய கருத்து வைத்திருப்பவர்கள். “இதை எல்லாம் எழுதலாமே ஸார்,” என்று சொன்னால், “அப்புறம் அதை மாத்த முடியாதே, எழுதினா சுதந்திரம் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு வருது,” என்று சொல்கிறார்கள். அவ்வளவு ஏன், தீவிர வாசகர்கள், தங்கள் ஆதர்ச எழுத்தாளரைப் பற்றி ஏதாவது எதிர்மறை விமரிசனம் செய்கிறார்களா என்ன, நன்றாக இருந்தால் வானத்துக்குத் தூக்கி வைத்து பாராட்டுகிறார்கள், இல்லாவிட்டால் மௌனமாக அதைக் கடந்து செல்கிறார்கள். பொதுவாக, எதிரிகளைத் தவிர வேறு யாருமே எதிர்மறை விமரிசனம் செய்வதில்லை என்றால், அதற்கு காரணம், இதைப் படித்து சம்பந்தப்பட்டவர்களின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்ற பயம்தான்.

அதுவும் இதுவும் ஒன்றா என்று கேட்கலாம். ஒன்றில்லை. ஆனால் பலரும் தங்களை சுய தணிக்கை செய்து கொள்கிறார்கள் என்று பார்க்கும்போது, கருத்துகளைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்கிற அறிவுஜீவிகளின் முழக்கம் அவர்கள் வட்டாரத்திலேயே இன்னும் எடுபடவில்லை என்று தோன்றுகிறது. நம்மவர்களை அல்ல, நாம் பிறரை மட்டுமே எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்துகிறோம். கருத்து நிலையைத் தாண்டி மெய்ம்மையின் கோபுரத்தில் நாம் உட்கார்ந்து கொண்டிருப்பதாய் நினைப்பதால்தான் இப்படி. நாம் சொல்வதை எவன் மதிக்கப் போகிறான் என்று நினைத்தால் நாம் என்ன வேண்டுமானாலும் பேசுவோம்.

ஒரு கருத்து, ஒரு பார்வை எப்போதும் மெய்ம்மையின் சாயல் கொண்டே இருக்கிறது. ஆனால் அது சாயல்தான் என்ற நிலையை நாம் கடந்துவிட்டோம். புனைவின் ஆற்றல் அப்படியிருகிறது. சான்றுக்கு இது– “கொற்கை நாவலை வாசிக்கையில் இப்படைப்பு வெறும் புதினமாக மட்டும் தென்படவில்லை. இரத்தமும் சதையுமான மனிதர்களின் வாழ்க்கை நம் கண்முன்னே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் 1914 ஆம் ஆண்டு முதல் 2000 வரையிலான 86 ஆண்டுகளின் கொற்கைப் பகுதியைப் பற்றிய ஒரு வரலாற்று ஆவணமாகவும் உருமாறியுள்ளது.” வரலாறு படைப்பது எப்போதும் இவ்வளவு எளிதாக இருந்தது கிடையாது.

இலக்கியவாதிகளின் புரிதலே இது போலிருந்தால் மற்றவர்களை எப்படி குற்றம் சொல்ல முடியும்? புனைவு சமூக யதார்த்தத்தை ஆவணப்படுத்துகிறது என்ற பேச்சில், எத்தகைய ஆவணங்கள் என்று சொல்ல மறந்து விட்டோம். அசோகமித்திரன் சொல்கிறார், அவர் எப்போதும் சாதாரணன் நிலையிலிருந்து பேசுபவர் என்பதால் அதற்கு கொஞ்சமாவது மதிப்பு கொடுத்து, இலக்கியவாதிகள் தங்கள் பொறுப்பு உணர்ந்து புனைவின் ஆவண மதிப்பைப் பேசினால் நல்லது.

சாதாரண ஒரு கருத்துக்காக, அதுவும் போயும் போயும் ஒரு கதைக்காக, ஆளை அடிப்பது, ஊரை விட்டு ஓடச் செய்வது எல்லாம் தவறு, கண்டிக்கத்தக்கது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம்- இது போன்ற அவமான உணர்வுகளும் அலட்சியப்படுத்தப்பட்ட உணர்வுகளும் எவ்வளவு பெரிய சண்டைகளுக்குக் கொண்டு செல்கின்றன என்பது சரித்திரத்தை விடுங்கள், ராமாயணம், பாரதக் கதைகளின் ஆனா ஆவன்னா அறிந்த எல்லாருக்கும் தெரியும்.

எழுத்தும் ஒரு செயல்தான், அது வெறும் கருத்து நிலையல்ல. அதுவும் நாங்கள் எழுதுவது வாழ்வியல் ஆவணம், சமூக ஆவணம், வரலாற்று ஆவணம் என்றெல்லாம் சொல்லும்போது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. காரணம், எல்லாரும் பின்நவீனத்துவர்கள் அல்ல. சிலர் நாம் முழுக்க முழுக்க உண்மை பேசுவதாக நினைத்துக் கொண்டு எழுதுகிறோம் என்று நம்பிவிடக்கூடும். அப்புறம் கிளாஷ் ஆஃப் சிவிலேஷன்ஸ் என்று படம் போட்டு எண்ட் கிரெடிட்ஸ் ஓடவிட்டு விடுவார்கள், கைமீறிப் போனபின் ஒன்றும் பண்ண முடியாது.

5 thoughts on “அரை நிஜங்களுக்கு ஆதரவாக

  1. கருத்துகளைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்கிற அறிவுஜீவிகளின் முழக்கம் அவர்கள் வட்டாரத்திலேயே இன்னும் எடுபடவில்லை என்று தோன்றுகிறது. எழுத்தும் ஒரு செயல்தான், அது வெறும் கருத்து நிலையல்ல.
    அருமையான சொற்பிரயோகம். தகுந்த நேரத்தில் எழுதியிருக்கிறாய். இதனை பரவலாக அனைவருக்கும் உணர்த்த வேண்டும். ‘தீ’ என்று எழுதி அதை படிப்பவன் நாக்கு வெந்து போக வேண்டும் என்ற லா.ச.ரா. வின் கருத்து இப்போதுதான் புதிய பரிமாணத்தில் புரிகின்றது.

    1. வீரா, ஊக்குவிப்புக்கு நன்றி! 🙂

      (,முன்னிருந்ததைவிட இப்போது இன்னும் சற்று இளமையாகத் தெரிகிறீர்கள, , வாழ்த்துகள்!)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s