ஒரு ஜோக்கை முன்வைத்து இருபத்தாறு குறிப்புகள்

நண்பர் ஒருவர் வெகு நாட்களுக்கு முன் ஒரு கட்டுரை அனுப்பி இதை வாசித்துப் பாருங்கள் என்று சொன்னார். அதைப் பார்த்ததுமே தெரிந்து விட்டது, இவ்வளவு நீளமான கட்டுரையை நாம் படிக்கப்போவதில்லை என்று.

இருந்தாலும் படிக்கிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது நம் வழக்கமில்லை என்றாலும் அது போன்ற ஒரு நினைப்பில் இருக்கப் பிடிக்கும். எனவே அவர் அனுப்பிய கட்டுரையை மொழிபெயர்க்கும் சாக்கில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக படித்து முடித்து விடலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு நகைச்சுவை கதையும் அது பற்றிய இருபத்தாறு குறிப்புகளும் இங்கு இடம் பெறுகின்றன. ஒரே பதிவுதான், தினமும் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப் போகிறேன்.

கதை- செத்துக்கிடந்த சிப்மங்க்

 (வாசக வசதிக்காக இந்தக் கதையில் சிப்மங்க் என்பது அணில் என்று மாற்றப்பட்டுள்ளது. விசுவாசமாய் மொழிபெயர்ப்பவர்கள் மன்னிக்கவும்)

ஆகஸ்டு மாதம் ஒரு நாள் நான் என் கல்லூரி வளாகத்துக்குச் சென்றேன். நகல்கள் சில எடுக்க வேண்டியிருந்தது, என் அலுவலகத்திலிருந்து ஒரு புத்தகத்தையும் கொண்டுவரப் போனேன். மூன்று வயதான என் மகளும் “உதவியாளாக” என்னுடன் வந்தாள். நான் அவள் சாப்பிட ஒரு மஃப்பினும் சிறிது பாலும் கொண்டு வந்திருந்தேன். என் வேலை முடிந்ததும் நாம் ஒரு பிக்னிக் வைத்துக் கொள்ளலாம் என்று அவளிடம் உறுதி கூறியிருந்தேன். லிப்ட்டில் இருந்த அத்தனை பொத்தான்களை அழுத்தியும் என் சுழல் நாற்காலியில் வேகமாகச் சுற்றியும் எனக்கு அவள் உதவி செய்தபின் நாங்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறினோம். எங்கள் பிக்னிக்குக்குத் தகுந்த இடம் பார்க்கத் துவங்கினேன். சிறிய ஒரு முற்றத்தில் நிழலடியில் ஒரு பெஞ்ச் இருப்பதைப் பார்த்ததும், அங்கே போகலாம் என்று கை காட்டினேன். ஆனால் நாங்கள் அதை நெருங்கும்போதுதான், பெஞ்ச்சுக்கு நேர் எதிரே, மேகமிட்டுக் கொண்டிருந்த ஈக்களுக்குக் கீழே தன் கைகால்களைப் பரப்பி விரித்துப் போட்டுக் கொண்டு அணில் ஒன்று செத்துக் கிடப்பதை கவனித்தேன்.

“செல்லம்,” என்று என் பெண்ணின் தோளில் கைபோட்டேன், “நாம் வேற இடம் பாக்கலாம்”. தவிர்க்கவேண்டிய அத்தனை விஷயங்களிலிருந்தும் என் குழந்தைகளைப் பாதுகாக்கவோ திசை திருப்பவோ முடியாது என்று எனக்கு இப்போது தெரிகிறது, ஆனால் என் விருப்பப்படி செய்ய முடிந்தால், செத்துக் கிடக்கும் விலங்கு ஒன்றின் அருகில் பிக்னிக் வைத்துக் கொண்டு அந்த அணிலின் நிலை குறித்த தவிர்க்கமுடியாத கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்லாதிருக்கவே விரும்புவேன்.

“ஏன்?” என்று கேட்டாள்.

“சும்மா பாக்கலாம்,” என்று சொன்னேன்.

“ஏன்?” என்று கேட்டாள்.

அவள் தோளில் வைத்திருந்த கையைக் கொண்டு ஒரு வழியாய் அவளை பெஞ்சிலிருந்து வேறு பக்கம் திருப்பினேன்.

“ஏம்ப்பா?” என்று கேட்டாள், திரும்பிப் பார்க்க முயற்சி செய்து கொண்டே.

“அங்க என்னவோ இருக்கு,” என்று சொன்னேன், இப்போது இதற்கு அப்புறமும் அந்த பெஞ்ச்சைத் தவிர்க்க முடியாதபடி செய்துவிட்டேன்.

“என்னது?”

“அது ஒரு அணில்” என்றேன்.

“அணிலா?” அவள் என் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பெஞ்ச்சைத் திரும்பிப் பார்த்தாள்.

“போலாண்டா செல்லம்,” என்றேன். “அந்த அணிலுக்கு உயிரில்லை”

என் மகள் பெஞ்ச்சை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தவள் நின்றுவிட்டாள். அந்த அணிலைப் பார்த்துவிட்டாள் என்பதில் சந்தேகமில்ல்லை. “ஏன்?” என்று கேட்டாள்.

“அது செத்துப் போச்சு,” என்றேன்.

அவள் என்னைப் பார்த்து திரும்பினாள், அவள் முகம் கவலையால் இருண்டிருந்தது. நான் அவளருகில் மண்டியிட்டு, என் கையால் அவள் தலையைத் தொட்டு, “நாம் வேற எங்கேயாவது போயிடலாம், வா” என்றேன்.

“ஆமாம்பா,” என்றாள் அவள். “செத்த அணில் நம்ம சாப்பாட்டைத் தின்ன வந்திரும்!”

குறிப்புகள்

1. என்ன நடந்தது என்பது இப்போது புரிகிறது. என் மகளும் நானும் கல்லூரி வளாகம் சென்றோம், எங்களையறியாமல் நகைச்சுவைத் துணுக்கொன்றின் தோற்றத்தின் அறியாக் கூறுகள் ஆகினோம். அதற்குத் தேவையான அனைத்தும் – பாதுகாக்க விரும்பும் அப்பா, அறிய விரும்பும் குழந்தை, தின்பண்டங்கள், செத்துக் கிடக்கும் விலங்கு- எல்லாமே அந்த இனிய காலைப் பொழுதில் கூடிவந்திருக்கிறது, ஒரு நகைச்சுவைத் துணுக்கு உருவாகி விட்டது. மெய்யுலகில் (அல்லது கல்லூரி வளாகத்திலும்கூட) ஒரு நகைச்சுவைத் துணுக்கு படைக்கப்படும்போது, ஜோக்குகள் பற்றி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது. அவை எவ்வாறு தோன்றுகின்றன? அவற்றுக்குரிய சூழல் எது, அவற்றில் மாறக்கூடியவை எவை? ஏன்- அல்லது எப்படி- அவை சிரிக்க வைக்கின்றன? ஒரு ஜோக் புரியும்போது அதில் சரியாய் எது நமக்குப் புரியக் கிடைக்கிறது?

நன்றி – The Believer, The Dead Chipmunk- An Interrogation into the Mechanisms of Jokes – Chris Bachelder

2 thoughts on “ஒரு ஜோக்கை முன்வைத்து இருபத்தாறு குறிப்புகள்

    1. நகைச்சுவையை தமிழாக்கம் செய்வது ரொம்ப கஷ்டம் ஸார், முயற்சித்துப் பார்த்திருக்கிறேன்

      தங்கள் கருத்துக்கு நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s