கல்வியும் அறிவும் – அஞ்சலிப் பதிவு

நேற்று காலை நான்கு மணிக்கே விழிப்பு தட்டிவிட்டது. தூக்கம் வராததால், என்ன சேதி என்று  டிவிட்டர் சென்றேன். பாரிஸ் படுகொலைகள் பற்றிய செய்தி தென்பட்டது. இருந்த கொஞ்சநஞ்ச தூக்கமும் காணாமல் போய் பிபிஸியில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்க எழுந்தேன். அப்புறம் நாளெல்லாம் டிவிட்டர் ஹாஷ்டாக்குகளைத் தட்டி நாள் முழுவதையும் வீணாக்கினேன்.

யார் என்ன பேசினார்கள் என்பதோ நான் அது பற்றியெல்லாம் என்ன நினைத்தேன் என்பதோ முக்கியமில்லை.  நாள் முடிவில் Brainpicker என்ற தளத்தில் பெர்ன்ஸ்டீன் என்ற இசைக்கலைஞர் சொன்னது குறித்து  இந்தப் பதிவு பார்த்தேன். 

என்னாலானது, இந்த மொழிபெயர்ப்பு:

அன்பு நண்பர்களே,

நம் அன்புக்குரிய மறைந்த ஜனாதிபதி அவர்களின் நினைவில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்றிரவு நியூ யார்க் பில்ஹார்மோனிக்கும் நானும் மாஹ்லரின் செகண்ட் சிம்பொனி – தி ரிஸரக்ஷன்- வாசித்தோம். வழக்கமாக வாசிக்கப்படும் எரோய்காவின் ஃப்யூனரல் மார்ச்சோ ரெக்வயமா இசைப்பதற்கு மாறாய் நம்பிக்கையையும் இவ்வுலக துன்பத்தை வெற்றி கொள்வதையும் தன் தரிசனக் கருத்தாய்க் கொண்ட ரிஸரக்ஷன் சிம்பொனியை ஏன் வாசிக்க வேண்டும் என்று சிலர் கேட்டார்கள். ஆம், ஏன் அதை வாசித்தேன்? நம் நேசத்துக்குரிய ஆன்மாவொன்று உயிர்த்தெழுவது குறித்து மட்டுமல்ல, அவரது மறைவால் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நம் அனைவரின் உள்ளங்களிலும் நம்பிக்கை உயிர்த்தெழவும் மாஹ்லரின் சிம்பொனி வாசித்தோம். இந்த மரணத்தால் மனிதன் சிறுமைப்படுகிறான் என்ற நம் விரக்தியும் நம் வெட்கமும் நம் அதிர்ச்சியும் இருப்பினும் நாம் எப்படியாவது மனிதன் மீண்டுயர்வதற்கான வலு திரட்டிக் கொண்டாக வேண்டும், அவன் மேன்மையாய் மதித்த இலட்சியங்களை அடைய தொடர்ந்து போராடுவதற்கான வலு திரட்டிக் கொண்டாக வேண்டும். அவனுக்காக துக்கப்படும் நாம் அவனுக்கேற்ற தகுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ஜான் எஃப் கென்னடியை நேசிக்காத இசைக்கலைஞன் எவரையும் நான் இந்த தேசத்தில் கண்டதில்லை. அமெரிக்காவின் கலைஞர்கள் எப்போதுமில்லாத நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்தோடும் கடந்த மூன்றாண்டுகளில் வைட் ஹவுஸைக் அணுகியுள்ளனர். அவர் கலையை மதித்ததால், சொற்களாகவோ ஸ்வரங்களாகவோ வண்ணங்களாகவோ கணிதக் குறியீடுகளாகவோ, எவ்வகையில் வெளிப்பட்டாலும் மனித உள்ளத்தின் படைப்பூக்கத் துடிப்பு ஒவ்வொன்றையும் அவர் மதித்ததால், நாம் அவரை கௌரவித்தோம், சிந்தனை உலகை அவர் போற்றினார் என்பது அவரது இறுதி உரையிலும் தெளிவாக வெளிப்படுகிறது, அதை அவர் தன் மரணத்துக்குச் சில மணி நேரங்களுக்குப் பின்னர் நிகழ்த்தியிருக்க வேண்டும். “அமெரிக்காவின் தலைமை கல்வியாலும் அறிவாலும் நெறிப்படுத்தப்பட்டாக வேண்டும்” கல்வியும் அறிவும்: சாத்தியமற்ற அந்தத் தோட்டாவைச் சுட்டவர் எவராக இருந்தாலும் அந்த மனதில் இருந்திருக்கவே முடியாத முக்கியமான இரு கூறுகள். கல்வியும் அறிவும்: ஜூடாயிச மரபின் இரு அடிப்படைக் கொள்கைகள், ஆபிரகாம் முதல் மோசஸ், பிராய்ட், ஐன்ஸ்டீன் என்று ஒவ்வொரு யூதரின் உள்ளத்திலும் தொடர்ந்து உயிர்த்திருக்கும் ஆற்றலின் இரட்டை வேர்கள். கல்வியும் அறிவும்: முன்னைவிட இருமடங்கு உறுதியாய் நாம் கடைபிடிக்க வேண்டிய லட்சியம், நாம் கொடுக்கும் விலை எதுவாயினும், இனிவரும் நம் செயல்கள் அனைத்துக்கும் தொடர்ந்து அடிப்படையாய் இருக்க வேண்டிய லட்சியம்.

நம் இழப்பின் துக்கம் அதனுடன் தொடர்புடைய வன்முறையால் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இந்த வன்முறை எங்கு தோன்றுகிறது? அறியாமையிலும் வெறுப்பிலும்- கல்விக்கும் அறிவுக்கும் நேரெதிர் பண்புகள். கல்வியும் அறிவும்: ஜான் கென்னடியின் இந்தச் சொற்கள் அவர் வாழும் காலத்தில் சொல்லப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்றப் பயன்படவில்லை; ஆனால் ஒவ்வொரு மனிதனும் அவை வீழ்ந்த இடத்திலிருந்து அவற்றைச் சேகரித்துக் கொள்ள முடியும், அவற்றை தன்னில் ஒரு பகுதியாக்கிக் கொள்ள முடியும், பகுத்தறியும் அறிவின் அந்த விதையின்றி இனியும் நம் உலகம் நீடிக்க முடியாது. நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொரு மனிதனின் லட்சியமும் இதுவாக இருக்க வேண்டும்: அலுப்பூட்டுமளவு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பவன் என்றானாலும் பரவாயில்லை, உள்ளம் வன்முறையை வெற்றி கொண்ட உலகம் அடையப்பட்டாக வேண்டும் என்று அலுக்காமல் தொடர்ந்து நாம் வலியுறுத்திக் கொண்டே இருந்தாக வேண்டும்.

பிற அனைவரையும் போலவே இசைக் கலைஞர்களாகிய நம் உள்ளமும் இந்தக் கொலையின் துயரத்தில் மரத்துப் போயிருக்கிறது, அர்த்தமற்ற இந்தக் குற்றம் குறித்து ஆத்திரத்தில் கொந்தளிக்கிறது. ஆனால் இந்தத் துயரமும் ஆத்திரமும் பழி வாங்கச் செய்யுமளவு நம் உணர்ச்சிகளைத் தூண்டாது; மாறாக, இவை நம் கலைக்குத் தழலாகும். இனி எப்போதும் நம் இசை இதுவரை இருந்தது போலிருக்கப் போவதில்லை. இதுவே வன்முறைக்கு நம் பதிலாகட்டும்: இனி நாம் முன்னைக் காட்டிலும் மிகத் தீவிரமாகவும் மிக அழகாகவும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் இசை செய்வோம். நம் ஒவ்வொரு ஸ்வரமும் ஜான் கென்னடியின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதாகட்டும், அவரது வீரத்தை நினைவு கூரட்டும், சிந்தனையின் வெற்றியில் அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு வலு கூட்டட்டும்.

மேலதிக விபரங்களுக்கு- http://www.leonardbernstein.com/response_to_violence.htm

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s