நண்பர்களுக்கு ஒரு சிறு நிலைத்தகவல்

கடந்த சில நாட்களாக புத்தம் புதிய காப்பியின் ஹிட் எண்ணிக்கை தாறுமாறாகத் தெறித்து (ஏறத்தாழ பத்து மடங்கு அதிகரித்து தினமும் பத்து முதல் பதினைந்து ஹிட்டுகள் என்ற கணக்கில்) இருப்பதால்  இந்த நிலைத்தகவல்.

செம்பரம்பாக்கத்திலிருந்து அடையாறு செல்லும் வழியில் ஓரிடத்தில் கால்வாயின் இடப்புறச் சாலைக்கு மறுபுறம் நாங்கள் வசிக்கிறோம். அந்த இடம் பார்த்து கால்வாய் ஒரு சிறு மேடேறிச் செல்கிறது என்று நினைக்கிறேன், ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால், செல்லும் வேகத்தில் தடம்புரண்ட தண்ணீர் சாலைக்கு வந்து ஆங்கண் உள்ள வீடுகளுக்குள்ளும் சற்றே பொசிந்துவிட்டது. வாய்க்கால் கரையோரம் (இனி அப்படிதான் சொல்லிக்கொள்ள வேண்டும்) மேட்டில் உள்ள நம் வீட்டிலாவது தண்ணீர் ஆறடிதான் உயர்ந்தது, உள்ளே இன்னும் சற்று தள்ளியுள்ள இடங்களில் எட்டடி, பத்தடி, பன்னிரெண்டடி என்று பாய்ந்து விட்டது.

காம்பவுண்ட் வாசலில் உள்ள ஐந்தடி உயர இரும்பு கிரில் கேட் தடுப்பரணாய் மூடப்பட்டபோதும் அதைத் துளைத்துக் கொண்டு  உள்ளே நுழைந்த நீர் அதன் கம்பிகளை வரிசையாய் விழுங்கி, கேட்டையே காணாமல் போகச் செய்ததும், கார் கூரைகள் நீரின்கீழ் பளபளத்ததும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத காட்சிகள்.

வெள்ளம் வடிந்தபின் சாலையின் மத்தியில் எதிரெதிர் திசைகளில் சாரி சாரியாய் நடந்து சென்ற மக்கள் முகத்தில் தெரிந்த திகைப்பு வார் ஆப் தி வர்ல்ட்ஸ் படம் பார்த்தவர்களுக்கு புதிதாய் இருக்காது- ஆனால் அரை லிட்டர் பாலுக்கு ஐம்பது ரூபாயும் ஒரு கேன் தண்ணீருக்கு நூறு ரூபாயும் கொடுக்க மக்கள் அடித்துக் கொண்டதைப் பார்க்க ஹாலிவுட் படங்கள் நம்மைத் தயார் செய்திருக்கவில்லை. அதேபோல், எத்தனை சோகக் காட்சிகளைப் பார்த்திருந்தாலும் தரைதளத்தில் உள்ளவர்களின் மின்சாதனங்கள், படுக்கைகள், இருக்கைகள், மற்றும் அலமாரிகளில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஆவணங்கள், சான்றிதழ்கள், ரூபாய்த் தாள்கள் என்று எல்லாம் வீண் போனதைச் சொல்லி அவர்கள் வருந்தியதையும், சோபாக்கள் தலையணைகள் படுக்கைகள் என்று பஞ்சுப் போதிகளைத் தூக்க முடியாமல், நைந்து போன பாயில் வைத்து இழுத்து வந்து குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் விட்டுச் சென்றதைப் பார்க்கவும் நாம் யாரும் தயாராகியிருக்கவில்லை, அதெல்லாம் உண்மையாகவே மனதைப் பிசைந்த காட்சி.

ஐந்து நாட்கள் மின்சார வசதியில்லாமல், தொலைதொடர்பு வசதியில்லாமல், ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் கணக்கு பார்த்து பயன்படுத்தி (கடைகளில் மெழுகுவர்த்தி தீர்ந்து போய் விட்டதால் அவற்றைக்கூட பயன்படுத்தியவுடன் அணைத்து பாதுகாத்தோம்), (நல்ல வேளை அகல் விளக்குகளுக்கான எண்ணெய் இருந்தது), இன்னொரு மழை வந்தால் என்ன செய்வது என்று நடுங்கிக் கொண்டிருந்ததில் நான் கற்றுக் கொண்ட பாடங்களில் எது மறக்க முடியாததாக இருக்கப் போகிறது என்று யோசித்தால், ஏறத்தாழ பன்னிரெண்டு மணி நேரம் தண்ணீருக்குள் ஹோண்டா ஆக்டிவாவின் உள்ளறையில் ஊறிக் கொண்டிருந்த எக்ஸ் கிரிமினல்-நியர்லி எம்எல்ஏ திருடன் மணியம் பிள்ளை அட்டை கிழிந்து முதுகுத் தண்டுவடம் வளைந்த குறை தவிர சேதாரமில்லாமல் தப்பித்தது வாழ்வியல் சார்ந்த குறிப்பிடத்தக்க விஷயம் என்று நினைக்கிறேன். காலச்சுவடு புத்தகங்களை நிஜமாகவே உயர்தர தாளில் அச்சிடுகிறார்கள் போலிருக்கிறது, இந்த ஆச்சரியத்தையும் மறக்க முடியாது.

IMG_20151207_182850

புத்தகத்தை என் அப்பா ஒரே நாளில் முன் அட்டை முதல் பின் அட்டை வரை ஒரே மூச்சில் படித்துவிட்டு, “குப்பை! இதை எப்படி பாராட்டறாங்க? திருடன்னா அடிக்கதானே செய்வாங்க, அது ஏதோ தப்பு  மாதிரி எழுதியிருக்கான், போலீஸ்காரங்க எல்லாருமே திருடங்கன்னு தான் செஞ்சதை எல்லாம் நியாயம் சொல்றான்,” என்று விமரிசித்ததும், “திருடன் ஜாதகமும் போலீஸ்காரன் ஜாதகமும் ஒரே மாதிரிதான் இருக்கும், கம்பிக்கு இந்தப் பக்கம் நிக்கறானா அந்தப் பக்கம் நிக்கறானாங்கறதுதான் விஷயம்னு எங்க அப்பா சொல்லுவார்,” என்று என் அம்மா அதற்கு எதிர்வினையாற்றியதும், அதைத் தொடர்ந்த தீவிர இலக்கிய விவாத அலசல்களையும் எழுதினால் நம் தளம் நாறிவிடும். எனவே அடுத்த பேரிடர்ச் சூழலில் சந்திப்போம் (நண்பர் ஆசுகவி ஆலவாயனார் “அல்டிமேட் ஆகாயச் சுனாமி”| என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறாராம்- எத்தனையோ பாத்துட்டோம், இதைப் பாக்க மாட்டோமா!).

Advertisements

2 thoughts on “நண்பர்களுக்கு ஒரு சிறு நிலைத்தகவல்

  1. சார்
    வெள்ளத்தில் .. இருப்பிடம் நீராய் மாறுவதும் மட்டம் உயர்ந்து மூழ்கடிப்பதும் பயங்கரம்.
    நீங்கள் எல்லோரும் சேமமாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி .

    1. நன்றி ஸார். ஆனா ஒன்னு, இப்பதான் பேரிடர்ச் சூழலில் அகப்பட்டுக் கொள்பவர்களின் கஷ்டம் கொஞ்சம் புரிஞ்சது. முன்னெல்லாம் ஒரு பரபரப்போட இந்த மாதிரி செய்திகளைப் படிப்பேன், இப்ப லைட்டா ஒரு கலவரம் வருது (கொஞ்ச நாளில் அதுவும் சரியாயிடும்). இனி வரும் மழை சென்னைக்கு வராது, அப்படியே தெற்கால போயிடும் அப்படின்னு வெதர் ரிபோர்ட்ஸ் பாத்ததும் கொஞ்சம் ஆசுவாசமா முன்ன இருந்திருக்கணும், இப்ப ஐயோ, அங்கே எப்படி கஷ்டப்படுவாங்களோ என்ற திகைப்புதான் வந்தது (இனி இந்த மாதிரி எல்லாம் நடக்கும்போது அந்த ஊர் மக்களுக்காக பிரார்த்திக்கணும் அப்படின்னு ப்ளான் பண்ணி அந்த பயத்தையும் போக்கிக்கிட்டேன் 🙂

      நீங்க நலம்தானே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s