புதிய கவிஞர்கள்

இன்று காலை நண்பர் வெ. சுரேஷ் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, “என்ன ஸார், இன்னிக்கு ஆசான் எத்தனை புதிய வார்த்தைகள் கண்டுபிடிச்சார்?” என்று வழக்கம் போல் கேட்டேன்.

“என்ன கிண்டலா, ஒவ்வொன்னும் எவ்வளவு அழகழகான வார்த்தை தெரியுமா, அதுக்கு அவரிடம் ஒரு கிப்ட் இருக்கு,” என்று சில சொற்களை குறிப்பிட்டு விளக்கம் சொன்னார்.

“அதெல்லாம் சரி, ஆனா அது என்ன கண்டுபிடிக்கற விஷயமா, மக்கள் புழங்குவதுதானே மொழி?” என்று கேட்டேன்.

“கொஞ்சம் கொஞ்சமா அதெல்லாம் புழக்கத்தில் வரும்,” என்று சொன்னவர் அந்த மாதிரி தமிழில் புழகப்படும் சில புதிய வார்த்தைகளைப் பட்டியலிட்டு, “இப்பக்கூட பாருங்க, அவர் கண்டுபிடிச்ச ஒரு அழகான வார்த்தை என்னோட மனசில் நின்னுடுச்சு. அதை வச்சு ஒரு கவிதையே எழுதிட்டேன்,” என்றார்.

ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்காயிட்டேன். “என்ன ஸார் சொல்றீங்க?” என்று கேட்கும்போது என் குரல் நடுங்குவது எனக்கே கேட்டது.

“நாற்களம்,” என்று சொன்னார். “அதான் கவிதையோட பேரு”

“நிஜமாவே கவிதையா ஸார்?”

“அப்படிதான் நினைக்கறேன்”

ஒன்றும் பேசவில்லை. நண்பர் தன் கவிதை பேஸ்புக்கில் இருக்கிறது என்று சொன்னார்.

புத்தம் புதிய காப்பி நண்பர்களுக்காக அதன் சற்றே திருத்தப்பட்ட வடிவம் (இது ஒரு சானட் என்பது கவனிக்கத்தக்கது):

நாற்களம்

காலாட்படை வீரன் ஒருவன்,
காலில் இடறினான், என் காலை நடையில்.
சற்று தொலைவில் சாய்ந்து கிடந்த புரவியின் அருகில்
வீழ்ந்திருந்தன இரு யானைகள்.
இடப்பக்கம் மந்திரிகள் இருவர்,
தலையிழந்த ஓர் அரசன் வலப்பக்கம்.
பிரிவின் துயரில் மண்ணில் முகம் புதைத்த அரசி-
தோற்றுவிட்ட ஆத்திரத்தில் தொலைக்கப்பட்டவர்களா?
வீடு மாற்றும் அவசரத்தில் தவறி விழுந்தவர்களா?

தேடிக் கொண்டிருக்கக்கூடும், எங்கோ,
வீரர்களைத் தொலைத்த விரல்கள் சில.
அங்கே, காத்திருக்கக்கூடும்-
குருதியின் சுவைக்கு ஏங்கும்
நாற்களம் ஒன்றும்.

(நாற்களம் என்னும் வார்த்தைக்கு நன்றி ஆசானுக்கு)

௦௦௦

நாற்களம் என்ற வார்த்தையை புழக்கத்தில் விட இதைவிடச் சிறந்த கவிதை கிடைக்காது என்று சொல்வேன். போர்க்களம் என்பதை எதிரொலிக்கும் இந்தச் சொல், வியூகங்களையும் ரத்த ஆற்றையும் உடனே நினைவுக்கு கொண்டு வருகிறது.

காத்திருக்கக்கூடும்-
குருதியின் சுவைக்கு ஏங்கும்
நாற்களம் ஒன்றும்,

என்பதில் “நாற்களம்” என்ற சொல்லின் இடத்தில் செஸ் போர்ட் அல்லது கேம் ஆஃப் செஸ் அல்லது சதுரங்கம் அல்லது சதுரங்கப் போட்டி அல்லது சதுரங்க ஆட்டம் அல்லது சதுரங்கப் பலகை என்று எதை வேண்டுமானாலும் போட்டுப் பாருங்கள், நாற்களம் என்பதன் எப்பக்ட் வருவதில்லை.

இதை கவிஞர் சுரேஷிடம் சுட்டிக் காட்டியதும், “ஆமாம், நானும் எத்தனையோ கட்டுரை எழுதியிருக்கேன், அத்தனை எழுதினதுல எதுக்கும்  இந்த மாதிரி ஒரு மரியாதை யாரும் செஞ்சதில்லை. இனி ‘சொல்லுக்கு ஒரு கவிதை’ என்று ஒரு பத்தாண்டு பிராஜெக்ட் ஆரம்பிக்கப் போறேன், இது எனக்கு மிகவும் புதிய அனுபவம்,” என்று சொன்னார்.

சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளைப் புழக்கத்தில் விட கவிதை எழுதுவதுதான் சிறந்த வழி என்று இவர்கள் கிளம்பிவிட்டால் இனி தமிழை ஆண்டவனே வந்தாலும்கூட தடுத்து நிறுத்த முடியாது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s